எழுத்தாளர் பிரபாகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
கோகுல் பத்துவயதுச் சிறுவன். ஐந்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தான். ஒருநாள் அவன் தன் வீட்டில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். அப்போது தவளை ஒன்று கனவில் வந்தது. அது அவனது படிக்கின்ற மேஜை மீது அமர்ந்திருந்தது. தனது நீண்ட நாக்கால் ஒரு சிறு பதாகையை அவனை நோக்கி நீட்டியது. அதில் “நிலநீர்வாழ் உயிரினங்களைக் காப்பாற்றுங்கள்!” – என்று எழுதியிருந்தது. அவன் திடுக்கிட்டு எழுந்து கொண்டான். மறுநாள் காலையில் அப்பாவிடம் தனது கனவைச் சொன்னான். வீட்டு ஜன்னல் வழியாக அவன் வெளியே எட்டிப் பார்த்தான். முதல்நாள் இரவில் பெய்த மழையின் குளிர்ச்சி முகத்தில் பட்டு சில்லிட்டது.
“தவளையைப் பற்றி பள்ளியில் பாடம் ஏதும் நடத்தினார்களா?” – அப்பா கேட்டார்.
“இல்லை!”– என்றவன் சற்று யோசித்து “ஒருவாரத்துக்கு முன்னாடி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஸ்கூலுக்கு வந்துருந்தாங்க! சுற்றுச்சூழல்ல ஒவ்வொரு உயிரினங்களின் பங்கும் எவ்வளவு முக்கியமானதுங்குறத விளக்கிச் சொன்னாங்க! அப்ப தவளையப் பத்தியும் பேச்சு வந்தது!”–என்றான் அவன்.
“அவங்க வகுப்பு எடுத்தது உன் மனசுல ஆழமா பதிஞ்சிருக்கலாம்! அது கனவா வெளிப்பட்டிருக்கலாம்!”–என்றார் அப்பா. கோகுல் ஆமோதித்தான்.
மறுநாள் காலையில் கோகுல் தன் வீட்டுக் கொல்லையில் இருந்தான். நேற்றைய இரவும் நல்ல மழை பெய்திருந்தது. மழைநீர் ஆங்காங்கே சிறுகுட்டை போலத் தேங்கியிருந்தது. கொல்லையில் போடப்பட்டிருந்த சிறு ஊஞ்சலில் அமர்ந்து ஆடிக் கொண்டிருந்தான். ஒரு பெரிய தவளை ஒன்று குட்டைநீரில் தனது முட்டைக் கண்களை மட்டும் நீருக்கு வெளியே துருத்தியபடி மிதந்து கொண்டிருந்தது. இவனைப் பார்த்து ‘கொர்…கொர்…!’ – என்றது.
அது இவனிடம் பேச விரும்புவது போலிருந்தது. இவன் தவளையைப் பார்த்து புன்னகைத்தான். அது ஒரே தாவாக ஊஞ்சல் மேல் ஏறி இவன் அருகில் அமர்ந்து கொண்டது.
“நீ மட்டுந்தான் ஊஞ்சல் ஆடுவியா? நான் ஆடக் கூடாதா?”–எகத்தாளமாகக் கேட்டது தவளை.
“ஓ…தாராளமா!”– என்றவன் “இதுக்கு பதில் சொல்லு! ஒரு ரெண்டுநாளைக்கு முன்னாடி நீங்க ஒருத்தரு கூட என் கண்ணில் படல! எப்படி ஒரே ராத்திரில இத்தனை பேரு வந்தீங்க? இத்தனை நாளும் எங்க இருந்தீங்க?”–கோகுல் கேட்டான்.
“நாங்க கோடைகால ஓய்வில் இருந்தோம்!”–என்றது தவளை.
“குளிர்காலத் தூக்கம் கேள்விப்பட்டிருக்கேன்! அதென்ன கோடை ஓய்வு?”–கோகுல் கேட்டான்.
