எழுத்தாளர் ஜெயலக்ஷ்மி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
‘நலம்’ மனநல மருத்துவமனையின் ஒரு அறை. சுவற்றில் ஏதோ கிறுக்கிக் கொண்டிருக்கிறார் சுந்தர்.
“நேரம் ஆச்சு, ஒரு வாய் சாப்பிடுங்க“ என்று சோறு ஊட்ட வந்த மாலினியை கன்னத்தில் ஒங்கி அறைகிறார். சாப்பாடு தட்டோடு பறந்து போய் விழுகிறது.
கன்னத்தில் பிறாண்டுகிறார். “ஓடிப் போவியா? போடீ! இனி இங்க வருவியா?” என கேட்டுக் கொண்டே முடியைப் பிடித்து ஆட்டுகிறார்.
அப்போது அங்கே வந்த கார்த்திக், “அப்பா விடுங்கப்பா” என்று கத்திக் கொண்டே தன் அம்மாவை அவர் பிடியிலிருந்து விடுவிப்பதற்காக, முரட்டுத்தனமாய், அவர் கையைப் பற்றி சுழற்றி இழுத்துக் கொண்டே, ”நர்ஸ்! நர்ஸ்!” என்று கத்துகிறான்.
உள்ளே ஓடி வந்த செவிலியும், உதவியாளரும் அவரைப் பிடித்திழுத்து படுக்கையில் கிடத்தி ஊசியைச் செலுத்துகின்றனர். மாலினியின் கண்களில் வழியும் கண்ணீரோடு, கன்னத்தில் கசிந்து கொண்டிருந்த குருதியும் கரைந்து வழிகிறது.
கார்த்திக் அவரை வேதனையோடு நோக்குறான். தன் கைக்குட்டையை எடுத்து, கண்கலங்க அம்மாவின் குருதி கலந்த கண்ணீரைத் துடைக்கிறான்.
“எனக்கு ஒண்ணுல்ல செல்லம். நீ காலேஜுக்கு கௌம்பு” என்கிறாள் வலிய வரவைத்த புன்னகையுடன்.
காலை சோதனைச் சுற்றுக்கு வந்த மருத்துவர் மனோகரன், “சுந்தர்! நீங்க இன்னிக்கு வீட்டுக்குப் போலாம். டிஸ்சார்ஜ் ஸம்மரி ரெடி பண்ண சொல்றேன். டேக் கேர்! “ என்றார்.
“ஓ,கே. டாக்டர்! தேங்க் யூ வெரி மச்!“ என்ற சுந்தர் மனைவியைக் காணாமல், “எங்கே போய்ட்டா, இவ?“ என்று தேடினார்.
உள்ளே வந்த கார்த்திக், “ஃபீஸ் கட்டிட்டு வரேம்ப்பா, போலாம்“ என்று கூறிவிட்டு பணத்தைக் கட்ட விரைந்தான்.
நர்ஸ், “ம்ம் வீட்டுக்குப் போறீங்களா ஸார்? நீங்க ரொம்ப குடுத்து வச்சவர் ஸார். உங்க வைஃப் உங்கள எப்டி பாத்துண்டாங்க தெரியுமா? ராப்பகலா கண் முழிச்சி நீங்க பண்ண அழிச்சாட்டியத்தையெல்லாம் சகிச்சிண்டு, ஒரு குழந்தையப் பாக்கறா மாதிரி பாத்துண்டாங்க.அவங்க சாப்டு, தூங்கி நாங்க பார்த்ததே இல்ல. சந்தோஷமா இருங்க ஸார். அவங்கள பத்ரமா பாத்துக்கோங்க“ என்றார்.
“ஃபீஸ் கட்டியாச்சுப்பா, போலாம்பா“ என்றவாறே பொருட்களை எடுத்து வைக்க ஆரம்பித்தான் கார்த்திக்.
“டாக்டரப் பாத்து சொல்லிட்டு வரலாம்“ என்று கிளம்பினர்.
கார்த்திக் கதவைத் தட்டவும், “கம் இன்! “ என்ற மருத்துவர், “வாங்க சுந்தர், உட்காருங்க. நீங்க இவ்ளோ சீக்கிரம் ரெகவர் ஆனீங்கன்னா, அதுக்குக் காரணம், உங்க வைஃப்போட லவ் அண்ட் கேர் தான். ஷி இஸ் அ வொன்டர்ஃபுல் ஹ்யூமன் பீயிங். யு ஆர் வெரி லக்கி டு ஹேவ் ஹெர் அஸ் யுவர் வொய்ஃப். நாம ஓரல்லா எடுத்துக்கற மெடிசின்ஸ விட மத்தவங்க நம்ம மேல காட்ற அன்பும், அனுசரணையும் தான் பெஸ்ட் மெடிசின்ஸ். அத அவங்க ரொம்ப அதிகமாகவே, விடாம உங்களுக்கு கொடுத்திட்டிருந்தாங்க.
