in ,

சம்பந்தி வீட்டுக் கல்யாணம் (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

ன்ன மரகதம், இன்னுமா நீ தயாராகலை… ‘  என்றபடியே உள்ளே வந்தார் மகேந்திரன்.

அவரைக் கன்டதும், கண்களைத் துடைத்துக்கொண்டு எழுந்தாள் அவள். மறவாமல் டீப்பாயின் மேல் கிடந்த கல்யாணப் பத்திரிக்கையை மறுபடியும் பார்த்துக்கொண்டாள்.

‘ மணமகன் ரகுராமன், மணமகள் ஸ்ரீதேவி ‘

அதில் மாலாவின் பெயர் வரத்தான் அவள் பிரயத்தனப் பட்டாள், முடியவில்லை.

அந்தக் கல்யாணத்திற்கு போக தனக்கு இஷ்டமில்லை என்பதை ஏற்கனவே பலதடவை சொல்லி விட்டாள். ஆனாலும் மகேந்திரன்தான்  அவளைக் கிளப்பிக்கொண்டேதான் இருந்தார்.

அடுத்த தெருவில் இருக்கும் சுமதியின் இரட்டைப் பையன்களில் மூத்தவனான ரகுராமனுக்குத்தான் கல்யாணம். பதினைந்து நாட்களுக்கு முன்பே பத்திரிகை வைத்து விட்டார்கள். பத்தரை மணிக்கு முகூர்த்தம்.

சுமதியும் தாமோதரனும் வந்து பத்திரிக்கை வைத்தபோது தாங்கமுடியவில்லை மரகதத்திற்கு.

அதனால் இந்தக் கல்யாணத்தில் போய் கலந்துகொள்ள தனக்கு இஷ்டமே இல்லை என்று சொல்லிக்கொண்டிருந்தாள் அவள். முதலில் மகேந்திரன் அவளை வற்புறுத்தி கூப்பிட்டபோது அங்கே வந்தால்  அழுதாலும் அழுதுவிடுவோமோ என்று கவலைப் பட்டாள்.  அவரிடமும் அதைச் சொல்லிவிட்டாள். அவரோ ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு, ‘ பைத்தியம் ’ என்றுவிட்டுப் போனார்.

xxxxxxxxx

சுமதியின் குடும்பம் அந்த ஊருக்கு வந்து நான்கைந்து மாதங்கள் ஆகிவிட்டன. அவளது கணவன் தாமோதரன் ஒரு வங்கியில் வேலை செய்கிறார். உயர்பதவியில் இருக்கிறார். அவர்களுக்கு இரட்டைப் புதல்வர்கள். மூத்தவன் பெயர் ரகுராமன், இளையவன் பெயர் ரகுநாதன்.  

வித்தியாசமே தெரியாதளவுக்கு உருவ ஒற்றுமை. இரண்டு பேருமே இன்ஜினீயரிங் முடித்துவிட்டு சொல்லிவைத்தார்போல ஒரே கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தும் விட்டார்கள்.

அவர்கள் அந்த ஊருக்கு மாற்றலாகி வந்த சில வாரங்களிலேயே தங்கள் பையன்களுக்கு கல்யாணம் செய்துவைக்க ஏற்பாடு செய்துவருகிறார்கள் என்று அறிந்து கொண்டாள் மரகதம். அப்போதே அந்த ஆசை பற்றிக்கொண்டது, அவளுக்கு

தனது மகள் மாலாவை சுமதியின் பையனுக்கு கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று ஆசைப்பட்டாள்.  அந்தப் பையன்களும் பார்க்க நன்றாகவே இருப்பார்கள். படித்தவர்கள். நன்கு பழகுகிறவர்கள், நல்ல வேலையில் இருக்கிறவர்கள். பெற்றோர்களும் அப்படியே.. வேறென்ன வேண்டும்.

ஆனாலும் நமது ஆசையை எப்படி சுமதிக்கு தெரிவிப்பது, என்று யோசித்தாள் மரகதம். தனது ஆசையை மெல்ல மகேந்திரனிடமும் சொல்லி வைத்தாள். அவரோ, விளக்காமாகவே சொன்னார். ‘பாரு மரகதம்,  நான் ஒரு பிரைவேட் கம்பெனியில் மேனேஜர். அவர் ஒரு கவர்ன்மெண்ட் பாங்க்ல பெரிய ஆபீசர். நம்ம பொண்ணு ஒரு பிரைவேட் கம்பெனியில டைபிஸ்ட்… அவங்க பசங்களோ இந்தியாவுலேயே இருக்கற பெரிய லீடிங் ஐ.டி. கம்பெனில லட்சக் கணக்குல சம்பளம் வாங்கற வேலை. நம்மளோட சம்மந்தம் வச்சிக்குவாங்களா… தேவையில்லாமல் ஆசையை வளர்த்துக்காதே… ‘ 

மரகதத்திற்குத் தான் விட்டுத்தள்ள மனதில்லை.

Xxxxxxxxx

ரு நாள், தனது உற்ற தோழியான பார்வதியிடம் பேச்சுவாக்கில் அதை சொல்லிக் கொண்டிருந்தாள் மரகதம்.  ‘பாரு… நீதான் எனக்கு உதவி பண்ணனும்…. ஏதாவது சந்தர்ப்பம் வரும்போது சுமதி காதுல இதைப் பத்தி போட்டு வையேன்… யார் கண்டது… நமக்குத் தெரியாமலேயே அவங்களுக்கே கூட நம்ம மாலா மேல ஒரு அபிப்பிராயம் இருக்கலாம், எப்படி போயி நேரடியா கேட்கறதுன்னு கூட யோசிச்சிட்டிருக்கலாம்… காக்கா உட்கார பனம்பழம் விழுந்ததாம்னு சொல்லுவாங்க… விழட்டுமே… ‘

சந்தர்ப்பம் வாய்க்கும்போது சொல்லிப் பார்ப்பதாக சொல்லிவிட்டுப் போய்விட்டாள் அவள்.

அவர்களது பதிலை எதிர்பார்த்து காத்திருந்தாள் மரகதம். பார்வதி ஒன்றும் கூப்பிடவும் இல்லை. எதற்கும் ஒரு சந்தர்ப்பம் அமைய வேண்டும் இல்லையா என்று தனக்குத் தானே சாமாதானம் சொல்லிக்கொண்டு காத்திருந்தாள் மரகதம். 

ஆனால், அடுத்த சில நாட்களிலேயே பெரிய பையனுக்கு கல்யாணம் என்று சொல்லி வீடு தேடி பத்திரிகை வந்துவிட்டது.  இடிந்து போனாள் மரகதம், ‘நமது ஆசையில் மண் விழுதுவிட்டதே… ‘ என்று.

மெல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் பத்திரிகையை அரை மனதாக வாங்கிக் கொண்ட மரகதம் வெறுத்தே போனாள்.

உடனே பார்வதி மேல் கோபமாகவும் வந்தது மரகதத்திற்கு. நாம் சொன்னதை அவர்களிடம் போய் சொல்லாமலேயே விட்டுவிட்டாளா இவள் என்று.  இல்லை இவர்களுத்தான் நமது சம்பந்தத்தை பிடிக்கவில்லையா, இல்லை நிஜமாகவே அவர் சொன்னது போல  நமக்குத்தான் தகுதி இல்லை குறைவா என்று குழம்பிப் போனாள்மரகதம். 

உடனே பார்வதிக்கு போன் போட்டாள். அவளோ,  ‘நான் ஒருநாள் மெல்ல அந்த விஷயத்தை அவங்ககிட்டே சொன்னேன்க்கா. உங்களுக்கு ஏதும் அபிப்பிராயம் இருந்தா சொல்லுங்கன்னேன்..  அவங்ககிட்ட பதில் வரலை. யோசிச்சி சொல்லட்டுமேனு  நானும் விட்டுட்டேன். இப்போ இப்படி சொல்றே கல்யாணம் பிக்ஸ் ஆகிடுச்சுன்னு… அடக் கடவுளே… விடுங்கக்கா நானே அவங்ககிட்டே கேட்கறேனேன்… ‘ என்றாள்.

பதறிப்போன மரகதம் உடனே மறுத்தாள், ‘இல்லை பாரு… இவ்ளோ தூரம் வந்தபிறகு கேட்கறது நல்லாயிருக்காது. அவங்களுக்கும் அப்படி ஒரு அபிப்பிராயமே இல்லைன்னு தானே அர்த்தம். விடு… ‘ என்றுவிட்டு போனை கட் செய்தாள்.

அப்புறம் அந்த விஷயத்தையே மறக்க முற்பட்டாள் மரகதம். ஆனாலும் டீப்பாய் மேல் கிடக்கும் பத்திரிக்கையை பார்க்கும்போதெல்லாம் ஏமாற்றத்தின் வீரியம் ஏறிக்கொண்டே போனது.

xxxxxxxxx

தோளைத் தட்டினார் மகேந்திரன். சட்டென சுயநினைவுக்கு திரும்பியவளின் கண்கள் லேசாய் கலங்கியிருந்தன.

‘அதையே நினைச்சுக்கிட்டிருக்கியா. மண்டு… மண்டு… யார் யார்க்கு எங்கெங்கே வாய்க்குமோ அங்கங்கேதான் வாய்க்கும்… தேவையில்லாமல் நீ அதையே நினைச்சு மனசைப் போட்டு குழப்பிக்காதே… போ, போய் கிளம்பற வேலையைப் பார்… ‘ என்றபடியே அவளை இழுக்காத குறையாக இழுத்தார்.

அவள் தயாராகி வந்ததும் வீட்டைப் பூட்டிவிட்டு ஸ்கூட்டியை எடுத்தார்… விரட்டினார்.

போய்க் கொண்டிருக்கும் போதே கல்யாணத்தில் சாப்பிடுவதில்லை என்று முடிவு செய்து கொண்டாள் மரகதம். ஆனால் கணவனிடம் சொல்லவில்லை. சொன்னால் அதற்கு அரைமணி நேரம் அர்ச்சனை செய்வார் என்று அவளுக்குத் தெரியும்.

மண்டபத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இருவரும் போய் கிடைத்த நாற்காலியில் உட்கார்ந்தனர். மரகதத்திற்கு மேடையை நிமிர்ந்து பார்க்க மனது இடம் கொடுக்கவில்லை. கொஞ்ச நேரத்தில் அட்சதைத் தட்டு எல்லோரது இடங்களுக்கும் வந்தது.  தாலி கட்டப் போகிறார்கள் என்று புரிந்ததும்தான் மெல்ல மேடையை கவனித்தாள் மரகதம்.

மணப்பெண், அலங்காரத்தில் அழகாத்தான் தெரிந்தாள். ‘நம்ம மாலாவுக்கு ஈடாகுமா…‘ என்ற நினைத்தும் வராமல் இல்லை.

உடனே சுமதியைத் தேடினாள். அவளைக் காணவில்லை. திடீரென்று ஒரு மைக் சத்தம்.  ‘ஹலோ ஹலோ… ‘  என்று.

நிமிர்ந்தாள் மரகதம், எங்கிருந்து, யார் பேசுகிறார்கள் என்று தேடினாள். மணமேடையின் ஓரத்தில் நின்றுகொண்டு கையில் மைக்குடன்  சுமதியின் கணவர் தாமோதரன் பேசினார்.

வந்திருந்த அனைவரையும் வரவேற்ற அவர் மணமக்களை வாழ்த்தியருள வேண்டிக்கொண்டார். பிறகு தொண்டையைக் கனைத்துக்கொண்டு, ‘இதுசமயம் இன்னொரு சந்தோஷமான தகவலையும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்…’ என்றுவிட்டு கொஞ்சம் இடைவெளி விட்டு, ‘மூத்த மகனுக்கு அவசரமாக கல்யாணம் முடிவு செய்துவிட்டதால் நிறைய பேரை அழைக்கமுடியவில்லை. ஆனாலும் இளைய புதல்வனுக்கு ஏற்கனவே ஒரு வரன் வந்துவிட்டது. உள்ளூர்தான். பத்திரிக்கை உங்கள் இல்லம் தேடி வரும்… இதே போல எல்லோரும் வந்திருந்து நீங்கள் அவசியம் வாழ்த்த வேண்டும்… நன்றி…’ என்று முடித்தார்.

ஏற்கனவே ஒரு வரன் வந்திருக்கிறது, உள்ளூர்தான்  என்று தாமோதரன் சொல்லும்போது இவர்களைத்தான் பார்த்துக் கொண்டே சொன்னார். அதை மகேந்திரனும் சரி மரகதமும் சரி, கவனிக்கத் தவறவில்லை.

திகைத்தனர் இருவரும். கொஞ்ச நேரத்தில் அதுவே இன்ப அதிர்ச்சியாகவும் உருமாறியது.

மரகதத்திற்கு யோசனை ஓடியது. ‘பார்வதி அவர்களிடம் சொல்லியிருகிறேன் என்று சொன்னதால், மாலாவை மனதில் வைத்துதான் அவர் அப்படி சொல்லியிருக்கிறார்… ‘

இவர்கள் மேடையில் ஏற சுமதியும் தாமோதரனும் ஓடிவந்து அவர்களுடன் சேர்ந்து கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்க, கொஞ்சதூரம் கூடவே வந்து, ‘அவசியம் சாப்பிட்டிட்டுப் போங்க…‘ என்று சொல்லிவிட்டு அவர்கள் நகர, மனைவியிடம், ‘சாப்பிட்டுப் போகலாமா…‘ என்று மகேந்திரன் கேட்க, ‘அவசியம்… சம்பந்தி வீட்டு கல்யாணமில்லையா…‘ என்று புளகாங்கிதத்துடன் சொன்னாள் அவள்.

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    போய்விடு (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

    ஆனந்தின் அப்பா (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு