மனிதர்களால் முடித்துக் காட்டப்பட்ட பல சாதனைகள் அதற்கு முன் அந்த முயற்சியில் ஈடுபட்டவர்களால் முடியாது என்று கைவிடப்பட்ட காரியங்கள்தான்.
முடியாது என்பது மூடத்தனம். முடியும் என்பது மூலதனம். என்னால் சிறப்பாக செய்ய முடியும் என்று எண்ணிச் செய்யும் செயல்கள் சிறப்பாக முடியும். முயன்றால் முடியாதது எதுவுமில்லை. ஒன்றைச் செய்ய முடியும் என்று முழுதாய் நம்பும் போது தான் மனம் அதைச் செய்து முடிக்கும் வழிகளைக் கண்டறியும். ஆம்!.. ஒரு செயலில் நாம் வைக்கும் நம்பிக்கை அந்தச் செயலை முடிக்கும் வழியையும் காட்டிவிடும்.
பூத்துக் குலுங்கும் ஒரு ரோஜாச் செடியைப் பார்க்கின்றோம். முடியும் என்று நினைப்பவருக்கு அங்குள்ள ரோஜாதான் கண்ணில் படும். முடியாது என்று நினைப்பவர்களுக்கு ரோஜாவோடு அங்குள்ள முட்களும் தெரியும்.
எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் ஏற பல நாடுகளில் இருந்தும் மலையேறும் குழுவினர் வந்தார்கள். அவர்களுக்கு சுமை தூக்கும் கூலியாக அவர்களுடன் மலையேறிச் சென்றவர்தான் டென்சிங். நேபாள நாட்டுக்காரன். திண்ணை பள்ளிக்கூடம் கூட சென்று படிக்காதவன்.
மலையேற வந்தவர்களுடன் அவனும் அவர்களின் மூட்டை முடிச்சுகளை முதுகில் சுமந்து கொண்டு மலையேறிச் செல்வான். கடுங்குளிர், பனிப்புயல் என்று பல்வேறு இயற்கை சீற்றங்களை எதிர்த்து அந்த குழுவினர் எல்லா துன்பங்களையும் பொறுத்துக் கொண்டு மலை ஏறுவார்கள். அவர்கள் கொடுக்கிற கூலிக்காகத்தான் டென்சிங்கும் அந்த துன்பங்களை எல்லாம் பொறுத்துக் கொண்டு அவர்களோடு மலையேறினான். ஆனால் எந்த மலையேறும் குழுவினராலும் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை எட்டிப் பிடிக்க முடியவில்லை. டென்சிங்கின் கண் முன்னாலேயே அவர்கள் ஆயிரம் அடி பள்ளத்தில் சறுக்கி விழுந்து செத்தார்கள்.
பிறகு, அடுத்தொரு குழு வரும். இம்முறை நாங்கள் ஏறிக் காட்டுவோம் என்று சவால் விட்டு மலையேற தொடங்குவார்கள். வழக்கம்போல டென்சிங்கும் அவர்களுடன் கூலித் தொழிலாளியாக மலை ஏறுவார். அதே இடர்பாடுகள்தான்.
இறுதியிலே ஒரு மனிதர் வந்தார். அவர் பெயர் ஹில்லாரி. அவர் நான் எவரெஸ்ட் உச்சியை எட்டிப் பிடித்து அதன் தலையில் கால் பதித்து வெற்றி கொடி நாட்டுகிறேன் என்றார். டென்சிங்குக்கு நம்பிக்கை இல்லை ஆனால் என்ன செய்ய? குடும்ப கஷ்டம் காரணமாக அவருடன் சேர்ந்து மலையேற ஆயத்தமானான் டென்சிங்.
இம்முறை ஹில்லாரி எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் ஏறி வெற்றி கண்டார். தன்னோடு வந்த டென்சிங்கையும் கை கொடுத்து தூக்கி விட்டு அவனையும் எவரெஸ்டின் உச்சி மீது ஏறி நிற்கச் செய்தார்.
உலகச் சாதனையை தான் மட்டும் செய்ததோடு அல்லாமல் தன்னோடு பை தூக்கிக் கொண்டு வந்த கூலிக்காரன் என்று தாழ்வாக எண்ணாமல், டென்சிங்கையும் எவரெஸ்ட் உச்சியில் ஏற்றி உலக சாதனை புரிய வைத்தார் ஹில்லாரி.
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால், பெரிய பலன்கள் இடையறாத, கடின உழைப்பினாலேயே கிடைக்கின்றன. பலவீனமான உள்ளங்கள் கூடக் கடுமையான உழைப்பினால் பலம் பெற்று விடுகின்றன.
“தான் விரும்புவதைச் செய்யக் கூடியவன் வல்லவன். தான் செய்யக் கூடியதைச் செய்ய விரும்புபவன் அறிவாளி” என்கிறார் பிஸ்மார்க்.
படிக்காதவராய் இருந்த போதிலும், தன்னுடைய அயராத உழைப்பினால் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற பெரிய பதவியை அடைந்தார் காமராஜர். அதே போல், ஏழைக் குடும்பத்திலே பிறந்த ஜஸ்டீஸ் முத்துச்சாமி ஐயர் தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்து முன்னேறினார். படிப்படியாக உயர்ந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியானார்.
வாழ்க்கையின் பெரிய முட்டுக்கட்டையாக ஏழ்மை இருக்கிறதே என்று எண்ணி சோர்வடையக் கூடாது. முயன்றால் முடியாதது இல்லை என்பதை உணர்ந்து உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
“லட்சியத்தை அடைவதில் பெரிய மகத்துவம் எதுவும் இல்லை. அந்த லட்சியத்தை அடைவதற்காக நடத்தும் போராட்டம் இருக்கிறதே, அதில்தான் எல்லா மகத்துவங்களும் அடங்கி இருக்கின்றன” என்கிறார் மில்னஸ்.
தச்சுப் பட்டறையில் வாழ்க்கையைத் தொடங்கிய ஆபிரகாம் லிங்கன் விடாமுயற்சி யின் விளைவாக, அமெரிக்க ஜனாதிபதி பதவியை அடைந்தார். கல்வி கற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஆர்வத்துடன் புத்தக மூட்டையைத் தலையிலே சுமந்து, ஆற்றைக் கடப்பதற்குத் தினமும் நீந்தி, கடந்து பள்ளிக்குச் சென்று படித்து முன்னுக்கு வந்தார். படிப் படியாக உயர்ந்து “பாரதப் பிரதமர்” பதவியை அடைந்தார் லால்பகதூர் சாஸ்திரி.
இறுதியாக, எந்த முயற்சியாக இருந்தாலும் அதில் நேர்மை இருக்க வேண்டும். நேர்மையற்ற முயற்சியால் எந்தப் பலனும் இல்லை. எல்லோரையும் நடுங்க வைக்கின்ற கொலைகாரனும், பணத்தைக் கொள்ளையடிக்கும் கொள்ளைக்காரனும் இடைவிடாத முயற்சியினால் தாங்கள் நினைத்த காரியங்களைச் சாதித்துக் கொள்கிறார்கள். ஆனால், இவைகளெல்லாம் முயற்சிகள் ஆகுமா? இவைகளை உண்மையான உயர்வு என்று ஏற்றுக் கொள்ள முடியுமா?
முயற்சியுடன் உழைத்துக் கொண்டே இருங்கள். நீங்கள் உயர்வது மட்டுமல்ல, உங்களைச் சார்ந்த சமுதாயமும் உயரும். இதில் ஐயமில்லை. முயன்றால் முடியாதது எதுவுமே இல்லை.
இதைத்தான் நம் அய்யன் வள்ளுவரும், “அருமை உடைத்து என்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்” என்கிறார். இதன் பொருள், “இது செய்வதற்கு முடியாத செயல், என்று சோர்வடையாமல் இருக்க வேண்டும். இடைவிடாத முயற்சி அதைச் செய்து முடிக்கும் வலிமையைத் தரும்”.
மனிதர்களில் மூன்று வகை.
எவரும் செய்வதையே தானும் செய்பவர்.
எவரும் செய்யாததை தான் செய்பவர்
எவரும் செய்ய முடியாததைச் செய்பவர்.
இதில் நீங்கள் எந்த வகை என்பதை உணர்ந்து செயலாற்றுங்கள். திறமைக்கு என்றுமே தோல்வி கிடையாது. ஆர்வத்துடனும், விடா முயற்சியுடனும் அவற்றைப் பயன்படுத்தினால், வெற்றியடைய முடியும்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings