2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
மாலை 6.30. அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய நான் காம்பௌண்ட் கேட்டைத் திறந்து உள்ளே நுழையும் போது பக்கத்து வீட்டு பத்மநாபன் என்னை நிறுத்தினார்.
‘ஹலோ மிஸ்டர் சதாசிவம்… ஒரு நிமிஷம்”
நின்றேன். என்னை நெருங்கி வந்தவர் “உங்களோட சிஸ்டர்ஸ் ரெண்டு பேரும்… உங்க பிரதரும் வந்திருந்தாங்க”
‘ஓ… அப்படியா?..எப்ப… எத்தனை மணிக்கு?” அசுவாரஸியமாய்க் கேட்டேன்.
‘ம்ம்… அஞ்சு மணியிருக்கும்… பட்… அவங்க யாருக்குமே முகமும்… பேச்சும் சரியாகவே இல்லை… ஒரு மாதிரி… கோபமா இருந்த மாதிரித் தெரியுது… ஏன் மிஸ்டர் சதாசிவம்… ஏதாச்சும் பிரச்சினையா?”
நான் அமைதி காக்க, “இட்ஸ் ஓ.கே… உங்க குடும்ப விவகாரம்… ஸாரி… ஸாரி…” சொல்லியபடியே அவர் நகர நான் வீட்டிற்குள் நுழைந்தேன்.
எனக்குத் தெரியும் அவர்கள் வருவார்கள்… கடுங்கோபத்தோடு வருவார்களென்று. நேற்றைக்கு முன் தினம் நான் அவர்கள் முகவரிக்கு அனுப்பி வைத்திருந்த என் திருமண பத்திரிக்கை அவர்களை நிச்சயம் ஆத்திரமூட்டியிருக்கும்.
இரவு எட்டு மணி வாக்கில் காலிங்பெல் ஓசை. சென்று கதவைத் திறந்தேன். என் இரண்டு தங்கைகளும் ஒரே தம்பியும் உள்ளே நுழைந்தார்கள்.
வந்ததும் வராததுமாய் மூத்தவள் அழ ஆரம்பித்தாள். இளையவள் அவளுக்கு ஆறுதல் கூறும் விதத்தில் என்னைத் தாக்கினாள்.
‘நீ அழாதேக்கா… நானிருக்கேன் உனக்கு… யாரோ உன்னைய ஒதுக்கிட்டதால நீ தனிமரமாய்டுவியா?.. அப்படி ஆக விட்டுடுவேனா நான்?”
பார்த்துக் கொண்டிருந்த தம்பி பிரசாத் என்னருகில் வந்தான். “பாருங்கண்ணே… உன்னோட சகோதரிகள் எப்படித் துடிக்கறாங்கனு பாருங்கண்ணே… ஏன் இப்படியொரு காரியம் பண்ணினே?… உண்மை உறவுகள்… உடன் பிறப்புக்கள்… நாங்க உயிரோட இருக்கையில் உன்னோட கல்யாண பத்திரிக்கையில் எவளோட பேரையோ போட்டு “மணமகனின் மூத்த தங்கை”னு போட்டிருக்கே… அதே மாதிரி வேற யாரோ பேரைப் போட்டு “மணமகனின் இளைய தங்கை”னு போட்டிருக்கே… போதாக்குறைக்கு எவனோ ஆல்பர்ட்டா… ஆப்ரஹாமா… அவனோட பேரைப் போட்டு “மணமகனின் தம்பி”னு போட்டிருக்கே… என்னாச்சு உனக்கு?… நாங்கெல்லாம் என்ன செத்தா போயிட்டோம்?… உசுரோடதானே இருக்கோம்?… இப்படி ஒரேயடியா தூக்கி எறியற அளவுக்கு நாங்க என்ன தப்பு பண்ணிட்டோம்… சொல்லுண்ணே ”
என் தோளைத் தொட்டு அவன் உலுக்க “விருட்”டெனத் திரும்பி அவர்கள் மூவரையும் கூர்ந்து பார்த்தேன்.
“பிரசாத்… மொத்தத் தப்பும் என்னோடதுதான்டா… முதல் தப்பு… ரெண்டு தங்கைகளுக்கும் கல்யாணத்தை முடிச்சதுக்கப்புறம்தான் என்னோட கல்யாணத்தைப் பற்றியே நினைப்பேன்னு ஒரு வைராக்கியத்துல நாற்பது வயசு வரைக்கும் வாழ்ந்தேன் பாரு… அது!”
அழுது கொண்டிருந்த மூத்த தங்கை தன்னுடைய அழுகையை நிறுத்தி விட்டு என்னைப் பார்க்க, “அதே மாதிரி… நீ… கூட வேலை பார்க்கற ஒரு பொண்ணைக் காதலிச்சிட்டு வந்து “அண்ணே… அவ வீட்டுல உடனே கல்யாணம் பண்ணணும்கறாங்க!… உங்க அண்ணனுக்கு அப்புறம்தான் உனக்குன்னா அதுவரைக்கும் எங்களால காத்திட்டிருக்க முடியாது… எங்க பொண்ணுக்கு வேற மாப்பிள்ளை பார்க்கறோம்னு சொல்றாங்கண்ணே…. என்னால அவ இல்லாம உசுரோடவே இருக்க முடியாது”னு கதறுனியே…. அப்ப உன் மேல இரக்கப்பட்டு… “சரிடா… என் கல்யாணத்தைப் பத்தி அப்புறம் பேசிக்கலாம்… மொதல்ல உன் கல்யாணத்தை முடிக்கலாம்”ன்னு சொல்லி உங்க ரெண்டு பேரோட காதலையும் ஜெயிக்க வெச்சேன் பாரு!… அதான்… என்னோட ரெண்டாவது தப்பு”
“அதுக்காக இப்படியா செய்வாங்க?” சின்னத்தங்கை சமயம் பார்த்து நுழைந்தாள்.
“ஆமாம்!… அதுக்குப் பிறகு நீங்கெல்லாம் நடந்துக்கிட்டீங்க பாரு… அந்த முறைக்காகத்தான் இது”
‘எப்படி நடந்துக்கிட்டோம்?” வெகு சாதாரணமாகக் கேட்டான் பிரசாத்.
‘ஏண்டா… மூத்தவனான நான்… என்னோட கல்யாணத்தைக் கூட தள்ளிப் போட்டுட்டு… அதுக்காக வெச்சிருந்த பணத்தை வெச்சு உனக்குக் கல்யாணம் பண்ணி வெச்சேன்…. உன்னோட காதலுக்காக என்னோட இளமையை… என்னோட வாழ்க்கையையே தியாகம் செஞ்சேன்… பதிலுக்கு நீ என்னடா செஞ்சே?… அந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணின கையோட பெங்களுருக்குப் போய் செட்டிலானவன்தான்… இந்தப் பக்கமே திரும்பிப் பார்க்கலை… ‘அட… நமக்காகத்தானே அண்ணன் தன்னோட கல்யாணத்தை தள்ளிப் போட்டாரு… மூத்தவரான அவருக்கு ஏற்கனவே வயசு மீறிப் போயிடுச்சு… அதனால நாம்தான் அவருக்கு ஒரு கல்யாணம் நடக்க ஏதாவது ஸ்டெப் எடுக்கணும்’னு நெனச்சியாடா நீ?.. அன்னிக்குப் போனவன்… நாலு வருஷம் கழிச்சு திரும்பி வந்திருக்கியே… இந்த அண்ணன் உசுரோட இருக்காரா இல்லையானு… வந்து பார்க்கத் தோணலையாடா உனக்கு?.. நன்றி கெட்ட ஜென்மம்”
அவன் வாயடைத்துப் போய் நிற்க சகோதரிகள் இருவரும் வரிந்து கட்டிக் கொண்டு எழுந்தனர்.
‘அதனால..?.. அதனால உறவு… பாசம்… சொந்தம்… பந்தம் எதுவும் இல்லைன்னு ஆய்டுமா?”
‘ச்சே!…. உறவையும்… பாசத்தையும் பத்தி நீங்க ரெண்டு பேரும் பேசாதீங்க… உங்க ரெண்டு பேருக்குமே அந்தத் தகுதி இல்லை.”
‘அப்படி என்ன தகுதி இல்லாமப் போச்சு?”
‘உங்க கல்யாணம் முடிஞ்ச பிறகுதான் என் கல்யாணத்தைப் பத்தியே நினைப்பேன்”ங்கற ஒரு வைராக்கியத்துல நாற்பது வயசு வரைக்கும் நான் பிரம்மச்சாரியாவே வாழ்ந்தேன்… அதே மாதிரி முடிச்சேன்… நீங்களும் கல்யாணம் முடிஞ்ச கையோடு போனவங்கதான்… அதுக்கப்புறம் ஒரே தடவை… அம்மா செத்துப் போனப்ப வந்தீங்க… அத்தோட சரி…’அண்ணனும் தம்பியும் அம்மா இல்லாம எப்படி இருப்பானுக?… எங்க சாப்பிடுவானுக?… அவனுகளுக்கு யாரு சமைச்சுப் போடுவாங்க?”ன்னு ஒரு நாளாவது நெனச்சுப் பார்த்திருப்பீங்களாடி?… நமக்காகத்தானே அரைக் கெழவனாகற வரைக்கும் பிரம்மச்சாரியா வாழ்ந்தாரு… அவருக்கொரு கல்யாணத்தை நாம.. ஏற்பாடு செய்வோம்னு ஏண்டி தோணலை உங்களுக்கு?”
‘அது… வந்து… நாங்க… எங்க வீட்டுக்காரர்…” மூத்த தங்கை திக்கித் திணறி சமாளிக்க முயல,
‘ஒரு அண்ணனா… அப்பா ஸ்தானத்துல இருந்து நான் செஞ்ச என்னோட கடமைகளுக்கு உங்ககிட்டயிருந்து பிரதியுபகாரத்தை நான் எதிர்பார்க்கக் கூடாதுதான்… ஆனா நான் எதிர்பார்த்தது காசு பணத்தையோ…. சொத்து சுகத்தையோ அல்ல…. அன்பு… பாசம்… பரிவு…. இதைத்தான்!… ப்ச்… ஏமாத்திட்டீங்க… ஆனா ஆபீஸ்ல என் கூட வேலை பார்க்கிறவங்க… எந்தவிதத்திலும் எனக்கு உறவு இல்லாதவங்க… நாப்பத்தாறு வயசாகியும் பிரம்மச்சாரியா… தனிக்கட்டையா கஷ்டப்படற என் மேல் இரக்கப்பட்டு… எனக்கொரு வாழ்க்கைய அமைச்சுக் கொடுக்கணும்கற நல்லெண்ணத்துல தாங்களே களமிறங்கி… எனக்காக விளம்பரம் குடுத்து…. வந்த வரன்களை ஆராயந்து… அதுல ஒண்ணை தேர்ந்தெடுத்து… பேசி… முடிச்சு… முகூர்த்தத்துக்கு கோயில் ஏற்பாடு பண்ணி…. ரிசப்ஷனுக்கு ஹால் புக் பண்ணி…” முடிக்க இயலாமல் என் குரல் தழுதழுத்தது.
‘எங்களுக்கும் தெரிவிச்சிருந்தா நாங்களும் வந்து…” இளைய தங்கை ஏதோ சொல்ல வர,
‘என்ன பண்ணியிருப்பீங்க?… ‘எங்களுக்குப் பட்டுப் பொடவை எடுத்துக் குடு…. மாப்பிள்ளைகளுக்கு பட்டு வேஷ்டி பட்டு சட்டை வேணும்… கொழந்தைக்கு துணிமணி எடு”…ன்னு ஆரம்பிச்சு… குட்டையைக் குழப்பி… சண்டை போட்டுட்டு… கல்யாணத்தை நிறுத்திட்டுப் போயிருப்பீங்க…”
அவள் மௌனியானாள்.
‘என் பத்திரிக்கைல ‘மூத்த தங்கை விஜயா”ன்னு போட்டிருக்கேனே?… அவதான் தன்னோட செலவுல எனக்காக விளம்பரம் குடுத்த எங்க ஆபீஸ் ரிசப்ஷனிஸ்ட்… ‘இளைய தங்கை சவிதா”ன்னு போட்டிருக்கேனே?… அவதான் எனக்காக பொண்ணு வீட்டுக்காரங்களைச் சந்திச்சுப் பேசி… தேதி குறிச்ச எங்க ஆபீஸ் கம்ப்யூட்டர் ஆபரேட்டர்!. அப்புறம்… ‘தம்பி சுகுமார்”ன்னு போட்டிருக்கேனே?… அவன்தான் முகூர்த்த ஏற்பாடு… ரிசப்ஷன் ஏற்பாடெல்லாம்… செலவு கூட அவனோடதுதான்… இப்பச் சொல்லுங்க… இவங்கெல்லாம் எனக்கு உறவா?… இல்லை நீங்கெல்லாம் உறவா?”
உண்மை உறவுகள் ஊமையாய் நின்றன.
‘அதனால… எதையும் மனசுல வெச்சுக்காம கல்யாணத்துக்கு குடும்ப சகிதம் வந்திட்டுப் போங்க”
சில நிமிட அமைதிக்குப்பின் அவர்கள் மூவரும் கோரஸாய் ‘நாங்க அந்த மூணு பேரையும் நேர்ல பார்ககணும்” என்று கேட்க,
‘அய்யய்யோ…எதுக்கு அவங்க கூட சண்டை போடவா?” துள்ளினேன் நான்.
‘இல்லை….”
‘பிறகு,”
‘கையெடுத்துக் கும்பிட…” சொல்லி விட்டுக் கண் கலங்கிய அவர்களை தோளோடு அணைத்துக் கொண்டேன்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings