எழுத்தாளர் அர்ஜுனன்.S எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“ஏங்க.. எதிர்த்த வீட்டு கோபால..ம்மாவை மறுபடி ஒரு வாரமா ஆளைக் காணோம்.. கவனிச்சீங்களா..?”
மனைவியின் கேள்விக்கு உடனே பதிலை சொல்லாமல் ஒரு நிமிடம் யோசித்தார் ராமன்.
அந்த கோபாலம்மாவுக்கு வயசு ஐம்பதுக்கு மேல் இருக்கும். அவங்க மகன் கோபாலுக்கு போன வருஷம் கல்யாணம் ஆகி, கோபாலம்மாவோட கூட்டுக் குடும்பமாத் தான் இருக்காங்க..
அந்த அம்மா காணாமல் போக என்ன சின்னப் பிள்ளையா? ஏதோ வேடிக்கையாக பேசுகிறோம் என்று நினைத்துக் கொண்டு இதே வார்த்தைகளை அப்படியே மனைவியிடம் கேட்டால், வீட்டில் ரணகளம் தான்.
“சரி.. முதல்..ல எப்போ காணாம போனாங்க..?”
என்றார் ராமன், ஒன்றும் தெரியாத அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு.
“ம்க்கும்.. உங்க கிண்டல் நல்லாத்தான் இருக்கு”
என்ற மனைவி சீதா, ராமனின் முதுகில் செல்லமாக ஒரு தட்டு போட்டவாறே தொடர்ந்தாள்..
“ரெண்டு வாரத்துக்கு முன்னாடி உடம்பு சரியில்லாம போய் ஆஸ்பத்திரியில அட்மிட் ஆகி திரும்பி வந்தாங்களே, ஞாபகம் இல்லையா..?” என்று கேட்டாள்.
“ஓ ..அத சொல்றியா?.. மறுபடியும் உடம்பு சரியில்லாமல் போயிருச்சா?..”
அக்கறையாக கேட்டார் ராமன்.
“தெரியல.. ஆனா வெளிய ஆள் நடமாட்டம் இல்லை.. கோபால் வீட்டுக்காரி கிட்ட தான் கேக்கணும்..”
நானே கேள்வி, நானே பதில் என்பது போல உரையாடலை முடித்துக் கொண்டாள் சீதா.
***
ரெண்டு நாள் கழித்து மீண்டும் சீதாவே திரும்ப ஆரம்பித்தாள்…
“எதிர்த்த வீட்டு கோபால..ம்மா வீட்ல சண்டையாம்… மக வீட்டுக்கு போய் இருக்காங்களாம்..”
” வீட்டுக்காரர் கூட இந்த வயசில சண்டையா.? அதனாலே மக வீட்டுக்குப் போயிருக்காங்களா..?”
ஆச்சரியமாக கேட்டார் ராமன்.
“வீட்டுக்காரர் கூட இல்லைங்க.. மருமக கூட தான் சண்டையாம்..”
“மாமியார் மருமக சண்டை னா.. மருமக தானே அவங்க அம்மா வீட்டுக்கு போகும்..
இவங்க ஏன் மக வீட்டுக்குப் போனாங்களாம்..? உனக்கு யார் சொன்னாங்க..?”
“நம்ம காய்கறி ரேவதி தான் சொன்னா..” என்றாள் சீதா.
காய்கறி ரேவதி என்று சொல்வது நடமாடும் வண்டி வைத்து காய்கறி விற்பனை செய்யும் ரேவதியை. அந்த ரேவதிக்குத் தான் எங்கெங்கே வீடு வாடகைக்கு காலியாக இருக்கிறது, யார் வீட்ல என்ன விசேஷம், யார் வீட்ல என்ன பிரச்னை எல்லாம் தெரியும்.
ரேவதி பற்றிய சிந்தனையை கலைக்கும்படி சீதாவே தொடர்ந்தாள்..
“ஆமாங்க.. அதே சந்தேகத்தை தான் நானும் அவகிட்ட கேட்டேன்..”
“அதுக்கு அவ என்ன சொன்னா..?” ஆர்வமாக கேட்டார் ராமன்.
“மாமியா மருமக சண்டை வந்தா, மருமக அவங்க அம்மா வீட்டுக்கு கோவிச்சிக்கிட்டு போறது அந்தக் காலமாம்.. மருமகளே மாமியார அவங்க மக வீட்டுக்கு அனுப்புவது தான் லேட்டஸ்ட் ட்ரெண்டாம்..”
‘அட இது நல்லா இருக்கே’ என்று நினைத்த ராமன்..
“உஷாரா இரு.. நம்ம பையனுக்கும் இன்னும் மூணு வருஷத்துல கல்யாணம் ஆகப்போகுது” என்றார்.
கணவரை பார்த்து முறைத்தபடியே, கழுத்தை இடது தோளில் வெட்டிக்கொண்டு சென்றாள் மனைவி சீதா.
எழுத்தாளர் அர்ஜுனன்.S எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings