in ,

காலமடி காலம் (சுயமுன்னேற்றக் கட்டுரை) – முகில் தினகரன்

காலம் எதற்காகவும்… யாருக்காகவும் காத்திராமல் முன்னோக்கி சென்று கொண்டே இருக்கும்.  நாம்தான் நமக்குக் கிடைத்துள்ள ஒவ்வொரு நிமிடத்தையும் வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும். நாம் ஒரு நிமிடத்தை வீணடிக்கும் போது நம்  வாழ்நாளில் ஒரு நிமிடம் குறைந்து விட்டது என்பதை நமக்கு நாமே கூறிக் கொள்ள வேண்டும்.  

காலத்தின் சிறப்பு

            “காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது” என்றார் பேரறிஞர் அண்ணா.

     காலம் மிக மிக வேகமாகக் கடந்து செல்லக் கூடியது.  “அட அதுக்குள்ளார ஒரு வருஷம் ஆயிடுச்சா?” என்று பலர் வாய் விட்டுக் கூறுவதை நாம் கேட்டுள்ளோம். ஆகவே, .உரிய காலத்தில் உரிய கடமைகளை செய்து முடித்தல் வேண்டும்.  உகந்த நேரம் முடிவடைந்து விட்டால் பின்பு அந்த கடமைகளை செய்தும்  பயன் இருக்காது.

     இதனையே “இளமையில் கல், பருவத்தே பயிர் செய்” என்று நமது முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதாவது இளமையில் கற்காமல் விட்டு விட்டு, பின்னர் அந்தக் கல்வியைக் கற்றாலும் பயனேதும் இல்லை.  பருவம் பார்த்தே பயிர் செய்ய வேண்டும்.  பருவம் தப்பினால் பயிர்கள் செழித்து வளராது.

     தக்க நேரத்தில் அந்தந்த கடமைகளை செய்து முடித்தால் மாத்திரமே அதன் முழுப்பயனை அடைந்து கொள்ள முடியும்.

நேர நிர்வாகம்: (TIME MANAGEMENT)

     காசு பணத்தைத் திரும்ப சம்பாதித்து விடலாம், ஆனால் நாம் செலவளித்த காலத்தை திரும்ப பெற முடியுமா?… முடியவே முடியாது. ஆகவே அதனை சரியான முறையில் பயன்படுத்துதலே வெற்றியை பெற்றுத்தரும். இன்றைய நவீன உலகில் அதிகம் பேசப்பட்டு வருகின்ற ஒன்றாக நேர நிர்வாகம் காணப்படுகின்றது.

     மனிதர்கள் எந்த காரியத்தை செய்தாலும் நேரம் போதாது என்ற காரணத்தையே கூறி வருகின்றனர். இதற்கான சரியான காரணம் அவர்கள் தமக்கு கிடைக்கக் கூடியதாகவுள்ள நேரத்தை சரியாக நிர்வாகம் செய்யவில்லை என்பதெ உண்மை.

நேர நிர்வாகம் என்றால், ஒரு மனிதன் தனக்குக் கிடைத்துள்ள நேரத்தை எவ்வாறு திட்டமிட்டு சிறப்பான வகையில் பயன்படுத்தலாம் என்பதாகும்.

     நாம் குறிப்பிட்ட நேரத்திற்குள் எந்த செயல்களை செய்து முடிக்கப் போகின்றோம் என்பதை முன் கூட்டியே தீர்மானிக்க வேண்டும். அதற்கேற்ப செயலாற்றும் போது வெற்றி பாதையை இலகுவில் அடைந்து கொள்ள முடியும்.

நேர நிர்வாகத்தின் பயன்கள்

     உலகின் சிறந்த ஓட்டப்பந்தய வீரரான உசைன் போல்ட் ஒலிம்பிக்கில் ஒன்பது தங்கப்பதக்கங்களைப் பெற்றவர்.  அவர் ஒலிம்பிக் விளையாட்டின் மூலம் சம்பாதித்த பணம் நானூறு கோடிகள்.

     ஆனால் அவர் அதற்காக செலவளித்த நேரம் வெறும் இரண்டு நிமிடங்கள் மட்டுமே. அந்த இரண்டு நிமிடங்களில் வெற்றியாளனாக மாறுவதற்காக இருபது வருடங்கள் அவர் தனது நேரத்தை சரியாக திட்டமிட்டு அந்த வெற்றியை தக்க வைத்துக் கொண்டார்.

     நேரத்தை சரியான முறையில் பயன்படுத்தினால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்பதற்கு உசைன் போல்ட் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றார்.

     நேரத்தை சரியாக பயன்படுத்தி நமது வேலைகளை ஒழுங்குபடுத்தும் போது எந்தவித இடையூறோ, அவசரமோ இல்லாமல் சரியான நேரத்தில் அவற்றை செய்து முடிக்க முடியும். கிடைக்கின்ற நேரத்தை சரியாக திட்டமிட்டால் மட்டுமே வெற்றிப்பாதையில் சிறப்பாக பயணிக்க முடியும்.

காலம் பொன் போன்றது:

     காலத்தை பொன் போன்று மிகவும் பயனுள்ள முறையில் பயன்படுத்த வேண்டும். தொலைக்காட்சி, தொலைபேசி ஆகியவற்றை வெறும் பொழுதுபோக்கு சாதனங்களாக மட்டுமே பாவிக்க வேண்டும்.

     தேவையற்ற விஷயங்களைத் தவிர்த்து நமக்கு நன்மை தரக்கூடிய விஷயங்களை மட்டும் பார்வையிட வேண்டும்.

     ஒரு நாளில் செய்வதற்கென திட்டமிட்ட விஷயங்களைச் செய்து முடித்த பின்பே நித்திரைக்கு செல்ல வேண்டும்.

     காலத்தை கவனமாக கையாள வேண்டும். வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைந்தவர்கள் அனைவருமே தமக்கு அளிக்கப்பட்ட நேரத்தை சரியாக பயன்படுத்தியவர்களே.

உலகில்‌ சிலர்‌ கல்வி அறிவுள்ளவராயும்‌, சிலர்‌ கல்வி அறிவில்லாதவராயும்‌, சிலர்‌ பலசாலிகளாயும்‌, சிலர்‌ பலவீனராயும்‌, சிலர்‌ ஏழைகளாகவும்‌, சிலர்‌ பணக்காரர்களாகவும்‌ இருக்கின்றனர்‌. இவற்றிற்கெல்லாம்‌ காரணம்?… காலத்தின் ௮ருமை பெருமைகளை அறிந்து, அதனைச்‌ சரியான முறையில்‌ பயன்படுத்திக்‌ கொண்டமையும்‌, பயன்படுத்‌திக்‌ கொள்ளாமையுமே ஆகும்.

சிலர்‌ இவற்றிற்கெல்லாம்‌ தலைவிதிதான்‌ காரணம்‌ என்று மேற்போக்காகக்‌ கூறிவிடுவார்‌. 

 இதைத்தான் ஐய்யன் திருவள்ளுவர்‌,  “ஞாலங்‌ கருதினுங்‌ கைகூடுங்‌ காலங்‌ கருதி யிடத்தாற்‌ செயின்” என்று கூறுவார். ஆம்!… அவனவன்‌ உயர்வுக்கும்‌: தாழ்வுக்கும்‌ காரணம்‌ காலத்தின்‌ அருமையை உணராமையும், அறியாமையுமே ஆகும்‌.

     விதைக்க வேண்டிய நாட்களில்‌ வீட்டில்‌ உறங்கி விட்டு, அறுக்கவேண்டிய காலத்தில்‌ அரிவாள்‌ கொண்டு போனவன்‌ செயலுக்குச்‌ சமம் காலத்தில் செய்யாமை.

வாழ்வில் வென்றவர்கள்:

வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் என்று சொல்ல கூடிய பல சாதனையாளர்களது வரலாற்றை நாம் படிப்போமானால் அவர்களது நேர நிர்வாகமும், அவர்களது கடின உழைப்புமே அவர்களை உயரங்களுக்கு இட்டுச் சென்றிருப்பதனை நம்மால் உணர முடியும்.

இந்தியாவின் மகத்தான மனிதரான அப்துல்கலாம் அவர்கள் “உங்கள் வருங்காலத்தை செதுக்குங்கள்” என்ற புத்தகத்தில் நேரத்தை விரயமாக்குதல் தற்கொலைக்கு சமம் என்று குறிப்பிடுகின்றார்.

     வாழ்வின் வெற்றிகளுக்கு காலம் ஒரு மகத்தான மந்திரம் என்பது அனைவரும் உணர வேண்டிய ஒன்றாகும்.

     முடிவாக, இலைய சமுதாயத்தினர் காலத்தினுடைய மகத்தான சக்தியை உணர்ந்து கொள்ள வேண்டும். தங்களது நேரத்தை சரியாக பயன்படுத்தக் கற்றுக் கொள்ள  வேண்டும்.

     சோம்பலை ஒழித்து நேரத்தைத் திட்டமிட்டு சரியான முறையில் பயன்படுத்தி தங்கள் வருங்காலத்தை பிரகாசமாக்கி கொள்வதுடன் நமது சமூகத்துக்கும் நமது நாட்டுக்கும் முன்னுதாரணமான பிரஜைகளாக மாறி கொள்ள வேண்டியது அவசியமாகும்.

(முற்றும்)  

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    முடியாதது என்று எதுவுமில்லை (சுயமுன்னேற்றக் கட்டுரை) – முகில் தினகரன்

    வாக்கினில் இனிமை (சுயமுன்னேற்றக் கட்டுரை) – முகில் தினகரன்