நீங்க துப்பறதையும், தூக்கியெறிதறயும், உங்க அடியையும் கூட அமைதியா சகிச்சிக்கிட்டு, அதனால தனக்கேற்படற வேதனைய வெளிய தெரியாம விழுங்கிகிட்டு குளிப்பாட்டி, சாப்பாடு ஊட்டி, தூங்க வச்சி, ஒரு தாய் தன் குழந்தையக் கூட இப்டி பாத்துக்க முடியுமான்னு தெரியல. ஒரு ஸ்டேஜூக்கு மேல எரிச்சல் வந்து, குழந்தையக் கூட ரெண்டு அடி போடுவோம்ல?. பட், உங்க வொய்ஃப் அவ்வளவு சாந்தமா உங்களப் பாத்துகிட்டாங்க. ஸோ, நீங்க எதப்பத்தியும் ரொம்ப திங்க் பண்ணாம, மூளையப் போட்டு கசக்கிப் பிழியாம, லைஃப நல்லா என்ஜாய் பண்ணுங்க. ஆல் த பெஸ்ட்!” என்று சொல்லி அனுப்பினார்.
ஒரு கையால் திசைமாற்றி(ஸ்டியரிங்)யை இயக்கிக் கொண்டே, மறுகையால் தந்தையின் வலது கரத்தை எடுத்து தன் நெஞ்சில் வைத்த கார்த்திக், “அப்பா, எல்லாருஞ் சொல்றதயே நானுஞ் சொல்றேன்னு தப்பா நெனைக்காதீங்க. நெஜமாவே, அம்மா உங்கள எப்டி பாத்துக்கிட்டாங்க தெரியுமா? காலைல ஓடிவந்து எனக்கு சமைச்சு வச்சிட்டு, துணிய மெஷின்ல போட்டுட்டு, ஓடி வருவாங்க உங்கள பாக்க. உங்கள சாப்பிட வைக்க எவ்வளவு அடியும், மிதியும் வாங்கிருக்காங்க தெரியுமா? அந்த நேரத்ல பாக்கற எனக்கே செம கோபம் வரும்.
ஆனா அவங்க கோபப்படாம உங்களத் தாங்கி, ஏந்தி, அவ்ளோ கேர் பண்ணிகிட்டாங்க. அவங்களோட உலகமே நீங்களா மட்டுந்தாம்பா இருந்தீங்க. அவங்க வேறெதப் பத்தியும் திங்க் பண்ணக்கூட இல்லப்பா. உங்க மேல அளவு கடந்த லவ் இருந்தா மட்டும் தாம்ப்பா, இது பாஸிபிள் ஆயிருக்கும். அவங்கள கொஞ்சம் ரிலாக்ஸ்டா எங்கயாவது கூட்டிட்டுப் போய்ட்டு வாங்கப்பா. நான் கொஞ்ச நாள் ஃபிரண்ட்ஸோட ஸ்டே பண்ணிக்கிறேன்” என்றான்.
சுந்தரின் கண்கள் முன்னோக்கி சாலையைப் பார்த்தவாறிருக்க, வாய் “ம்…ம்…ம்…” என்க, இதயம் ஒரு நொடியில் இருபத்தி இரண்டு வருடங்கள் பின்னோக்கி பயணித்து, மாலினியின் பிறந்த வீட்டில் போய் நின்றது.
சுந்தரின் அண்ணனும், சுந்தரும் ஷோஃபாவில் அமர்ந்திருக்க, மாலினி வந்து, தரையை நோக்கியவாறே எதிர் ஷோஃபாவில் இரண்டு நிமிடங்கள் அமர்ந்துவிட்டு எழுந்து சென்று விட்டாள்.
அச்சமும், நாணமும் இல்லை. நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வை. அதே சமயம், அந்நிய ஆண்களின் முகம் நோக்கவும் இல்லை.
கொடி இடையும், தளிர் நடையுமாக இருந்தாலும் அதில் ஏதோ ஒரு கம்பீரம் இருந்தது. வசதியான குடும்பமாகையால், நூறு பவுன் நகை, சீர் செனத்தி என அத்தனையும் இவனது அண்ணன் கேட்டவாறே தர, திருமணம் இனிதே நடைபெற்றது. அப்போதும் மாலினியின் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை.
சுந்தரின் அம்மா, அவனது சிறு வயதிலேயே இவர்களை விட்டு யாருடனோ ஓடி விட்டதாகவும், சிறிது காலத்திலேயே அவனது தந்தை மாரடைப்பால் மரணமடைந்ததாகவும் கேள்வி.
சுந்தரின் அண்ணனுக்கு அவர்களது உறவுக்குள்ளேயே ஒரு ஏழைப் பெண்ணைத் திருமணம் செய்தார்கள். அவன் அண்ணனுக்கோ பல பெண்களுடன் சகவாசம். தொழிலைச் சரியாய் கவனிப்பதில்லை. அதனால், சரியான வருமானம் கிடையாது.
சுந்தர் நன்றாக படிப்பவனாகையால், அவனது உறவினர் வீட்டிலிருந்து சிறிது காலமும், பின்னர் அரசாங்க உண்டு உறைவிடப் பள்ளியிலும் படித்து பணிக்குச் சென்றானாம்.
