எழுத்தாளர் அர்ஜுனன்.S எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அம்மா சூடாக தோசை வார்த்து போடப் போட, தன் மொபைலை நோண்டிக்கொண்டு சாப்பிட்ட கோபி, ஒரு பிரபல ஷோப் கம்பெனியின் பிராந்திய விற்பனை மேலாளர்.
மொபைலில் வந்த செய்தி இன்றைய பிரைன் ஸ்டார்மிங் பற்றியது. இன்று மதியம் மூன்று மணிக்கு மீட்டிங் என அழைத்திருக்கிறார் சி இ ஓ. மீட்டிங்கின் முக்கிய நோக்கம் விற்பனை பெருக்குவதற்கான ஆலோசனை. புதிதாக என்ன ஆலோசனையை தந்துவிட முடியும்?
“அம்மா.. இது எத்தனையாவது?” என கேட்ட கோபியிடம்
“அது மூணாவது தான்.. இன்னும் ஒன்னு கொண்டு வந்து விடுறேன்” என பொய்யாக பதில் சொன்னாள் அம்மா மாலதி.
அவன் நான்கு தோசை தான் சாப்பிடுவது என ஒரு கணக்கு வைத்திருந்தான். ஆனால் அவன் அம்மா அவனுக்குத் தெரியாமலே பொய் சொல்லியாவது ஐந்தாவது தோசையை போட்டு விடுவாள். அதுதான் அம்மா!
“அம்மா நீங்க பொய் சொல்றீங்க.. நான் இன்னிக்கி கண்டுபிடிச்சிட்டேன்.. நீங்க போடப் போட என் மொபைலில் நோட் பண்ணி இருக்கேன்.. ஏற்கனவே நாலு ஆச்சு” என்றான் கோபி.
“ஓ அப்படியா.. ஆனா பத்து நாளா நீ அஞ்சு தோசை தான் சாப்பிடுற.. ” என்ற அம்மாவிடம்..
“அப்படியா?..” என ஒரு நிமிடம் திகைத்த கோபி.. “ஆஹா.. ஐடியா கிடைச்சிருச்சு” என்றான்.
“என்னடா ஐடியா..?”
“எல்லாம் சாயுங்காலம் வந்து சொல்றேன்..” என்ற சொன்னபடியே அலுவலகம் செல்ல பரபரப்பாக ரெடியானான்.
***
மதியம் மூன்று மணி.
கட்டால் (Cut-all) சோப் பிராந்திய அலுவலகம் . (எல்லா கிருமிகளையும் ஒழித்து விடுமாம், அதனால் தான் அவர்கள் சோப்புக்கு அந்த பெயர்). வீடியோ கான்பரன்ஸ் ஹால். தென்னிந்திய பிரதிநிதி ஆக கோபி கலந்து கொண்டிருந்தான்.
சி இ ஓ பேச்சை தொடங்கினார்.
“உங்க கருத்தை முதல்ல ஒன் லைனா சொல்லுங்க.. அப்புறமா டீடைலா பேசலாம்”
வட இந்திய பிரதிநிதி, விளம்பரத்தை அதிகப்படுத்தலாம் என்று யோசனை சொன்னார்.
கிழக்கு இந்திய பிரதிநிதி, டீலர்களுக்கு அதிக டிஸ்கவுண்ட் கொடுத்தால் நம் சோப்பை இன்னும் புஷ் பண்ணுவாங்க என்று சொன்னார்.
மேற்கிந்திய பிரதிநிதி, சோப்பின் விலையில் ஆஃபர் கொடுக்கலாம் என்று சொன்னார்.
அதற்கு அடுத்து.. “உங்க கருத்தை சொல்லுங்க” என்று சிஇஓ கோபியிடம் கேட்க..
“சார்.. அதே விலைக்கு அதைவிட பெரிய சோப் கொடுக்கலாம்” என்று கோபி சொன்னான்.
“விலை குறைப்புக்கும் இதுக்கும் என்ன வித்தியாசம்..?” இது சிஇஓ.
“விலை குறைப்பு எல்லோரும் செய்வது, அதே விலையில் பெரிய சோப் வித்தியாசமான விளம்பரத்தை தரும்”
“ம்ம்..”
“நம்ம சோப்பை தொடர்ந்து யூஸ் பண்றவங்க எப்பவும் போல ஆதரவு தருவாங்க.. நாம புதுசா விற்பனை செய்ய இன்னொரு செக்மென்ட் கிடைக்கும்.. கொஞ்ச நாள் கழிச்சு கொஞ்சம் கொஞ்சமா விலைய கூட்டி பெரிய சோப்புக்கு அதிக விலை வச்சு, இப்போ உள்ள சோப் சைசும் கொண்டு வந்திடலாம்.. இப்போ உள்ள விலையில் வேணும்கிறவங்க நம்முடைய சின்ன சைஸ் சோப்புக்கு வந்துடுவாங்க.. அந்த மார்க்கெட் நம்மளுக்கு அப்படியே இருக்கும்..” என்று முடித்தான் கோபி.
“ஓகே.. முயற்சித்து பார்க்கலாம்” என்று முடித்தார் சிஇஓ.
கோபி சொன்னது போலவே நடந்து, சிறிது நாட்களில் கட்டால் சோப் இரண்டு சைஸ்களில் கடையில் கிடைத்தது. கோபிக்கு புரொமோஷனும் கிடைத்தது.
எழுத்தாளர் அர்ஜுனன்.S எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings