in ,

சத்தமில்லாமல் ஒரு தியாகம் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

பேராசிரியர் சிவஞானம் இறந்து விட்டார்.

தகவல் கிடைத்ததும் மனசு கனத்துப் போய், வேதனையுடன் தனிமையில் சென்றமர்ந்தேன். பார்வை சூன்யத்தை வெறித்தது.  

 “வாட் எ கிரேட் மேன்?… அவரும்… அவரோட அந்த அறிவரையும்தானே இன்றைக்கும் நான் உயிரோட இருக்கக் காரணம்… அவர் மட்டும் அன்றைக்கு என்னைத் தடுத்து… என் மனதை மாற்றி.. நாக்பூருக்கு ரயிலேற்றி அனுப்பி இருக்காவிட்டால்… என் உடலைப் புதைத்த இடத்தில் இன்னேரம் ஒரு மரமே வளர்ந்திருக்கும்!”

இப்போது நினைத்தாலும் உடல் சிலிர்த்தது.

இருபத்திரெண்டு ஆண்டுகளுக்கு முன்…. ஒரு மழை இரவில்… மந்திரி சண்முகநாதனின் அடியாட்கள் அவருடைய மகளை காதலிக்கிறேன்… என்கிற ஒரே காரணத்திற்காக என்னை துவம்சம் செய்ய என்னுடைய கல்லூரி ஹாஸ்டலுக்குள் வந்த போது அங்கு பெரிய கலவரமே நடந்தது.

இக்கட்டான சூழ்நிலையில் நண்பர்களின் உதவியோடு அங்கிருந்து தப்பி பேராசிரியர் சிவஞானத்திடம் தான் தஞ்சம் புகுந்தேன். காரணம், அவர்தான் எங்கள் அனைவருக்குமே வழிகாட்டி… ஆபத்பாந்தவன்.

விஷயத்தைக் கேள்விப்பட்டதும் முதலில் அதிர்ந்த பேராசிரியர், பின்னர் இயல்புக்குத் திரும்பி, “தியாகு… வாழ்க்கையில் முக்கியமான முடிவெடுக்க வேண்டிய கட்டத்தில் நீ இருக்கிறாய்!… நீ இப்ப எடுக்கப் போற முடிவு வாழ்வா?… சாவா?ங்கற முடிவு!… எல்லோருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கும் காதல் உனக்கு எமனாக வந்திருக்கு!… நீ உயிரோட இருக்கணும்னு விரும்பினா…. உடனே உன் காதலைத் தூக்கிப் போடு.. கேவலம் அற்ப காதலுக்காக… அற்புத வாழ்க்கையை இழந்திடாதே… உன் கிட்ட படிப்பிருக்கு… திறமை இருக்கு… எதையும் சாதிச்சுக் காட்டற உத்வேகம் இருக்கு… அதை உழைப்புல காட்டு… என்னோட நண்பர் ஒருத்தரோட கம்பெனி நாக்பூர்ல இருக்கு… நான் போன்ல சொல்லிடறேன்… உடனே கிளம்பு… உனக்கான வெளிச்ச எதிர்காலம் அங்க இருக்கு… உயர்வு சிம்மாசனம் காத்திருக்கு…. இங்கிருந்து மரணத்தைச் சுவைக்காதே… நாக்பூருக்குப் போ… விடியல் ரெடியா இருக்கு” அறிவுரையையும், உதவியையும் ஒரு சேரக் கொடுத்தார்.

ரயில் நிலையம் வரை எனக்குப் பாதுகாப்பாக வந்து டிக்கெட்டை என் கையில் திணித்து தடம் புரள இருந்த என் வாழ்க்கைக்கு உயர்வுத் திசை காட்டிய அந்த உத்தமப் பேராசிரியர் இன்று இறந்து விட்டார்.

கடந்து போன இருபத்திரெண்டு ஆண்டுகளில் ஒரு முறையேனும் ஊருக்குத் திரும்பிச் சென்று அவரைப் பார்த்திருக்கணும்…. ப்ச்… தப்புப் பண்ணிட்டேன்…  உயர்வுக்காக வேண்டி உயிரைக் கொடுத்து உழைத்து  உயர்வுச் சிம்மாசனத்தில் அமர்ந்தாச்சு… ஆனா.. ஊர்… உலகம்… உறவு… நட்பு… எல்லாத்தையும் மறந்து ஒரு எந்திர வாழ்க்கையல்ல வாழ்ந்து விட்டோம்?…  

ஓரிரு முறை அவரிடம் கேட்டிருக்கின்றேன்…  “சார்… ஊருக்கு ஒரு தரம் வந்திட்டுப் போறேனே சார்… பெத்தவங்களை… நண்பர்களை… உங்களையெல்லாம் பார்க்கணும்னு ரொம்ப ஆசையாயிருக்கு.. சார்”ன்னு,

ஒரே பதில்தான் வரும்  “வேண்டாம் தியாகு… அந்த மந்திரிக்கு இன்னும் உன் மேல் கோபம் தீரலை… எப்ப நீ வருவே?ன்னு காத்திட்டிருக்கான்… நீ வந்தே… அவ்வளவுதான்… இத்தனை நாள் நீ பட்ட கஷ்டமெல்லாம் வீணாப் போய்டும்…. எங்கியோ கண் காணாத ஊர்ல நீ உயிரோட இருக்கறே.. அதுவும் நல்லா இருக்கறே… அந்த சந்தோஷம் போதும் எங்களுக்கு அதைக் கெடுத்திடாதே”

திருமணத்தைப் பற்றியே நினைக்காமல் வாழ்ந்து கொண்டிருந்த என்னைத் திருமணம் செய்து கொள்ளச் சொல்லிக் கட்டளையிட்டார். அவர் சொல்படியே நியூஸ் பேப்பரில் விளம்பரம் கொடுத்து ஒரு மும்பை வாழ் தமிழ்ப் பெண்ணை மணந்து இரண்டு மகன்களைப் பெற்று இன்று ஒரு பொறுப்பான தந்தை ஸ்தானத்தில் அமர்ந்திருக்கின்றேன்.

தீர்மானித்து விட்டேன். அவரது சாவுக்குச் செல்வதென்று. விமான டிக்கெட்டுக்கு மின்னலாய் ஏற்பாடு செய்து புயலாய்க் கிளம்பினேன்.

விமான நிலையத்திலிருந்து டாக்ஸி பிடித்து பேராசிரியரின் முகவரியை டிரைவரிடம் கொடுத்து விரட்டினேன்.   “எப்படியாவது பாடிய எடுக்கறதுக்கு முன்னாடி போயிடணும்!… இருபத்திரெண்டு வருஷத்துக்கு முன்னாடி பார்த்த சிவஞானம் சார் முகத்தைப் பார்த்தே தீரணும்!”

நல்லவேளையாக நான் போய்ச் சேர்ந்த போது பேராசிரியரின் உடல் சுடுகாடு நோக்கி பயணிக்காமல் இருந்தது.  “கடைசியா ஒரு முறை அவர் முகத்தைப் பார்க்க இறைவன் கொடுத்த வாய்ப்பு”.

கிடத்தப்பட்டிருந்த பேராசிரியரின் உடலை இறுகிய முகத்துடன் பார்த்து உள்ளுக்குள் குமுறினேன். “எப்பேர்ப்பட்ட மனிதர்…. எப்படி முடிந்தது இவரால் மட்டும்…. எப்போதும்…. எல்லோருக்கும்… நல்லது மட்டுமே நினைக்க… நல்லது மட்டுமே செய்ய…”

 “வந்ததுதான் வந்தோம் பேராசிரியரின் மனைவியைப் பார்த்து ஒரு சில ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லி விட்டுச் செல்வோம்”.

அழும் பெண்கள் கூட்டத்தில் தேடினேன் பேராசிரியரின் மனைவியை.  “இதில் பேராசிரியரின் மனைவி யார்?… துக்கம் விசாரிக்க வேண்டுமே… எப்படிக் கண்டுபிடிப்பது?”

பக்கத்தில் நின்று கொண்டிருந்தவரிடம் நாசூக்காய் விசாரித்தேன்.  “அய்யா… சாரோட மனைவி…?”

 “மிஸஸ் சிவஞானம் தானே?.. அதோ அந்த…. கறுப்பு ஸாரி…”

அவர் காட்டிய திசையில் திரும்பிப் பார்த்த நான், பத்தாயிரம் வாட்ஸ் மின்சாரம் பாய்ந்தது போல் அதிர்ச்சி வாங்கினேன்.

இவங்க… இவங்க…

நான் காதலித்த…. இல்லை… இல்லை… என்னைக் காதலித்த…

மந்திரி சண்முகநாதனின்… மகள்… அல்லவா?

இவளா… பேராசிரியரின் மனைவி?

எனக்கு எதுவுமே புரியவுமில்லை… தோணவுமில்லை.  “எப்படி?… எப்படி?”

என் மனம் ரீப்ளே பட்டனை அழுத்தி சோதித்தது.

 “சார்…. உங்க கல்யாணத்திற்கு நான் வராமல் எப்படி சார்?… வருவேன் சார்… கண்டிப்பா ஊருக்கு வரத்தான் சார் போறேன்” குரியரில் சிவஞானம் சாரின் கல்யாணப் பத்திரிக்கை வந்து சேர்ந்த போது தொலைபேசியில் அடம் பிடித்தேன்.

‘ப்ளீஸ்… தியாகு புரிஞ்சுக்கப்பா… உனக்கு எது நல்லது எது கெட்டதுன்னு எனக்குத் தெரியாதா?… உனக்கு நான் இன்விடெஷன் அனுப்பியதே ஒரு இன்பர்மேஷனுக்காகத் தான்… நீ வரணும்” என்பதற்காக அல்ல….. நீ வரக் கூடாது… அங்கிருந்தே வாழ்த்து அது போதும்”

இதனால்தான் சார் என்னை வர வேண்டாம்னு சொன்னாரா?

சார்… நல்லவரா?… கெட்டவரா?

அப்போது என் தோள் மீது ஒரு கை விழ, திரும்பிப் பார்த்தேன். ரகு.  ஹாஸ்டல் கலவரத்தின் போது என்னைத் தனியாகத் தள்ளிச் சென்று பேராசிரியரிடம் சேர்த்தவன்.

 “ரகு… எப்படியிருக்கே?… என்று சம்பிரதாயமாய்க் கேட்டு விட்டு, அவன் பதிலளிக்கக் கூட அவகாசம் கொடுக்காமல் அடுத்த கேள்வியை உடனே இறக்கினேன்.  “அவங்க.. மினிஸ்டர் பொண்ணு சவிதா தானே?”

 “ஆமாம்… உன் காதலி சவிதாவேதான்!”

 “அவ… எப்படி பேராசிரியர்… மிசஸ்?”

 பதிலேதும் கூறாமல் என்னை அங்கிருந்து ஒரு தனியிடத்திற்கு அழைத்துச் சென்று, “உன் மனதை மாற்றி… உன் மனதிலிருந்து காதலைத் தூக்கி வீசச் செய்த புரபஸர் சவிதாவும் கொஞ்ச நாள்ல மனசு மாறிடுவாள்னு நெனச்சார்!… ஆனா அவளோ காரை கண் மூடித்தனமா ஓட்டி சூஸைட் அட்டெம்ட் பண்ணினா… அந்த விபத்துல உயிர் பிழைச்சாங்க… ஆனா பழைய நினைவுகளை மொத்தமா மறந்திட்டு மூன்றாம் பிறை ஸ்ரீதேவி மாதிரி ஆயிட்டாங்க!… அந்த நேரத்துல தேர்தல் வந்திச்சு!… தான் தோத்திடுவோம்னு முன்னமேயே தெரிந்து கொண்ட மினிஸ்டர் சண்முகநாதன் அரைக் கிறுக்கா இருக்கற தன் மகளைக் கொன்று அனுதாப ஓட்டு வாங்க முயற்சி செய்தார்!… அதைத் தெரிந்து கொண்ட புரபஸர் அவளைக் காப்பாத்தி தன் பாதுகாப்புல வெச்சுக்கிட்டார்… மினிஸ்டரும் எலக்‌ஷன்ல தோத்துப் போயிட்டார்!.. சில நாட்களுக்குப் பிறகு ஊரார் தாறுமாறாய்ப் பேச புரபஸர் அந்த சவிதாவைத் தானே மணம் செய்துக்கிட்டு ஊரார் வாயை மூடினார்!… உனக்காக மனநிலை பாதிக்கப்பட்ட உன் காதலிக்கு ஒரு பாதுகாப்பான வாழ்வு கொடுக்க தன் வாழ்க்கையையே தியாகம் செய்திட்டார்டா புரபஸர்”

சில நிமிடங்கள் அமைதியாய் தரையையே பார்த்துக் கொண்டு நின்றேன்.  பிறகு சட்டென்று அந்த சவிதா எதிரே போய் நின்று கும்பிட்டேன்.  என்னை யாரென்று கூடத் தெரிந்து கொள்ளாதவளாய்  அவளும் கும்பிட அமைதியாய் அங்கிருந்து நடந்தேன்.

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    டிபன் பாக்ஸ் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

    தீபாவளி (சிறுகதை) – சத்யநாராயணன்