எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அந்த தனியார் மகப்பேறு மருத்துவமனையின் பிரசவ அறைக்குள் தன் மனைவி ரஞ்சிதத்தை மூன்றாவது பிரசவத்திற்கு அனுப்பி விட்டு, வெளியே வராண்டாவில் இருந்த பெஞ்சில் கைகளை பிசைந்தபடி, தலையைக் கவிழ்த்தபடி, அமர்ந்து யோசனையில் ஆழ்ந்திருந்தான் ராஜன்.
“ஆண்டவா… இந்த முறையும் பெண் குழந்தையே பிறந்து விட்டால் என்னால் சமாளிக்க முடியுமா?… என்னுடைய ஏழ்மையில் அதற்கு சரியானபடி சோறாவது போட முடியுமா… என்னால்?” மனதுக்குள் தனக்குத்தானே கேட்டுக் கொண்டான்.
திடீரென்று எழுந்து, தலைமை டாக்டரின் அறைக்குள் வேகமாய் நுழைந்தான்.
“டாக்டர்”
.
குனிந்து எழுதிக் கொண்டிருந்த டாக்டர் தலையை தூக்கி பார்த்தார்.
“வாங்க மிஸ்டர் ராஜன்!.. உங்க மனைவிக்கு இன்னும் சில நிமிடங்களில் டெலிவரி ஆயிடும்! டோன்ட் வொரி” என்றார்.
“டாக்டர் என்னோட கவலை அது இல்லை டாக்டர்!.. மறுபடியும் பெண் குழந்தையே பிறந்திடுமோன்னு ரொம்ப பயமா இருக்கு டாக்டர்”.
“ஏன் பெண் குழந்தை பிறந்தால் என்ன?… இந்தக் காலத்தில் ஆண் என்ன… பெண் என்ன… இன்னிக்குப் பெண்களும் ஆண்களுக்கு சரிசமமா எல்லா துறையிலும் வளர்ந்துட்டாங்களே?”.
“இதெல்லாம் வசதி இருக்கிறவங்க பேசற பேச்சு டாக்டர்!… என்னை மாதிரி ஏழைகளுக்குத்தான் தெரியும் கஷ்டமும்… நஷ்டமும்…” ஏக சலிப்புடன் பேசினான் ராஜன்.
“ஏன் ராஜன் உங்களுக்கு என்ன?… ஓரளவுக்கு வசதியாய்த்தானே இருக்கீங்க?” நெற்றியை சுருக்கிக் கொண்டு கேட்டார் டாக்டர்.
வெளித் தோற்றத்தைப் பார்த்தால் அப்படித்தான் தெரியும் டாக்டர்!… ஆனா… என்னோட சோக கதையைக் கேட்டா இப்படிப் பேச மாட்டீங்க!”.
“என்கிட்ட சொல்லுங்க ராஜன் உங்க சோக கதையை… என்னால முடிஞ்ச உதவிகளை செய்கிறேன்”.
“டாக்டர் நானும் நல்ல… வசதியான குடும்பத்தில் பிறந்தவன்தான் டாக்டர்!… எங்க அப்பா பெரிய இண்டஸ்ட்ரியலிஸ்ட்!… கோடிக்கணக்கில் சொத்து… ஏழெட்டு பிசினஸ்!… நானும் என்னோட அண்ணன் மட்டும்தான்!… எங்களுக்கு அம்மா இல்லை!… என்னோட அண்ணனை நல்ல வசதியான வீட்டுக்கு மாப்பிள்ளை அனுப்பி வெச்ச எங்க அப்பா என்னையும் அதே மாதிரி ஒரு வசதி படைச்ச வீட்டுக்கு மாப்பிள்ளையா அனுப்பி வைக்க முயற்சி செய்தார்!… ஆனால் நான்…?… இந்த ஏழை ரஞ்சிதாவைக் காதலிச்சேன்… ‘அவளைத்தான் கட்டிக்குவேன்’னு ஒத்தக் கால்ல நின்னேன்!… ஏகப்பட்ட சண்டைகளுக்கு பிறகு எங்க அப்பா “என் சொத்துல ஒரு பைசா கூட உனக்குக் கிடையாது போடா வெளியே” அப்படின்னுட்டார்!.. நானும் “யாருக்கு வேணும் உங்க சொத்து?… அதை நீங்களே வெச்சுப் பொழைங்க”ன்னு சொல்லிட்டு வெளியேறிட்டேன்”
.
“வெரி குட்!… ஐ அப்ரிஸியேட் யூ” என்றார் டாக்டர் இடையில் புகுந்து.
“இப்போ ஏழையா… ஒரு ஜவுளிக்கடையில் கிளார்க்கா இருக்கேன்!… என் மெலே இருந்த கோவத்துல எங்க அப்பா சொத்தையெல்லாம் என் அண்ணன் பெயரில் எழுதி வைத்து விட்டுப் போய்ச் சேர்ந்திட்டார்.. சொல்லுங்க டாக்டர்!… இந்த நிலைமையில ஏற்கனவே ரெண்டு பெண் குழந்தைகளோட இருக்கிற நான் இன்னொரு பெண் குழந்தையும் காப்பாற்ற முடியுமா?… சொல்லுங்க!” ஆணித்தரமாய்க் கேட்டான்.
“சரி அதுக்காக…?.”
“அதனால… இந்த முறை பெண் குழந்தை பிறந்துட்டா… நீங்களே அதை ஏதாவது ஒரு அனாதை ஆசிரமத்தில் சேர்த்திடணும்!.. ப்ளீஸ்” கெஞ்சினான்.
யோசித்த டாக்டர், “ஓகே… உங்க விருப்பப்படியே செய்யறேன்!.. பெண் குழந்தை பிறந்தால் அதை புனித அன்னை மேரி அனாதை இல்லத்தில் சேர்த்து விடறேன்… அவங்க நல்ல பணக்கார வீட்டுக்குத் தத்து கொடுத்திடுவாங்க அல்லது அங்கேயே வளர்த்து நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பார்கள்”
.
ராஜனுக்கு மனபாரம் குறைந்தது. அவன் நினைத்தது போலவே பெண் குழந்தை பிறந்தது. டாக்டரும் தான் சொன்னபடியே அதை அனாதை இல்லத்தில் சேர்த்து விட்டு, தாயிடம் குழந்தை குறைப் பிரசவத்தில் இறந்துதான் பிறந்தது என்று பொய் கூறி சமாதானப்படுத்தினார்.
ஆஸ்பத்திரியை விட்டுக் கிளம்பும் போது டாக்டரைக் கையெடுத்து கும்பிட்டான் ராஜன்.
****
புனித அன்னை மேரி அனாதை இல்லம்.
அதற்குள் நுழைந்து நின்ற காரிலிருந்து சுமார் நாற்பத்தியேழு… நாற்பத்தியெட்டு வயது மதிக்கத்தக்க ஒரு மனிதரும், கூடவே அவரது மனைவி போல் தோன்றும் ஒரு பெண்ணும் இறங்கினர்.
அவர்களது நடை உடை பாவனைகளே அவர்கள் பணக்கார ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பதைக் கூறியது.
செக்யூரிட்டியிடம் “நாங்கள் ஆல்பர்ட் சாரைப் பார்க்கணும்” என்றனர்.
அவன் காட்டிய அறைக்குள் நுழைந்தனர்.
உள்ளே எதையோ படித்துக் கொண்டிருந்த பாதர், இவர்களை பார்த்ததும்,
“யெஸ்!… யார் நீங்க?” கேட்டார்.
“ஃபாதர்!… என் பெயர் ராகவன்!… இது என் மனைவி!… நான் இந்த ஊரில் பெரிய புள்ளி!.. எனக்கு சொந்தமாக பல தொழிற்சாலைகள் இருக்குது!… அதை நம்பிப் பல குடும்பங்கள்!… ஆனா கோடிக்கணக்கில் சொத்து இருக்கிற எங்களுக்கு அதையெல்லாம் அனுபவிக்க ஒரு வாரிசு இல்லை!.. நாங்களும் இதுநாள் வரைக்கும் நம்பிக்கையோட காத்திருந்தோம்!… இப்ப அந்த நம்பிக்கை போயிடுச்சு!… எனக்கும் வயசாகிப் போச்சு… அதனால….?… நீங்க உங்க இல்லத்திலிருந்து அனாதைக் குழந்தைகளை தத்துக் கொடுக்கிறதா கேள்விப்பட்டோம்!… அதான்!”.
“ஸாரி மிஸ்டர் ராகவன்!… நீங்க சொத்துக்கு வாரிசாக் கேக்குறீங்க!… உங்களுக்கு தேவை ஒரு ஆண் குழந்தை!… பட்… இப்போதைக்கு இங்கே தத்துக் கொடுக்கற மாதிரி ஆண் குழந்தை இல்லையே?… நீங்க உங்க அட்ரஸ் கொடுத்துட்டுப் போங்க!… பல ஆஸ்பத்திரிகளிலிருந்து அனாதை குழந்தைகள் இங்கே வரும்!… அப்படி வரும் போது உங்களுக்கு தகவல் தர்றேன்!” நிதானமாய் கூறினார் ஃபாதர்.
“பாதர் எங்களுக்குப் பெண் குழந்தை கிடைத்தால் கூடப் போதும்!… எங்க ஆசை தீர அன்பைக் கொட்டி வளர்ப்போம்!… நாளைக்கு அது பெத்து கொடுக்கிற பேரனுக்குப் போகட்டுமே என் சொத்து” தீர்மானமாய் ராகவன் கூற.
லேசாய்ச் சிரித்த ஃபாதர், “யு ஆர் லக்கி மிஸ்டர் ராகவன்!… ஜஸ்ட் அரை மணி நேரத்துக்கு முன்னாடிதான் எங்க இல்லத்துக்கு ஒரு பெண் குழந்தை வந்தது!… நீங்க வேணா அதைப் பாருங்களேன்”.
ராகவனும் அவர் மனைவியும் ஆவலுடன் சென்று ஃபாதர் காட்டிய தொட்டிலைப் பார்க்க, பிறந்து சில மணி நேரங்களே ஆகியிருந்த அந்தப் பெண் சிசு அமைதியாய் உறங்கிக் கொண்டிருந்தது.
ஏனோ அதைப் பார்த்த ராகவனுக்கு தன் குழந்தையையே பார்ப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது.
“ஃபாதர்… ரொம்ப சந்தோசம் பாதர்!… இந்த குழந்தையை போதும்!… இதுதான் எங்களுக்காகவே அந்த ஆண்டவன் அனுப்பிய குழந்தை!… ப்ளீஸ் இதை எங்களுக்கே கொடுங்க பாதர்” ராகவன் சந்தோஷ மிகுதியில் பேசினான்.
ஃபாதரும் செய்ய வேண்டிய ஃபார்மல்ட்டிஸ்களையும், டாக்குமெண்ட்ஸ்களையும், வேகமாக முடித்து குழந்தையை அவர்களிடம் ஒப்படைத்தார்.
அவர்களுடைய கார் உற்சாகமாய் வெளியேறியது. வரும் வழியில் குழந்தைக்குத் தேவையான துணிமணிகள், சோப்பு, பவுடர், பொம்மைகள் உணவுப் பொருட்கள், இத்யாதி… இத்யாதிகளை வாங்கிக் கார் முழுவதும் அடைத்துக் கொண்டு வீடு திரும்பினர்.
ஆரத்தியுடன் குழந்தையை வீட்டினுள் அழைத்து வந்து, புதிதாய் வாங்கிய தொட்டிலில் தூங்க வைத்து விட்டு தங்கள் அறைக்குச் சென்று ஓய்வெடுக்க சென்றனர் ராகவனும் அவர் மனைவியும்.
“குழந்தையைப் பார்த்தீர்களா?… எத்தனை அழகு… இதைப் போய் யாரோ வேண்டாம்னு அனாதை இல்லத்துக்கு அனுப்பி இருக்காங்களே?.. அவங்க மனசு கல்லாய்த்தான் இருக்கணும்!” ராகவனின் மனைவி அங்கலாய்த்தாள்.
“அப்படிச் சொல்லாதே!… பாவம் அவங்களுக்கு என்ன கஷ்டமோ?”.
“அட… என்னதான் கஷ்டம் இருந்தாலும்… எப்படிங்க மனசு வரும்?”.
அப்போது, திடீரென வீறிட்ட குழந்தையின் அலறலைக் கேட்டு, திடுமென இருவரும் ஓடினார்கள்.
இவர்கள் ஓடிப் போய் பார்த்த போது, அது தன் அழுகையை ‘டக்’கென நிறுத்திக் கொண்டு, எங்கோ பார்த்து… சிரித்தது.
அதன் அர்த்தம் அவர்களுக்குப் புரியவில்லை.
“நான் அனுபவிக்க வேண்டிய இந்தச் சொத்தை… எங்க அப்பாவைத் துரத்தி நான் அனுபவிக்க முடியாமல் செய்தாலும், நான் மறுபடியும் இங்கேயே வந்துட்டேனே பெரியப்பா” என்கிற அர்த்தத்தில் ராஜனின் குழந்தை சிரித்த விஷயம் அவனுடைய அண்ணனுக்கும் அண்ணிக்கும் எப்படி புரியும்?.
எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings