2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
அன்று அப்பா அம்மாவுக்கு இருபத்தைந்தாவது திருமண நாள். காலையிலேயே மூவரும் கோவிலுக்குப் போய்விட்டு, அப்படியே ஹோட்டலுக்குப் போய் டிஃபன் சாப்பிட்டுவிட்டு வீடு திரும்புவதென மூவரும் முடிவு செய்து கொண்டார்கள்.
ரவி வழக்கம் போல ஷூ போட்டுக் கொண்டான். திருமணநாளுக்காக கணவன் வாங்கிக் கொடுத்த புதுசெருப்பை மங்களம் போட்டுக் கொண்டாள். ஆனால், மணிமாறன் மட்டும் பழைய செருப்பையே போட்டுக்கொண்டார். அதைக் கவனித்த மங்களம் சத்தம் போட்டாள்.
‘ஏங்க… ரெண்டு பேருக்கும்தானே புரு செருப்பு வாங்கினோம். நான் புது செருப்பை போட்டுக்கிட்டேன், நீங்களும் போட்டுக்கவேண்டியதுதானே. ஏன், இந்த பழைய செருப்பையே போட்டுக்கிட்டு வர்றீங்க… ஒரு விசேஷ நாள்ல கோவிலுக்குப் போறோம்… ரெண்டுபேரும் புது செருப்பைப் போட்டுக்கிட்டு போனா நல்லா இருக்குமில்லையா…’
சிரித்துக் கொண்டார் அவர். ‘எனக்கு இது போதும் மங்களம்…’ ரவியும் சிரித்துக் கொண்டே சொன்னான். ‘அம்மா… உனக்குத் தெரியாதா… கோவிலுக்குன்னாலே அப்பா பழைய செருப்பைத்தான் போடுவார்னு… இன்னிக்கித்தான் பார்க்கறீயா… விடும்மா… ’
சென்னைக்கு வந்து முதல் தடவையாக கோவிலுக்குப் போனபோது, முதல் செருப்பை தொலைத்தார் அவர். வாங்கி ஒரு மாதம் கூட ஆகியிருக்கவில்லை. பத்து நிமிடம் தேடியும் அது கிடைக்கவே இல்லை. ஏகப்பட்ட செருப்புகள் கிடக்கின்றன. ஆனால், அவரது செருப்பை மட்டும் காணவேயில்லை.
‘ யாரோ மாத்திப் போட்டுக்கிட்டு போய்ட்டாங்க போலயிருக்குப்பா.. ‘ என்று அவரை சமாதானம் செய்தான் ரவி. வெறுத்துப் போய் வெறும் காலுடன் பத்தடி தூரம் நடந்தபிறகும் கூட திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே நடந்தார் அவர்.
‘ பழசுதானே, விடுங்கப்பா…. போற வழியில ஒரு புது செருப்பு வாங்கிக்கலாம்…’ என்று சமாதானம் செய்தான் ரவி.
‘ வேண்டாம்பா… கார்லதானே போறோம்… இப்படியே வந்துடறேன்.. வீட்டுலதான் எக்ஸ்ட்ரா செப்பல் இருக்கில்ல… ‘ என்றார் அவர்.
மகனைப் பார்த்த மங்களம், ‘ ரவி, உங்கப்பா அப்படித்தான்டா கஞ்சத்தனம் பண்ணுவார்… நீ லெப்ட்ல பார்த்துக்கிட்டே வா… நான் ரைட்ல பார்த்துக்கிட்டே வர்றேன்.. எங்கேயாவது செருப்புக்கடை தெரிஞ்சா வண்டியை நிறுத்து, புதுசா ஒன்னு வாங்கிடலாம்… ‘ என்றாள்.
‘ ரவி…சொன்னா கேளு… ரெண்டு செருப்பு வீட்டுல கிடக்கு. அது போதும் வா, இப்போ நேரா வீட்டுக்குப் போய்டலாம்… ‘ என்று கறாராய் சொல்லிவிட்டார் அவர். மங்களமும் இரண்டு தடவை சொல்லிப் பார்த்துவிட்டு விட்டுவிட்டாள். வெறும் காலுடனேயே வீடு வந்து சேர்ந்தார் அவர்.
