in , ,

முயல் வீடு (சிறுவர் கதை) – பிரபாகரன்.M

எழுத்தாளர் பிரபாகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

அது ஒரு அடர்ந்த காடு. அந்தக் காட்டில் முயல் குடும்பம் ஒன்று புதர் வீட்டில் வசித்து வந்தது. அந்தக் குடும்பத்தில் அப்பா முயல் அம்மா முயல் மற்றும் மூன்று  ஆண் குழந்தை முயல்கள் இருந்தன.

சூரியஒளி  புக முடியாத அந்தக் காட்டின் தரை எப்போதும் ஈரம் ஊறியே இருக்கும். அந்த முயல் குடும்பத்திற்கு உலர்ந்த பழங்கள் கிழங்கு வகைகள் கிடைப்பதில் சிரமம் இருந்தது. இதனால் அந்த முயல் குடும்பம் புதர் வீட்டை விட்டு ஆற்றங்கரையை ஒட்டிய சமவெளிப் பகுதிக்கு ஒரு மரவீடு கட்டி குடி போக விரும்பியது.

சிங்கராஜாவிடம் அனுமதி பெற்று அவைகள் ஆற்றங்கரை பிரதேசத்தில் ஒரு இடத்தைத் தேர்வு செய்து விட்டன. வீடு கட்டுவதற்குத் தேவையான மரச்சாமான்களையும் அவைகள் தருவித்து விட்டன.

“தை மாசம் பிறக்கப் போகுது! வீட்டு வேலைய ஆரம்பிச்சிர வேண்டியதுதான்!” – என்றது அப்பா முயல்.

“உத்திராயண காலம்! சூரியன் தெற்க இருந்து வடக்க நகர்ற நல்ல பொழுது! இப்ப வாஸ்து பண்ணி வேலைய ஆரம்பிச்சா வைகாசில குடி போயிரலாம்!” – என்றது அம்மா முயல்.

“நாம புது வீட்டுக்கு போன பின்னாடி ஆத்தங்கரைல நான் தூண்டில் வைச்சு மீன் பிடிப்பேன்!” – என்றது மூத்த ஆண் முயல்.

“நான் நம்ம வீட்டு முற்றத்துல படுத்துகிட்டு வானத்துல இருக்குற நட்சத்திரங்களை எண்ணுவேன்!” – என்றது நடு முயல்.

“நான் என் நண்பர்களோட சமவெளிப் பிரதேசத்துல ஓடிப் பிடிச்சு விளையாடுவேன்!” – என்றது இளைய முயல்.

“நாம முதல்ல வீட்டு வேலையை முடிப்போம்! நானும் அம்மாவும் போயி கங்காணியைப் பாத்துட்டு வந்துர்றோம்! நீங்க வெளில எங்கயும் போகாம வீட்டுல பத்திரமா இருங்க!” – என்றபடி பெரிய முயல்கள் கிளம்பிப் போயின.

அந்தக் காட்டின் வயதில் மூத்த மந்திதான் கங்காணி. சிங்கராஜாவின் மதியூக மந்திரி. காட்டில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் கண்காணிப்பது ராஜாவிற்கு ஆலோசனை வழங்குவது அனைத்தும் அந்த மந்தியின் வேலைதான். ஆற்றங்கரைப் பக்கம் தான் கங்காணி ஒரு குடில் அமைத்துத் தங்கியிருந்தது.

“ரொம்ப சந்தோஷம்! சீக்கிரமா வேலைய ஆரம்பிங்க! மரம்லாம் வந்திறங்கிருச்சா”” – என்ற கங்காணி எப்படி அழகான பாதுகாப்பான வீடு கட்டுவது என்பது குறித்து சில யோசனைகளைச் சொல்லிக் கொண்டிருந்தது. அப்போதுதான் அது நிகழ்ந்தது.

மேற்குப் பக்கமிருந்து சில நூறு பட்டாம்பூச்சிகள் இந்த ஆற்றங்கரைப் பிரதேசம் நோக்கி வந்தன. மஞ்சள் நிற பட்டாம்பூச்சிகள். அவைகள் செடி கொடி மரம் என்று கிடைத்த இடங்களில் அமர்ந்தன. அதனைத் தொடர்ந்து அடுத்து அடுத்து என பல நூறு பட்டாம்பூச்சிகள் அலை அலையாய் வரத் துவங்கின.

“பட்டாம்பூச்சிக வலசை வருதுங்க! இது நம்ம காட்டுல ரொம்ப அரிதா நடக்குற விஷயம்! இப்ப மேற்கு மலைல கடுங்குளிரா இருக்கும்! அதான் இதமான சீதோஷ்ணநிலை இருக்குற நம்ம காட்டை நோக்கி வருதுங்க! பட்டாம்பூச்சிங்க வலசை வர்ற விஷயம் சிங்கராஜாவுக்குத் தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப் படுவாரு! ஏன்னா இதுங்க நம்ம விருந்தினர்!_ – என்றது கங்காணி.

முயல்கள் இரண்டும் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தன. சில நிமிடங்களில் பல்லாயிரக் கணக்கான பட்டாம் பூச்சிகள் அங்கு வந்தடைந்தன. மரம் செடிகொடிகளின் பச்சை வண்ணமே தெரியாத அளவிற்கு  அந்த இடமே மஞ்சள் மயமாக மாறியது.

முயல்கள் இரண்டும் கிளம்ப யத்தனித்தன. “ஒரு நிமிஷம்! பட்டாம்பூச்சிக  வலசை காலம் முழுக்க இங்க இருக்குறவங்க யாரும் அதுகளுக்கு இடைஞ்சலா இருக்கும்னு எந்த பெரிய வேலையையும் எடுத்துச் செய்ய மாட்டாங்க! நீங்க ஒரு நல்லநாள் பார்த்து தச்சு மட்டும் பண்ணிக்கோங்க! வேலையை மெதுவாக ஆரம்பிச்சுக்கலாம்! – என்றது மந்தி. மந்தியிடம் இருந்து இந்த வார்த்தைகளை முயல்கள்  எதிர்பார்க்கவில்லை.

“எவ்வளவு நாள் பட்டாம் பூச்சிக இங்க தங்கியிருக்கும்?” – அம்மா முயல் கேட்டது.

“அதுகளோட இனப்பெருக்க காலம் முடிஞ்சவுடனே இங்க இருந்து கிளம்பிப் போயிரும்ங்க! சுமாரா ஒரு எட்டு வாரம் ஆகும் !” – என்ற மந்தி முயல்களின் பதிலை எதிர்பாராமல் குடிலுக்குள் சென்று விட்டது.

காதுகள் ரெண்டும் தொங்கியபடி மிகவும் தளர்வாக வந்து சேர்ந்தன பெரிய முயல்கள். “என்னப்பா ஆச்சு? ஏன் சோர்வா வர்றீங்க” கேட்டது மூத்த முயல். அப்பா முயல் நடந்ததைச் சொன்னது.

“பட்டாம்பூச்சிகளுக்காக நாம நம்ம வேலைய தள்ளி வைக்கனுமா! இது விசித்திரமால இருக்கு! நாம பாட்டுக்கு நம்ம வேலைய ஆரம்பிக்க வேண்டியதுதான?” – கேட்டது அது.

“ஒரு மரச்சட்டத்தை லேசா நகர்த்துனாலே அதுல இருந்து பத்து பதிiஞை;சு பட்டாம் பூச்சிக பறக்குது! அதுல பாதி நசுங்கியும் போயிருது! வீடு கட்டி முடிக்குறதுக்குள்ள பல நூறு பட்டாம்பூச்சிகளை நாமளே கொல்ற மாதிரி இருக்கும்! இது நல்லாவா இருக்கு? – என்றது அப்பா முயல்.

“பட்டாம்பூச்சிகள் சிறிய உயிரினம்தான? நாம எதுக்காக அதுகளைப் பத்தி கவலைப்படனும்?” – கேட்டது அந்த மூத்த முயல்.

“ரெண்டு மாசம் வேலை தள்ளிப் போறது நமக்கு எல்லா விதத்திலும் கஷ்டம்தான்! இருந்தாலும் பொறுமையாத்தான் இருக்கனும்!” என்றபடி அமைதியாயின பெரிய முயல்கள்.

பிற்பகல் வேளை. முயல் குடும்பம் ஒரு குட்டித் தூக்கத்தில் இருந்தது. அப்போது நிலம் அதிரும் சப்தம். பூகம்பம் வந்து விட்டதா? அப்பா முயல் வெளியே எட்டிப் பார்த்தது. அதற்கு முதுகுத்தண்டு சில்லிட்டு விட்டது.

சற்று எட்டத்தில் மூர்க்கன் யானை வந்து கொண்டிருந்தது. மூர்க்கன் யானையின் வழக்கமான வழித்தடம் இது கிடையாது. பிறகு ஏன் இந்தப் பக்கம் வருகிறது?

மூர்க்கனிடம் ஒரு குணம் உண்டு. அது எப்போதும் தனியாக வரும். அது போகும் பாதையில் உள்ள பெரிய மரங்களின் கிளைகளை ஒடித்துப் போட்டு விட்டுப் போகும். முயலின் புதர் வீட்டைச் சுற்றியும் பெரிய மரங்கள் இருந்தன. மூர்க்கன் அதன் கிளைகளை ஒடித்துப் போட்டால் புதர் வீடு என்னவாவது? ஏன்?

மூர்க்கன் புதர் வீட்டின் மீதே நடந்து செல்லவும்; கூடும். என்ன செய்வெதென்று புரியாமல் முயல் தவித்தது. மூர்க்கன் வெகு அருகே வந்து விட்டது. அது ஒரு பெரிய பலா மரத்தினை அப்படியே தூறோடு சாய்க்கப் பார்த்தது.

அப்போது அதன் கண்ணில் முயலும் அதன் புதர் வீடும் பட்டது. அது சட்டென்று புதரை விட்டு விலகி நடந்தது. நூறு அடி தூரத்திற்கு மேல் சென்று வேறு ஒரு மரத்தின் கிளையை ஒடித்து விட்டுப் போனது.

புதர் வீட்டிற்கு மூர்க்கன் சேதம் எதையும் உண்டு செய்யவில்லை. முயல் குடும்பம் பெருமூச்சு விட்டது. அப்பா முயல் சிறிய முயல்களிடம் “ஒரு யானைக்கு முயல் சிறிய உயிரினம்தான்! நம்மளைப் பொருட்படுத்தனும்ங்குற அவசியம் அதுக்கு இல்லை! இருந்தாலும் யானை பரிவுடன் நடந்துக்குச்சு! இதே பரிவு நம்மளை விட சிறிய உயிரினமான பட்டாம்பூச்சி மேல நமக்கு வேண்டாமா?” – என்றது.

“வலியவர்கள் எளியவர்களிடம் எப்பவும் கருணையோட அன்போட நடந்துக்கனும்!” என்றது அம்மா முயல்.

“நாம காத்திருப்போம்! பட்டாம் பூச்சிக வலசை காலம் முடிஞ்சே வீட்டு வேலைய ஆரம்பிப்போம்!” – என்றன சிறிய முயல்கள் முன்றும்.

எழுத்தாளர் பிரபாகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தொந்தரவு (சிறுகதை) – மணிராம் கார்த்திக்

    ஏமாறாதே ஏமாற்றாதே (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை