in ,

தேவனின் பேரொளி! (சிறுகதை) – இரஜகை நிலவன்

ழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

பிலிப் படுக்கையில் யோசித்துக் கொண்டிருந்தான், அருகில் வைத்திருந்த ஆரஞ்சு சாற்றை கூட குடிக்க மனமில்லை அவனுக்கு.

மருத்துவமனையின் ஒருவித மருந்து வாடை கூட அவனுக்கு ஓரளவு அனுமானத்திற்கு வந்துவிட்டது. இத்தனை வருடங்கள் முயற்சி செய்து இப்போது தான் குவைத் போவதற்கான விசா கிடைத்த நேரத்தில் இப்படி திடீர்க் காய்ச்சல் வந்து என்னை மருத்துவனையில் கிடத்தி விட்டது. நான் வருகின்ற ஈஸ்டருக்குள் குவைத் போகவில்லையெனில் வந்த விசாவும் முடிந்து போய் பழையபடி மண்வெட்டியைத் தூக்கிக் கொண்டு வேலைக்குப் போக வேண்டியதுதான்.

“எப்போதுமே என்னை நெருங்காத நோய் கூட திடீரென என்னைத் தொற்றிக் கொண்டு இப்படி குவைத் போக விடாமல் படுக்க வைத்து விட்டதே. என் இறைவனே! இன்று பெரிய வியாழக்கிழமை. கடைசி இராப் போஜனம் எல்லாம் ஆலயத்தில் மிக விமரிசையாக நடக்கும். எனக்குத்தான் கலந்து கொள்ள கொடுத்து வைக்கவில்லை. சே! ஒருவேளை எவருக்கேனும் எதிராக துரோகம் செய்திருப்பேனோ? அதனால் தான் இறைவன் தன்னுடைய வாழ்வில் இது என்னைத் தண்டிக்கிறாரோ?” எனக் கண்ணீர் வடிய மனதைப் போட்டு அலைகழித்துக் கொண்டிருந்தவனை

அருகில் வந்து கண்ணீரை துடைத்து விட்டு, “பிலிப் ஏன் வீணா அழுகிறாய்? உலகிலே நோய் வருவது எல்லோருக்கும் சகஜம் தானே?” என கொண்டு வந்திருந்த உணவை அருகில் உள்ள மேஜையில் வைத்து விட்டு படுக்கையில் அவன் அருகில் அமர்ந்தாள் அம்மா.

“வேற எப்போதாவது நோய் வந்திருந்தால் இந்த அளவிற்கு நான் வருந்தியிருக்க மாட்டேன் அம்மா. எத்தனை வருடங்கள் முயற்சி செய்து பெரியப்பா மகன் ஜார்ஜ் ஒரு விசா எடுத்து அனுப்பியுள்ளான். அந்த வேலைக்குப் சேர முடியாமல் போய் விட்டதே. அம்மா நீங்கள் கடைசி இராப்போஜன திருப்பலிக்குச் செல்லவில்லையா?”

“இல்லை மகனே! உன்னை இந்த நிலையில் மருத்துவமனையில் விட்டு விட்டு நான் எந்த ஒரு மனநிலையில் தேவாலயத்தில் திருப்பலி காண முடியும்? பாரேன்! போகும் பொது பிழிந்து வாய்த்த சாறு கூட அப்படியே இருக்கிறது, இப்படி நீ எதுவும் சாப்பிடாமல் இருந்தால் உடல் எப்படி தேறும். எழுந்து கையைக் கழிவிக் கொள். உனக்குச் சூடாக கஞ்சி வைத்துக் கொண்டு வந்திருக்கிறேன். சாப்பிடு… தூக்கிவிடட்டுமா?”

“நான் ஒன்றும் சின்னப் பிள்ளை இல்லை. நானே எழும்புகிறேன். விடுங்கள்”

“நீ எப்போதும் எனக்குக் குழந்தைதானடா”

“எனக்குச் சாப்பிடப் பிடிக்கவில்லை அம்மா”

“அப்படிச் சொல்லி வயிற்றைக் காயப் போடக் கூடாது. எழுந்து சாப்பிடு” என்று தாய் பரிவுடன் கூறினாள்.

மெதுவாக பிலிப் எழுந்து அமர்ந்திருக்க, அம்மா ரெஜினாள் கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்கு கஞ்சியை அள்ளி அவனை பருக வைத்தாள்.

முடிந்ததும், அவனுடைய உதடுகளை துடைத்து விட்டு, ‘பாத்திரங்களை எடுத்துக் கொண்டு போகிறேன். நாளைக் காலை வருவேன். வீணாக வருந்தாதே. இன்று சிலுவையில் மரித்து நாளை மறுநாள், மரணத்தையே வென்று உயிர்த்தெழப்போகிற தேவன் உனக்கொரு நல்ல வழி காட்டுவார். வருந்தாமல் மனதைப் போட்டு அலட்டிக் கொள்ளாமல் தூங்கு” என்று சொல்லி விட்டு போனாள் அம்மா.

தூக்கம் வர மறுத்தது. தன்னுடைய வாழ்வில் இதுதான் முதன் முறையாக மருத்துவமனை வாசம் என்பது அவனுக்கும் கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. மெதுவாக கண்களை மூடிய போது, “ஹாய் பிலிப் இப்போது உடல் நிலை எப்படி இருக்கிறது?” என்றார் டாக்டர் உள்ளே வந்தவாறு.

“என்னப்பா சோகமாக இருக்கிறாய்?” என்று கேட்டார் ஸ்டெதஸ்கோப்பை அவன் நெஞ்சில் வைத்து பார்த்துக் கொண்டே.

பிலிப் தன்ன்னுடைய சோகத்தை டாக்டரிடம் கொஞ்சமாக பகிர்ந்து கொள்ள, “வருந்தாதே தம்பி, வாழ்க்கையில் எல்லாம் கஜம்தான். உனக்குத் தேவாலயம் செல்ல விருப்பமிருந்தால் நாளை நம் மருத்துவமனையில் உள்ள குழந்தை இயேசு ஆலயத்தில் சென்று பெரிய வெள்ளியில் நடக்கும் சிலுவைப் பாதை மற்றும் ஆராதனைகளில் கலந்து கொள்ளலாம்” என்றார்.

“என்னாலே எழுந்து கூட நிற்க முடியவில்லை டாக்டர். நான் எப்படி ஆலயம் செல்ல முடியும் டாக்டர்?”

“வருத்தப்படாதே. இங்கிருந்தே ஜெபி. எப்படியும் உன் ஜெபங்கள் கேட்கப்பட்டு நீ குவைத் போவதற்கான உதவிகள் செய்யப்படும்” என ஆறுதல் சொல்லி விட்டுப் போனார்.

மறுநாள் உடல் நிலையில் கொஞ்சமும் முன்னேற்றம் இல்லாமலே இருந்தது. அம்மா எவ்வளவு எடுத்துச் சொல்லியும் சாப்பிட விரும்பாது அமர்ந்திருந்த பிலிப், “அம்மா குவைத்தில் உள்ள ஜார்ஜிடமிருந்து ஏதாவது செய்தி வந்ததா?” என்று கேட்டான்.

“நீ போகவில்லையெனில் விசாவை உடனடியாக ரத்து செய்து விடுவார்கள் என்று சொன்னான். நமக்கு கொடுத்து வைத்தது அவ்வளவுதான். நீ சாப்பிடு” என்றாள்.

“பரவாயில்லை. எனக்குப் பசிக்கவில்லை. நீங்கள் வீட்டுக்குக் கிளம்புங்கள். இரண்டு நாட்களாக நீங்கள் ஆலயத்திற்கு செல்லவில்லை. இன்று நடுநிசி உயிர்ப்பு திருப்பலிக்காக போய்விட்டு வாருங்கள். உயிர்த்த யேசுவிடம் எனக்காக ஜெபியுங்கள். விசா நீடித்தால் கண்டிப்பாக எனக்கு குவைத் போக வாய்ப்பு கிடைக்கலாம். போங்கள்.”

“உன்னை விட்டு விட்டு நான் எப்படி ஆலயம் செல்ல முடியும் பிலிப்?”

பிலிப் பதில் சொல்ல ஆரம்பிப்பதற்குள் அங்கு வந்த நண்பன் ஜோசப், “எப்படி இருக்கிறாய் பிலிப். நல்ல சுகம்தானே?” என்றான்.

“பரவாயில்லை.”

“உனக்கு ஒரு விஷயம் ‘தெரியுமா? உன் பெரியப்பா மகன் ஜார்ஜ் போன் செய்திருந்தான். உன் விசாவை நீடித்து வாங்கி விட்டார்களாம். ஒரு மாத்த்திற்குள் நீ குவைத் போனால் வேலைக்குச் சேர்ந்து விடலாம் என்று சொன்னான். மரித்த இயேசு உயிர்க்கப் போகும் இவ்வேளையில் உனக்கு உதவி செய்து விட்டார்” என்றான் அங்கு வந்த ஜோசப்.

“ஜோசப் ரொம்ப நன்றி. நல்ல விஷயத்தை சொன்னாய். எனக்கு உடம்பிலே தெம்பு வந்து விட்டதைப் போல் இருக்கிறது”.

“அம்மா, டாக்டரிடம் சொல்லிவிட்டு நானும் உங்களேடு நடுநிசித் திருப்பலிக்கு வருகிறேன். உயிர்த்தெழுந்த இயேசுவிற்கு நன்றி சொல்லி என் பாவங்களைச் சொல்லி மன்னிப்பு பெற வேண்டும்” என்று மகிழ்ச்சியோடு சொன்னான்.

“சரி பிலிப்” என்றாள் மகிழ்ச்சிக் கண்ணீரோடு அம்மா.

எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தத்துவமஸி (ஒரு பக்க கதை) – அர்ஜுனன்.S

    உலகம் உன் வசம் (புதுக்கவிதை) – இரஜகை நிலவன்