எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அப்பார்ட்மெண்ட் கேட்டிற்குள் என்னுடைய பைக் நுழையும் போது மணி இரவு பனிரெண்டரை.
“ஏண்டா… இந்த ஐ.டி. துறைக்கு வந்தோம்? காலையிலிருந்து இரவு வரை மானிட்டர் திரையின் மீது கண்களைப் பதித்துக் கொண்டு, மூளையை மொத்தமாய் அதற்குள் அடைகாத்து வைத்துக் கொண்டு….ச்சை!”
லிப்டில் நுழைந்து, மூன்றாவது தளத்திலிருந்த எங்கள் ஃபிளாட்டைத் தொட்டு அழைப்பு மணியை அழுத்தினேன்.
இரண்டாவது நிமிடத்தில் திறந்த கதவின் பின்புறம், செல்வி நைட்டியுடன் நின்றிருந்தாள்.
டீப்பாயின் மீது என்னுடைய லாப்-டாப்பை வைத்து விட்டு, சோம்பல் முறித்த போதுதான் கவனித்தேன். உள் அறையில் ஒரு வயதான மனிதர், அந்தப் பக்கமாய்த் திரும்பிப் படுத்திருந்தார்.
செல்வியைப் பார்த்து, “யாரூ?” என்று கேட்டேன்.
“உங்க சித்தப்பாங்க… கோயமுத்தூர்!…லோகு சித்தப்பா!”
“ஓ… எப்ப வந்தார்?… எதுக்கு வந்தார்?”
“மதியம்…. மூணு மணியிருக்கும்!…கூட யாரோ ஒரு சின்னப் பொண்ணையும் கூட்டிட்டு வந்திருக்கார்!…யாரோ…..பக்கத்து வீட்டுப் பொண்ணாம்!… அதுக்கு இங்க… பெங்களூர்ல ஐ.டி.கம்பெனில போஸ்டிங் வந்திருக்காம்!… அந்தப் பொண்ணோட அப்பா படிக்காதவராம்… வெளியுலக அனுபவமெல்லாம் இல்லாதவராம்… அதான் உங்க சித்தப்பா கூட்டிட்டு வந்திருக்காராம்!”
என்னுடைய அப்பாவுக்கும் சரி, சித்தப்பாவுக்கும் சரி… பிறருக்கு உதவுவதிலும், பொது சேவைகளிலும் ஈடுபடுவது அல்வா சாப்பிடுவது போல.
“இப்பவே எழுப்பிப் பேசவா?” நான் இழுக்க,
“வேண்டாம்… அவங்க பஸ்ல வந்திருப்பாங்க போலிருக்கு… அதான் அந்த அசதில சீக்கிரமே தூங்கப் போயிட்டாங்க!… காலைல பேசிக்கலாம்!”
“ஓ.கே!” பாத்ரூம் நோக்கி நடந்தேன்.
****.
காலை ஏழு மணிக்கு நிதானமாய் எழுந்து அறையை விட்டு வெளியே வந்தேன். லோகு சித்தப்பா அந்த நேரத்திலேயே குளித்து முடித்து, பளீரென்ற வெள்ளை வேஷ்டி சட்டையுடன், நெற்றியில் திருநீர்ப்பட்டை ஜொலிக்க, அமர்ந்திருந்தார்.
“வாடா… திவா!… எப்படி இருக்கே?… ஊர்ப் பக்கமெல்லாம் வர்றதே இல்லை போலிருக்கு!” உரக்கக் கேட்டார்.
“எங்க சித்தப்பா… ஆபீஸ்ல வேலை அதிகம்!… பார்த்தீங்கல்ல நேத்திக்குக் கூட ராத்திரி பனிரெண்டரைக்கு மேலதான் வரவே முடிஞ்சுது!”
“அப்புறம் திவா… ஊர்ல பக்கத்து வீட்டுல சத்தியவேந்தன்னு ஒருத்தர்… பாவம் வெள்ளைச்சோளம்!… அவரு பொண்ணுக்கு இங்க போஸ்டிங் வந்திருக்கு…” என்ற சித்தப்பா, உள் அறைப்பக்கம் திரும்பி, “ஆகாஷினி!… வாம்மா… வந்து அங்கிள்கிட்டப் பேசும்மா!” என்று சொல்ல, வெளியே வந்தாள் அந்தப் பெண்.
ஒல்லியான உடல்வாகில் நின்ற அந்தப் பெண்ணைப் பார்க்கப் பரிதாபமாயிருந்தது. ஐ.டி. அரக்கன் வாயில் சிக்கப் போகும் இன்னொரு பலியாடு. “எந்தக் கம்பெனிம்மா” கேட்டேன்.
“விட்கோ ஸாப்ட்வேர்ஸ்” அங்கிள்!”
“ஓ…மடிவாலா போற வழில இருக்கு!… ஆமாம் எப்ப ஜாய்ன் பண்ணப் போறே?”
“நாளைக்கு அங்கிள்!”
“சரி… எப்படி?… யாரோட?…. போகப் போறே?… அது ரொம்பக் குழப்பமான ரூட்டாச்சே?”.
“அதொண்ணும் பிரச்சனை இல்லை நானே கூட்டிட்டுப் போயிட்டு வந்துடுவேன்…”
செல்வி தந்த காபியை வாங்கியவன், “சித்தப்பாவுக்கு?” கேட்டேன்.
“அதெல்லாம் அஞ்சு மணிக்கே எந்திரிச்சு வாக்கிங் போயிட்டு வந்து குளிச்சிட்டு… ஃபில்டர் காபி சாப்பிட்டாச்சு!” என்றவர், திடீரென்று “சரி… திவா…. அம்மா இப்ப எங்க இருக்கா?.. சென்னையிலா?” அவர் கேட்டு விட,
நான் ஒரு கணம் திணறிப் போனேன். உடனே சுதாரித்துக் கொண்டு, “ஆமாம்!…ஆமாம்!” என்றேன்.
“ஓ.. சவிதா கூட இருக்காளா?” கேட்டார் சித்தப்பா.
சவிதா என் மகள். சென்னையில் ஐ.டி.கம்பெனியில் சித்ரவதைபட்டுக் கொண்டிருக்கும் ஜீவன்.
“ஓ.கே!…சித்தப்பா எனக்கு ஆபீஸுக்கு நேரமாச்சு!… நீங்க பத்திரமா போயிட்டு வாங்க!… ஈவினிங் பேசலாம்!… செல்வி கிட்ட என்னோட மொபைல் நெம்பரையும் வாங்கிக்கங்க… ஏதாவது அவசரம்ன்னா கூப்பிடுங்க!” கூறிவிட்டு நகர்ந்தேன்.
இரவு எட்டு மணி. சித்தப்பாவுடன் பால்கனியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தேன். ஏதேதோ பழைய விஷயங்களை சித்தப்பா சிலாகித்துப் பேசிக் கொண்டிருந்த போது, பேச்சின் இடையில் “பொரி உருண்டை”என்கிற வார்த்தை வந்து போக,
“சித்தப்பா… எனக்கு “பொரி உருண்டை”ன்னாலே அந்த பவானி ஆத்தா ஞாபகம்தான் வரும் சித்தப்பா!” என்றேன்.
“ஓ… அங்கம்மா பாட்டியை சொல்றியா?… வெள்ளைச் சீலைக்கார கெழவிதானே?” திருப்பிக் கேட்டார்.
“ஆமாம் அதே ஆத்தாதான்!….”.
“அது பொறந்து வளர்ந்த ஊரு பேருதான் பவானி!… அதனாலேயே அதோட பேரு “பவானி ஆத்தா”ன்னு ஆயிடுச்சு!…” என்றவர், “அது செரி… “பொரி உருண்டை”ன்னா உனக்கு ஏன் அந்த ஆத்தா ஞாபகம் வருது?” சிரித்தபடியே கேட்டார்.
“நான் சின்ன வயசா இருக்கும் போது… சாயந்திர நேரத்துல தீனி எதுவும் கிடைக்காம… அலைவேன்… அந்தச் சமயத்துல இந்த ஆத்தா பொரில வெல்லத்தைக் காய்ச்சி ஊத்தி, கூட வேற என்னென்னமோ போட்டு… பொரி உருண்டை தயாரிச்சுக் குடுப்பாங்க பாருங்க!… ப்பா… இப்ப நெனச்சாலும் வாயில ஜொள்ளு ஊறுது சித்தப்பா… என்னா டேஸ்ட்!”
“அடேய்… அந்தப் பாட்டி பவானில பொரி யாவாரம்… பொரி உருண்டை யாவாரம்தான் பண்ணிட்டிருந்திச்சாம்!… பொரி உருண்டை தயாரிக்கறதுல எக்ஸ்பர்ட்!” சித்தப்பா விளக்கினார்.
“அப்புறம் சித்தப்பா… அந்தப் பாட்டி எங்களுக்கு என்ன உறவு?… அப்பா சொந்தமா?.. இல்லை….அம்மா சொந்தமா?”
“இரண்டு பேருக்குமே இல்லை! என்றார் அவர்.
“என்ன சொல்றீங்க சித்தப்பா?… எனக்குத் தெரிஞ்சு அவங்க எங்க வீட்டுலதானே பத்துப் பதினஞ்சு வருஷத்துக்கும் மேலே வாழ்ந்தாங்க?…”
“அது வருஷக்கணக்குல உங்க வீட்டுலதான் இருந்திச்சு… ஆனா அது யாருக்கும் உறவு இல்லை!… என்ன திவா குழப்பமாயிருக்கா?…” வாயில் புன்னகையோடு கேட்டார்.
“ஆமாம்”
“உங்க அப்பா ஒரு தடவை ஆன்மீக சுற்றுலா போனாரு… அப்ப ஒரு கோயில் வாசல்ல பிச்சையெடுத்திட்டிருந்த கிழவியைப் பார்த்திருக்காரு….. முக ஜாடைல செத்துப் போன அவரோட அம்மாவைப் பார்க்கற மாதிரி இருந்திச்சாம்!… உடனே பேசி… கெஞ்சிக் கூத்தாடி… “கடைசி வரைக்கும் என் தாயாரைக் காப்பாத்துற மாதிரி வெச்சுக் காப்பாத்தறேன்!”ன்னு கோயில்ல வெச்சு சத்தியம் பண்ணிக் கொடுத்துக் கூட்டிட்டு வந்து, கிட்டத்தட்ட பதினேழு வருஷம் சோறு போட்டுக் காப்பாத்தினாரு!… அது செத்தப்பக் கூட ஒரு மகனா இருந்து காரியங்களையெல்லாம் அவருதான் செஞ்சாரு!…. ஹூம்..உங்கப்பாவை நெனச்சா உடம்பெல்லாம் புல்லரிக்குதுப்பா!…எப்பேர்ப்பட்ட மனுஷன்?..” உணர்ச்சிப் பூர்வமாய் சித்தப்பா சொல்ல,
நெகிழ்ந்து போனேன். மனசு பாரமாகிக் கனத்தது. குற்ற உணர்வு நெஞ்சைப் பிறாண்டியது.
“என்ன திவா…அமைதியாயிட்டே?” சித்தப்பா கேட்க,
“ஒண்ணுமில்லை சித்தப்பா… அப்பாவோட மனசை நெனச்சுப் பார்த்தேன் பிரமிப்பா இருந்தது” என்றேன்.
“அந்தக் காலத்து ஆளுங்களுக்கு.. மனுஷங்களை மனுஷங்களா மட்டும்தான் மதிக்கத் தெரியும் அவங்களுக்கு!… உறவு… சொந்தம்.. பந்தம்.. சாதி…ச னம்…எல்லாமே ரெண்டாம் பட்சம்தான்!”
மறுநாள், சித்தப்பா அந்தப் பெண்ணை ஸாப்ட்வேர் கம்பெனியில் இணைத்து விட்டு, ஒரு தங்குமிடத்தையும் ஏற்பாடு செய்து கொடுத்து விட்டு ஊருக்குக் கிளம்பிச் சென்ற பின், ஆபீஸுக்கு லீவு போட்டு விட்டு, கால் டாக்ஸி பிடித்து, அந்த முதியோர் இல்லத்திற்குச் சென்றேன்.
என் கம்பெனி என்னை நம்பி ஒப்படைத்திருந்த அந்த புது ப்ராஜெக்டும், எனக்குக் கீழ் பணி புரியும் அந்த ப்ராஜெக்ட் டீமும், பெரிய பிரச்சினையாய்த் தோன்றவில்லை. உறுத்தும் மனசாட்சிதான் பிரதானமாய் நின்று என்னைச் செலுத்தியது.
“இட்ஸ் ஓ.கே!… நீங்க தாராளமா உங்க மதரை வீட்டிற்குக் கூட்டிக்கிட்டுப் போகலாம்…” முதியோர் இல்ல நிர்வாகி சொல்ல, தாயை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தேன்.
என் தாயாரை செல்வி பார்த்த பார்வையின் அர்த்ததைப் பற்றி நான் கவலைப் படவில்லை.
“யாருன்னே தெரியாத ஒரு கிழவியை தன் தாயா நெனச்சு பதினேழு வருஷம் காப்பாத்தினவரோட மகன் நான்…என் சொந்த தாயை முதியோர் இல்லத்தில் விட்டு வைத்திருந்தால்.. நான் அவர் மகனா பொறந்ததுக்கு அர்த்தமே இல்லாமல் போய் விடும் அல்லவா?!” என்கிற பதிலை எனக்கு நானே சொல்லிக் கொண்டு மேலே பார்த்தேன். நிச்சயம் என் தந்தை மேலுலகிலிருந்து என்னை பாராட்டுவார் என்று நம்பினேன்.
எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings