2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
ராகம் டெக்ஸ்டைல்ஸ். தை மாத முகூர்த்தத்திற்காக ஜவுளி எடுக்க மக்கள் வந்தவண்ணம் இருந்தனர். வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக இருந்தது.
குமரன் புடவை செக்ஷனில் வாடிக்கையாளர்களுக்கு, அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப புடவைகளை எடுத்து, பிரித்து காட்டிக் கொண்டிருந்தான்.
“வாசல்ல வச்சிருக்கற பொம்மைக்குக் கட்டியிருக்கற அந்த டிசைன் புடவை இல்லையா?”
“இருக்கு மேடம். இதோ பாருங்க, அதுலயே நிறைய கலர் இருக்கு. எது புடிக்குதுன்னு பாருங்க.”
குமரன் அவர்கள் கேட்ட புடவையில் இருந்த பல வண்ணங்களையும் எடுத்து அவர்கள் முன்னால் வைத்தான். மீண்டும் அதே பச்சை வண்ணப் புடவை. குமரனுக்கு அதைப் பார்த்ததும் இரண்டு நாட்கள் முன்பு நடந்த நிகழ்வு அவனையும் அறியாமல் மனதில் வந்து போனது.
இந்த டிசைன் புடவை இரண்டு நாட்களுக்கு முன்புதான் வந்திறங்கியது. அதனால் அதை எடுத்து பொம்மைக்குக் கட்டிவிடும் போதே, குமரனுக்கு மனதுக்குள் ஒரு சின்ன ஆசை. இதே போல் கிளிப்பச்சை வண்ணத்திற்கு அடர் நீல பார்டர் போட்ட புடவை ஒன்று அம்மாவுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற ஆசை குமரனுக்கு. ஆனால் அவ்வளவு செலவு செய்ய சந்தர்ப்பமும், வாய்ப்பும் அமையவில்லை. அம்மாவும் அதை விரும்பவில்லை.
“எதுக்குடா குமரா, எனக்கு எதுக்கு அவ்வளவு காசு போட்டு பட்டுப்புடவை எடுக்கணும்? தேவையில்லாம செலவு பண்ணாதே. சேர்த்து வை. இன்னும் ஒரு வருஷத்துல உனக்குக் கல்யாணம் செஞ்சா, வரவளுக்கு பட்டுப் புடவை எல்லாம் எடுத்துக் கொடு.”
இதுதான் அம்மா எப்போதும் சொல்லும் பதில். ஆனாலும் அம்மாவுக்கு ஒரே ஒரு பட்டுப் புடவையாது எடுத்துக் கொடுக்க வேண்டும் என்ற ஆசை. இந்த ஜவுளிக்கடையில் வேலைக்குச் சேர்ந்து மூன்று வருடங்கள் ஆயிற்று. ஆனாலும் நல்லதாக ஒரு புடவை எடுத்துக் கொடுக்க முடியவில்லை என்ற வருத்தம் அவனுக்கு உண்டு.
அதற்காகவே கடையில் வேலை செய்பவர்கள் எல்லாம் சேர்ந்து சீட்டு போட ஆரம்பித்தபோது, குமரனும் அதில் மாதம் ஒரு சிறு தொகையை சேர்த்து வைத்திருந்தான். இந்த மாதச் சீட்டு அனேகமாக குமரனுக்குத்தான் வரும். அதனால் அந்தத் தொகையில் அம்மாவிற்குப் புடவை எடுக்க வேண்டும் என்று நினைத்தவனுக்கு, புதிதாக வந்திறங்கிய இந்த டிசைன் புடவையைப் பார்த்ததும் ஆசை மேலோங்கியது. அதுவும் அந்தப் பச்சை வண்ணத்திற்கு நீல நிற பார்டர் புடவையை பொம்மைக்குக் கட்டி விடும்போதே குமரனுக்கு அதை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது.
“அம்மாவுக்கு இந்தப் புடவை ரொம்ப அழகா இருக்கும். சீட்டுப் பணம் கைக்கு வந்ததும் இதே டிசைன், இதே கலர் வாங்கிக் கொண்டு போய் அம்மாவுக்குக் கொடுத்தா ஆச்சரியப்படுவாங்க.”
பொம்மைக்குப் புடவையை அணிவிக்கும்போதே மனதில் நினைத்துக் கொண்டான் குமரன். அன்று மதியத்திற்கு மேல் இவன் நினைத்தது போலவே சீட்டுப் பணம் கைக்கு வந்தது. மாலை வேலை முடிந்து போகும் போது, புடவையோடு போகும் அந்தக் கனவில் மிதந்து கொண்டிருந்தான்.
எதேச்சையாக வாசல் பக்கம் பார்த்தவன், வாசலில் தயங்கித் தயங்கி நின்றிருந்த ரோசம்மாவைப் பார்த்ததும், சட்டென்று பக்கத்திலிருந்த நண்பனை சற்று நேரம் கவனித்துக் கொள்ளச் சொல்லிவிட்டு ரோசம்மாவிடம் வந்தான்.
“ரோசம்மா, என்ன இங்கே நின்னுட்டிருக்கீங்க? யாரையாவது பார்க்க வந்தீங்களா? எப்படி இருக்கீங்க? எங்கே இருக்கீங்க?”
“குமரா, நீ இன்னும் இங்கதான் வேலை பார்க்கறாயா?”
“ஆமா ரோசம்மா, வேற எங்க போவேன். இங்கதான் வேலை பார்க்கறேன். நீங்கதான் எதுவும் சொல்லாம வீட்டைக் காலி பண்ணிட்டுப் போயிட்டீங்க. எங்கே போறீங்கன்னுகூட சொல்லவே இல்ல. அம்மா ரொம்ப வருத்தப்பட்டுச்சு.”
“இல்ல குமரா, சொல்லிக்கற நிலைமைலயா நான் இருந்தேன். அதெல்லாம் எதுக்கு இப்போ, விடு. அம்மா நல்லா இருக்காங்களா? நீ எப்போ கல்யாணம் பண்ணிக்கப் போறே? இல்ல கல்யாணம் ஆயிருச்சா?”
“அம்மா நல்லா இருக்காங்க ரோசம்மா. கல்யாணமா எனக்கா பாக்கணும். எனக்கு வர சம்பளத்துல நானும், அம்மாவும் வாழ்க்கையை ஓட்டறதே பெரிய போராட்டமா இருக்கு. இதுல கல்யாணம் வேற செஞ்சுகிட்டா? அதுதான் யோசனையா இருக்கு ரோசம்மா. சரி, நீங்க இங்க வாசல்ல தயங்கித் தயங்கி நின்னுட்டு இருந்தீங்க. அதைப் பார்த்துட்டுதான் வந்தேன். என்ன விஷயம்? அதுக்கு இன்னும் நீங்க பதிலே சொல்லலியே.”
“இல்ல குமரா, நம்ம மலருக்குக் கல்யாணம் நிச்சயம் பண்ணியிருக்கு. சொந்தக்காரப் பையன்தான். குடும்ப நிலைமை தெரிஞ்சு அவங்களே எல்லா செலவும் பண்ணிக்கறதா சொல்லிட்டாங்க. என்னால பெருசா எதுவும் செய்ய முடியல. நான் விக்காம வச்சிருந்த ரெண்டு வளையலும், ஒரு செயினும் மட்டும்தான் மலருக்குக் கொடுக்கறதுக்கு என்கிட்ட இருக்கு. பொண்ணுக்குக் கல்யாணம், ஆசையா ஒரு புடவைகூட எடுக்க முடியலன்னு மனசு அடிச்சுக்குது குமாரா. அதுதான் ஏதாவது புடவை பார்க்கலாமான்னு கடைப் பக்கம் வந்தேன்.”
“என்ன மாதிரி புடவை வேணும் ரோசம்மா? உள்ளே வாங்களேன்.”
“இல்ல யா, வேணாம் குமரா. காசு இல்ல. மலர்கிட்ட கேட்டா தரும். ஆனா அதுகிட்டயே காசை வாங்கி, அதுக்கு புடவை எடுத்துக் கொடுத்தா நல்லா இருக்காதில்ல. மலர் திட்டுவா வேற, எதுக்கு செலவுன்னு. அவ சம்பாதியத்துல ஏதோ நல்லதா நாலஞ்சு புடவை வாங்கி வச்சிருக்கா. இருந்தாலும் நானும் ஒரு புதுப் புடவை எடுத்துக் கொடுக்கணும்னு ஒரு அல்ப ஆசைல கடைக்கு வந்துட்டேன். ஆனா கைல காசு இல்ல குமரா. என்ன விலைல புடவை இருக்கும்னு மட்டும் சொல்லு. ஒரு வாரத்துல ஏதாவது வேலை செஞ்சு பணத்துக்கு ஏற்பாடு பண்ண முடியுதான்னு பார்க்கறேன். அடுத்த மாசம்தான் கல்யாணம். இன்னும் இருபது நாள் இருக்குல்ல.”
மனம் வலித்தது குமரனுக்கு. ரோசம்மா இவர்களுக்குப் பக்கத்து வீட்டில் இருந்தவர். ரோஜாரமணி என்ற அவரது பெயர் காலப்போக்கில் மறைந்துபோய் ரோசம்மா என்றே எல்லாரும் அழைத்தனர். அதனால் சிறு வயது முதலே குமரனுக்கும் ரோசம்மா என்றே அழைத்துப் பழக்கம். ரோசம்மா, மருது தம்பதிக்கு மலர்விழி ஒரே மகள்.
குமரன் இப்போது வேலை செய்யும் ராகம் டெக்ஸ்டைல்ஸில்தான் மருதுவும் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவர்தான் குமரனை இங்கே வேலைக்குச் சேர்த்து விட்டதே. ஆனால் எதிர்பாராத விதமாக மூன்று வருடத்திற்கு முன்னால், மருது ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட்டார். தடுமாறிப் போனார்கள் ரோசம்மாவும், மலரும்.
அப்போதுதான் கல்லூரி படித்து முடித்திருந்தாள் மலர். திடீர் இழப்பால் தடுமாறிப்போன அவர்கள், இருந்த வீட்டைக் காலி செய்துவிட்டு, குறைவான வாடகைக்கு வேறு இடத்திற்குப் போய் விட்டார்கள். மலர் ஏதோ கிடைத்த வேலையைச் செய்து குடும்பத்தை கவனித்திருப்பாள். ஆனால் அவர்கள் எங்கே போனார்கள், எப்படி இருக்கிறார்கள் என்பது பற்றி தகவலே இல்லாமல் போயிற்று.
கலங்கி நின்ற குமரன், சட்டென நிதானத்திற்கு வந்தான்.
“ரோசம்மா, இந்த வெயில்ல இங்கே நிக்காதீங்க. நீங்க வீட்டுக்குப் போங்க. வீடு எங்கேன்னு சொல்லுங்க, நான் சாயங்காலம் வந்து உங்ககிட்ட விவரமா பேசறேன். இப்ப எனக்கு கடைலயும் வேலை இருக்கு.”
“சரிப்பா, சாயங்காலம் வீட்டுக்கு வா. மலரும் உன்னைப் பார்த்தா ரொம்ப சந்தோஷப்படுவா,” என்று வீடு இருக்கும் இடத்தைச் சொல்லிவிட்டு, தளர்வாய் அங்கிருந்து நகர்ந்தார் ரோசம்மா.
கடைக்குள் வந்தவனுக்கு மனம் முழுவதும் கவலை வந்து உட்கார்ந்து கொண்டிருந்தது. பலவித சிந்தனைகளோடு, வந்த வாடிக்கையாளர்களை கவனித்துக் கொண்டிருந்தான் குமரன். சற்று முன்னதாகவே வீட்டிற்குக் கிளம்ப வேண்டும் என்று அனுமதி வாங்கிக் கொண்டு, கையிலிருந்த சீட்டுப் பணத்தில், அவன் ஆசைப்பட்ட பச்சை வண்ணத்திற்கு அடர் நீல நிற பார்டர் போட்ட புடவையை வாங்கிக் கொண்டான். புடவைக்குக் கொடுத்தது போக மீதியிருந்த 2000 ரூபாயையும் பத்திரப்படுத்திக் கொண்டான்.
கடையிலிருந்து வெளியே வந்தவன், நேராக ரோசம்மா சொன்ன விலாசத்திற்குப் போனான். குறுகலான ஒரு சந்தில், பெட்டிகளை அடுக்கி வைத்தது போலிருந்த வீடுகளில் ஒன்றில் ரோசம்மாவும், மலரும் இருந்தார்கள்.
அந்தச் சூழ்நிலையைப் பார்த்ததுமே நொறுங்கிப் போனான் குமரன். மருது மாமாவின் இறப்பு குடும்பத்தை எந்த அளவிற்குக் கொண்டு வந்துவிட்டது என்று நினைத்தபோது கண்ணீர் வந்தது. தன்னைத் தானே தேற்றிக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான்.
குமரனைப் பார்த்ததும் ரோசம்மாவுக்கும், மலருக்கும் மகிழ்ச்சி பொங்கியது.
“குமரா, சொன்ன மாதிரியே வந்துட்டியே. எனக்கு ரொம்ப சந்தோஷம். நீ இன்னும் மாறவே இல்ல. அப்படியே பழைய குமரனாத் தான் இருக்கே, உங்க அம்மா மாதிரி. நாங்க இருக்கற இடமும், இந்த நிலைமையும் நிறைய உறவுகளை எங்ககிட்ட இருந்து விலக்கிருச்சு. ஆனா நீ அப்படியே இருக்கே குமரா.”
“என்ன ரோசம்மா, இப்படிச் சொல்லிட்டீங்க. எங்கே இருந்தாலும் அன்பு அப்படியேதானே இருக்கும். இடத்துக்கு ஏத்த மாதிரி மாறுமா என்ன. இந்தாங்க, இதை வாங்கிக்கோங்க. உங்க சார்பா மலருக்கு நான் வாங்கிக் கொடுத்ததா இருக்கட்டும்.”
“என்ன குமரா இது?”
“புடவை. கலர் புடிச்சிருக்கான்னு பாருங்க ரோசம்மா. மலர்கிட்டயும் கேளுங்க.”
மலர் பார்வையாலேயே தன் அம்மாவைத் துளைத்து எடுத்தாள்.
“மலரு, அம்மாவை எதுவும் சொல்லாதீங்க. அம்மா வாங்கச் சொல்லல. உங்களுக்குக் கல்யாணம் வச்சிருக்கறதா சொன்னாங்க. எனக்கு ஏதாவது செய்யணும்னு தோணுச்சு. அதனாலத்தான் என்னால முடிஞ்சதை வாங்கிட்டு வந்திருக்கேன். உங்களுக்கு இந்தக் கலர் புடிச்சிருக்கான்னு பாருங்க.”
ரோசம்மாவும், மலரும் புடவையைப் பிரித்துப் பார்த்துவிட்டு, பூரித்துப் போனார்கள்.
“ஐயா, குமரா, நான் நெனச்ச மாதிரியே வாங்கியிருக்கியே. கடைப்பக்கம் வந்தப்போ பொம்மைக்குக் கட்டியிருந்த இந்தப் புடவையைப் பார்த்ததும், இந்த மாதிரி ஒண்ணு நம்ம மகளுக்கு வாங்கினா நல்லா இருக்கும்னு தோணுச்சு. ஆனா அதை உன்கிட்ட வாய்விட்டுகூட சொல்லல. ஆனா அதையே நீ வாங்கிக் கொண்டு வந்து கொடுத்துட்டே பார்த்தியா. நீ சொன்னியே, அன்பு என்னைக்கும் மாறாது. அது உண்மைதான் குமரா.”
மலரும் நன்றி கலந்த பார்வையுடன் குமரனைப் பார்த்தாள். சற்று நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு, கையில் மிச்சமிருந்த 2,000 ரூபாயையும் ரோசம்மாவின் கையில் வலுக்கட்டாயமாகக் கொடுத்துவிட்டு, வீட்டுக்குத் திரும்பினான் குமரன்.
அம்மாவிடம் நடந்த விஷயங்களைச் சொன்னபோது மிகவும் சந்தோஷப்பட்டார்.
“பரவாயில்ல குமரா, என் வளர்ப்பு சரியாத்தான் இருக்குன்னு நிரூபிச்சுட்டே. புடவையை எனக்கு வாங்கிக் கொடுத்திருந்தாகூட எனக்கு இவ்வளவு சந்தோஷம் வந்திருக்காது. சூழ்நிலையைப் புரிஞ்சுகிட்டு சரியான நேரத்துல, சரியான வேலையை செஞ்சிருக்கே நீ. எனக்குப் பெருமையா இருக்கு குமரா,” என்றார்.
குமரனுக்கும் மனசுக்கு நிறைவாகத்தான் இருந்தது. ஆனாலும், அதன்பின் வந்த இரண்டு நாட்களிலும், கடையில் அதே வண்ணத்தில் புடவையைப் பார்க்கும் போதெல்லாம், அம்மாவுக்கு வாங்கித் தர முடியவில்லையே என்ற ஏக்கமும், அதேநேரத்தில் ரோசம்மாவுக்கும், மலருக்கும் கிடைத்த சந்தோஷமும் ஒருசேர குமரன் மனதில் எட்டிப் பார்த்தது.
இப்போதும் வாடிக்கையாளர்களுக்காக எடுத்துப் போட்ட புடவைகளின் கும்பலில் அதே பச்சை வண்ணத்திற்கு அடர் நீல நிற பார்டர் போட்ட புடவையைப் பார்த்ததும், இரண்டு நாட்களுக்கு முன் நடந்த அனைத்து நிகழ்வுகளும் அவசரகதியில் வந்து போயின.
என்றாவது ஒருநாள் தன் மனதிற்குப் பிடித்தபடி, அம்மாவுக்கு ஒரு புடவையை எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டு, வேலையைத் தொடர்ந்தான் குமரன்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings