எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
ஆபீஸ் விட்டு ரூமிற்கு போக மனதின்றி நேரு பார்க் நோக்கி மொபெட்டை விட்டான் மாறன்.
அங்கேதான் அந்த அதிர்ச்சி காத்திருந்தது. அவளை பார்த்துவிட்டான். ஏற்கனவே பார்த்த அவனுடன். நெஞ்சு அடித்துக் கொண்டது. பார்வையைத் திரும்பிக் கொண்டான். ரொம்பநாட்களுக்கு பிறகு அவளைப் பார்க்கிறான், அங்கே.
‘பாவி… சொல்லாமல் கொள்ளாமல் ஓடினாளே…‘ தனக்குள் அவளை நிந்தித்தபடி மொபெட்டை நிறுத்திவிட்டு அவர்கள் உட்கார்ந்திருந்த பெஞ்சுக்கு எதிர்திசை நோக்கி நடந்தான். கிடைத்த ஒரு பெஞ்சில் உட்கார்ந்திருந்தான். நினைவுகள் மலர்ந்தன.
XXXXXX
அவனுடைய மொபைலில் ஸ்பீக்கர் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று ஒரு மொபைல் கடைக்குப் போயிருந்தான். அங்கேதான் முதன்முதலாய் அவளைப் பார்த்தான்.
பக்கத்தில் நின்றிருந்த அவனிடம் பேனா கேட்டாள். கொடுத்தான். எழுதிவிட்டு பேனாவை திருப்பிக் கொடுக்கும்போது அது தவறி கீழே விழுந்தது.
இருவரும் ஒரே நேரத்தில் குனிய இருவரும் முட்டிக்கொள்ள, அந்தக் கோணத்தில் அவளைப் பார்த்தவுடன் முதல் முறையாக தவறி விழுந்தான்.
பேப்பரில் முகவரி, மொபைல் நம்பரை அவள் குறிக்கும்போதே மனதுக்குள் ஏற்றிக் கொண்டிருந்தான் அவன். ரூமிற்குப் போனதும் முதல் வேலையாக அந்த நம்பரை மொபைலில் ஏற்றி வாட்ஸப்பில் ஒரு ‘ HI ‘ போட்டு அனுப்பினான். ‘ Who is this… ‘ என்று பதிலுக்கு அனுப்பினாள்.
நேரில் பார்த்ததை விட வாட்ஸப்பின் Display Picture-ல் ரொம்பவும் அழகாய்… எடுப்பாய்… தெரிந்தாள்.
‘மொபைல் ஷாப்பில் பேனா கொடுத்தேனே…மாறன், மணிமாறன்… ’ என்று பதில் அனுப்பினான். ‘ ஹாய் ‘ என்று அவளும் அனுப்பினாள். அத்துடன் ஒரு ஸ்மைலீயையும் அனுப்பியிருந்தாள்.
அடுத்த மெசேஜில், ‘ DP போட்டோ சூப்பர்… ‘ என்று எழுதி அனுப்பினாள்.
அப்புறம் நிறைய மெசேஜ்கள். மெல்ல அவளுடைய ஆபீஸ் முகவரி தேடி விசிட்டும் அடித்து விட்டான்.
ஒரு நாள் அவள் நல்ல மூடில் இருக்கும் சமயம் பார்த்து, ‘ ஒரு கப் காபி, நாலு வார்த்தை, ‘ என்று பொடிவைத்து பேசினான். ‘ சரி ‘ என்றவள் சிரித்துக்கொண்டே, ‘ சினிமா ரொம்பவும் பார்ப்பீங்களோ… ‘ என்றும் கேட்டாள்.
XXXXXXX
ஒரு நாள் சாயங்காலம் அவனைப் பார்க்க வருதாக சொல்லிவிட்டு உடனே வந்தும் விட்டாள். அன்று பார்த்து வருண பகவான் பயங்கர கோபம் கொள்ள, வெளியே அத்திக்கட்டி ஆலங்கட்டிமழை. திரும்பிப் போக வழியின்றி இவனுடைய ரூமிலேயே தங்கியும் விட்டாள். அன்று பார்த்து இரண்டாவது முறையாகவும் மாறன் தவறி விழுந்தான்.
விடிந்து கிச்சனை ஒரு வலம் வந்தவள், ‘ முட்டை இருக்கு போல… ‘ என்றுவிட்டு ஆம்லேட் போட்டு கொடுத்தாள். பால் வாங்கிவந்து கொடுத்தான் அவன். டீயும் போட்டு குடித்துவிட்டு கிளம்பத் தயாரானாள். மொபெட்டில் கொண்டு போய் அவளது ஹாஸ்டல் முன்னால் அவளை இறக்கிவிட்டுவிட்டு ஆபிஸிற்கு கிளம்பிவிட்டான்.
அதே வாரக்கடைசியில் மறுபடியும் வந்தாள். தங்கினாள். அன்று வெளியே மழை இல்லை. ஆனால் இவனது காட்டில் நல்ல மழை. பிறகு அடிக்கடி…
அவன் சொன்னான், ‘ என்னுடனேயே வந்து தங்கிவிடேன். எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை… ’ என்று
புன்னகையையே பதிலாகத் தந்தாள். மறுநாளே சூட்கேஸுடன் வந்து சேர்ந்துவிட்டாள். லேடீஸ் ஹாஸ்டலுக்கு செட்டில் செய்துவிட்டதாக சொன்னாள்.
அவனுடைய நடை உடைகளில் நிறைய மாற்றம் கொண்டுவந்தாள்.
ஆன்லைனில் ஆர்டர் போட்டு ஆர்டர் போட்டு சாப்பிட்டார்கள். சிலசமயம் அவனுக்கு சீயர்ஸ்ஸும் சொன்னாள்.
ஒருநாள் ரொம்ப நேரம் ஆகியும் அவள் வந்து சேரவில்லை. அப்போதுதான் கவனித்தான், அவளது சூட்கேஸும் அங்கே காணவில்லை என்பதை.
உடனே அவளுடைய மொபைலுக்கு ரிங் விட்டான். மொபைல் ஸ்விச்டு ஆஃப் அல்லது தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளது என்று வந்தது.
மறுநாள் அவளது ஆபீசிற்கு ஓடினான். அவள் வேலையே விட்டுவிட்டாள் என்று தெரிந்தது. அவளது மொபைல் நம்பரைக் கேட்டான். கொடுக்க மறுத்துவிட்டார்கள்.
கதை முடிந்தது !
அப்படித்தான் நினைத்தான் அவன். ஆனால்…
ஒருநாள் அவளை ஒரு மாலில் பார்த்தான். ஆனால் வேறொருவனுடன். இருவரும் இடுப்பில் கைப்போட்டுக்கொண்டு எஸ்கலேட்டரில் இறங்கிக் கொண்டிருந்தார்கள். சிரிப்பும் பேச்சுமாய்.
மாறனுக்கு நெஞ்சுத் துடித்தது. மண்டை வலித்தது. ஓடிப்போய், ஏன் இப்படி செய்தாய் என்று பிடித்து உலுக்கி கேட்கவேண்டும் போல இருந்தது.
ஆனால், எந்த முகத்தை வைத்துக் கொண்டு…
அவள் என்ன தாலி கட்டிய மனைவியா ?
சட்டென மறைந்தே போனார்கள்.
இவனும் மறந்து போயிருந்தான். அதற்கப்புறம் அப்போதுதான் பார்க்கிறான் அந்தப் பார்க்கில்… அதே ஆளுடன், கிட்டத்தட்ட ஒரு மாதம் விட்டு.
அவனுடனும் சேர்ந்து வாழ்கிறாளா, இல்லை கல்யாணம்தான் செய்துகொண்டாளா..
வெறுப்பு மேலோங்கியது. ஹோட்டலில் சாப்பிடக் கூட இல்லை. நேரே ரூமிற்கு போனான். இரண்டு பாட்டில்களை காலி செய்தான். நினைவுமிழந்தான்.
xxxxxxx
திடுக்கிட்டு எழுந்தான். விடிந்து போயிருந்தது.
பயங்கர தலைவலி. பல் துலக்கிவிட்டு டீஷர்ட் அணிந்துகொண்டு, வெளியே போய் டீ குடித்து விட்டு வந்தான். ரூமிற்கு வெளியே அவள் நின்றிருந்தாள். திடுக்கிட்டான்.
நேற்று அவனுடன் பார்க்கில் சிரித்து சிரித்து பேசி வேருப்பெற்றியவள்… அன்றொருநாள் இடுப்பில் கை போட்டுக்கொண்டு மாலில் கூத்தடித்துக் கொண்டிருந்தவள்…. இன்றென்ன திடீரென்று இங்கே…
விட்டு ஓடிய உறவை புதுப்பிக்க வந்திருக்கிறாளா… என்ன செய்வதென்று புரியாமல் நடையைக் குறைத்தான்.
திடீரென்று நேற்று பார்க்கில் நம்மை பாத்துவிட்டதனால் மறுபடியும் கம்பெனி கொடுக்க வந்திருக்கிறாளா… அவனை விட்டுவிட்டு ஓடிவந்துவிட்டாளா.
அருகில் போகும்போது அவள் விசும்புவதை கவனித்தான்.
‘ இது நிஜமா, நடிப்பா…’
பேசாமல் போய் கதவைத் திறந்தான். ‘ ஸாரி மாறன் ‘ என்றபடி அவனது கையை எட்டிப் பிடித்தாள். ஏனோ கையை உதறவேண்டும் என்று தோன்றவில்லை அவனுக்கு.
‘ ஏன் ஓடினாய், ஏன் திரும்ப வந்தாய்… ‘ கேட்கத் தோன்றியது. கேட்கவில்லை.
உள்ளே போனவன், சட்டென நின்று திரும்பிப் பார்த்தான். கதவுக்கு வெளியேயே இன்னும் நின்றிருந்தாள். மூக்கை உறிஞ்சியும் கொண்டாள். நடிக்கிறாளா. கூப்பிடலாமா… குழப்பம் அவனுள் குடிகொண்டது.
முன்னைப்போல கம்பெனி கொடுப்பாளா. எத்தனை நாளைக்கு… இடையில் எதனால் ஓடினாள். நான் கசந்தேனா… இப்போது அவன் கசந்துவிட்டானா..
அவனது அம்மா அனுப்பியிருந்த போட்டோ மேஜையில் காற்றின் வேகத்திற்கு படபடத்தது.
இவனுக்கும் நெஞ்சுக்குள் படபடத்தது.
‘ மாறா… ஒரு ஜாதகம் வந்திருக்கு. பத்துக்கு எட்டுப் பொருத்தம் பொருந்தி வருது. அவங்க வீட்டுல பேசிட்டேன். ஒருமுறை வந்துட்டுப் போங்கன்னு சொல்றாங்க… இந்தவாரக் கடைசியில மறக்காம வந்திடு… பேசி முடிச்சிடலாம், ஆவணில முகூர்த்தமும் வச்சிடலாம்… ‘ அம்மா சொன்னது காதிற்குள் இன்னொருமுறை கேட்டது.
தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டான். நிமிர்ந்தான். அவளைப் பார்த்தான். ‘ ஸாரி… எனக்கு கல்யாணம் ஆகப் போகுது… நீ கிளம்பு… ‘ என்றான்.
திடீரென்று ஓடிவந்தாள். அவனைக்கட்டிக்கொண்டாள்.
‘என்னை மன்னிச்சிடுங்க மாறன்… நான் தப்புப் பண்ணிட்டேன்… தெரியாம பண்ணிட்டேன்… நான் உங்களை கல்யாணம் வேணாலும் பண்ணிக்கறேன்… ப்ளீஸ்… ’
அவளது பிடி இருக்கமாய் இருந்தது. மறுத்து தள்ளிவிட மனது சொன்னது. அணைத்திருந்த நெஞ்சு விடாதே என்றது. சென்ட்டின் வாசனை சுண்டி இழுத்தது. அந்த இறுக்கம் நன்றாக இருந்தது.
இவள் ஒருவேளை நம்முடனேயே இருந்திருந்தால் கல்யாணம் கூட பண்ணியிருந்திருக்கலாமோ.
‘ ப்ளீஸ்… உங்களோடேயே தங்கிக்கறேன்… ப்ளீஸ்… ‘
அவளது பிடி இன்னும் இறுகியது.
எத்தனை ப்ளீஸ்…!!!
மனதை கல்லாக்கிக்கொண்டான்.
இருவரும் மனது ஒத்தே தங்கியிருந்தோம்… அனுபவித்தோம்… திடீரென்று வேறொருவனுடன் ஓடினாய். இப்போது எனக்கு கல்யாணம் ஆகப் போகிறது. போதும், நீ உன் வழியில் போ… என் வழியில் போக என்னை விடு.
யோசித்தவன், மெல்ல அவளைப் பிரித்தான்.
‘ இல்லை… என்னை விட்டுவிடு… எல்லாம் போதும்… ‘
கண்கள் கலங்கி தயங்கித் தயங்கி பின் வாங்கினாள்.
அவள் இங்கே தங்கினால் நன்றாகத்தான் இருக்கும். ஆனாலும்… போதும்… போட்டோ படபடக்கிறது. மனதும்தான்.
கதவைக் காட்டினான். அவள் பின்னே நடக்க நடக்க இவன் முன்னே நடந்தான். கதவுக்கு வெளியே போய்விட்டாள். கதவை இழுத்துச் சாத்தினான்.
மேஜையில் இருந்த போட்டோவை எடுத்தான். அந்தப் பெண் இன்னும் அழகாகத் தெரிந்தாள்.
எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings