in

சிப்பிக்குள் முத்து (சிறுகதை) – ✍ ரமணி.ச.

சிப்பிக்குள் முத்து (சிறுகதை)

ஆகஸ்ட் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

வள் கண்ணம்மா, நிறைமாத கர்ப்பிணி. பிரசவம் இன்னும் சில மணித்துளிகளில். அவளுக்கென யாரும் கிடையாது. ஒரு ஓலைக் குடிசையில் தனிமையான வாழ்க்கை.

பக்கத்து வீடுகளில் இருப்பவர்கள் யாரும் உதவிக்கு வர மாட்டார்கள். ஏனெனில் அவள் ஒரு வேசி.

விரும்பி அந்தத் தொழிலுக்கு வரவில்லை. நகரத்தில் கூலிவேலை செய்து பிழைத்துக் கொண்டிருந்த நல்ல குடும்பத்தில் பிறந்தவள்.

ஒரு அயோக்கியன் அவளை திருமணம் என்ற பெயரில் ஏமாற்றி அழைத்து வந்து வியாபாரப் பொருளாக்கினான். அவன் குடிவெறியில் யாருடனோ சண்டையிட்டு கொலை செய்யப்பட்டான்.

கர்ப்பமுற்றிருந்த இவளை வேறு வேலைக்கும் யாரும் அனுமதிக்கவில்லை. வாழவும் முடியாமல் ஆனால் எந்த நிலையிலும் சாகக் கூடாது என்ற வைராக்கியத்துடன் அங்கே இங்கே பிச்சையெடுத்து பிழைத்து வந்தாள்.

இப்போது பிரசவ வலி துவங்கிவிட்டது. அரசு மருத்துவர் நேற்றே கூறினார் எந்த நேரமும் பிரசவம் ஆகலாம் என்று.  எப்படியோ கொஞ்சம் வலியைப் பொறுத்துக் கொண்டு அரசு ஆஸ்பத்திரிக்குப் போக ஆட்டோவைத் தேடினாள்.

ரோட்டில் அங்குமிங்கும் சர்… புர்…. என்று சென்று கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுனர்கள் எவரும் இவளது கர்ப்பிணித் தோற்றத்தைக் கண்டு வண்டியை நிறுத்தாமலே சென்று கொண்டிருந்தனர்.

ஒவ்வொரு ஆட்டோவிலும் பின்னால் ‘பிரசவத்திற்கு இலவசம்’ என் எழுதப் பட்டிருந்தது. அது யாருக்கோ?

அது ஒரு சைக்கிள் ரிக்ஷா. அதை ஓட்டுபவரும் வயதானவர். இவளைப் பார்த்தார் பரிதாபமாக. கீழே இறங்கி அவளைக் கைத்தாங்கலாக தனது ரிக்ஷாவில் ஏற்றி கஷ்டப்பட்டு மிதித்து அரசு ஆஸ்பத்திரியை அணுகி விட்டார்.

மீண்டும் அவள் கையைப் பற்றி அழைத்து ஆஸ்பத்திரி வாயிலை நெருங்கினார்.

“ஐயா… உங்களுக்கு…” என்று சொல்லும் போதே மயக்கம் வர வராண்டாவிலேயே அவள் சரிந்தாள்.

இதைப் பார்த்த நர்ஸ் ஒருவள் ஓடி வந்து,
பார்த்து ஸ்டெரச்சரில் உள்ளே கொண்டு போனாள். ரிக்ஷா கிழவர் பாவம், நம்மால் முடிந்தது அவ்வளவுதான் என்று திரும்பி சென்று விட்டார். நர்ஸ் திரும்பிவந்து அவரைத் தேடியபோது அவர் அங்கு இல்லை.

கண்ணம்மா அடிக்கடி அந்த ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தாலும் யாருடனும் அவ்வளவாகப் பழகியதில்லை. எனவே அவள் பெயர் ஊர் ஏனைய விவரங்கள் யாருக்கும் தெரியவில்லை.

பிரசவம் சற்று சிக்கலானது என்று டாக்டர்கள் ஆலோசித்தார்கள். கடைசியில் சிசேரியன் பண்ண முடிவு செய்தனர். ஏராளமான ரத்த இழப்பு ஏற்பட்டது. வயிற்றைக் கீறி குழந்தையை எடுத்தனர்.

ஆண் குழந்தை! ஆப்பரேஷன் முடிந்து வெகு நேரமாகியும் மயக்கம் தெளியவில்லை. பரிசோதித்ததில் இனி அவள் பிழைப்பது அரிது. என்ன செய்யலாம் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

இவர்களுக்காக போகிற உயிர் நிற்குமா என்ன? கண்ணம்மா இறந்து விட்டாள். அரசு விதிகளின்படி, சம்பிரதாயங்கள் செய்து காவல்துறை ஒத்துழைப்புடன் அனாதைப்பிணம் என முடிவு செய்தனர். அப்ப குழந்தை?

ராமசாமி,  பிணவறை ஊழியர். பிணங்களை உரிய முறையில் பாதுகாத்து உரியவர்களிடம் ஒப்படைப்பது அவர் வேலை. இந்தப் பிணம் அனாதை என்பதால் மீடியாக்களில் விளம்பரம் செய்து இரண்டு நாட்கள் காத்திருந்து, உரிய சம்பிரதாயங்களை அனுசரித்து அரசு மருத்துவக் கல்லூரிகளில் உடற்கூறு ஆய்வு பயிற்சிக்காக வழங்கப்படும்.

பிணத்தை அப்புறபடுத்தும் போது அந்தக் குழந்தை ராமசாமியைக் கவர்ந்தது. ராமசாமி அரசு ஆஸ்பத்திரியிலேயே துப்புரவாளராகப் பணியாற்றும் ராணியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டவர். பல வருடங்களாகியும் அவர்களுக்கு குழந்தை பாக்கியமில்லை.

இப்போது ராணியை அழைத்துப் பேசினார். அவளுக்கும் மிக மகிழ்ச்சியாக இருந்தது. முதன்மை மருத்துவரிடம் பேசி உரிய சம்பிரதாயங்களுக்குப் பின் குழந்தையை கொண்டு சென்றனர்.

கண்ணன் என பெயரிட்டு கண் நிறைவாய் வளர்த்தனர்.  பூமி சுழன்றது. கண்ணன் வளர்ந்தான். பொருளாதாரக் கீழ் மட்டத்திலிருந்து பெற்றோர் அவனை சுதந்திரமாக வளர்த்தனர்.

கல்வி அதிகம் ஏறவில்லை என்றாலும் விளையாட்டில் சிறந்து விளங்கினான். பத்தாவது முடிக்கும் முன் படித்த அரசு பள்ளியின் கபடி குழுவில் திறமைகாட்டி மாவட்ட அளவில் பள்ளிக்கு பதக்கம் வாங்கிக் கொடுத்தான்.

எல்லோராலும் பாராட்டுப் பெற்றான். மாவட்ட கபடி குழுவில் இணைந்தான். மாநில அளவில் வெற்றிகள் ஈட்டினான். அதன் பலன் மாநில கபடிக் குழுவிற்கும் தேர்வானான்.

அதே சமயம் ஓர் தனியார் கம்பெனி விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் வேலை கொடுத்தது.  மாநிலத்திற்காக விளையாடி தேசிய அளவில் பதக்கங்கள் குவித்தான்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் நம்நாட்டின் சார்பில் விளையாட சென்ற கபடி குழுவில் இடம் பெற்றான்.  வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. அடுத்து அகில உலக கபடிப் போட்டிக்கு இந்தியா சார்பில் சென்றான். விதி விளையாடியது.

பயிற்சியின் போது கண்ணனின் காலில் அடிபட்டது. பரிசோதித்ததில் தொடை எலும்பு சிதைந்திருந்தது. தொடர்ந்து பல நாட்கள் ஓய்விற்குப் பின் ஓரளவு ஊன்றுகோல் உதவியுடன் எழுந்து நடமாடத் தொடங்கினான்.

மருத்துவக் குழு அவனை தொடர்ந்து கபடி விளையாட அனுமதிக்கவில்லை. ஆனால் கம்பெனி வேலையில் தொடர்ந்தான்.

கம்பெனி முதலாளியின் ஒரே பெண் வனிதா, பணக்கார இடத்தில் திருமணமாகி, கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட ஈகோவினால் விவாகரத்துப் பெற்றனர்.

ஏற்கெனவே வனிதா, கண்ணனின் தீவிர விளையாட்டு ரசிகையாக இருந்தாள்.  அவனது பல வெற்றிகள் கம்பெனிக்கு சமூகத்தில் நல்ல பெயரை ஈட்டித் தந்தது. கம்பெனியின் பொருளாதார வெற்றிக்கு கண்ணனும் ஒரு காரணம் என்பதால் அவன் காலில் அடிபட்டு விளையாட முடியாமற் போன போதும் வேலையில் தொடர்ந்தான்.

இந்த நிலையில் கண்ணனின் பெற்றோர் அவனுக்கு திருமணப் பேச்சை எடுத்தனர். தனது விளையாட்டு வெற்றிக்கு தடயாகும் என்றே தனது திருமணத்தை ஒத்திப் போட்டிருந்தான். 

இப்போது பெற்றோர் பெண் பார்க்க தொடங்கினர். இவனது ஊன்றுகோல் நடை திருமணத்திற்கு தடையாக இருந்தது. ஒரு நாள் தற்செயலாக வனிதாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

திடீரென வனிதாவிற்கு, ‘ஏன் கண்ணனை மணந்து அவனுக்கு வாழ்க்கைத் துணையாக இருக்கக் கூடாது?’ என தோன்றியது. பேச்சுவாக்கில் கண்ணனிடம் தெரிவித்தாள். 

அதுவரை திருமணத்தில் நாட்ட மில்லாதிருந்த கண்ணன், ‘வாழ்விழந்த வனிதாவிற்கு ஏன் மறுவாழ்வு கொடுக்கக் கூடாது?’ என எண்ணினான்.

வனிதா தன் தந்தையிடம் விருப்பத்தைக் கூற, அவருக்கு “அவளது சந்தோஷமே தனக்கு திருப்தி” என சம்மதித்தார். பரபரப்பு ஏதுமின்றி பதிவுத் திருமணம் நடந்தது!

இங்கே, ஜாதி, மதம், பணக்காரன், ஏழை, உடல் ஊனம் என்ற பாகுபாடுகள் எல்லாம் பரிதிமுன் பனிபோல், எங்கே போயிற்று என்றே தெரியவில்லை. அவர்களும் வாழ்கிறார்கள்!

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வல்லபி ❤ (பகுதி 3) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

    சிந்தனைச் சிறகுகள் (சிறுகதைத் தொகுப்பு) Book for Sale – எழுத்தாளர் ராஜதிலகம் பாலாஜி