சுந்தரின் அண்ணி, அவனை அழைத்து, “ரொம்ப திமிர் பிடிச்சவளா இருப்பா போல” என்றாள்.
அவனுடைய அண்ணனோ, “பணமும், படிப்பும் நெறைய இருக்குள்ள, அப்டித்தான் இருக்கும். முதல்லயே கால்ல போட்டு மிதிச்சி வச்சிக்க. விட்டுட்டா அப்புறம் பிடிக்க முடியாது. அப்புறம் நீ கால்ல கெடக்கற மாதிரி ஆய்டும், ஜாக்கிரதை” என்றான்.
ஆனால், அவளோ எல்லோரிடமும் மிக சகஜமாகப் பழகினாள். இவனுக்கோ அவள் என்ன செய்தாலும் சந்தேகமாகவே இருந்தது. படித்தவள், பணக்காரி. நம்மை மதிக்க மாட்டாளோ, வேறு யாருடனாவது ஓடி விடுவாளோ என்ற ஆழ்மனதின் பயமும், மற்றவர்களின் துர்போதனைகளும் அவளை நம்ப விடாமல் செய்தன.
அவள் என்ன செய்தாலும் சந்தேகக் கண்ணாடி வழியேதான் பார்த்தான். அவள் யாரிடமாவது அலைபேசியில் பேசினால் ஒட்டுக் கேட்டான். அவள் வெளியே சென்றால், அவளுக்குத் தெரியாமல் பின் தொடர்ந்தான்.
ஒருநாள் அவள் தம்பி வேலையாக சென்னை வந்தவன் இரயிலை தவறவிட்டதால், இவர்களுடன் தங்கலாம் என்று வந்தான்.
“நைட்லாம் இங்க ஸ்டே பண்ணக் கூடாது. நீ போ சொல்றியா? நா சொல்லவா?“ என்றான்.
“இந்த இரவில் அவனை எங்கே போ சொல்றது?” என்று கதறித் துடித்தாள்.
அவன் பிடிவாதம் பிடிக்கவே அவனை வேறு யாராவது நண்பர்களுடன் தங்கிக் கொள் என்று அனுப்பினாள். ஆனால், அதன் பின் சுந்தருடன் பேச மறுத்தாள். அவன் தொடுதலை விலக்கினாள்.
தன்னை ஒதுக்கும் அவள், யாருடன் பேசினாலும் காதல் மொழி பேசுவது போல இவனுக்குத் தோன்றிற்று. அவள் ஓடிவிடப் போகிறாள் என்று அலுவலகத்துக்குக் கூட செல்லாமல் வேவு பார்த்தான்.
அவள் அலுவலக விஷயமாக வெளியூர் செல்ல, அந்த இரவு முழுதும் தூங்காமல் அவள் யாருடனோ ஓடிவிட்டதாக உறவினர் அனைவரிடம் தகவல் தெரிவிக்க அத்தனை பேரும் இவளைத் தூங்க விடாமல் அழைப்பு விடுத்தனர்.
நிஜமாகவே ‘எங்காவது ஓடிவிடலாமா அல்லது உயிரை விடலாமா’ என்றிருந்தது மாலினிக்கு. ஆனால், தன் மகனின் முகம் பார்த்து தன் உணர்வுகளை இறுக்கிக் கொண்டாள்.
இவனது சந்தேகக் கண்ணாடி பலவித மாய பிம்பங்களை உருவாக்கி தொடர்ந்து இவன் மூளைக்கு அனுப்ப பைத்தியமானான். இவனுக்கேற்பட்ட பாதிப்புகளை மருத்துவர் மூலம் தெரிந்து கொண்டவள், இரக்கம் கொண்டு குழந்தை போல் அவனைக் கவனிக்க ஆரம்பித்தாள்.
வண்டி வீட்டு வாசலில் பிரேக்கிட்டு நிற்கவும், நனவுக்கு வந்தான் சுந்தர். இருவரும் இறங்கி வீட்டுக்குள் போக வாசலிலே அஷ்ட கோணலில் கிடந்தாள் மாலினி.
“என்ன மன்னிச்சிடு மாலினி! என்ன விட்டுப் போய்டாத ப்ளீஸ். உன்ன நா ரொம்ப லவ் பண்றேன். இனி நீ என்ன சொல்றியோ அப்டியே கேப்பேன். எந்திரி, ப்ளீஸ்” என்று கதறினான் சுந்தர்.
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நீண்ட நாட்கள் தூக்கமின்றிப் போனதாலும், ஒழுங்காக சாப்பிடாததாலும் குறைந்த இரத்த அழுத்தத்தால் மயங்கி விழுந்திருக்கிறாள் என்று தெரிவித்தனர்.
மாலினி கண்விழித்தபோது கண்ணீரோடு அவள் பாதங்களில் முத்தம் செய்த சுந்தரைப் பார்த்து மெலிதாய் புன்னகைத்தாள்.
எழுத்தாளர் ஜெயலக்ஷ்மி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings