in

ரிக்ஷாக்காரன் (சிறுகதை) – ✍ ரமணி. ச

ரிக்ஷாக்காரன் (சிறுகதை)

நவம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

“ஏய் ரிக்ஷா இங்க வா…. மீனாட்சியம்மன் கோவில் போகணும். எவ்வளவு கேக்கறே?” 

அவர்களும் மனிதர்கள்தானே. கொஞ்சம் மரியாதையாகப்  பேசுவோமே. ஏனோ சில தொழில்கள் நமக்கு கேவலமாகத் தெரிகிறது. ஆனால் அவர்கள் வேண்டும். வேண்டும் நமது தேவைக்கு மட்டும் கறிவேப்பிலைபோல் பயன்படுத்திக் கொண்டு துப்பிவிடுவோம்.

சிவசாமி மதுரையில் ஒரு ரிக்ஷாக்காரர். எம்.ஜி.ஆர். சைக்கிள் ரிக்ஷா கொடுத்தாரே, அதற்கு முன்னால் கைரிக்ஷா இழுத்துப் பிழைத்தவர். நல்ல திடகாத்திரமான உடம்பு. வாலிப வயதில் சோம்பேறி குண்டர்கள் பலரை சுமந்து இழுத்து சேரவேண்டிய இடத்தில் சேர்த்துப் பிழைத்தவர்.

சில மாதாந்திர மொத்த சவாரிகள். குழந்தைகளை பள்ளியில் கொண்டு சேர்த்து அழைத்து வருதல். அந்தந்த வயதில் அதது வருமல்லவா. சிவசாமியின் வாழ்விலும் காதல் வந்தது. கமலாவைக் காதலித்து மணம் செய்து கொண்டான்.

கமலா, கட்டுச்சோறு கமலா. ஆம், அலுவலகங்களில் வேலை செய்பவர்களுக்கு அவரவர் வீட்டிலிருந்து மதிய உணவு எடுத்துக் கொண்டு கொடுப்பது அவளது வாடிக்கை. 

சிவசாமி கமலா தம்பதியருக்கு ஒரு பையன் குமார். படு சுட்டி. பள்ளியில் பாடங்களை விட விளையாட்டில் கெட்டிக்காரன். சிவசாமியின் 40வது வயதில் அவரை காச நோய் பாடாய்படுத்தியது. ரிக்ஷா இழுக்க முடியாமல், சரியான வருமானமில்லாமல் இருந்த போது முதல்வர் எம்.ஜி.யாரின் கைரிக்ஷா ஒழிப்புத் திட்டம் உதவியது. கை ரிக்ஷா சைக்கிள் ரிக்ஷா ஆனது.

அது இலவசம் என்றாலும் அதைப் பெற அவர் ஆளும் கட்சியில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ள வேண்டி வந்தது. அவன் மனைவியும் விருப்பமில்லாமல் கட்சியின் மாதரணியில் சேர்ந்தாள். அதன்மூலம் அரசு பள்ளியில் சத்துணவு ஆயா வேலை கிடைத்தது.

குமார் அரசுப் பள்ளியில் பத்தாவது வகுப்பை நெருங்கிக் கொண்டிருந்தான்.

ஒரு நாள் சிவசாமி இரவு நெடு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. கமலா மிகப் பதட்டமடைந்தாள். அவனது நண்பர்கள் வீடுகளில் விசாரித்ததில் ஏதோ கட்சிக் கூட்டத்திற்கும் போயிருப்பதாகத் தெரிந்தது. நடுநிசியிலுமா கூட்டம் நடக்கும்?

விடியும் நேரத்தில் சிவசாமி,  கூட்டம் நடந்த மைதானத்தில் குடி போதையில் விழுந்து கிடப்பதாக தகவல் வந்தது.  பாழாய்ப்போன குடி… கை ரிக்ஷா ஒழித்தது போல் குடியையும் ஒழித்திருந்தால் ஏழை மக்கள் சந்தோஷப்பட்டிருப்பரே… கமலா ஓடினாள்.

குமாரும் போனான். சிவசாமியை தங்கள் ரிக்ஷாவிலேயே ஏற்றி குமார் ஓட்டிக் கொண்டு வந்தான். இது தொடர் கதையாயிற்று. சிவசாமி குடிக்கு அடிமையானார். உழைத்த காசை இழக்கலானார்.

இன்னொன்று… அதற்கு முன்புவரை மிக மிக ஆரோக்கியமாக இருந்தவரால் இப்போது சைக்கிள் ரிக்ஷா ஓட்டுவது கடினமாகியது. சவாரிகள் குறைந்தன. கிடைத்த காசு குடியில் அழிய, கமலாவின் சொற்ப வருமானத்தில் குடும்பம் நடத்துவது கடினமாயிற்று. 

இந்நிலையில் குமார் +2 முடித்தான். பள்ளி கபடிக் குழுவில் மாவட்ட அளவில் தேர்வாகி மாநிலக் கபடிக்குழுவில் இடம் பெறும் தகுதி பெற்றான். +2 வகுப்பில் அதிக மார்க் இல்லை என்றாலும் விளையாட்டின் காரணமாக அரசுக் கல்லூரியில் இடம் கிடைத்தது.

அரசுக் கல்லூரி என்றாலும் புத்தகம் போன்ற சில செலவுகள் கையைக் கடித்தன. கல்லூரியிலிருந்து மாநில கபடிக்குழு வில் விளையாட இதர மாநிலங்களுக்குச் செல்ல காசு செலவிட வேண்டிய இருந்தது.

சிவசாமி தனது கட்சிப் பிரமுகர்களிடம் கேட்டுப் பார்த்தார். எவரும் உதவ வில்லை.  இந்த சமயத்தில் தேர்தல் வந்தது. கட்சிப் பிரமுகர் ஒருவர் தேர்தல் செலவுக்காக சிவசாமியிடம் ஒரு தொகை கொடுக்க அதை தன் மகனின் கபடிப் போட்டிக்கு செலவு செய்தார்.

பணம் கொடுத்தவர் காவல்துறையில் புகார் செய்யவே, சிவசாமி கைது செய்யப்பட்டார். அவருக்காக வக்காலத்து வாங்கவோ, வாதாடவோ வழியில்லாமல் சிறைத் தண்டனை பெற்றார்.

அதே சமயம் மாநிலக் கபடிக்குழு வின் வெற்றிக்குக் காரணமாக இருந்த குமார் தேசிய கபடிக்குழுவிற்கும் தேர்வானான்.  சில ஆண்டுகளில் பல தேசிய விளையாட்டுகளில் பங்கேற்று… அதன் காரணமாகவே ரெயில்வேயில் வேலை கிடைத்தது.

தண்டனை முடிந்து வந்த சிவசாமி மனைவியுடன் மகன் குமார் வேலைப்பார்க்கும் ஐதராபாத்திற்கு குடி பெயர முடிவு செய்தார். ஆனால் குமார் அதற்கு சம்மதிக்கவில்லை. அவர்கள் மதுரையிலேயே இருக்கும்படியும் தான் செலவுக்கு பணம் அனுப்புவதாகவும் சொன்னான். இப்படியே சில ஆண்டுகள் ஓடின. 

குமாருக்கு திருமணம் முடிக்க பெற்றோர் நினைத்தனர். வெற்றியின் உச்சத்தில் இருக்கும் அவனுக்கு திருமண ஆசை வரவில்லை. மேலும் மேலும் வெற்றிகள் குவிக்க விரும்பினான்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நெருங்கிக் கொண்டிருந்தது. குமார் கடுமையாக பயிற்சியில் ஈடுபட்டிருந்தான். விதி விளையாடியது. பயிற்சியில் கால் தொடை எலும்பு உடைய குமார் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டான்.

பல மாதங்கள் படுக்கையிலேயே கடந்தது. கடுமையான சிகிச்சைக்குப் பின்னர் அவனால் இனி விளையாட முடியாது என ஆனது.  சிவசாமியும் கமலாவும் மிகக் கவலையுற்றனர். ஆனால் ரயில்வே வேலை தொடர்ந்தது.

தனது வேலையை மதுரைக்கு மாற்றிக் கொண்டான் குமார்.  குவார்ட்டர்ஸ் கிடைத்தது. குமாருக்கு திருமணமானது. வந்த மருமகள் குமாரின் பெற்றோரை உதாசீனப்படுத்தினாள். ஒரு நிலைக்கு மேல் முடியாது என்ற நிலையில் சிவசாமியும் கமலாவும் தங்கள் பழைய வீட்டிற்கே குடிபெயர்ந்தனர்.

சிவசாமி வயதுகாலத்தில் மீண்டும் சைக்கிள் ரிக்ஷாவைத் தேடி ஓட்டத் தொடங்கினார். கதிரவன் கிழக்கே தன் கடமையைத் தொடர்ந்தான்.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பிணவறை (சிறுகதை) – ✍ தி.வள்ளி, திருநெல்வேலி

    தீபாவளி பரிசுப் போட்டி முடிவுகள் 2022