“கோடை வறட்சியில் எங்களுக்குத் தேவையான புழுபூச்சி உணவுலாம் கிடைக்காதில்லையா? அதனால் சிறு கால இடைவெளி இந்த கோடை ஓய்வு! –என்றது. உயிரினங்கள் தங்கள் உணவிற்கும் நீடித்த ஆயுளுக்கும் எப்படியெல்லாம் தங்களைத் தகவமைத்துக் கொள்கின்றன என்று கோகுல் ஆச்சரியப்பட்டான்.
“அப்படீன்னா நீங்க வெளிய வர்றத மழைகாலத்தின் அறிகுறின்னு எடுத்துக்கலாமா?”–கோகுல் கேட்டான்.
“ஆமா! வளத்திற்கும் செழிப்பிற்குமான அடையாளம் நாங்கள்!”– பெருமிதம் பொங்கச் சொன்னது தவளை. கோகுல் தனது அடுத்த கேள்விக்குத் தாவினான்.
“நீங்க ஏன் ராத்திரி பூராம் கரைஞ்சுகிட்டே இருக்கீங்க?”
“மழை ஒரு பாட்டாகப் பெய்கிறது! அதுற்கு ஒரு எசப்பாட்டு வேண்டாமா? அதான் கரையுறோம்! –என்றது தவளை.
“ஆனா நீங்க கரையுறத நுணலும் தன் வாயால் கெடும்னு சொல்றாங்களே?”
“அது மனுஷங்களுக்காகச் சொல்லப்பட்ட பழமொழி! மனுஷங்க தேவையில்லாம பேசிக்கிட்டிருந்தா அது தொந்தரவுல முடியும்! நாங்க கரையுறது தண்ணீரைக் கண்டமகிழ்ச்சியின் வெளிப்பாடு!சரி நான் வர்றேன்!”–என்றது தவளை. அது கோகுலின் பதிலை எதிர்பாராமல் ஒரே தாவாக ஊஞ்சலில் இருந்து குட்டைக்குள் எம்பி குதித்தது.
கோகுல் தொடர்ந்து ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்தான். அவன் மனம் யோசனையில் ஆழ்ந்தது. தவளைகள் பெரும்பாலு;ம் நன்னீரில்தான் வசிக்கின்றன. அவைகள் நீரின் மேற்பரப்பில் அலையும் புழுபூச்சி வண்டினங்களை உணவாகக் கொள்கின்றன. அந்தத் தவளைகளோ பருந்து காகம் ஆந்தை போன்ற பறவைகளுக்கு உணவாகின்றன.
எலிகளின் இனப்பெருக்கத்தை அந்தப் பறவைகளே கட்டுப்படுத்துகின்றன. இதனால் தானியங்களுக்கு உண்டாகும் பெருத்த சேதாரம் கட்டுப்படுத்தப்படுகிறது. உணவுச்சங்கிலியில் மனிதனும் பிற உயிர்களும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டிருக்கும் விதம் கோகுலுக்கு ஆச்சரியத்தை உண்டு செய்தது.
அன்று இரவும் அப்பாவிடம் தவளைகளைப் பற்றி பேச்சுக் கொடுத்தான். “நீர்நிலைகளின் பரப்பளவு வேகமா குறைஞ்சிட்டு வர்றதுனால தவளை இனங்களின் எண்ணிக்கையும் குறைஞ்சிக்கிட்டு வருது! நீர்நிலம் இரண்டிலும் வாழுற மாதிரி தகவமைச்சுகிட்ட தவளை இனங்களோட பங்களிப்பு சுற்றுச்சூழுல்ல ரொம்ப முக்கியமானது! அதுனால் அந்த இனத்தைக் காப்பாத்துறதும் அவசியம்!”–என்றார் அவர்.
அன்றைய இரவும் தவளைகள் கூட்டமாகக் கரையத் துவங்கின. தவளை தன் கனவில் வந்ததன் பொருளை அவன் புரிந்து கொண்டான். அவைகளின் கரைச்சலை கேட்டபடி தூக்கத்தில் ஆழ்வது ஒரு சுகானுபவமாய் இருந்தது.
எழுத்தாளர் பிரபாகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings