எழுத்தாளர் பிரபாகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அது ஒரு முல்லைப் பிரதேசம்: அதில் சிறு செடிகள் குத்துச்செடிகள் கொடி வகைகள் என ஏராளம் தாவரங்கள் அடர்ந்திருந்தன. அவைகள் வண்ண வண்ண மலர்களுடன் விதவிதமாய் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தன.
அந்தப் பகுதியில் கருவண்டு ஒன்று வசித்து வந்தது. அளவில் பெரியதான அந்த வண்டு சற்று அகங்காரம் கொண்டதாக இருந்தது. அது தேன் உண்ண பூக்களை நாடிச் செல்லும் போதெல்லாம் பூக்கள் மிகுந்த கவலை கொள்ளும். அந்த வண்டு மற்ற வண்டுகளைப் போல அல்லாமல் பூக்களின் மீது அமர்ந்துதான் தேனை உண்ணும்.
அதன் எடை தாளாமல் பூக்களின் மென்மையான இதழ்கள் உதிர்ந்து விடும். அது மட்டுமல்லாது அந்த வண்டு பூவின் இதழ்களை தேவையில்லாமல் கறும்பித் துப்பி விடும். இதனால் அது தேன் பருகிய பூக்கள் விரைவில் வாடி உதிர்ந்து விடும்.
ஒரு சில பூக்கள் அந்த வண்டிடம் “மத்த வண்டுகள் மாதிரி பூக்கள் மீது உட்காராம சிறகுகளை அசைச்சு காத்துல மிதந்த படி நீ தேன் உண்ணலாமே? எதுக்காக இப்படிச் செய்யுற?” – என்று கேட்கும்.
அதற்கு அந்த வண்டு “உங்களோட மகரந்தச் சேர்க்கைக்கே நான்தான் உதவி செய்யுறேன்!” – என்று அலட்சியமாகப் பதில் சொல்லிவிட்டுப் போய் விடும்.
அளவில் பெரிய ஒரு செம்பழுப்பு வண்டு அந்தப் பகுதியில் வசித்து வந்தது. வண்டுகளின் தலைவனாக அது இருந்தது. பூக்கள் அனைத்தும் ஒருநாள் அந்த செம்பழுப்பு வண்டிடம் கருவண்டின் செய்கை குறித்து முறையிட்டன.
“நான் பார்த்துக் கொள்கிறேன்!” – என்றது அந்தத் தலைவன் வண்டு.
அது ஒருநாள் கருவண்டினை அழைத்தது. அதனிடம “நீ; ஏன் தேவையில்லாம பூக்களைச் சிதைக்குற?;” – என்று கேட்டது.
அதற்கு அந்த கருவண்டு “நம்மைப் போன்று வண்டினங்கள்தானே அதுகளோட மகரந்தச் சேர்க்கைக்கு உதவி செய்யுறோம்!” – என்றது.
“அதுக்காக பூக்களின் இதழ்களைச் சேதப்படுத்துறது எந்த விதத்தில் சரி?” – என்று கேட்டது.
அதற்கு அந்தக் கருவண்டு பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்தது. செம்பழுப்பு வண்டே தொடர்ந்து “நீ மட்டும் பூவைத் தேடிப் போகல! மற்ற வண்டுகள் பூச்சிகளும் போகுது! நீ பூவை சிதைச்சுட்டு வந்துட்டா அதோட தேனும் மத்தவங்களுக்குக் கிடைக்காது! மகரந்தங்களும் வீணாப் போயிரும்! பூக்களோட இதழ்கள் மேல உட்கார்ந்தும் உட்காராத மாதிரி அதுகளுக்கு நோவாதபடி தேன் எடுப்பதுதான் ஒரு வண்டுக்கு அழகு! இது இயற்கையின் நியதியும் கூட! இதை நீ மீறக் கூடாது!” – என்றது செம்பழுப்பு வண்டு.
கருவண்டு தலைவன் வண்டின் பேச்சைக் கேட்கவில்லை. அது தொடர்ந்து முரட்டுத்தனமாகவே இருந்தது. தனக்கு எல்லாம் தெரியும் என்ற மமதையில் இருந்தது. அதை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பது தெரியாமல் பூக்கள் பரிதவித்தன.
ஒருநாள் காலைப் பொழுது. கருவண்டு அந்த பகுதியில் மிகுந்த ஆரவாரமாக சப்தமிட்டபடி சுற்றி அலைந்தது. அப்போது அது எதிர்பாராத விதமாக ஒரு பாறை இடுக்கில் இருந்த சிலந்தி வலையில் மாட்டிக் கொண்டது. தன் உடல் வலிமையால் வலையை அறுத்துக் கொண்டு தன்னால் வெளி வந்து விட முடியும் என்று முதலில் சாரதாரணமாக எண்ணியது வண்டு.
ஆனால் அந்த வலை ஒரு பெரிய சிலந்தியால் பின்னப்பட்ட வலுவான வலை. சிறகுகளை அசைத்து கடுமையாகப் போராடியும் அதனால் தன்னை விடுவித்துக் கொள்ள முடியலிலை. அதனை பதற்றம் தொற்றிக் கொண்டது.
காலையிலிருந்து மாலை வரை பலமுறை போராடி வண்டு ஓய்ந்து போனது. இனியும் போராடினால் தனது சிறகுகள் பிய்ந்து துண்டாகி விடும் என்பதை உணர்ந்து கொண்டது.
“பூக்களின் இதழ்களை நான் சிதைச்சப்பம் இப்ப எனக்கு வலிக்குறது மாதிரிதான பூக்களுக்கும் வலிச்சிருக்கும்! நான் எவ்வளவு பெரிய பாவத்தைச் செஞ்சுருக்கேன்? தன்னோட வலைல அகப்பட்டுகிட்ட இரையை ஒரு சிலந்தி கபளீகரம் செய்யுறது இயற்கையின் நியதிதானே? நான் இயற்கை நியதியை மீறுனதுனால அதே இயற்கை நியதியால் எனக்குத் தண்டனை போல! நாளைக் காலை கண்டிப்பா நான் உயிரோட இருக்கப் போறதில்லை!” – இப்படி பலவாறு எண்ணியபடி கருவண்டு மூர்ச்சையாகிப் போனது
மாலையில் அந்தப் பிரதேசத்தில் மழை பெய்தது. எவ்வளவு நேரம் பெய்தது என்பது தெரியாது. நன்கு இருட்டிய பொழுதில் அந்தப் பாறை மீதிருந்த சிறு கற்கள் உருண்டு விழுந்தன.
அதில் ஒரு கல் சிலந்தி வலை மீது விழுந்ததில் வலை அறுந்து தொங்கியது. நல்லவேளை வண்டின் மீது கல் படவில்லை. விழித்துக் கொண்ட வண்டு தன்னை வி;டுவித்துக் கொண்டு இருப்பிடத்திற்கு பறந்தோடியது.
மறுநாள் வழக்கம் போல அந்த வண்டு அந்தப் பிரதேசத்தில் ரீங்காரமிட்டபடி சுற்றி வந்தது. ஆனால் அந்த ரீங்காரம் ஆரவாரமாக இல்லாமல் இனிமையாக இருந்தது. அது ஒரு ஆச்சர்யம். அதை விட மற்றொரு ஆச்சர்யம்: அது பூக்களின் மீது மற்ற வண்டுகள் போன்று பட்டும் படாமலும் அமர்ந்தது.
அவைகளுக்கு நோவு ஏதும் தராமல் தேனை உண்டது. நடந்தது எதையும் அறியாது பூக்கள் ஒரே இரவில் வண்டு மனம் மாறியது கண்டு அதிசயத்து நின்றன. செம்பழுப்பு வண்;டின் அறிவுரையை அது ஏற்று நடப்பதாக அவைகள் எண்ணிக் கொண்டன.
எழுத்தாளர் பிரபாகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!




GIPHY App Key not set. Please check settings