எழுத்தாளர் பிரபாகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அந்த தேவதை மிகுந்த மனவருத்தத்தில் இருந்தது. ஒரு கோடி மக்களுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஒரு பெரிய நகரத்தின் காவல் தெய்வம் அது.
தேவதையின் மனவருத்தத்திற்கு காரணம் கடந்த இரண்டாண்டுகளாக அந்த நகரத்தில் ஒரு சொட்டு மழை கூட பெய்யவில்லை என்பதுதான். இத்தனைக்கும் அது ஒரு துறைமுக நகரம். ஒவ்வொரு வருடமும் மழை பருவத்தில் மேகங்கள் அந்த நகரைக்; கடந்து செல்லும். ஆனால் மழை தராது.
பருவம் இல்லாமலும் ஏதேனும் கடல் மாற்றத்தினால் சிறு சிறு மழைகள் அவ்வபோது பெய்யும். அதுவும் இல்லை. ஏன் இப்படி? அந்த தேவதை காரணம் புரியாமல் குழம்பியது.
இத்தனைக்கும் உலகின் சிறந்த புகழ்பெற்ற கல்வி நிலையங்கள்; மருத்துவமனைகள் வணிக வளாகங்கள் நட்சத்திர விடுதிகள் சிறந்த போக்குவரத்து தகவல் தொடர்பு வசதிகள் பெரிய விளையாட்டு அரங்கங்கள் அழகிய பூங்காக்கள் என்று மக்கள் விரும்பும் அனைத்து வசதிகளும் அமையப் பெற்ற நகரம் அது.
மழை இல்லாமல் போனதால் நகரத்தின் நிலத்தடி நீர் மட்டம் மிகவும் குறைந்து போனது. மக்கள் குடிநீர் மற்றும் மற்றைய பயன்பாட்டிற்கான நீருக்காக அடித்துக் கொள்ளும் நிலை உருவானது. இது கூட பரவாயில்லை. வறட்சியின் காரணமாக உணவுக்கான தேவை அதிகரித்ததால் நகரில் குற்றச் செயல்களும் பெருமளவு அதிகரித்தன.
இந்த ஆண்டிற்கான மழை பருவம் வந்தது. நகரத்தின் மீது மேகங்கள் வர ஆரம்பித்தன. இரண்டாண்டுகளாக உருவாகாத புயல் சின்னம் கடலில் இந்த ஆண்டு உருவாகி இருந்தது.
இந்த முறை எப்படியும் நகரத்திற்கு மழை கிடைத்து விடும். தேவதை மகிழ்ச்சி கொண்டது. ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. சுமார் 50 கிலோமீட்டர் சதுரப் பரப்பளவு கொண்ட அந்த நகரத்தின் வான்பரப்பு மீது திரண்டு கொண்டிருந்த மேகங்களைக் காணும் போது ஏதோ அதற்கு வித்தியாசமாகப் பட்டது.
மேகங்கள்; மிகவும் பிரமாண்டமாய் அடர்த்தியாய் ராட்சஸ வடிவில் பகலையே இரவாக்கும் அளவில் கருமையாகத் திரண்டு கொண்டிருந்தன. இது தேவதை இது வரை காணாதது. அது புயல் கண்ணின் நீட்சியாய் கடல்நீரை உறிஞ்சி பெருந்திரளாய் உருவாகியிருந்த மேகத்திடம் ஓடியது.
“என்ன பண்ணப் போறீங்க? – தேவதை கேட்டது.
“மழை பெய்யப் போறோம்!”
“ஆனா இது வழக்கமான ஒன்னாத் தெரியலையே?”
“ஆமா! நாங்க ஒரு பெரு வெடிப்புக்குத் தயாராகிட்டுருக்கோம்!” – என்றது மேகத்திரள்.
“மேக வெடிப்புனா அது வானம் பொத்துக்கிட்டு ஊத்ததுற மாதிரிதான? ஒரே நேரத்துல இருபது முப்பது செண்டிமீட்டர்னு எக்கச்சக்கமான மழையைப் பெஞ்சுருவீங்களே? அதை இந்த நகரம் தாங்குமா? பாறை மாதிரி வந்து விழுகுற பனிக்கட்டிகளால உயிருக்கும் உடமைக்கும் பெரிய சேதம் உண்டாகுமே? உங்களுக்கு இந்த நகர மக்கள் மேல அப்படி என்ன கோபம்?” – தேவதை படபடப்புடன் கேட்டது.
அதற்கு மேகத்திரள் பதில் ஒன்றும் சொல்லவிலலை.தேவதையே தொடர்ந்து “ஏன் இந்த மக்கள் பொறுப்பில்லாம வாகனங்களை ஓட்டி விபத்துகளை ஏற்படுத்துறாங்களா? சக மனுஷங்க மேல அன்பும் கருணையும் இல்லாம இருக்காங்களா? இல்லை அளவுக்கு அதிகமா விளையாட்டு கேளிக்கைள்ல்ல மூழ்கிப் போய் கிடக்குறாங்களா? என்ன தப்பு செஞ்சாங்க?” – என்று கேட்டது.
மேகத்திரள் இப்போது தேவதையை சற்று உற்றுப் பார்த்தது. “ஒரு மூனு வருஷத்துக்கு முன்னாடி இங்க ஒரு விளையாட்டுப் போட்டி நடந்தது ஞாபகம் இருக்கா?” – என்று கேட்டது.
”இருக்கு! அது சர்வதேச அளவில் நடந்த ஒரு பிரபலமான விளையாட்டின் இறுதிப் போட்டி! அறுபதாயிரம் மக்கள் நேரடியாவும் பல இலட்சம் மக்கள் தொலைக்காட்சி மூலமாகவும் கண்டு ரசிச்ச போட்டி!” – என்றது தேவதை.
“போட்டி நடந்த அன்னைக்கு மழை பெய்ய நூறு சதவிகிதம் வாய்ப்பு இருந்துச்சு! போட்டிக்கு எந்த விதத்திலும் மழையால இடைஞ்சல்; வந்துரக் கூடாது! அதுக்காக போட்டிக்கு முந்துன ரெண்டுநாள் மேக அறுவடைசெஞ்சு செயற்கையா மழை வரவழைச்சீங்க! ஞாபகம் இருக்கா? இதுனால் போட்டி அன்னைக்கு வானம் வறண்டு இருந்துச்சு! போட்டி தடைபடல!!” – என்றது மேகத்திரள்.
“அதுனால இப்ப என்ன? அதுக்கும் இப்ப இந்த வெடிப்புக்கும் என்ன சம்பந்தம்? – தேவதை கேட்டது.
“ஒவ்வொரு மழை பருவத்திலும் மேகங்கள் நகர்றதுல ஒரு பாங்கு இருக்கும்! அதை நீங்க தொந்தரவு பண்ணிட்டீங்க! அதுனாலதான் நகரத்து மேல மேகம் கூடல! ரெண்டு வருஷமா மழை இல்லாம வானம் வறண்டு போனதுக்கு இதுதான் காரணம்!” – என்றது மேகத்திரள்.
அதுவே தொடர்ந்து “இது பழைய நிலைக்குத் திரும்பனும்னா ஒரு பெருவெடிப்புக்குப் பின்புதான் அது சாத்தியம்!” – என்றது. மேகத்திரள்.
“இது ஏதோ தண்டனை மாதிரில இருக்கு?” – இது தேவதை.
“கிட்டத்தட்ட அப்படித்தான்! காட்டுத்தீ மாதிரி ஒரு பெரிய தீ விபத்து! அப்ப அதைக் கட்டுப்படுத்த மக்களை உடமைகளைக் காப்பாத்த செயற்கை மழை பெய்ய வைச்சிருந்தாக் கூட அதுல ஒரு நியாயம் இருக்கு! ஆனா தற்காலிக மகிழ்ச்சிக்காக நடத்துற ஒரு விளையாட்டு போட்;டிக்காக இயற்கைய தொந்தரவு செய்வீங்களா? இது தப்புனு தோணலியா? இதுல இயற்கையை ஜெயிச்சுட்டோம்னு பெருமிதம் வேற!” – என்றது மேகத்திரள். இதற்கு பதில் சொல்ல முடியாமல் தேவதை தடுமாறியது.
“மேகப்பெரு வெடிப்புதான் ஒரே வழினா அதோட தீவிரத்தையாவது கொஞ்சம் கம்மி பண்ணக் கூடாதா? பாவம் மக்கள்!”- என்றது தேவதை.
“முடிஞ்சவரைக்கும் முயற்;சி செய்யுறேன்! கடல்ல உறிஞ்சுன நீரை முடிஞ்ச வரை திரும்பவும் கடல்லயே பெய்ய பாக்குறேன்! ஆனா இங்க கண்டிப்பா ஒரு வெடிப்பு உண்டு! – என்றது மேகத்திரள்.
“எப்ப அந்த வெடிப்பை நிகழ்த்துவீங்க?” –கேட்டது தேவதை.
“அதிகபட்சம் ஒரு மணி நேரம்தான் இங்க நாங்க வெடிக்காம தாக்குப் பிடிக்க முடியும்! அதுக்குள்ள எவ்வளவு முடியுமோ அவ்வளவு பாதுகாப்பு பண்ணிக்கோங்க!” – என்றது மேகத்திரள்.
அந்த நகரத்தின் தலைவர் தன் வீட்டில் இருந்தார். அப்போது அவரின் வளர்ப்பு நாய்கள் குரைக்கும் சப்தம் கேட்டது. மாடியறை பால்கனி வழியாக எட்டிப் பார்த்தார். அவரது வளர்ப்பு நாய்கள் மூன்றும் வானத்தை அண்ணாந்து பார்த்து இடைவிடாமல் குரைத்துக் கொண்டிருந்தன.
தேவதைதான் தன்னை அழகற்ற மற்றொரு அருவுருவமாக மாற்றிக் கொண்டு நாய்களை மிரள வைத்தது. எத்தனை சமாதானப்படுத்தியும் அவைகள் குரைப்பதை நிறுத்தவில்லை. வேலைக்காரர்கள் வீட்டிற்குள் அழைத்துச் சென்ற பின்புதான் அவைகளின் குரைப்பு அடங்கியது.
தலைவர் வானத்தைப் பார்த்தார் அவருக்கு ஏதோ தவறாகப் பட்டது. அவர் உடனடியாக வானிலை கண்காணிப்பு தலமை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டார்.
“நிலமை எப்படி இருக்கு!” – என்று வினவினார்.
“இன்னும் கொஞ்ச நேரத்துல புயல் தொடங்கப் போகுது!” – என்றார் அந்த உயர் அலுவலர்.
“வேற எதும் எதாவது வித்தியாசமா தென்படுதா?” – கேட்டார் தலைவர்.
“ஒரு நிமிஷம்!” என்றவர் சக அலுவலர்களிடம் உரையாடும் சப்தம் கேட்டது. டெலிபிராம்படர்கள் போன்று ஏதேதோ கருவிகள் இயங்கும் சப்தம் கேட்டது.
“பெரிய அளவிலான மேக வெடிப்புக்கான வாய்ப்பு இருக்கு! – என்றார் அந்த அலுவலர்.
“நாம எச்சரிக்கை கொடுத்துருக்கோமா?” – கேட்டார் தலைவர்.
“அதூன் சிவப்பு எச்சரிக்கை கொடுத்துருக்கோமே!” – இது அலுவலர்.
“அது புயலுக்கும் மழைக்கும்தான! மேகவெடிப்பைப் பற்றி நாம ஏதாவது சொல்லிருக்கோமா?” – என்றார் தலைவர்.
“கனமழை எச்சரிக்கை கொடுத்துட்டாலே அது எல்லாத்துக்குமான அறிவிப்புதான்?” -என்ற அலுவலரை இடைமறித்து “இல்லை! நான் இப்பவே வர்றேன்!” – என்றபடி; தனது வீட்டருகே இருந்த அந்த வானிலை அலுவலகத்தை உடனடியாகச் சென்று அடைந்தார்.
மேகப்பெரு வெடிப்பிற்கான வாய்ப்பு இருப்பதால் பனிப் பாறைகள் போன்று மழை பெய்யக் கூடும். பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். சாலையில் நடமாடிக் கொண்டிருப்பவர்கள் உடனடியாக நல்ல உறுதியான கட்டிடங்களின் கீழ் சென்று தஞ்சம் அடைய வேண்டும.;
இப்படி ஒரு சிறப்பு வானிலை எச்சரிக்கை அனைத்து ஊடகங்கள் வாயிலாகவும் தரப்பட்டது. இந்த அறிவிப்பின் போது நகரத் தலைவரும் உடன் இருந்ததால் செய்தியின் வீரியத்தை மக்கள் உள்வாங்கிக் கொண்டார்கள். தங்களால் முடிந்த அளவு அவர்கள் தங்களைத் தற்காத்துக் கொண்டார்கள். அந்த அறிவிப்பு வெளியான அடுத்த இருபது நிமிடங்களில் வானில் பெருவெடிப்பு ஒன்று நிகழ்ந்தது.
அதனைத் தொடர்ந்து சிறுசிறு வெடிப்புகளுடன் மேகங்கள் பொத்துக் கொண்டு ஊற்றின. சிறிதும் பெரிதுமான பனி கற்கள் வில்லின் கணைகள் போன்று அடுத்தடுத்துத் தரையில் வந்து மோதின. சுமார் நாற்;பது நிமிடம் பேரிரைச்சலுடன் மழை தாண்டவம் ஆடி விட்டுதான் ஓய்ந்தது.
உரிய நேரத்தில் எச்சரிக்கை செய்யப்பட்டதால் பெரிய அளவிலான உயிர்சேதமோ உடமைகளுக்கான சேதமோ இன்றி அந்த நகரம் காப்பாற்றப்பட்டது. தேவதை தனது மக்களைக் காப்பாற்றி விட்ட சந்தோஷத்தில் பெருமூச்சு விட்டது. அது தனது வீரியத்தை பல மடங்கு குறைத்துக் கொண்டு கடலில் பெய்த மேகத்திற்கு நன்றி சொன்னது.
எழுத்தாளர் பிரபாகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!


GIPHY App Key not set. Please check settings