பின்னர், ஒரு கல்யாண வரவேற்புக்கு போக நேர்ந்தபோது பழையது வேண்டாம், புதிதாக போட்டுக்கொண்டு வாருங்கள் என்று சொல்லி போகும் வழியில் ஒரு கடையில் ஒரு புது செருப்பு வாங்கிக் கொடுத்தான் ரவி. அடுத்த முறை வேறொரு கோவிலுக்கு போயிருந்தபோது அந்த புதுசெருப்பையே போட்டுக்கொண்டு போக அது காணாமல் போய்விட்டது. முன்னெச்சரிக்கையாக ஒரு செருப்பை ஒரு இடத்திலும் இன்னொன்றை கொஞ்சம் தூரமாயும்தான் போட்டிருந்தார். அப்படியும் காணாமல் போய்விட்டது.
வெறுத்துப்போன மணிமாறன். ‘ இதுக்குத்தான் கோவிலுக்கெல்லாம் புது செருப்பைப் போட்டுக்கிட்டு வரக்கூடாதுங்கறது… செருப்பைத் திருடறதுக்குன்னே ஒரு கும்பல் அலையிது போல… ‘ என்று கடிந்து கொண்டார் அவர்.
ரவி, ‘ போயிட்டு போறான் விடுங்கப்பா… இன்னிக்கு புது செருப்பு போட்டுக்கிட்டு போகணும்னு அவன் நெத்தியில எழுதியிருக்கு. நாம போற வழியில வேற புதுசெருப்பு வாங்கிக்கலாம் ‘ என்றான் அவன்.
மங்களமோ ஒரு படிமேலே போய், ‘ஏங்க, கோவிலுக்குப் போய் எதையாவது தொலைச்சிட்டா, நம்மளை பிடிச்ச பீடை அத்தோட ஒழிஞ்சதுன்னு சொல்லுவாங்க… அப்படி நினைச்சுக்கங்களேன்… ‘ என்றாள்.
‘ சொல்லுவேடி, பணம் செலவு பண்றது நான்தானே ‘ என்று சொல்ல நினைத்து சொல்லாமல் விட்டார்.
ஆளாளுக்கு சமாதானம் சொன்னாலும் மணிமாறனுக்கு உள்ளுக்குள் கோபம் பொங்கியது. அதை களவாடிக்கொண்டு கொண்டு போனவன் மட்டும் கையில் மாட்டினால் அவனது விரல்களை ஒடித்தே விடுவார். அந்தளவுக்கு கோபம். போகிற வழியில் மறுபடியும் ஒரு புதுசெருப்பு வாங்கிக் கொடுத்துதான் கூட்டிப் போனான் ரவி.
அது முதல் கோவிலுக்கு போவது என்றாலே, பழைய செருப்புதான் போடுவார் மணிமாறன். காரில் ஏறப் போகும் முன்னர் ஒருதடவை தனது கால்களைப் பார்த்துக் கொண்டார். ‘ என்ன பார்க்கறீங்க… புது செருப்பை போட்டுக்கிட்டு வந்திருக்கலாமோனு தோணுதோ…’ என்று கேலி செய்தாள் அவள். ‘ மங்களம், எனக்கு எந்த செருப்பை போட்டாலும் நல்லாதான் இருக்கும்… பேசாம வா… ’ என்றார் அவர்.
கோவில் நெருங்கியது. புதியதாய் தடுப்பு போட்டிருந்தார்கள். அந்த தடுப்பைத் தாண்டி கார் போகக் கூடாதென்று சொல்லிவிட்டார்கள். காரை நிறுத்திவிட்டு டோக்கன் வாங்கிக்கொண்டு நடந்தார்கள். ரவியோ ஷூவை காரிலேயே விட்டுவிட்டான். வழி நெடுக ஆங்காங்கே சகதி கிடந்ததால், அப்பா அம்மாவை வெறும் காலில் நடக்கவிடாமல் செருப்புடனேயே நடக்கச் சொல்லிவிட்டான்.
செருப்பு விடும் இடம் வந்தது. தைரியமாய் தனது செருப்பை விட்டார் மணிமாறன். கொஞ்சம் பயத்துடனேயே தனது புது செருப்பை விட்டாள் மங்களம். ‘ ஒன்னும் ஆகாது வா ‘ என்று மனைவியை இழுத்தார் அவர். நான்கடி நடந்தவள் திரும்பி செருப்பைப் பார்த்தாள். ‘ இருக்கிறேன் ‘ என்றது அது.
திடீரென்று திரும்பிவந்த மணிமாறன் அவளது ஒரு செருப்பை மட்டும் எடுத்து ரொம்ப தூரத்தில் போட்டார். உடனே மனைவியைப் பார்த்து ‘ நிம்மதிதானே ‘ என்றுவிட்டு அவளை இழுத்துக் கொண்டு கோவிலுக்குள் நடந்தார்.
ரவி யாருடனோ போனில் பேசிக்கொண்டு வெளியே நின்றிருந்தான். மணிமாறன் அவனுக்கு வரச் சொல்லி ஜாடை காட்டினார். ‘ நீங்க போங்க வந்துடறேன் ‘ என்பது போல அவன் ஜாடை கட்ட இவர்கள் உள்ளே போய்விட்டனர்.
தரிசனம் முடிந்து வெளியேறும் முன்பாக ரவி வெளிப்பிரகாரத்தில் யாருடனோ போனில் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து, அவனுக்கு கிளம்பலாம் என்று சைகை காட்டினாள் மங்களம். அவனோ பேசிக்கொண்டே இருந்தான்.
பக்கத்தில் பொங்கல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இருவரும் பொங்கலை வாங்கிக் கொண்டு ஓரமாய் போய் நின்றபடி சாப்பிட்டுடுவிட்டு அருகில் இருந்த குழாயடியில் கைகளைக் கழுவிக்கொண்டு சிலநொடிகள் உட்கார்ந்திருந்துவிட்டு எழுந்து கிளம்பத் தயாராகினர்.
மங்களம் மறுபடியும் ரவிக்கு ஜாடைக் காட்டினாள். அவனோ, ‘ முன்னே போங்கள், வந்துவிடுகிறேன் ‘ என்பது போல ஜாடைக் காட்டிவிட்டு பேசிக் கொண்டே இருந்தான். இவர்கள் இருவரும் கிளம்பி விட்டனர்.
அப்போதுதான் மங்களத்திற்கு நடையில் ஒரு வேகம் பிறந்தது. ‘ சீக்கிரம் வாங்க… ‘ என்றாள் கொஞ்சம் பதட்டத்துடன். ‘ என்னாச்சு… ‘ என்றார் அவர். ‘ புது செருப்புக்கு ஆபத்து வந்துவிடக்கூடாதே ‘ என்ற ஆதங்கம் அவளுக்கு.
அதைப் புரிந்து கொண்ட அவர், ‘ கவலைப் படாத மங்களம். ஒரு செருப்பைத்தான் பத்தடிகிட்டே தள்ளி போட்டுட்டு வந்தேனே… ஒன்னும் ஆகாது, வா… ‘ என்றார்.
‘ ஆமாமா… ஆறுமாசம் முன்னாலேயும் அப்படித்தான் போட்டீங்க.. என்ன ஆச்சு. களவாணிப் பயலுங்க களவாடிக்கிட்டுப் போயிடலையா… ’ கேலி செய்தாள் அவள். வெளியே வந்த இருவருக்கும் பகீர் என்றது. மங்களத்தின் செருப்பைக் காணவில்லை. மணிமாறனும் அலறினார். அவரது செருப்பையும் காணவில்லை.
‘ஐயையோ… புத்தம் புது செருப்பு காணாமப்போச்சேங்க…’ என்று மங்களம் புலம்ப, அவரோ சிரித்துக்கொண்டு. ‘ சரி விடு உன்னை பிடிச்ச பீடை விட்டதுன்னு…’ என்றார்.. தன்னை நக்கல் விடுகிறார் என்று புரிய முறைத்து பார்த்தாள் அவள்.
‘நேத்துதானேங்க வாங்கினோம்… கடவுளே… ‘ என்று அவள் புலம்ப, ‘ நல்ல வேலை என்னோடது பழயதாப் போச்சு… ‘ என்றார் அவர். அப்போதுதான் அரக்கப் பரபரக்க உள்ளேயிருந்து ஓடிவந்தான் ரவி.
‘செருப்பையா தேடறீங்க… கவலைப் படாதீங்கப்பா… நீங்க கோவிலுக்குள்ளே போனதுமே நாந்தான் திடீர்னு யோசனை வந்து ரெண்டையும் எடுத்துக்கிட்டுப் போய் கார்லே போட்டுட்டு வந்தேன்… கொஞ்சம் இங்கேயே நில்லுங்க… நான் ஓடிப்போய் எடுத்துக்கிட்டு வந்துடறேன்… ’ என்றபடி ஓட ஆரம்பித்தான்.
இருவரும் நிம்மதியுடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
ஆண்டவனைப்பாக்கப்போனாலும்
செருப்பு பயம் விடமாட்டேங்குது..ய
தார்த்தம்..நெறய்ய தடவை இப்படி ஆகும்..