in ,

புதிய பாதை (சிறுகதை) – தி.வள்ளி, திருநெல்வேலி 

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

கல்யாணம் முடிந்து சந்தடி எல்லாம் அடங்க மண்டபமே வெறிச்சோடியது வந்திருந்த உறவினர்கள், நண்பர்கள், எல்லோரும் மதிய சாப்பாடு முடிந்ததும் கிளம்பி விட, வீட்டு நபர்கள் மட்டுமே எஞ்சி இருந்தனர்.

மண்டபம் மட்டுமல்ல நிரஞ்சனாவின் மனமும் வெறுமையாகத் தான் இருந்தது. கழுத்தில் புது தாலி மின்ன, மணமகள் அறைக்குள் நுழைந்த நிரஞ்சனா, மாலையைக் கழற்றி அருகில் இருந்த நாற்காலியில் வீசியவள் படுக்கையில் தொப்பென விழுந்தாள். மனம் முழுக்க துக்கம் அழுத்த, கண்ணீரை கட்டுப் படுத்தியவளாக இருந்தாள். உள்ளே வந்த அம்மா ஜெயந்தி கதவை அவசரமாக மூடிவிட்டு மகள் அருகில் உட்கார்ந்தாள்.

“நீரு! ப்ளீஸ் கோ ஆப்ரேட் பண்ணு! வெளியே மாப்பிள்ள வீட்டுக்காரங்க இருக்காங்க. எழுந்து சேலைய மாத்திட்டு நலுங்கு புடவைய கட்டிட்டு வா…”

“நீங்க நினைச்சத முடிச்சிட்டீங்க இல்ல.. என்ன சம்மதிக்க வைத்து எப்படியோ கல்யாணத்தை நடத்தீட்டிங்க ” கோபத்தில் வெடித்தாள் நிரஞ்சனா.

” நீரு!! ப்ளீஸ் அப்படி பேசாதடா! நானும், அப்பாவும் ஒன்னு செய்கிறோம்ன்னா, அது உன் நல்லதுக்குத் தான். நாங்க ஒன்னும் உன் காதலுக்கு எதிரி இல்லை. அந்த பையன் குடும்பமே சரியில்ல. அவன் வேண்டாம் உனக்கு..உன் வாழ்க்கை நல்லா இருக்க வேணாமா? மேலும் இதையெல்லாம் பேச இது நேரமும், இடமும், இல்லை ,எழுந்து வா “

“இந்த ராகவ்வோடு மட்டும் சந்தோஷமா இருந்துடுவேனா? உனக்காகவும் அப்பாவுக்காகவும் நான் செய்த தியாகம்னு நெனச்சுக்கிறேன். மற்றபடி என் வாழ்க்கையில் சந்தோஷம் கிடையாது” என்று கோபமாக சொல்லிவிட்டு சேலை மாற்ற ஆரம்பித்தாள்.

ஜெயந்திக்கு அடிவயது கலங்கியது. ஏதோ இழுத்துப் பிடித்து கல்யாண வரை கொண்டு வந்தாட்டாகிவிட்டது. இனி மாப்பிள்ளையோடு சந்தோஷமாக வாழ்வாளா? இவள் முரண்டு பண்ணாமல் நல்லபடியாக ஒத்துழைக்க வேண்டுமே! மனம் முழுக்க கலக்கமாக இருந்தது .

அவள் விருப்பப்பட்டவனுக்கே அவளை கல்யாணம் பண்ணி கொடுத்து விடலாம்ன்னாலும், அந்தப் பையனின் குடும்பமே சரியில்லை. குற்றப் பின்னணி கொண்டதாக இருக்குது. அத கேள்விப்பட்ட பிறகு என்னதான் அந்தப் பையன் நிரஞ்சனாவோடு படித்தாலும் அவனுக்கு தங்கள் ஒரே செல்ல மகளை கொடுக்க மனம் ஒப்பவில்லை.

நிரஞ்சனாவும் காதலில் விழும்வரை அப்பா அம்மா தான் உலகம் என்று வாழ்ந்தவள்தான். காதலில் பிடிவாதமாக இருக்க, அவள் அப்பா ஸ்ட்ரெஸ் தாங்க முடியாமல் நெஞ்சுவலி வந்து அட்மிட்டான போது தான் பயந்து போனாள். அவள் வினோத் பேரில் வைத்திருந்த காதலை விட்டுக் கொடுத்து அப்பா, அம்மா பார்த்த மாப்பிள்ளை ராகவ்வை கல்யாணம் பண்ண சம்மதித்தாள்.

ராகவ் களையாக, அழகாகத்தான் இருந்தான். நல்ல கலகலப்பாக அன்பாக பேசினான். இருந்தாலும், அவள் வினோத் மேல் கொண்ட காதலால் ராகவ்வை ஏற்றுக் கொள்ள அவள் மனம் மறுத்தது .இவனுடன் எப்படி வாழ்வது என்று வெறுப்பாக இருந்தது.

மணமக்கள் ராகவ் வீட்டிற்கு கிளம்பினர்.ராகவ் வீட்டில் ஆரத்தி எடுத்து மணமக்களை வரவேற்றனர். நிரஞ்சனா பால் காய்ச்சி, குத்து விளக்கேற்றி, பூஜை செய்து, மருமகள் செய்ய வேண்டிய சடங்குகளை செய்தாள். இருந்தாலும் மகள் முகம் வாடிக்கிடந்ததை ஜெயந்தியால் கவனிக்க முடிந்தது.

சாப்பாடு முடிந்ததும் நடராஜன் மனைவியைப் பார்த்து “ஜெயந்தி! நாம கிளம்பலாமா? ” என்றார் .

ஜெயந்தி தயக்கத்துடன் “இன்னைக்கு ராத்திரி இங்க தங்கிட்டு..காலையில வர்றேனேங்க” என்றாள்.

“மகள் சென்னையில் தானே இருக்கிறா.. நினைச்சா அரை மணி நேரத்துல வந்து பார்க்கப் போற”

அதற்குள் ராகவ்வின் அம்மா…”அண்ணா! அண்ணி ராத்திரி இங்கே இருந்துட்டு தான் வரட்டுமே..” என்று கூற தலையசைத்தார் .நடராஜன் மகளிடம் விடை பெற்று கிளம்பிய போது நிரஞ்சனா அப்பாவை கட்டிக்கொண்டு அழுதாள்.

“என்னம்மா நீ! இங்க பக்கத்துல தானே இருக்கோம். அடிக்கடி பார்த்துக்கிட்டா போச்சு.. இதுக்கு போய் கலங்குறியே ..”என்று மகளின் தலையை வாஞ்சையோடு வருடியவராய், ஆறுதல் சொன்னாலும், அவர் மனதும்மகளின் பிரிவால் கனத்துத்தான் கிடந்தது .

அன்று இரவு நிரஞ்சனாவை உறவு பெண்கள் அலங்கரித்தனர்.

“அம்மா எனக்கு இந்த கூத்தெல்லாம் கொஞ்சம் கூட பிடிக்கல. ரொம்பத்தான் பண்ணுகிறார்கள்..” என்று கடுகடுத்தாள் நிரஞ்சனா.

“பிளீஸ்டி! தயவு பண்ணி எதுவும் ரகளை பண்ணிடாத.. என்னாலயும், உங்க அப்பாவாலயும், தாங்க முடியாது. தயவு பண்ணி மாப்பிள்ளையை அனுசரிச்சுப் போ.. ரொம்ப நல்லவராத் தெரியுறாரு, அவரை நோகடிச்சிடாதே” என்ற ஜெயந்தியின் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது.

அதற்கு மேல் அம்மாவிடம் ஒன்றும் பேசாமல் பால் சொம்புடன் ராகவ் அறைக்குள் நுழைந்தாள் நிரஞ்சனா.

அவள் மனதுக்குள் ஒரு வீம்பு எட்டிப் பார்த்தது. ‘என் சம்மதம் இல்லாமல் என்னுடன் எப்படி இவன் குடித்தனம் நடத்துறான்னு பார்க்கறேன்’ என்று மனதிற்குள் கருவினாள். அவள் உள்ளே நுழைந்த சமயம் ராகவ் பால்கனியில் நின்று..யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்தான்..

“லுக் மிஸ்டர் வினோத்! நீங்க சொன்ன எல்லாத்தையும் கேட்டேன். நிரஞ்சனா இப்ப உங்க காதலியில்ல. அவ என்னுடைய மனைவி. அவள் எனக்கு கணவன்ங்கற ஸ்தானத்தை தர போறாளா? இல்லையா?ங்கிறது வேற விஷயம்.. ஆனால் சட்டப்படி அவள் என் மனைவி .என் மனைவியைப் பற்றி தப்பா ஒருத்தர் பேசுறத என்னால அனுமதிக்க முடியாது.”

பதிலுக்கு வினோத் ஏதோ பேச …

“மைண்ட் யுவர் வேர்ட்ஸ் மிஸ்டர்… ஒரு பெண்ணை பத்தி தப்பா ரொம்ப பேசறது அசிங்கம். அவ உங்கள காதலிச்சிருக்கலாம். உங்க கூட வெளியே வந்திருக்கலாம். ஃபோட்டோஸ் எல்லாம் எடுத்திருக்கலாம். அதைப்பத்தி.. ஐ டோன்ட் மைண்ட்… கடத்து காலத்தப் பத்தி எனக்கு கவலை இல்ல. அவ எதிர்காலத்த என்கிட்ட ஒப்படைச்சா அவள சந்தோஷமா வாழ வைக்கிறது என் பொறுப்பு .

தனக்கு கிடைக்காத பெண் நல்லபடியா வாழக்கூடாதுன்னு நினைக்கிற … நீ எப்படி நல்லவனா இருப்ப? காரணம் எதுவாக இருந்தாலும், அவ உன்னை விட்டு விலக நினைச்சது சரியான முடிவு தான் .உன்ன நான் எச்சரிக்கிறேன். எங்க வாழ்க்கையில தலையிடாதே..” பேசிவிட்டு திரும்பியவன் பால் சொம்புடன் நின்ற நிரஞ்சனாவை பார்த்து திடுக்கிட்டான்.

அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்தாள் நிரஞ்சனா. இந்த வினோத் இவ்வளவு பெரிய அயோக்கியனா? ஒரு வருடத்தில் நட்பாக பழகியதில் காதல் எட்டிப் பார்க்க.. அது பெரிதாக வேரோடுவதற்குள்.. கல்யாணம் முடிந்து விட்டது.

நல்ல நண்பனாக என்னை வாழ்த்த வராவிட்டாலும், என் வாழ்க்கை கெடுக்க நினைக்கிறான்.. ராகவ்விடம் என்னென்ன தப்பாக திரித்துக் கூறினானோ…? இப்படிப்பட்டவனையா நான் விரும்பினேன்.? கல்யாணம் செய்ய முடியலைன்னு வருந்தினேன். ..அதிர்ச்சியில் அவள் கண்களில் கண்ணீர் அருவியாய் கொட்டியது.

ராகவ் அவள் கையைப் பிடித்து அருகில் இருந்த நாற்காலியில் அமர்த்தியவன்.. குடிப்பதற்கு தண்ணீரையும் கொடுத்தான்.

“நிரஞ்சனா கூல் டவுண்.. ஏன் அப்செட் ஆகிற.. இந்த மாதிரி அயோக்கியன் பேச்சுக்கெல்லாம் மதிப்பு கொடுக்க ஆரம்பித்தால் வாழ்க்கை நரகம் தான்..”

ராகவ்வை அலட்சியமாக நினைத்து, அறைக்குள் வந்தவள், கூனிக்குறுகி அவன் சொல்வதைக் கேட்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாக்கி நின்ற தன் மேல் வெறுப்பும் கோபமும் வந்தது.

“இல்லை.. அவன் என் நண்பன்..என்கூட படித்தவன்… நல்ல நண்பனாகத்தான் இருந்தான்…” என்று தடுமாற ஆரம்பித்தவளை கையமர்த்தியவன்..

“நிரஞ்சனா நீ எந்த விளக்கமும் கொடுக்கத் தேவையில்லை. இந்த காலகட்டத்தில் ஆண் பெண் நட்பு தவிர்க்க முடியாத ஒன்று .அது காதலாமாகி வெளிப்படுவது சகஜம் தான்… சந்தர்ப்ப வசத்தால் அது கூடாத போது அதையே நினைத்துக் கொண்டு வாழ்க்கையை வீணாக்காமல், கிடைத்த வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்வதுதான் நடைமுறைக்கு சாத்தியம்.

நீ உண்மையிலேயே வினோத் மேல் வைச்சிருக்கும் காதல் பெரிசுன்னு நினைச்சா உன் பெற்றோரிடம் பேசி சம்மதிக்க வைக்கிறேன். ஆனால் உன் தூய்மையான காதலுக்கு அவன் தகுதியானவனான்னு நீ தான் முடிவு செய்யனும். எந்த முடிவா இருந்தாலும் அதுல எனக்கு பூரண சம்மதம்.”

தராசின் இரு தட்டுகளாக நிரஞ்சனாவின் மனம் தடுமாறியது. தன்னுடன் நட்பாக பழகியும், அவதூறாக பேசி, தன் வாழ்க்கையை கெடுக்க நினைக்கும் வினோத் எங்கே? உண்மை தெரிந்தும் கோபப்படாமல், பக்குமா பேசி, பெருந்தன்மையாய் உன் முடிவை ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறும் ராகவ் எங்கே?

வினோத் உண்மையிலேயே நல்லவனாக இருந்திருந்தால் தான் நல்லா வாழனும்ன்னு நினைச்சிருப்பான்.. இப்படி தன்னை அசிங்கப்படுத்தி இருக்க மாட்டான். இவனுக்காக உருகியது எவ்வளவு பெரிய மடத்தனம்..

தான் செல்ல வேண்டிய பாதை எதுவென தெளிவாக புரிய, ராகவன் கைகளைப் பற்றி கண்ணில் ஒற்றிக்கொண்டாள்.. அவ என் மனம் புரிய ..அவளை அன்போடு அணைத்துக் கொண்டான் ராகவ்.

மறுநாள் ஜெயந்தி ரூமிலிருந்து வெளியே வந்த மகளின் முகத்தில் உள்ள தெளிவையும், மகிழ்ச்சியையும் பார்த்தவள், நிம்மதியாக கடவுளுக்கு நன்றி  சொல்லியபடி வீட்டிற்கு கிளம்பினாள்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    போதையேறிப் போச்சு, புத்தி மாறிப் போச்சு (சிறுகதை) – ஜெயலக்ஷ்மி

    பாராட்டு (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு