in ,

பொன் நிறத்தில் ஒரு பறவை (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

                    வெளியூர் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் சொந்த ஊருக்குப் புறப்படும் வேளையில் உற்சாகமாய்த்தான் இருப்பர்.  அது பிறந்து, வளர்ந்த மண்ணைப் பார்க்கப் போகும் களிப்பு, பெற்றோரை, உற்றோரை, சக தோழர்களைக் காணப் போகும் திளைப்பு. 

                   குமரகுரு வித்தியாசமானவன். அவன் உற்சாகத்திற்குக்கான காரணம்  வினோதமானது.  அவன் “அதை”ப் பார்க்கத்தான் ஆசை, ஆசையாய் ஊருக்குப் போகிறான். “அதை”க் காணத்தான் அவன் விழிகள் ஏங்குகின்றன. அதன் குரலைக் கேட்டு மகிழத்தான் அவன் செவிகள் துடிக்கின்றன.

                 “அது” என்பது ஒரு பொன்னிறப் பறவை. எந்த நாட்டைச் சேர்ந்தது?… எந்த இனத்தைச் சேர்ந்தது?… குயிலினமா?.. இல்லை…. மயிலினமா?… குருவி வகையா?… இல்லை கொக்கு வகையா?…. வௌவால் இனமா?… இல்லை உல்லான் இனமா?

                அந்தப் பொன்னிறப் பறவையை, ஓராண்டிற்குப் பிறகு, பார்க்கப் போகின்றான். 

                ஒவ்வொரு வருடமும் சரியாக மார்ச் மாத இறுதியில், அவன் வீட்டின் பின்புறமிருக்கும் அந்தப் பெரிய வேப்ப மரத்தில் வந்தமரும் அந்தப் பறவை,  வினோதமாய்… வித்தியாசமாய்….  ஷெனாய் வாத்தியம் போன்ற ஒரு இனிமைக் குரலில் ராகமிசைக்கும். அதன் தங்க நிற இறகுகள் நிலவொளியில் “தக…தக”வென மின்னும்.

ஒரு வருடம்… இரண்டு வருடமல்ல… ஏழு வருடங்களாய் அதைக் கவனித்துக் கொண்டு தானிருக்கின்றான்.  சொல்லி வைத்தாற்போல் பௌர்ணமிக்கு முந்தின தினம் வரும், தொடர்ந்து மூன்று நாட்கள் வந்து விட்டு, பிறகு காணாமல் போய்விடும்.

                பகல் நேரங்களில், கண்ணில் படும் மரங்களிலெல்லாம் அதைத் தேடுவான். ம்ஹூம்…அது படவே படாது.  அந்தப் பறவையைப் பற்றிய விபரங்களை புத்தகங்களில் தேடிப் பார்த்தான்.  கூகுள் சர்ச்சில் அலசினான். எதிலும் அப்படியொரு பறவை இருப்பதாகவே சொல்லப் படவில்லை.

                 போன வருஷம் ஒரு இரவு நேரத்தில் “ஏண்டா குமரு… எதுக்குடா நடுராத்திரில வந்து வேப்பமரத்தை பார்த்திட்டிருக்கே?.. போடா… போயி படுத்துத் தூங்குடா!… வயசுப் பையன் வேப்ப மரத்தடில நின்னா மோகினிப் பிசாசு பிடிச்சுக்கும்டா!” என்று அவன் தந்தை வந்து அவனை அதட்டிய போது,

                 “அப்பா.. அங்க பாருங்கப்பா அந்தப் பறவையை!… எப்படி தங்கமாட்டம் ஜொலிக்குதுன்னு!” என்றான் வெகு ஆர்வமாய்,

                 அண்ணாந்து பார்த்தவருக்கு பறவையின் உருவம் தெரியாததால், “வேப்பம் பழங்களைத் திங்க பழந்தின்னி வவ்வாலுக வரும்… அதைப் போயி பார்த்திட்டு நிக்கறியே!” என்றார்.

                 “இல்லப்பா… வௌவால் இல்லை!… இது நம்ம நாட்டுப் பறவையே இல்லை!… வெளிநாட்டுப் பறவை!”

                 “ம்ஹும்… நிச்சயமா அது பழந்தின்னி வவ்வாலுதான்!”

                 “பழந்தின்னி வௌவாலுக வேற மாதிரி இருக்கும்!… கண்டிப்பா இது வெளிநாட்டுப் பறவைதான்!.. வேடந்தாங்கலுக்கு வெளிநாட்டுப் பறவைக வருஷத்துக்கொரு தரம் வந்திட்டுப் போகுதுகல்ல?… அதே மாதிரிதான் இதுவும் வருஷத்துக்கொரு தரம் நம்ம வீட்டு மரத்துக்கு மார்ச்சு மாசக் கடைசில வந்திட்டுப் போகுதுப்பா!… நான் ஏழு வருஷமாக் கவனிச்சிட்டுத்தான் இருக்கேன்!”

                 “சரி…சரி!…எதுவோ… எங்கிருந்தோ… வந்திட்டுப் போவுது… நீ போய்த் தூங்கு!” சொல்லியபடியே நடந்த தந்தையை கோபமாகப் பார்த்தான். “ச்சே!…என்ன மனுஷன் இவர்?… இவருக்குத் தெரிஞ்சதெல்லாம் வியாபாரமும்… லாபமும்தான்!”

                 “என்ன மாம்ஸ்…ஊருக்குக் கிளம்பிட்டாப்ல இருக்கு!” அறைத் தோழன் ரவியின் குரல் அவன் சிந்தனை வலையை அறுக்க,

                 “ம்…ஆமாம்..ரவி!…ஊருக்குத்தான்!” என்றான் குமரகுரு.

                ஒரு நெடிய இரவுப் பயணத்தில் தன்னையுமறியாமல் உறங்கிப் போனான்.

                உயரத்தில் அமர்ந்திருந்த பொன்னிறப் பறவை, ஹீனக் குரலில் கதறியபடி, தாறுமாறாய்ப் பறந்து கொண்டேயிருந்தது.  சில நிமிடங்களுக்குப் வேகமாய் பூமியை நோக்கி தலைகீழாய் வந்து, தரையில் “படீர்” என விழுந்து ரத்தக் களறியானது.      

                பேருந்தின் திடீர்க் குலுக்கலில் கண் விழித்த குமரகுரு “கடவுளே!… என்னவொரு மோசமான கனவு?”

                தொடர்ந்து உறக்கம் தொலைந்து போய் விட, சிந்தனையில் மூழ்கினான்.

                 “எப்படியாவது இந்த வருஷம்… அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க அத்தனை பேரையும் கூட்டிட்டு வந்து, அந்தப் பறவையைக் காட்டணும்!… அடுத்த வருஷம் அதே தேதியில் வரவழைத்துக் காட்டணும்!”

                 “மொதல் வருஷம் பார்த்தப்ப சின்னதா இருந்திச்சு…. போன வருஷம் பெருசாகி இருந்திச்சு?… இந்த வருஷம் செம சைஸ்ல இருக்கும்!… முடிஞ்சா அதை போட்டோ எடுத்து பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வைக்கணும்!…”

                விடிய, விடிய அந்தப் பறவை பற்றிய சிந்தனையிலேயே கிடந்தான் குமரகுரு.

                காலை ஐந்தரை மணிக்கு பேருந்து நிலையத்திற்குள் நுழைந்து திரும்பி நின்றது பஸ்.

                பதினைந்தே நிமிடத்தில் தன் வீட்டை அடைந்தான். தாய் ஆச்சரியமுற்றாள்.   “என்னப்பா.. திடீர்னு வந்திருக்கே!.. காலேஜி லீவா?”          

                 “ஆமாம் லீவுதான்!… அடுத்த வாரம் பரிட்சை… படிக்கறதுக்காக இந்த வாரம் லீவு!” பொய் சொல்லி விட்டு, சூட்கேஸைத் தூக்கிக் கொண்டு, உள் அறையை நோக்கி ஓடினான் குமரகுரு.

                எதிரே வந்த தந்தைக்கும் அதே பதிலைத் தந்தான்.

                சிறிது நேரத்திற்குப் பிறகு, டவலை எடுத்துக் கொண்டு வீட்டின் பின்புறம் சென்றவன்… “அ…..ய்….யோ!”

               அதிர்ந்தான்.

                அங்கே… வேப்ப மரம் இல்லை.

                “அ….ப்….பா!” கத்தினான்.

                பதறிப் போய் ஓடி வந்தவர், “என்ன குமரு…என்னாச்சு?” 

                “இங்கேயிருந்த… வேப்ப…மரம்?”

                “அதைத்தான் வெட்டி வித்துட்டோமே?” சாதாரணமாகச் சொன்னார்.

                குமரகுருவின் மொத்த உடலும் நடுங்கியது.  நாத் தழுதழுக்க, “ஏம்பா… இப்படிப் பண்ணினீங்க?” கேட்டான்.

                 “நம்ம வெறகுக்கடை மகாதேவன் வேற ரொம்ப நாளா, “வெட்டிக்கட்டுங்களா சாமி?… வெட்டிக்கட்டுங்களா சாமி?”ன்னு கேட்டுட்டேயிருந்தான்… “சரி வெட்டிக்கடா!”ன்னுட்டேன்!…”

                வாய் மேல் கையை வைத்துக் கொண்டு அவரையே வெறுப்பாய்ப் பார்த்தான் குமரகுரு.

                “சும்மா இல்லைப்பா…. சுத்தமா இருபத்திரெண்டாயிரம் கெடைச்சது!”

                “ச்சே!…என்ன மனிதர் இவர்?”  வெளிறிய முகத்துடன் குளிக்காமலே அங்கிருந்து நகர்ந்தான்.

                அன்று பகல் முழுவதும், அறையை விட்டு வெளியே செல்லாமல், ஜூரம் வந்தவன் போல் அறைக்குள்ளேயே படுத்துக் கிடந்தான் குமரகுரு.  அவன் மனம் வெம்பித் தவித்தது.

“அப்பா… உங்களைப் பொறுத்தவரையில் அது ஒரு மரம்… வேப்ப மரம்!… வெட்டிப் போட்டால் வெறகுக்குப் பயன்படும் மரம்!… அவ்வளவுதான்!… ஆனால் அந்தப் பறவைக்கு… அந்த மரம் வருஷத்துக்கொரு முறை வந்து தங்கிட்டுப் போற விருந்தினர் மாளிகை!… எங்கியோ… ஏதோ ஒரு நாட்டிலிருந்து… நம்ம நாட்டை… அதுவும் நம்ம வீட்டைத் தேடி வர்ற அந்த வெளிநாட்டுப் பறவை இனிமே இங்க வருமா?… அப்படியே வந்தாலும் எங்க தங்கும்?… எப்படித் தங்கும்?… அதோட வீட்டைத்தான் இடிச்சிட்டீங்களே!”

                 அவன் உள்மனம் “ஓ”வெனக் கதறியது.

                 இரவு.

                மெல்ல எழுந்து, கதவை திறந்து கொண்டு வெளியே சென்று வேப்ப மரம் இருந்த இடத்தில் நின்று அண்ணாந்து வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.  நம்ம வீட்டிற்கு வராவிட்டாலும் எப்படியும் அந்த வழியே நிச்சயம் பறந்து செல்லும், என்கிற நம்பிக்கை அவனுள் ஆழமாய்ப் பதிந்திருந்தது.  காத்திருந்தான்.

               ம்ஹூம்…அந்தப் பறவை வருவதற்கான அறிகுறியே தென்படாது போக, பெருத்த சோகத்திலாழ்ந்தான்.  அழுகை முகமெங்கும் பரவியது.

              வெற்று வானத்தையே நடுநிசி வரை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவன் கண்களிலிருந்து அவனையுமறியாமல் கண்ணீர் பெருக்கெடுத்தது.  தள்ளாட்டமாய் நடந்து வந்து படுக்கையில் விழுந்தவன் தேம்பியழுதான். 

              மொத்த உலகமும் நிம்மதியாய் உறங்கும் வேளையில்,  நெஞ்சில் பாறாங்கல்லாய் பாரத்தைச் சுமந்தபடி இரவை உறக்கமின்றிக் கழித்தான்.

              அடுத்த நாள் அதிகாலை ஐந்து மணி.

              “அடடே… என்ன குமரு?… பொட்டியும் கையுமாய் எங்க கிளம்பிட்டே?” நெற்றியைச் சுருக்கிக் கொண்டு கேட்ட தாய்க்கு மௌனத்தைப் பதிலாய்த் தந்து விட்டு, வாசலை நோக்கி எந்திரம் போல் நடந்தான்.

            அவனுடைய அந்த அலட்சியம் அவளுக்குள் ஒருவித அச்சத்தை ஏற்படுத்த, அவசரமாய் அழைத்தாள்.

                வேக, வேகமாய் வந்தவர், “என்னப்பா… என்னாச்சு உனக்கு?… நேத்திக்குத்தான் வந்தே?… அதுக்குள்ளார கெளம்பிட்டே?”

                 “நான் ஹாஸ்டலுக்கே போறேன்” அவர் முகத்தைக் கூடப் பார்க்காமல் எங்கோ பார்த்துச் சொன்னான்.

               “என்னப்பா?… ஒரு வாரம் லீவு பரிட்சைக்குப் படிக்கணும்ன்னே?”

             “நான் அங்கியே போய்ப் படிச்சுக்கறேன்”

              “ஏன் இங்கே என்ன குறை?… என்ன இல்லை உனக்கு?” அவன் தாயார் கேட்க,

               “ம்… இங்க மரம் இல்லை!… பறவை இல்லை” என்று சொல்லி விட்டு நிற்காமல் நடந்தவனை, வினோதமாய்ப் பார்த்தபடி நின்றனர் பெற்றோர்.

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

                                                                   

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கருணையின் சுவை கசப்பு (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

    இன்று முதல் இவள் செல்வி (சிறுகதை) – முகில் தினகரன், கோவை