எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
இருக்கைக்கு திரும்பிய சாரதாவுக்கு பற்றிக்கொண்டு வந்தது. கன்னங்கள் துடித்தன.
அப்போதே ஓங்கி ஒரு அரை விட்டிருக்க வேண்டுமோ என்று இப்போது தோன்றியது.
‘ ச்சே ச்சே… சம்பளம் தரக் கூடியவரை அறைவதாவது… ‘
நாளைக்கு ஏதாவது ஒரு காரணம் சொல்லி நம்மை வேலையை விட்டு நிறுத்திவிட்டால்… அந்த பயமும் வரத்தான் செய்தது.
வேலையில்லாத அப்பா, அவரை விடமுடியாத அம்மா, படிக்கும் தங்கை… ஒரே வருமானம் நம்முடையதுதான். அதற்கும் வேட்டு வைத்துவிட்டால்…
அந்த நொடியே கோபம் வந்ததுதான். ஆனாலும் நடுங்கும் உடம்புடன் விட்டால் போதுமென்று திரும்பி ஓடிவந்துவிட்டாள்.
போன மாதம்தான் புதியதாய் வேலைக்கு சேர்ந்திருக்கிறார். டபுள் எம்.பி.ஏ. ஏற்கனவே பல கம்பெனிகளில் வேலை செய்த அனுபவம் வேறு. அங்கேயும் இப்படித்தான் இருந்திருப்பானோ…
ஆள் சினிமா ஹீரோ கணக்காக இருப்பார். ச்சேச்சே… ஹீரோ என்பது அபத்தம். வில்லன்… வில்லனேதான்…
அதுசரி… அவன் எப்படி இருந்தால் நமக்கென்ன. இடியட்… சபலிஸ்ட்… இவனெல்லாம் ஒரு மனுஷனா… இப்படி ஒரு அல்ப புத்தி உடையவனை எப்படி வேலைக்கு வைத்தார் நம் எம்.டி. அது சரி… நான் இப்படி இப்படி என்று பயோடேட்டாவில் போட்டிருப்பானா என்ன…
வேலை எதுவும் ஓடவில்லை. ஃபைல்களை மூடினாள். கப் போர்டுகளை மூடினாள். கம்ப்யூட்டரை ஆஃப் செய்ய நினைத்து விட்டுவிட்டாள்.
திடீரென அழுகையாய் வந்தது. யாரிடமாவது போய் சொல்லலாமா… யாரிடம்… ரோஜா… சுந்தரி… கண்ணீர் துளிர்த்து கண்களை நிறைத்தது… பார்வையை மறைத்தது…
நோ… யாரிடமும் சொல்ல வேண்டாம். பிறகு நம்மைப் பார்க்கும்போதெல்லாம் அவர்களது மனது… அவனையும் நம்மையும் சேர்த்து வைத்தல்லவா யோசிக்க வைக்கும்.
ச்ச்ச்சே… பத்து வருடமாக வேலை செய்கிறோம்… இதுவரை இப்படி நடந்ததே இல்லையே… வழியும் ஸ்டாஃப்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் அது தூரத்தில் வைத்தே… இவ்வளவு மோசமில்லை…
பார்வையை வீசினாள். எல்லோரும் கருமமே கண்ணாக வேலை செய்து கொண்டிருந்தார்கள். சுவர் கடிகாரத்தையும் பார்த்தாள். இன்னும் முக்கால் மணிநேரம் இருந்தது. வீட்டுக்கு கிளம்ப…
பேசாமல் இப்போதே கிளம்பிவிடலாமா… என்றும் தோன்றியது.
ச்ச்ச்சே… அதற்கும் அவரிடம் போய்தானே பர்மிஷன் கேட்கவேண்டும்… சொல்லாமல் கிளம்பி விட்டால்…?
ஒருவேளை அவருக்கு… ச்சே இனி மரியாதை என்ன வேண்டி கிடக்கிறது. ஒருவேளை அவனுக்கு தெரிய வந்தால் நாம் தப்பாக நடந்து கொண்டதால்தான் அவள் கோபம் கொண்டு சீக்கிரமே வீட்டிற்கு போய்விட்டாள் என்று புரியாமலா போகும்…?
வேண்டாம்… பிறகு அதையே ஒரு காரணமாக வைத்து மெமோ கொடுக்கலாம்… இன்னும் வேறு விதமாக டார்ச்சர் செய்யலாம்… யார் கண்டது…?
இருக்கலாம்… அதற்காகவே காத்துக்கொண்டிருந்தாலும் காத்துக் கொண்டிருகலாம், அவன். அவனுக்கு முன்னாள் அடிக்கடி போய் நிற்க வேண்டும்…
சனியன்… அவனும் அவனது முழியும்.
நேரம் முடிந்ததும், ஒருவழியாக வீட்டுக்குக் கிளம்பிவிட்டாள்.
நேரே போய் படுக்கையில் படுத்துவிட்டாள்.
‘ஏண்டி… டீ ஆறிட்டிருக்கு… வந்ததும் டீ குடிப்பியே… போட்டு வச்சிருக்கேன்… ஏன் படுத்துட்டே… ‘ அம்மா குரல் கொடுத்தாள்.
‘அப்புறமா குடிச்சுக்கறேன்மா…‘ பதில் குரல் கொடுத்துவிட்டு கண்களை மூடிக்கொண்டாள்.
xxxxxxxxx
இன்டர்காம் சிணுங்கியது. ஜி.எம்.தான் கூப்பிடுகிறார் என்று புரிந்ததும், ஸ்பீக்கர் பட்டனை அழுத்தி, ‘ ஸார்… ‘ என்றாள்.
‘ அந்த ராமநாதன் அண்ட் கோ… பைலை எடுத்துக்கிட்டு வாங்க… ‘
குரலில் என்ன ஒரு அதட்டல். ஜி.எம்.என்றால் பெரிய ம…ரோ…?
ஃபைலை நீட்டினாள்.
‘ போன வாரம் அனுப்பிச்ச இன்வாய்ஸை காண்பிங்க.. ‘
திறந்து காண்பித்தாள்.
கொஞ்சம் முறைப்புடன், ‘ஏன் இன்னும் ஒரு நாலு கிலோமீட்டர் தூரத்துல வச்சிக்கிட்டு காண்பியுங்களேன்… ‘ என்றார்.
வெடவெடத்துப் போய்… கொஞ்சம் நெருங்கிவந்து ஃபைலை விரித்தாள். மூச்சை இரண்டு மூன்று முறை இழுத்து விட்டான். அப்போது புரியவில்லை, நம்மிடமிருந்து வரும் நறுமணத்தைத்தான் முகர்ந்து பார்த்திருக்கிறான் என்று. அவள் எப்போதுமே ஒரே ஸ்ப்ரேயைத்தான் உபயோகிப்பாள்.
கடைவாயில் சிரித்தபடி, ஒரு பெயரைச் சொல்லி அந்த ஸ்ப்ரே யூஸ் பண்றியோ என்றான். நெஞ்சு திக்.. திக்.. என்றது.
ஜி.எம்.மிடம் இருந்து இப்படி ஒரு கேள்வி வரும் என்று யார் எதிர்பார்த்தார்கள்.
இவள் ஒன்றும் பேசவில்லை.
‘ சரி… அவங்களோட கொட்டேஷன் எங்கே… ‘
படபடவென பேப்பர்களை புரட்டினாள். சட்டென கையைத் தொட்டு, ‘ஏன் புரட்டிக்கிட்டே இருக்கீங்க… இதான்… ‘ என்றார்.
யோக்கியவனாய் இருந்தால், கை பட்டதும் ஸாரி என்று சொல்லவேண்டுமே… கை பட்டால் தானே… தொட்டல்லவா பார்த்திருக்கிறான். அவளைப் பார்த்து மறுபடியும் சிரிப்பு.
சட்டென கையை இழுத்துக் கொண்டவள் கைகளை மார்போடு கட்டிக்கொண்டாள். வளைந்து கொடுப்பாள் என்று தப்புக் கணக்கு போட்டிருப்பானோ… இடியட்… மூஞ்சியைப் பார்… ஒராங்குட்டானாட்டம்…
‘ஸாரி… நீங்க கொஞ்சம் நெர்வஸா இருக்கீங்க போல… நாளைக்கு எடுத்துக்கிட்டு வாங்க, நல்லா பார்த்துக்கலாம்… ‘
‘நல்லா… ‘ என்பதில் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து சொன்னார்.
விட்டால் போதுமென்று ஓடிவந்துவிட்டாள்.
xxxxxxxx
தூக்கமே பிடிபடவில்லை. யோசித்து யோசித்து மண்டை வலி வந்ததுதான் மிச்சம். அம்மாக்கூட இரண்டு மூன்று முறை கேட்டாள்.
‘ஏண்டி புரண்டு புரண்டு படுத்துக்கிட்டிருக்கே… தூக்கம் வரலையா…’
அவளுக்கென்ன தெரியும் ஆபீஸில் நடந்ததெல்லாம்.
இப்படி கொஞ்சம் கொஞ்சமாய் ஆரம்பித்து… ஒரு நாள் இடுப்பில் கை போடுவானே… ச்ச்ச்சே… ஒரே அறை… விட்டுவிடுவேனா…
அம்மாவிடம் சொன்னால் பேசாமல் வேலையை விட்டுடு… என்பாளோ… அவளுக்கென்ன, மகள் மேல் கரிசனம் இருக்கத்தான் செய்யும். ஆனால் குடும்பம் ஓடவேண்டுமே…
இரண்டு வருடங்களாக சரியான லாபமில்லை என்று சம்பளமும் ஏற்றவில்லை, போனஸும் தரவில்லை. போன மார்ச்சில்தான் கம்பெனி தலை தூக்கியிருக்கிறது என்றும் இந்த வருடம் இன்க்ரீமெண்ட்டும் வரும்… போனஸும் வரும் என்று பரவலாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த சமயத்தில் வேலையை விடுவதாவது.
அப்படியே விட்டாலும் அடுத்தக் கம்பெனிக்கு போனால், பழைய வேலையை விட்டதற்கு காரணம் கேட்பார்களே… என்ன காரணம் சொல்லுவது…
‘ஒண்ணுமில்லைமா… தோ…தூங்கறேன்து..‘ என்றுவிட்டு திரும்பி படுத்து போர்வையால் பொத்தியும் கொண்டாள். ஆனாலும் போர்வைக்குள்ளும் யோசனை ஓடத்தான் செய்தது.
காலையில் ஆபீஸ் போய் எம்.டி.யிடம் நடந்தை சொல்லிவிட்டால்… அவர் கேட்கும் விதத்தில் கேட்காமலா விடுவார்… ஒருவேளை ஜி.எம்.முக்கு அது தெரிந்து இன்னும் கேவலமாக நம்மை நடத்தினால்… எம்.டி.க்கு மேல் வேறு யாருமில்லையே… யாரிடம் போவது…
காலையில் ஒரு முடிவுடன் வேலைக்கு கிளம்பிவிட்டாள்.
சந்திரிகா தான் எம்.டி.யின் பி.ஏ. இவளுக்கு உற்ற தோழிதான். இன்டர்காம் போட்டு எம்.டி. கேபினுக்கு வந்ததும் சொல்லச் சொல்லி கேட்கலாமா…. ஏன்… எதற்கு… என்று கேட்பாளோ… காரணம் சொல்லாமல் எப்படி விடுவது… சொன்னால் அசிங்கமாக நினைப்பாளோ…
அங்கிருந்து பார்த்தால் ஜி.எம்.மின் கேபின் தெரியும். தெரிந்தது. எப்போதும் அவர் உட்கார்ந்திருக்க எல்லா லைட்டுகளும் எரியும். ஆனால் இப்போது ஒரே ஒரு பல்ப் மட்டும் எரிந்து கொண்டிருந்தது. அவர்… அவன்… இல்லை..
லேட்டாக வருவானோ…
லீவு ஏதும் போட்டிருப்பானோ…
ராஸ்கல்… அவனைப் பற்றி நமக்கென்ன கவலை…
இண்டர்காமை எடுத்தாள். சந்திரிகாவுக்கு நம்பரைப் போடப் போனவள், போனில் வேண்டாமே என்று தோன்றவும், நிறுத்திக் கொண்டாள்.
நேரே எழுந்து போனாள்.
இன்னும் அரை மணிநேரத்துக்குள் வந்துவிடுவார் என்று சொன்னாள் அவள். கூடவே, புன்னகைத்தபடி, ‘உங்க ஜி.எம். பத்தி தெரியுமா… ‘ என்றாள்.
திகீரென்றது இவளுக்குள். நம்முடைய விஷயம்…?
அல்லது ஜி.எம். பற்றி அப்படி என்ன விஷயம்…
தனக்குள் கேட்டுக்கொண்டாள்.
‘அவரை தூக்கியாச்சு… ‘
திடுக்கிட்டாள் இவள்.
‘ஏகப்பட்ட கம்ப்ளையிண்ட்… சரியான சபலிஸ்ட்… என்கிட்டே கூட ஒருநாள் வேலையை காட்டப் பார்த்தான். ஒரு முறை முறைச்சேன். எம்.டி.யோட பி.ஏ. இல்லே… அப்புறம் புரிஞ்சுக்கிட்டாரோ என்னவோ… அப்புறம் என்கிட்டே வச்சிக்கிட்டதேயில்லை. மூணு லேடீஸ் கம்ப்ளையின் கொடுத்திருக்காங்க நேத்து வரை. நேத்து ராத்திரி ஏழு மணி இருக்கும். கூப்பிட்டு சொல்லிட்டார் எம்.டி. நின்னுக்கோனுட்டு… வந்திருக்க மாட்டாரே… கேபின் காலியா இருக்குமே… ‘ சிரித்துக்கொண்டே சொன்னாள் சந்திரிகா.
‘நாம் யோசித்துக்கொண்டே தாமதப் படுத்திவிட்டோமோ… மற்றவள்கள் முந்திக்கொண்டாள்களோ… ‘
‘அத்தனை பேரிடமா… கடவுளே… ‘
‘சரி வர்றேன்பா… ‘ என்றுவிட்டு மேற்கொண்டு எதுவும் சொல்லாமல் ஆனால்… பெருத்த நிம்மதியுடன் தனது இருக்கைக்குத் திரும்பினாள் இவள்.
எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings