in ,

செவ்வந்திக்கு ஒரு செக் (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

த்து நாட்களாகிவிட்டன அந்த ஊருக்கு வந்து. அக்கம்பக்கத்தில் எல்லாம் கூட சொல்லி வைத்திருந்தும் இன்னும் வேலைக்காரி கிடைத்தபாடாக இல்லை. வெறுத்துப் போன ஜோதி, சாயங்காலம் மகனைக் கூப்பிட்டு புலம்பினாள்,  ‘தம்பி… வேலைக்காரி ஒருத்தியும் கிடைக்க மாட்டேங்கறா… என்னடா பண்ண… என்னாலயும் முடியலைடா… குனிஞ்சு நிமிர்ந்தாலே மூச்சு வாங்குது… ‘

அப்போதுதான் அவன் சொன்னான்… ‘அம்மா நான், ‘வீட்டுவேலைக்கு ஆள் தேவை’ன்னு அழகா பிரிண்ட் போட்டு கேட்டுக்கு வெளியில மாட்டிவிடறேன்மா… யாராவது அதைப் பார்த்துட்டாவது வர்றாங்களானு பார்ப்போம்… பொறு… ‘ என்றான்.

மறுநாள் சாயங்காலமாக ஒரு பெண் வந்து காலிங் பெல்லை அழுத்தினாள். ஜோதி எழுந்து போய் பார்த்தாள்.

முப்பது வயது இருக்கலாம். ‘ அம்மா… வெளீல போர்டு பார்த்தேன்மா… அதான் உங்களை கேட்கலாம்னு வந்தேன்… நான் வேலை பண்றேம்மா… ‘ என்றாள்.

இன்ப அதிர்ச்சி அடைந்தவளாய், ‘ நீ யாரும்மா… எங்கே இருந்தே வர்றே… ‘ என்றாள் ஜோதி.

‘அம்மா… பின்னாடி ஒரு பெரிய காம்ப்ளக்ஸ் கட்டிக்கிட்டுருக்காங்களே… அங்கேதான் வேலை செய்றேன். சாயங்காலம் அஞ்சு மணிக்கப்புறம் சும்மாத்தான் இருப்பேன். எங்க வீட்டுக்காரரும் அங்கே மேஸ்திரியா இருக்கார்… எங்க ஊரு திருநெல்வேலிமா… பொழைப்பு தேடி இங்கே வந்திருக்கோம்… ‘ என்றாள் அவள்.

 ‘உன் பேரு… ‘ கேட்டாள் ஜோதி.

‘என் பேரு செவ்வந்திம்மா… என்ன வேலைலாம் செய்யனும்னு சொன்னீங்கன்னா பரவால்ல… ‘ என்றாள் அவள்.

ஜோதிக்கு அவளது அணுகுமுறை, பேச்சு எல்லாமே பிடித்திருந்தது. அத்துடன் முதலிலிருந்தே என்ன வேலை என்று மட்டும்தான் கேட்கிறாள், எவ்வளவு சம்பளமென்று கேட்கவேயில்லை. அது ஜோதிக்கு இன்னும் பிடித்திருந்தது.  

பழைய வீட்டில் வேலை பார்த்தவள், சம்பளத்தில் அடிக்கடி பணம் கேட்டு வாங்கிக் கொள்வாள். முப்பதாம் தேதிக்கு முன்பே அந்த மாத சம்பளத்தை வாங்கி முடித்திருப்பாள். அவளுக்கு இவள் பரவாயில்லை என்று தோன்றியது. என்றாலும் அக்கம்பக்கத்தில் ஐந்தாயிரம் ஆறாயிரமென்று சம்பளம் வாங்குகிறார்கள்.

இவள் எவ்வளவு கேட்பாளோ என்று நினைத்தபடி, ‘வீடு சின்னதுதாம்மா… பெருக்கி, துடைக்கணும்… பாத்திரம் கழுவனும். துணி துவைச்சு காயப் போடணும்… வாஷிங் மிஷின் கிடையாது… கையிலதான் துவைக்கணும்…‘ என்றுவிட்டு அவளை உற்று கவனித்தாள் ஜோதி.

எடுத்த எடுப்பிலேயே ஐந்தாயிரம் கொடு என்று கேட்பாளோ என்று எதிர்பார்த்தாள். அவளோ, ‘ நீங்க எவ்ளோமா தருவீங்க… ‘ என்றாள்.

இதை எதிர்பார்க்காத ஜோதி மெல்லிய சிரிப்புடன், ‘நான், என் பையன் ரெண்டு பேர்தாம்மா… பெருசா வேலையும் இருக்காது… நீ எவ்வளவு கேட்கறேன்னு தெரிஞ்சா முடியும் முடியாதுனு நான் சொல்லிடுவேனில்லையா… ‘ என்றாள்.

‘சரி… நீங்க கொடுக்கறதை கொடுங்கம்மா… ‘ என்றாள்.

ஜோதியின் மனதில் இன்னும் ரொம்பவே இடம் பிடித்துவிட்டாள் அவள். உடனே, ‘ சரிம்மா… எப்போலேருந்து வேலைக்கு வர்றே… ‘ என்று கேட்டாள் ஜோதி.

‘அம்மா நான் வேறொரு வேலையா இந்தப் பக்கம் போயிட்டிருந்தப்போதான் உங்க போர்டைப் பார்த்தேன்… நான் வீட்டுக்குப் போயிட்டு ஒரு ஆறு ஆறரை போல வந்துடறேம்மா… அதுக்கு முன்னாடி வீட்டை ஒருதடவை பாக்கட்டுமாம்மா… ‘ என்றபடி உள்பக்கம் எட்டிப் பார்த்தாள் அவள்.

‘ஓ தாராளமா… ‘ என்றபடி ஜோதியும் உடனே அவளைக் கூட்டிக்கொண்டு போய் எல்லா அறைகளையும் காட்டினாள். பிறகு புழக்கடைப் பக்கமும் கூட்டிக்கொண்டு போய் துணி துவைக்கும் கல்,  குழாயடி எல்லாம் காட்டினாள்.

‘சரிமா… வீட்டை அம்சமா பராமரிக்கிறீங்க… நான் வீட்டுக்குப் போயிட்டு வந்துடறேம்மா… நீங்க அதுக்குள்ளே, ஒரு பக்கெட், கூட்டுமாறு, மாப்பு, லைஜால், பினாயில் எல்லாம் தயாரா எடுத்து வச்சிடுங்கம்மா… ‘ என்றுவிட்டு ஜோதியின் பதிலுக்கு காத்திராமல் நகர்ந்தாள். ஜோதிக்கு திடீரென்று ஒரு எண்ணம். இவளது நாணயத்தை முதலிலேயே சோதித்துவிடலாமே என்று.

‘கொஞ்சம் இரும்மா… நீ பெல் அடிச்சப்போ டீதான் போட்டுக்கிட்டிருந்தேன்.  நான் டீ குடிக்கப் போறேன்…. உனக்கும் ஒரு கப் டீ தர்றேன்… குடிச்சிட்டுட்டுப் போ… ‘ என்றவள், ‘அதுக்கு முன்னாடி வீட்டை மட்டும் ஒரு கூட்டு கூட்டிட்டுப் போயிடேன்… நீ எப்படி வேலை பண்றேன்னு நான் பார்க்கறேன்… ‘ என்று இழுத்தாள் ஜோதி.

ஜோதியின் திட்டம் வேலைக்காரிக்குத் தெரியாமல் ஒரு ஐநூறு ரூபாயை டேபிளுக்கடியில் அவளது கண்ணுக்கும் தெரியும்படி போட்டுவிட வேண்டும்.  அவள் கூட்டும்போது பார்த்துவிட்டு அதை நமக்குத் தெரியாமல் எடுத்துக்கொண்டு போய் விடுகிறாளா அல்லது எடுத்து நம்மிடமே கொடுத்துவிடுகிறாளா என்று பரிசோதிக்க வேண்டும்.

அவள் யோசிக்காமல் உடனே, ‘சரிமா… ‘ என்று விட்டு பக்கத்தில் கிடந்த துளிர் மாறை எடுத்துக்கொண்டு ஹாலை பெருக்க ஆரம்பித்தாள். உடனே ஓடிப்போய் படுக்கையறையில் இருக்கும் மேஜைக்கடியில் அவளது கண்ணில் படும்படியாக ஒரு மடித்த ஐந்நூறு ரூபாயை போட்டுவிட்டு மெல்ல திரும்பிவிட்டாள் ஜோதி.

டீயை கலக்கி இரண்டு கப்புகளில் ஊற்றி எடுத்துக் கொண்டு வந்தாள்.  அவள் அதற்குள் ஹாலை பெருக்கி விட்டு அடுத்த  படுக்கையறைக்குள் போய்விட்டாள். டீயை அவளிடம் கொடுத்துவிட்டு, ‘ டீயை குடிச்சிட்டு வீடு முழுசும் பெருக்கிடு.  நான் துணிகளை மொட்டை மாடில காயப் போடனும்… நீ வேலையை பாரு… ‘ என்றபடி டீயை குடித்தபடியே பாத் ரூமிற்குள் போய் துணிகளை அள்ளி பக்கெட்டில் போட்டு எடுத்துக்கொண்டு மாடிப்படிகளில் ஏறினாள். 

குறுக்கிட்ட அவள், ‘அம்மா நான் வேணா கொண்டு போயி காயப் போடட்டுமா… ‘ என்றாள். உடனே மறுத்த ஜோதி, ‘பரவால்லம்மா… நானே காயப் போட்டுடறேன்… நீ வீட்டுக்கு போகணும்னே இல்லையா… ஏற்கனவே நான் கூட்டச் சொல்லி வேற வேலை கொடுத்துட்டேன்… அதை மட்டும் செஞ்சுட்டு போ போதும்… எல்லா ரூமையும் பெருக்கிடு… அப்புறமா சாயங்காலமா வந்து மத்த வேலைகளை பாரு… நாலஞ்சு துணிகள்தான். நீ பெருக்கி முடிக்கறதுக்குள்ளே நான் வந்துடுவேன்… ‘ என்றுவிட்டு எல்லா மாடிக்குப் போனாள். எல்லா ரூமையும் என்பதை மட்டும் கொஞ்சம் அழுத்திச் சொல்லியிருந்தாள் ஜோதி.

இன்றைக்குத் தெரிந்துவிடும் இவள் எப்படி என்று யோசித்தபடியே எல்லா துணிகளையும் தொங்கவிட்டுவிட்டு திரும்பி வந்தாள்.  அதற்குள் ‘ முடிஞ்சுதுமா…  நான் கிளம்பறேன்… ஒரு ஆறரை மணி போல வர்றேம்மா… ‘ என்றுவிட்டு வெளியேறினாள்.

அதுவரை ஆர்வத்தை அடக்கமுடியாமல் கட்டுப்படுத்தி வைத்திருந்த ஜோதி அவள் வெளியேறிய மறுநொடியே ஓடிப்போய் டேபிளுக்கடியில் பார்த்தாள்.  திகைத்தாள். அங்கே பணத்தைக் காணவில்லை.

‘ச்சே… வேலைக்கார புத்தியைக் காட்டிட்டாளே இவ… பணத்து மேல சபலம் இருக்கறவ எப்படி நம்மக்கிட்டே உண்மையா வேலை செய்வா. இவளை நம்பி எப்படி டேபிள் பீரோ எல்லாம் பூட்டாம வைக்கறது. இவ கூட்டிக்கிட்டே போனாள்னா நாம கூடவே அல்லவா போயிக்கிட்டிருக்க வேண்டியிருக்கும்… ச்சே ச்சே… இவ வேண்டவே வேண்டாம்… இந்த ஐநூறு ரூபாயோட போயிடட்டும்… ஒரு வீட்டைப் பெருக்கினதுக்கு ஐநூறு ரூபா கூலின்னு நினைச்சுக்குவோம்…‘ என்று நினைத்துக்கொண்டவள், திடீரென்று யோசனை வந்து ஓடிப்போய் மறுபடியும் டேபிளுக்கடியில் குனிந்து நன்றாகத் தேடிப் பார்த்தாள்.

ஒருவேளை பெருக்கும்போது விளக்குமாறு பட்டு உள்ளே ஒதிங்கியிருந்து, நாம் இவளை தப்பாக நினைத்துவிடக் கூடாதல்லவா. ஆனால் நோட்டை காணவில்லை என்பது உறுதியானது.

வேலைக்குப் போய்விட்டுத் திரும்பிய மகனிடம் நடந்ததை சொல்ல நினைத்து சொல்லாமல் விட்டுவிட்டாள். ‘ தேவையில்லாமல் உன்னை யாரு ஐநூறு ரூபாயை தானம் கொடுக்கச் சொன்னது… ‘ என்று திட்டுவானே.

ஆறரை போல அவள் வந்தாள். உடனேயே, ‘நீ வேலைக்கு வர வேண்டாம்மா… ‘ என்று சொல்ல வாய் திறந்தாள். அதற்குள் அவள், ‘அம்மா… எங்க வீட்டுக்காரரு வீட்டு வேலையெல்லாம் செய்ய வேண்டாம்னுட்டார். நான் வரலைமா…’ என்றவள், ‘சொல்ல மறந்துட்டேன்… கூட்டும்போது டேபிளுக்கடியில ஒரு ஐநூறு ரூபா நோட்டு கிடந்ததுமா… எடுத்து சாமி ஸ்டாண்ட்ல வச்சேன்… நான் வர்றேம்மா…’ என்றுவிட்டு கிளம்பியே விட்டாள்.

ஆவலுடன் ஓடிப்போய் ஸ்டேண்டில் கைவைத்துப் பார்த்தாள். அங்கே கிடந்த ஐநூறு ரூபாய் நோட்டு அவளைப் பார்த்து சிரிப்பது போல இருந்தது அவளுக்கு.  

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கரை தொடாத அலைகள் 💗 (நாவல் – அலை 37) – தி.வள்ளி, திருநெல்வேலி 

    கண்களில் மின்னிடும் மின்னல் (மின்னல் 12) – ஜெயலக்ஷ்மி