in ,

பிள்ளைச் செல்வங்கள் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

கலைவாணிக்கு குழப்பமாயிருந்தது.

“என்னாச்சு இந்தக் குழந்தைக ரெண்டுக்கும்?… எப்பவும் பாட்டி ஊரிலிருந்து வந்தால்…வந்ததும் வராததுமாய் ஓடிப் போய் கால்களைக் கட்டிக் கொண்டு  ‘ஹைய்யா… பாட்டி… பாட்டி’னு கத்தும்ங்க… இன்னிக்கு என்னடான்னா… பாட்டி உள்ளார வந்தும் கூட கண்டுக்காம உட்கார்ந்திட்டு இருக்குதுகளே… ஏன்?”

யோசித்தபடி,  “வாம்மா…” என்று சொல்லி தன் தாயிடமிருந்து பைகளை வாங்கி சுவரோரம் வைத்தாள்.

“என்ன கலை… என்னோட பேத்திக ரெண்டும் ‘உர்‘ன்னு இருக்குதுக… என்னாச்சு… நீ ஏதாச்சும் திட்டிட்டியா?” சிரித்தவாறே கேட்டாள் கலைவாணியின் தாய் நாச்சாயி.

“இல்லையேம்மா..” என்றவள், குழந்தைகளின் அருகே சென்று, “ஏய்… குட்டி கழுதைகளா… பாட்டி வந்திருக்காங்க…‘வாங்க‘ன்னு சொல்ல மாட்டீங்களா?” செல்லமாய்க் கோபிக்க,

சட்டென்று முகத்தைத் திருப்பிக் கொண்டது பெருசு. பேரு கவிதா. ஐந்தாம் வகுப்பு.

“அட..பார்றா..” என்ற கலைவாணி, சின்னவளின் தலையைத் தொட்டுக் கோதியபடி, “ஏய்… நீயாச்சும் பாட்டியை “வாங்க‘ன்னு கூப்பிடுடி” என்றாள்.

விருட்‘டென்று எழுந்து உள் அறையை நோக்கி நடந்தது அது.  பேரு சவிதா. மூன்றாம் வகுப்பு.

தங்கை சவிதா எழுந்து செல்வதைக் கண்ட கவிதாவும் உடனே எழுந்து அவள் பின்னாடியே சென்று அறைக்குள் புகுந்து கொண்டது.

தன் பேத்திகளின் அந்த அலட்சியப் போக்கால் மனம் நொந்து போன பாட்டி நாச்சாயி,  “ரெண்டு பேருக்கும் எம்மேல ஏதோ கோவம் போலிருக்கு” என்றாள்.

“ப்ச்… விடும்மா… குழந்தைகதானே?… கொஞ்சம் நேரத்துல அதுகளே வந்து மேலேறி விளையாட ஆரம்பிச்சிடும்க பாரு!” என்ற கலைவாணி தன் தாய் கொண்டு வந்திருந்த சீடை, முறுக்கு, வாழைப்பழம் போன்ற தின்பண்டங்களை ஒரு தட்டில் போட்டு, “இந்தாம்மா… இதை நீயே கொண்டு போய்க் குடு…அதுக இப்பவே சமாதானம் ஆயிடும்க” என்றாள்.

ஆனால், அவற்றை எடுத்துக் கொண்டு அறைக்குள் வந்த தங்கள் பாட்டியை அந்தக் குழந்தைகள் இரண்டும் தலை நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை.  அது மட்டுமல்லாது, அவள் கொண்டு வந்து நீட்டிய தட்டிலிருந்த தின்பண்டங்களை விரல் நுனியால் கூடத் தீண்டவில்லை.

நாச்சாயி எத்தனையோ கெஞ்சியும், மிரட்டியும் கூட அதுகளைக் கரைக்க முடியவில்லை.  “த பாருங்கடி… ரெண்டு பேரும் இப்படி அடம் பிடிச்சீங்கள்ளா….பாட்டி இப்பவே ஊருக்குக் கிளம்பிப் போய்டுவேன்.”

ம்ஹூம்… அதற்கும் மசியவில்லை.

அன்று மாலை வரை குழந்தைகள் இரண்டும் அதே நிலையைக் கடைபிடிக்க, கலைவாணிக்கே சற்று வருத்தமாய்த்தான் இருந்தது.

“எப்பவும் இப்படி இருக்காதுகளே…!…சரி… ராத்திரி  தூங்கி காலைல எந்திரிச்சதும் ரெண்டும் சரியாய்டும்க!”

கலைவாணியின் அந்த எண்ணத்தில் மண்ணைப் போடும் விதமாய் மறுநாள் காலையிலும் அதே பாரா முகத்தில் பலவந்தமாய் இருந்தனர் கவிதாவும், சவிதாவும்.

“அடியேய் கலை… இதுக்கு மேல என்னால இங்க இருக்கு முடியாதுடி… நூத்தம்பது மைலு தொலைவிலிருந்து ரெண்டு பஸ் மாறி நான் இங்க வர்றது இந்த ரெண்டு பேத்திமார்களையும் பார்க்கறதுக்கும் பேசறதுக்கும்தான்… ஆனா இங்க என்னடான்னா… அதுக ரெண்டுக்குமே என்னைப் பார்க்கறதுக்கும்… என் கூடப் பேசறதுக்கும் பிடிக்கலை… அதுக்கப்புறம் நான் எதுக்கு இங்க இருக்கணும்?… கிளம்பறேன்!.. என்னோட கிராமத்துக்கே போறேன்…” சொல்லி முடித்த போது அந்த மூதாட்டியின் குரல் தழுதழுத்தது. கண்களின் ஓரத்தில் ஈரக்கசிவு தெரிந்தது.

“என்னம்மா… அதுகளுக்காக நீயும் கோவிச்சிட்டு…” கலைவாணி தாயைச் சமாதானப் படுத்த முயல

“ப்ச்… கௌம்பறேன்டி” எழுந்து வாசல் வரை சென்று விட்ட நாச்சாயியைத் தடுத்து நிறுத்தியது பேத்திகளின்  “பா…ட்….டீ” என்ற அழைப்பு.

முகத்தில் பிரகாசம் மின்ன, திரும்பி வந்த நாச்சாயி, தன் பேத்திகளின் முகத்தில் மாறி மாறி முத்தமிட்டு விட்டு,  “ஏண்டி… ஏண்டி இந்தக் கெழவிய இப்படி அழ வெச்சு வேடிக்கை பார்த்தீங்க?”

“பாட்டி… எங்களுக்கு எல்லாம் தெரிஞ்சு போச்சு…” இது கவிதா.

“நீ…நீ… குழந்தைகளையெல்லாம் வெஷம் வெச்சுக் கொல்லுற சூனியக் கிழவி” இது சவிதா.

“ஆமாம்… எங்க வகுப்புல என் கூடப் படிக்கற எல்லாப் புள்ளைகளும் சொன்னாங்க… டீச்சருங்க கூடக் கேட்டாங்க…‘ஏண்டி கவிதா நீ அந்த நாச்சாயிப்பாட்டியோட பேத்தியா?”ன்னு”

பாய்ந்து வந்தாள் கலைவாணி.

“ஏய்… என்னடி பேசறீங்க?… பாட்டியைப் போய் சூனியக்காரி… அதுஇதுன்னுட்டு”

மெல்ல நகர்ந்து தன் தாயருகே வந்து நின்ற கவிதா, “அம்மா… நம்ம பாட்டிதான் அவங்க கிராமத்துல பெண் சிசுக்களைக் கொல்லுறதுல பேரு வாங்கினவங்களாம்…” என்றாள்.

“ஆமாம்மா… அதுலதான் பாட்டி நெறைய காசு சம்பாரிக்கறாங்களாம்!…ஏம்மா..நீயே சொல்லும்மா… அந்த மாதிரி குட்டிக் குட்டி கொழந்தைகளையெல்லாம் கொல்லுறது பாவம்தானம்மா?… அதுகளுக்கெல்லாம் வலிக்கும்தானம்மா?” சவிதா தன் மழலைக் குரலில் பெரிய மனுசி போல் கேட்டாள்.

பேத்திகளின் அந்தத் தாக்குதலைத் தாளமாட்டாமல் தள்ளாட்டமாய்த் திண்ணையில் அமர்ந்தாள் நாச்சாயி.

வயிற்றுப் பிழைப்புக்காக பெண் சிசுக்களை வெகு நாசூக்காய் கள்ளிப்பால் கொடுத்தோ… நெல்மணியைத் தொண்டைக்குள் செலுத்தியோ கொல்லுவதைத் தொழிலாய்க் கொண்டு கிராமத்தில் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் அவளால் தன் பேத்திகளுக்கு எந்த பதிலையும் சொல்ல முடியாமல் போனது.

“அந்த மாதிரி குழந்தைகளைக் கொன்னு அதுல சம்பாரிச்ச காசுல வாங்கிட்டு வந்த இந்த சீடை… முறுக்கையெல்லாம் நாங்க சாப்பிட மாட்டோம்… சாப்பிட்டா எங்களுக்கும் பாவம் பிடிச்சிடும்…” சொல்லியபடியே தன் கன்னத்தில் போட்டுக் கொண்டாள் கவிதா.

அதைப் பார்த்ததும் ஆவேசமாய்த் தலையிலடித்துக் கொண்டு கதற ஆரம்பித்தாள் நாச்சாயி.

போதும்டி… போதும்… என்னைய மன்னிச்சிடுங்கடி… இனிமே… இனிமே… அந்தப் பாவ காரியத்தை நான் செய்ய மாட்டேண்டி…!.. என் பேத்திக நீங்க வந்து என் கண்ணைத் திறந்து விட்டுட்டீங்க… உங்க பாதத்துல என் தலைய வெச்சு காலம் பூராவும் படுத்துக் கெடந்தாலும் என் பாவம் தீராது…”

தன் தாயைச் சமாதானப்படுத்த முயன்ற கலைவாணியாலும் அழுகையை அடக்க முடியவில்லை, தான் யாருக்காக… எதற்காக அழுகிறோம் என்பதே புரியாமல் கதறியழுதாள் அவள்.

அவசரமாய் எழுந்து தன் கூந்தலை அள்ளி முடிந்த நாச்சாயி, தன் பேத்திகளிடம் வந்து அந்த இருவரின் தலை மீதும் கையை வைத்தாள்,  “என் தங்கங்களா… பாட்டி வேற வேலை எதுவும் தெரியாததாலதாண்டா அந்தப் பாவத் தொழிலை வயத்துப் பாட்டுக்காகச் செஞ்சேன்… அதனால உங்க தலைல அடிச்சு சத்தியம் பண்றேன்… இனிமே அந்தப் பாவத்தைச் செய்ய மாட்டேன்… செய்யவே மாட்டேன்… போதுமா?”

சொல்லிவிட்டு வாசலை நோக்கி வேகமாய் நடந்தாள்.  அவள் நடையில் ஒரு புதுத் தெம்பும், தெளிவும் வந்திருப்பதாய்ப்பட்டது கலைவாணிக்கு.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மாறுமா உலகம்? (சிறுகதை) – சாமுண்டேஸ்வரி பன்னீர்செல்வம் 

    தாய்மை (அனுபவ பகிர்வு) – வைஷ்ணவி