எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“என்ன வக்கீல் சார் நம்முடைய விஷயம் எப்படி முடிந்தது?” தொலைபேசியில் கேட்டார் முகுந்தன்.
“ஸாரி சார் என்னாலே ஜட்ஜ் வாயை மூட முடியவில்லை” எதிர்முனை.
ஏய்யா மூணூ லட்ச ரூபாய் பணம் வாங்கிட்டுத் தானே போனே அப்படியே தூக்கி மூஞ்சியிலே விட்டெறிய வேண்டியது தானே?
நீங்கள் பத்து லட்ச ரூபாய் கொடுத்தாலும் அவர் ஏற்றுக் கொள்ளப் போவதில்லையாம்.
என்ன தான் சொல்கிறார் கிருஷ்ணன் சார்.
அவர் உண்மைக்கும் சட்டத்திற்கும் புறம்பாக நடக்க மாட்டாராம். நீங்கள் செய்த கொலையில் புருஷன் மனைவி இருவரும் இறந்து போனதால் கண்டிப்பாக தூக்குத் தண்டனை வாங்கித் தந்தே தீருவாராம்.
நீரும் அதற்கு ஆமாம் சாமி போட்டுக் கொண்டு என்னை தூக்கிலே தொங்கவிட முயற்சி செய்து கொண்டிருக்கிறீராக்கும்.
அய்யோ தலைவா உங்களை அப்படி அனுப்பி விடுவோமா? என்னாலே அவரிடம் பேச முடியவில்லை.
சட்டத்தை நிலை நாட்ட வந்திருக்க அந்த ஜட்ஜை நாம் நாளைக்குச் சந்திக்கிறோம்.
சரி சார்.
நான் நினைத்தால் அவரை வேலை மாற்றம் செய்யவும் முடியும். வேலையிலிருந்து துரத்தவும் முடியும் என்பதை சொன்னீரா?
எல்லாம் சொல்லிப் பார்த்தேன். மனுஷன் அசைய மறுக்கிறார். ஒரு ஏழைக்குடும்பத்தில் விளையாடி விட்டீர்களாம். ஏழைப்பெண்ணை சூறையாடியதோடு, அதைப் பார்த்துவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்குப் போன கணவனையும் கைலாசத்துக்கு அனுப்பி விட்டீர்களாம். இந்த மாதிரி துஷ்டர்கள் இந்தியாவிலே நடமாடக் கூடாது என்கிறார்.
இதெல்லாம் நமக்கு ஒரு ஜூஜூபி. என்னவோ நினைத்துக் கொண்டிருக்கிறானா அந்த ஜட்ஜ். நாளை வேண்டாம். இன்றே நாம் அவரைச் சந்தீக்கிறோம். அவருடைய வீட்டில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று பட்டியல் போட்டு வையும். நான் உடனடியாக புறப்பட்டு வருகிறேன்.
சரி தலைவா.
நான்கு கார்களில் வக்கீல் குமாரும் முகுந்தனும் மற்றும் அடியாட்களுமாக, ஜட்ஜ் வீட்டின் முன்னால் வந்து இறங்கினர்.
அடியாட்கள் வாசல்களில் நின்று கொள்ள வக்கீலும் முகுந்தனும் உள்ளே வந்தார்கள்.
யோவ் வக்கீல். வீட்டிற்கெல்லாம் என்னைப் பார்க்க வரக்கூடாது என்று எத்தனை முறை சொல்லியிருக்கிறேன் கத்தினார் ஜட்ஜ் கிருஷ்ணன்.
யோவ். ரொம்ப அலட்டிக்காதே. நான் சொன்ன விஷயம் என்னாச்சு? என்றார் முகுந்தன்.
மிஸ்டர் முகுந்தன் உங்களுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது. கேஸ் விஷயத்தையும் கோர்ட்டில் பேசிக் கொள்ளலாம்.
பெரிய இவன் வந்துட்டான். யோவ் கிருஷ்ணா இப்போது நான் நினைத்தால் இந்த இடத்திலேயே காலி பண்ணி விட்டுப் போக முடியும். ரிவால்வரைக் கையிலெடுத்தார். அய்யய்யோ எதுவும் பண்ணி விடாதீர்கள் தலைவா, அப்புறம் பிரச்சனைகள் வேறு மாதிரி போய் விடும். வக்கீல் குமார் முருந்தனைத் தடுத்தார்.
சுடுங்கள் மூகுந்தன், நான் இறந்து போவதைப் பற்றி எனக்கு கவலையில்லை. நிச்சயம் உண்மையும் நேர்மையும் சட்டமும் நிலைத்து நிற்க வேண்டும். நெஞ்சை நிமிர்த்திக் காட்டினார் ஜட்ஜ் கிருஷ்ணன்.
ஓஹோ சாகவும் துணிந்து விட்டீரோ டேய் இழுத்து வாருங்கள் அவரை என்று கத்தினார் முகுந்தன்.
அவருடைய ஜட்ஜின் இரண்டாவது மகள் சசிகலாவை வாயை அடைத்து அலாக்காக தூக்கி வந்தார்கள்.
“ஒழுங்காக எனக்குச் சாதகமாக தீர்ப்பு எழுதப் போகிறீரா இல்லைக் காலேஜூக்குப் போகிற உமது பெண்ணை உமது கண் முன்னாலே சின்னா பின்னமாக்கி கொன்று போட்டு விட்டுப் போகட்டுமா என்றார் சசிகலாவின் அருகில் வந்த முகுந்தன் அவருடைய தாவணியைப் பற்றியவாறு.
அப்பா என்று அரற்றினாள் கண்ணீர் விட்ட சசிகலா.
ஓடி வந்து முகுந்தன் காலில் விழுந்த கிருஷ்ணன் என் மகளை ஒன்றும் செய்து விடாதீர்கள் உங்களுக்குச் சாதகமாக தீர்ப்பை எழுதுகிறேன் என்று கதற ஆரம்பித்தார்.
ஒழுங்காகச் சொல்லிக் கேட்டிருந்தால் பணமும் கிடைத்திருக்கும். இப்படி பிரச்சனைகளும் வந்திருக்காது. ஏன் கிருஷ்ணன் என்னை மாதிரி ஆட்களை முறைச்சுக்கிறீங்க. ம்.. நீங்கள் தீர்ப்பு எழுதற வரைக்கும் உங்கள் மகள் எந்த விதக் கஷ்டமும் இல்லாமல் எங்கள் கஷ்டடியில் இருப்பாள் என்றவாறு சசிகலாவைத் தூக்கிக் கொண்டு எல்லோரும் கிளம்ப, அய்யோ அவளை விட்டு விட்டு போங்களேன் என்று அலறியவாறு பின்னாலே ஓடினார் கிருஷ்ணன்.
எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings