in ,

சாபத்தில் ஜனித்த ஒரு வரம் (சிறுகதை) – பிரேமா ராகவ்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

அந்தி சாயும் அந்த அழகிய பொழுதும் ஒளியணை கிராமத்தில் திகிலாக தோன்ற, இன்றிரவு மட்டுமாவது தன் கதிர்களால் அந்த ராட்சசனை தீண்டாமல் இருந்து விடுகிறேன் என்று வெண்ணிலவும் புதுநிலவாக மாறி விடுமுறை எடுத்துக் கொண்ட அந்நாளில், கிருஷ்ணவேணி, பிரனீத், ராகுல், மதன் நால்வரும் அபாயகரமான அமானுஷ்யத்தை தாங்கிக் கொண்டிருக்கும் அவ்விடத்திற்கு சற்று அருகில் நின்று அவர்கள் பணிபுரியும் அலைவரிசையில் ஒளிப்பதிவு செய்ய காணொளி எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

“இங்க எத்தனை பேர் ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ பாத்திருக்கீங்க? அதுல வர்ற ஷேடோவ் உயிரினம் மாதிரி உண்மையா நம்ம தமிழ்நாட்டுல இருக்க ஒரு காட்டுக்குள்ள இருக்குனு சொன்னா, எத்தனை பேரு நம்புவீங்க? நம்ப முடியலையில்ல? எங்களாலயும் நம்பமுடியலை. இதைப்பத்தி முழுசா தெரிஞ்சுக்கலாம்னு ‘மர்மத்தை தேடி’ குழு ‘ஒளியணை’ அப்படிங்கிற இந்த குக்கிராமத்துக்கு வந்திருக்கோம்” என்று கிருஷ்ணவேணி பின்னால் இருந்த ஆற்றை தாண்டியிருந்த கிராமத்தை காட்டினாள்.

வெளிச்சம் புகமுடியாத அளவு அடர் மரங்கள் இருக்கும் இருண்ட காட்டை, பிரனீத் தன் கேமராவில் படம்பிடித்தான்.

கிருஷ்ணவேணி மீண்டும் தொடர்ந்தாள். “பக்கத்துல இருக்குற கிராமத்துல இதைப் பத்தி கேட்டபோது எங்களுக்கு யாரும் பதில் சொல்லவே தயங்குனாங்க. நாங்க ரொம்ப முயற்சி பண்ணி ஒருத்தவங்ககிட்ட வழியை கேட்டு, அவங்களையும் கையோடு கூட்டி வந்துருக்கோம். வாங்க காளிமுத்து ஐயா. நீங்க இந்த இடத்தில் இருக்கும் அமானுஷ்யத்தைப் பற்றி சொல்லுங்க” என்று கூற அருகில் நின்றிருந்த நடுத்தர வயதொத்தவரின் பக்கம் கேமரா திரும்பியது.

“இந்த ஒளியணை கிராமத்தை கடந்து போனா ஒரு காடு இருக்கும். எங்க பாட்டன் முப்பாட்டன் காலத்துலயே இந்த நிழல் ராட்சசன் அங்க இருந்ததா சொல்லுவாக. பிறவு எப்படியோ அது அந்த காட்டுக்குள்ள இருந்து ஒளியணைக்கும் வந்து எங்க சனங்களை கொல்ல ஆரம்பிச்சுடுச்சாம். பிறவுதேன் எங்க சனங்க எல்லாம் ஊரை காலி செஞ்சு இப்போ இருக்க ஊருக்கு வந்துட்டோம். அந்த ராட்சசனால அந்த ஆத்தை கடந்துவர முடியல. ஏன்னா கருப்பு நிழல் ஓடுற தண்ணியில் சரியா விழ முடியாததனால இருக்கும்னு சொல்லுவாக” என்று பதிலளித்தார்.

“கருப்பு நிழலா? நிழல் ராட்சசன் எப்படி இருக்கும்? என்ன பண்ணும்னு சொல்லியிருக்காங்களா?”

“அது யாரோட கண்ணுக்கும் தெரியாது, யாரையும் தொட முடியாது. ஒரு கருப்பு நிழலாதேன் அது வருமாம். அந்த நிழல் பாக்க மனுசன் மாதிரி தெரிஞ்சாலும் கண்ணு சிவப்பா இருக்குமாம். அதுக்கு வாலும் இருக்குமாம். வெளிச்சத்துல மனுசங்களோட நிழல் விழும்போது அதை அந்த நிழல் ராட்சசன் புடிச்சு, அந்த நிழலோட சொந்தக்காரனோட உசுர, புடிச்சிருக்க நிழல் மூலமாவே கண் இமைக்குற நேரத்துல அப்படியே குடிச்சுடும். அந்த நிழல் முழுசா மறைஞ்சிடுச்சுனா முழுசா உசுர குடிச்சுருச்சுன்னு அர்த்தம். அந்த உடல் கீழ விழுந்ததும் அடுத்து இருக்க மனுசன் நிழலை தேடி போகுமாம். அது நிழலைத் தேடி வர்றதுனால அதைப் பார்த்ததும் ஒளியை அணைச்சிடணுமாம். அதேன் இந்த இடத்துக்கு ஒளியணைன்னு பேரு வந்துச்சு” என்றார் காளிமுத்து.

“ரொம்ப நன்றி ஐயா” என்ற கிருஷ்ணவேணி, மீண்டும் கேமராவைப் பார்த்து திரும்பி “இந்த ‘நிழல் ராட்சசன்’ பத்தி கேட்கும்போது எனக்கு ‘இனுயிட்’ மக்களின் புராண கதைகளில் வரும் ‘டாரியாக்சுக்’ தான் எனக்கு நினைவுக்கு வருது. சரி, இன்னும் கொஞ்ச நேரத்தில் ‘மர்மத்தை தேடி’குழு நிழல் ராட்சசனைத் தேடி இந்த ஆற்றைக் கடந்து உள்ளே போகப் போறோம்” என்று கூறி முடிக்கவும், காளிமுத்து பதறினார்.

“அங்கெல்லாம் போகாதீக” என்று காளிமுத்து பதற, பிரனீத் கேமராவை அணைத்தான்.

“அது ரொம்ப ஆபத்து. இப்போ இருட்ட போகுது, அதுவும் அமாவாசை, நீங்களும் ஏதோ தூரத்துல இருந்து பாக்கணும்னு சொன்னீங்கன்னு வந்தேன். உள்ளார எல்லாம் நான் வரமாட்டேன். நீங்களும் போகாதீக. அந்த ராட்சசன் மனுசங்க மாதிரி பேசி…. இல்ல வித்தியாசமா சத்தம் எழுப்பி நம்மள டார்ச், லைட்டுனு ஏதாவது போட வைச்சு நம்ம நிழலை பிடிக்க பாக்குமாம். நாமதேன் பாத்து சூதானமா தப்பிச்சுக்கணும்னு சொல்லுவாக. நம்ம பொதுவா ஏதாவது சத்தம் கேட்டாலே லைட்டை போடுவோம். இதெல்லாம் நமக்கு வராது. அதேன் நான் சொல்லுதேன்” என்றார்.

“ஐயா, ரொம்ப தூரம் போகப் போறதில்ல. ஆறு கடந்து கொஞ்ச தூரம் போயிட்டு வந்துடலாம்” என்று அந்த குழுவின் ஹெட் மதன் கூறினார்.

“இல்ல, இல்ல.. ஆத்தை கடந்து அந்த ராட்சசன் வராது. ஆனா அங்குட்டு போயிட்டா மனுசனோட வாசத்தை பிடிச்சு உடனே வந்துடும். நம்ம நிழலை பாத்துச்சுன்னா உடனே நம்ம யோசிக்குறதுக்கு முன்னாடி சாச்சுடும். வலி கூட நமக்கு தெரியாதுன்னு சொல்லுவாக. நான் புள்ள குட்டிகாரன். ஆள விடுங்க. பொட்ட புள்ளையையும் கூட்டி வந்து இப்படி பண்ணுதீக” என்று கூறிவிட்டு செல்லும் காளிமுத்துவை எப்படி சமாதானம் செய்ய என்று தெரியாமல் விழித்து கொண்டிருந்த கிருஷ்ணவேணியின் கண்கள் எதேச்சையாக ஆற்றின் மறுப்பக்கம் செல்ல, அங்கே மரங்களுக்கு நடுவே ஒரு பெரிய உருவம் நின்று இவர்களை பார்ப்பது போல் போல் தோன்றியது.

கிருஷ்ணவேணி பிரனீத்தை அழைக்க திரும்புவதற்குள் அந்த உருவம் அங்கிருந்த தடயமே இல்லாமல் போனது.

‘என்ன இது? நான் அங்க ஒரு பெரிய உருவம் இருந்த மாதிரி இருந்ததே. காளிமுத்து சொன்ன மாதிரி அந்த ராட்சசன் ஒருவேளை உண்மையா? ஆனா அவர் அதுக்கு உருவமே இருக்காதுனு சொன்னாரே. ஒருவேளை இங்க இருந்து பாக்குறதுக்கு அந்த மரம் அப்படி தெரிஞ்சிருக்குமோ. கிருஷ்ணா நீ தான் என்னை காப்பாத்தணும்’ என்று எண்ணிக் கொண்டாள்.

மதன், பிரனீத், கிருஷ்ணவேணி, ராகுல் நால்வரும் ஆற்றை கடக்க தயாரானார்கள். பொதுவாக குறைவாக இருக்கும் ஆற்றின் நீரோட்டம் இன்று இவர்களை காக்க சற்று வேகமாக பாய்ந்தோடியது போல.

ஆனால் விதியின் சதியோ, ராட்சசனின் மதியோ, குறுக்கே ஒரு மரம் சாய்ந்திருக்க, அதை பிடித்து ஆற்றைக் கடந்தார்கள். ஆற்றைக் கடந்ததும் பிரனீத் கேமராவை உயிர்ப்பித்தான்.

ஒளியணை கிராமத்தை அங்கிருந்த காடு மொத்தமாக விழுங்கி விட்டதை ஒத்தையடி பாதைக்கு கூட வழி இல்லாமல் கரடுமுரடாக வளர்ந்திருந்த மரங்களும் செடிகளும் கூறியது.

“உண்மையாவே இந்த நிழல் ராட்சசன எல்லாம் மக்கள் நம்புறாங்களா? அதுவும் இவ்வளவு அறிவியல் புரட்சி நடந்துட்டு இருக்க இந்த காலத்துல? எனக்கு ஆச்சரியமா இருக்கு” என்று கிருஷ்ணவேணி கூறினாள்.

“வேணி, உனக்கு சாமி நம்பிக்கை இருக்கு தானே. அப்போ புராணகாலத்துல இருந்த ராட்சசர்கள், அசுரர்கள் எல்லாம் கடவுள் வதம் செஞ்சாங்கன்னும், சிரஞ்சீவியா வாழ கடவுள் எத்தனையோ பேருக்கு வரம் கொடுத்திருக்காங்க, சாபம் கூட கொடுத்துருக்காங்கனும் நீ கேட்டதை எல்லாம் நம்புறேல்ல. அதே போல தான் இவங்க நம்பிக்கையும். நம்பிக்கைகளை எல்லாம் அறிவியலால் அவளோ சுலபமா உடைச்சிட முடியாது” என்று ராகுல் கூறினான்.

“அப்போ நீ இந்த நிழல் ராட்சசனை நம்புறியா? இதெல்லாம் உண்மைன்னு சொல்றியா?” என்று ஆச்சரியமாக கிருஷ்ணவேணி வினவ, “உண்மைக்கும் நம்பிக்கைக்கும் சம்மந்தம் இருக்கணும்னு அவசியமில்லை” என்றான் ராகுல்.

“நீ வேற ஏன்டா அவளை குழப்பி பயமுறுத்துற? வேணி, எத்தனை மர்மமான இடங்களுக்கு நம்ம நிகழ்ச்சிக்காக போயிருக்கோம். இதுவரை அவங்க சொன்ன மாதிரி ஏதாவது ஒரு இடத்துல நடந்துருக்கா? அது மாதிரி தான் இதுவும். சும்மா கொஞ்ச தூரம் போயிட்டு திரும்பிட வேண்டியது தான்” என்றான் பிரனீத்.

“மூணு பேரும் கொஞ்சம் அமைதியா வர்றீங்களா? நல்லா இருட்டிடுச்சு. ராகுல் டார்ச்சை ஆன் செய். எப்போதும் கவனமா இருங்க. ஆள் நடமாட்டமே இல்லாத இந்த இடத்துல பாம்பு எல்லாம் இருக்கும்” என்று கூறினார்.

அனைவருக்கும் முன்னால் சென்று கொண்டிருந்த ராகுல் மின்விளக்கை உயிர்ப்பித்த அடுத்த நொடி, ஒளியின் துகள்கள் தீண்டிய இடத்தில், உருவற்ற அருவமாய், சிவந்த கண்கள் கொண்ட கருப்பு நிழலாய் இவர்களுக்கு காட்சி கொடுத்தது நிழல் ராட்சசன்.

‘ஆ ஆ ஆ…’ என்று நால்வரும் அலற, அவர்களின் சத்தம் ஆற்றை கடந்து செல்ல விடாமல் முழுவதுமாய் உட்கொண்டது அங்கிருந்த மரங்கள்.

“லைட் ஆப் பண்ணுடா” என்று மூவரும் கதற, ராகுல் அதையே செய்தான். நால்வரின் ஒலியும், அவர்கள் தோற்றுவித்த ஒளியும் சட்டென நின்றுவிட அவ்விடம் சில வினாடிகள் மயான அமைதிக்குள் மூழ்கியது.

“வேகமாக ஆத்தங்கரைக்கு ஓடிடலாம் வாங்க” என்று மதன் கூற அனைவரும் சரியென்று வேகமாக ஓடினார்கள். சூரியனின் இறுதி கதிரும் முற்றிலுமாக மறைய இருளில் தட்டு தடுமாறி அனைவரும் அருகில் இருப்பவர்களின் கைகளைப் பற்றி கொண்டு இயன்றவரை வேகமாக ஓடலானார்கள்.

திடீரென பிரனீத் கால்கள் தடுமாறி கீழே விழ அவர்களின் கை சங்கிலி உடைக்கப்பட்டு மதனும் கிருஷ்ணவேணியும் ஒருபுறம் நிற்க, ராகுல் மறுபக்கம் தனியாக நின்றிருந்தான்.

“ஆஆ… பாம்பு என்னை கொத்திடுச்சு” என்று பிரனீத்தின் அலறல் சத்தம் கேட்டு ராகுல் மின்விளக்கை இயக்கவும், பிரனீத் “இதை சொன்னது நானில்லை” என்று கூறவும் சரியாக இருந்தது.

மின்விளக்கின் ஒளி பிரனீத்தை நோக்கி இருந்ததனால் அவன் நிழல் தரையில் விழ, உடனே ராட்சசனின் நிழல் பிரனீத்தின் நிழலை பற்றியது. அடுத்த நொடியே பிரனீத்தின் நிழல் முற்றிலும் மறைந்து ராட்சசனின் நிழலாக மாற, அவனின் உடல் வெளுவெளுத்து போய் உயிரற்று மண்ணில் சரிந்தது.

கண் இமைக்கும் நொடிக்குள் நடந்த இவ்வனைத்தையும் இமைக்க மறந்து மூவரும் கண்டனர். மதன் வேகமாக சென்று மின்விளக்கை ராகுலிடமிருந்து பறித்து துண்டித்தான்.

“முட்டாள், காளிமுத்து சொன்னது மறந்து போச்சா? இந்த ராட்சசனால் நம்மை தொட முடியாது. ஆனா ஏதாவது சொல்லி லைட் போட வைக்கும்னு சொன்னாரே. ஏன்டா லைட்டை போட்டாய். இப்போ நம்ம பிரனீத்..” என்று முடிப்பதற்குள் அழத் தொடங்கினார்.

“சரி முதல்ல, நம்ம மூணு பேரும் இங்கிருந்து வேகமா போவோம். வாங்க” என்று தன்னை தேற்றி கொண்டு கூற, மூவரும் பயத்திலும், துக்கத்திலும் அவ்விடம் விட்டு நகர தொடங்கினார்கள்.

ராகுல் முன்னால் செல்ல, மதன் பின்னால் வர, கிருஷ்ணவேணி இறுதியில் சென்றாள். நீரோட்டத்தின் சத்தம் மெல்ல கேட்க “ஆத்தங்கரை பக்கம் வந்துட்டோம். வாங்க” என்று ராகுல் கூறினான்.

“அதுக்குள்ளயா?” என்று கிருஷ்ணவேணி சத்தமாக யோசிக்க, தொலைவில் “தம்பி, ஏய், பொண்ணு. நான் காளிமுத்து வந்திருக்கேன்” என்று குரல் கேட்டது. கூடவே மனிதர்களின் சலசலப்பும் கேட்டது.

“காளிமுத்து வரமாட்டேன்னு சொன்னாரே?” என்று மூவரும் தங்களுக்குள் பேசிக் கொள்ள, “எல்லாரும் கத்துற சத்தம் கேட்டுச்சு. அதான் எல்லாத்தையும் கையோடு கூட்டி வந்திருக்கேன். எங்க இருக்கீங்க? ஒரே இருட்டாயிருக்கு” என்று குரல் வந்தது.

‘இது காளிமுத்தோட பேச்சு வழக்கு இல்லையே, குரலும் அவரோடது மாதிரி தெரியல’ என்று கிருஷ்ணவேணி எண்ணி, அதைகூற வாய் திறப்பதற்குள் மதன் முந்தி கொண்டார்.

மதன் ஆனந்தத்தில் “இங்க இருக்கோம்” என்று மின்விளக்கை தலைக்கு மேல் தூக்கி வெளிச்சம் காட்ட, ராகுல் தன் நிழல் தெரிந்து விடுமோ என்று பதறி போய் அதை தள்ளிவிட, விளக்கு எறிந்த நிலையிலேயே அங்கிருந்த மரத்தின் கிளையில் சிக்கி மூவரின் நிழலையும் தெளிவாக காட்டியது.

விளக்கை எடுக்க முற்படுவதற்குள் ராகுலின் நிழல் வாயிலாக அவன் உயிரை குடித்து விட்டு, அருகில் தெரிந்த மதனின் உயிரையும் பறித்தது அந்த ராட்சசன்.

உறைந்து போய் நின்றிருந்த கிருஷ்ணவேணி, அடுத்து தான்தான் என்று உணர்ந்து பின்னால் செல்ல எத்தனிக்க, அங்கிருந்த மரத்தின் மேல் மோதி நின்றாள். ரத்தினம் போல் ஜொலிக்கும் சிவந்த கண்களில் தீரா பசியும், வெறியும் சேர்ந்து மிளிர கிருஷ்ணவேணியின் உயிரை குடிக்க ஊர்ந்து வரும் நிழல் ராட்சசனிடம் இருந்து தப்பிக்க வழி தெரியாமல், தன் கழுத்தில் அணிந்திருக்கும் கோபாலகிருஷ்ணன் டாலரை பற்றி மனமுருகி வேண்டினாள்.

இன்னும் ஒரு அடியில் அவள் நிழலை அடையப்போகும் நேரத்தில், மின் வெளிச்சத்திலிருந்து வரும் ஒளியை மறைத்து, இருவரின் நிழலிற்கும் நடுவில் தன் நிழலை புகட்டி வந்தது ஒரு பெரிய நிழல். நிழல் ராட்சசன் அந்த புதிய நிழலுக்குள் புகுந்து உயிர் குடிக்க முயன்றது.

ஆனால் எவ்வளவு முயன்றாலும் அந்த ராட்சசனால் அதை குடிக்கவும் முடியாமல், நிழலை விட்டு வெளிவரவும் முடியாமல் போக, இறுதியில் ரத்தின கண்கள் மெல்ல மறைந்து போனது.

தன் உயிரை காத்து ரட்சித்தது மட்டுமின்றி, அந்த கொடிய நிழல் ராட்சசனை அழித்தது யார் என்று கிருஷ்ணவேணி காண திரும்பினாள். இத்தனை பெரிய காரியத்தை செய்தும் ஒன்றுமே நடக்காதது போல் அந்த பெரிய உருவம் மறுபக்கம் திரும்பி நடக்க ஆரம்பித்தது.

ஒளியை மறைத்து கொண்டு செல்வதனால், தெளிவாக தெரியவில்லை என்றாலும், மேலோட்டமாக அவ்வுருவத்தை காண முடிந்தது. 10 அடிக்கும் மேலான உயரம், அகன்ற தோள்கள், காடாக வளர்ந்த கூந்தல் பார்ப்பதற்கு மனிதனாக சற்றும் தோன்றாத அம்சங்கள் பெற்றிருந்தான்.

விசித்திரமாக இருந்தாலும் தன்னை காப்பாற்றியவர் நிச்சயம் ஆபத்பாந்தவனான கிருஷ்ணன் அனுப்பியவர் தான் என்று நம்பி பேச ஆரம்பித்தாள்.

“ரொம்ப நன்றி. என் உயிரை காப்பாத்துறதுக்கு எவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்துருக்கீங்க. நீங்க உண்மையிலேயே மகான் தான்” என்றாள்.

அந்த உருவம் நின்றது ஆனால் திரும்பவில்லை.

“நீ யார் பெண்ணே? உன் அடையாளம் என்ன?” என்று கரடுமுரடான குரலில் கேட்டான். நெடுநாட்களாக இருந்த மௌனவிரதத்தை இன்று தான் களைத்து வாய் மொழிந்தவன் போல் இருந்தது அவன் குரல்.

“என் பெயர் கிருஷ்ணவேணி” என்று அவள் பதிலளிக்கவும் திரும்பிப் பார்த்தான். அவன் உயரத்தாலும், குறைந்த வெளிச்சத்தினாலும், முகத்தில் வளந்திருக்கும் அடர்ந்த மீசை, தாடியினாலும் அவன் முகம் தெரியாவிட்டாலும் அவன் கண்கள் தெரிந்தது. ஆன்மாவை துளைக்கும் பார்வை கொண்டிருந்த கண்கள் ஒருகாலத்தில் கம்பீரமாக, ஏன், செருக்கோடு கூட இருந்திருக்கலாம்.

ஆனால் இப்பொழுது சோர்ந்து, தீராத வலியையும், தனிமையையும், விரக்தியையும் மட்டும் சுமந்திருந்தது. ஆனாலும் அந்த கூர்மையான பார்வை கிருஷ்ணவேணியை துளைக்க, அவள் தொடர்ந்தாள்.

“அப்பா கிருஷ்ண பக்தர், நானும் தான். பாட்டியோட பெயரும் கிருஷ்ணவேணி. அதனால அந்த பெயரை அப்படியே எனக்கு வச்சுட்டாங்க. எனக்கென்னமோ என்னை காப்பாத்த பகவான் கிருஷ்ணன் தான் உங்களை அனுப்பியிருக்கார்னு தோணுது” என்று மூச்சு விடாமல் பேசினாள்.

அதை கேட்டதும் அவன் பலமாக சிரித்தான். அவன் சிரிப்பின் அதிர்வில் காடே அஞ்சி ஒடுங்கியிருக்கும், ஆனால் கிருஷ்ணவேணிக்கு விவரிக்க முடியாத மற்ற உணர்வுகளும் எழுந்தது. ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருந்த அவன் சிரிப்பில் பலவருடங்களுக்கு பின் சிரிக்கிறான் என்பதும் இருந்தது.

“கருவில் மறைந்த சிசுவை காக்க அத்தனை பிரயத்தனம் செய்தவனாயிற்றே. இருக்கலாம்” என்றான். மகாபாரத போரின் போது பிறக்காத பரீட்சித்தை கிருஷ்ணன் காப்பாற்றியதை பற்றி கூறுகிறான் என்று கிருஷ்ணவேணி புரிந்து கொண்டாள்.

மறைமுகமாக நிறைய பேசும் அவன் வார்த்தைகளின் பொருளை அறியமுடியாதவள் “ஆமாம், என்னை காப்பாத்த கிருஷ்ணன் அனுப்பிய மகான் நீங்க” என்று மீண்டும் கூற, அவளை நோக்கி குனிந்தான்.

அவன் உயரத்திற்கு முன் சிறுமி போல் இருந்தவளின் வதனத்திற்கு நேராக குனிந்து தன் கூர்மையான நீண்ட நகங்களை கொண்ட பெரிய விரல்களால் அவள் கழுத்தில் அணிந்திருந்த கோபாலகிருஷ்ணனை எடுத்துப் பார்த்தான். அப்பொழுது தான் அவன் முகம் இவள் கண்களுக்கு தெளிவாக தெரிந்தது.

“கலியுகத்தில் உதித்த நங்கையே! எண்ணற்ற மறைமதிகளை வேதனையிலும் தனிமையிலும் கண்டு காலம் கழித்து உழன்று போன என் மனதிற்கு சிறு ஒளதடமாக அமைந்தது உம் உளமார்ந்த நன்றி. என் விகாரமான உருவை கண்டும் அஞ்சாது கபடமின்றி வாய்மொழியும் உமக்கு நான் மெய் ஒன்றை உரைக்கிறேன். யாம் தம்மை காக்க வந்தவனுமல்ல, மகானும் அல்ல. பல்லாண்டு காலமாக எம் உயிர் படும் துயரத்தை போக்க வழி தெரியாமல் புவியில் திரியும் எனக்கு, இக்கலியுகத்தின் இறுதி வரை காலம் தள்ளாது விடைபெற விரும்பினோம்.

நதியின் மறுகரையில் ஐவரின் உரையாடலை கேட்ட யாம், நிழல் ராட்சதன் எம் நிழலை தீண்டினால் எம் பாவமுற்ற இவ்வுயிர் வேதனையின்றி மாய்ந்து விடாதா என்ற வேட்கையில் தான் யாம் இடைபுகுந்தோம். ஆனால் யாம் பெற்ற சாபமும் என்னை சபித்தவரும் சாதாரணமில்லையே. அதனால் இந்த சபிக்கப்பட்டவனின் நிழலை தீண்டி அக்கொடிய அரக்கன் மாய்ந்துவிட்டான்” என்று அழகிய சொற்களில், விரக்தியான தொனியில் கூறி தன் அடையாளத்தை மறைமுகமாக விளக்கினான்.

பின் கிருஷ்ணவேணியின் விழிகளை உற்றுநோக்கி, “எம்மை உயர்ந்தவனாக போற்றாதே. தாம் வணங்கும் இறைவனால் சபிக்கப் பெற்றவனான இந்த கொடும்பாவியை, கிருஷ்ணன் உம்மை காக்க அனுப்பியிருக்க மாட்டார்” என்றான்.

அவன் வார்த்தைகளால் புதிர் போட்ட அனைத்தையும், எதிராளியை கூறுபோடும் கண்களுக்கு நடுவில் மூன்றாவது கண் போல் இருந்த காயத்தில் இருந்து வழிந்து கொண்டிருந்த குருதி பதிலளிக்க, கிருஷ்ணவேணி உறைந்து போய் நின்றிருந்தாள்.

மஹாபாரத போர் நடந்த துவாபார யுகத்தின் மாவீரர்களில் ஒருவர், தான் இயக்கிய பிரம்மாஸ்திரத்தை திருப்ப முடியாமல் இளவரசர் அபிமன்யுவின் பிறக்காத குழந்தையை கொல்ல ஏவியவர், அதனால் கோபமுற்ற கிருஷ்ணரின் வாயால் வரமாக கருதப்படும் இறப்பற்ற வாழ்வையே சாபமாக பெற்ற ஏழு சிரஞ்சீவியில் ஒருவரான அஸ்வத்தாமன் தான் இன்று தன்னுயிர் காப்பாற்றியிருக்கிறார் என்று உண்மையை உணர்ந்து மெய் சிலிர்த்து நின்றாள்.

“இல்ல, கடவுள் எல்லாத்தையும் கணிச்சு தான் ஒண்ணு செய்வார்னு சொல்லுவாங்க. அதே போல் தான் இதுவும். கிருஷ்ணர் உங்களுக்கு கொடுத்த சாபமே இத்தனை வருஷங்கள் கழித்து எனக்கும் இந்த ஊர்மக்களுக்கும் வரமாய் மாறி அழிக்க முடியாத நிழல் ராட்சசனை அழிச்சிருக்கு” என்று கூறியவளை பார்த்து மெல்லிய புன்னகையுடன், “இருக்கலாம், அனைத்திற்கும் ஒரு காரணம் இருக்கலாம். எம் துயரத்திற்கும் விடைகொடுத்திருக்கலாம்” என்று கூறி மறுதிசை நோக்கி அஸ்வத்தாமன் நடந்தார்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    விழி விளிம்பில் வித்யா ❤ (நாவல் – அத்தியாயம் 19) – முகில் தினகரன்

    உறவுகள் பிரிவதில்லை ❤ (பகுதி 10) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை