ஜனவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
காரை மெதுவாக ஓட்டி போர்ட்டிகோவில் கொண்டு வந்து நிறுத்தினான் ராஜா. வழக்கமாக ஷெட்டில் விட்டு பூட்டி விட்டு வருவான்.
பெரிய பங்களா, மிகப் பெரிய நுழைவாயில். அந்த வாயிலை ஒட்டி அரையடி கீழே பதினைந்தடி நீளத்திற்கும் அரையடி அகலத்திற்குமான கிரானைட்டால் செதுக்கப்பட்ட மூன்று வாயிற் படிகள்
அதில் மேல் படியில் உட்கார்ந்து இரண்டு உள்ளங்கைகளாலும் முகத்தைத் தாங்கியபடி உட்கார்ந்திருந்தான் அவன், ஆறு வயது மகன் முரளி.
காரிலிருந்து இறங்கிய ராஜா, தன் மகனை இரு கைகளாலும் தலைக்கு மேல் தூக்கி விளையாட முற்பட்டான். அப்போது முரளியின் கண்களிலிருந்து கண்ணீர் துளிகள் அவன் கன்னத்தில் பட்டு தெறித்தன .
“கண்ணா, ஏன் அழுகிறாய்?” என்றான் ராஜா பதட்டத்துடன் .
கண்களை இரண்டு கைகளாலும் அழுந்தத் துடைத்துக் கொண்ட முரளி, “டாடி, நான் உங்களை ஒன்று கேட்கட்டுமா?” என்றான்
“கேள் முரளி, அதற்கு முன் என் கேள்விக்கு பதில் சொல். பள்ளிக்கூடத்தில் இருந்து வந்த நீ என்ன சாப்பிட்டாய்? பால் குடித்தாயா ?”
“இல்லை”
ராஜா டைனிங் ஹாலில் உள்ள ஒரு நாற்காலியில் முரளியை உட்கார வைத்து விட்டு, சமையலறையை நோக்கிக் குரல் கொடுத்தான் .
“மீனாம்மா, முரளிக்கு பால் கொடுத்தீர்களா?” என்றான் புதியதாக வேலைக்கு வேலைக்கு சேர்ந்த சமையல்காரியைப் பார்த்து
“கொடுத்தேன் சார், ஆனால் முரளி குடிப்பதில்லை”
“அதை அம்மாவிடம் சொன்னாயா?”
“இல்லை, நீங்களும் அம்மாவும் இரவு வெகு நேரம் கழித்துத் தான் வீட்டிற்கு வந்தீர்கள். அடுத்த நாள் காலையிலும் அவசரமாக ஆபிஸிற்கு கிளம்பி விட்டீர்கள்” என்றாள் தயங்கியபடி.
“இப்படி எவ்வளவு நாட்கள் பால் குடிப்பதில்லை?”
“கடந்த ஒரு வாரமாகத் தான் ஐயா இப்படி இருக்கிறான்” என்றாள் மீனா.
முரளியின் செயலுக்கு இப்போது காரணம் புரிந்தது ராஜாவிற்கு. கடந்த வாரம் தான் ராஜாவின் பெற்றோரை அருகிலுள்ள முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு வந்தனர் ராஜாவும் அவன் மனைவி வசந்தியும்.
வசந்திக்கு அவன் பெற்றோருடன் நிறைய விஷயங்கள் ஒத்துப் போவதில்லை. அவளுக்கு ராஜாவுடனே நிறைய விஷயங்கள் ஒத்துப் போவதில்லை, அப்படியிருக்க அவன் பெற்றோருடன் தகராறு வருவதில் ஒன்றும் ஆச்சர்யமில்லை.
ராஜாவின் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்க்க வேண்டும் என்று அவள் தான் ஒற்றைக் காலில் நின்றாள். ஆனால் வெளியே அவள் சொல்லும் காரணம் ராஜாவும் அவளும் வேலைக்குப் போய் விட்டால் வீட்டில் அவர்களை யார் கவனிப்பார்கள் என்பது தான்
ஆனால் இப்போது அவள் குழந்தையை கவனிக்கத் தான் யாரும் இல்லை. ராஜாவின் பெற்றோர் வீட்டில் இருக்கும் போது, ஒருநாளும் முரளி இப்படி கண்கள் கலங்க வெளியே தனிமையில் உட்கார்ந்ததில்லை.
ராஜாவின் அம்மா பால் கப்பைத் தூக்கிக் கொண்டு முரளியின் பின்னாலேயே ஓடி எப்படியாவது குடிக்க வைத்து விடுவாள். இரவு சாப்பிடும் போதும் அப்படித் தான், ஏதாவது கதை சொல்லி சாப்பிட வைத்து விடுவாள்.
இரவில் தூங்கும் போது தாத்தாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டு வயிற்றின் மேல் ஒரு காலைத் தூக்கிப் போட்டுக் கொண்டு பகவத் கீதை கதை கேட்பான். எத்தனை முறை கேட்டாலும் கிருஷ்ண பகவானின் தந்திரமும், அர்ஜூனின் வீரமும் முரளிக்கு அலுப்பதில்லை.
ஒரு ஞாயிற்றுக்கிழமை விடுமுறையில் வசந்தியின் பெற்றோர் வந்திருந்தனர். எல்லோரும் வெளியே போய் சாப்பிட முடிவு செய்தனர். ஆனால் அங்கும் முரளி சாப்பிடாமல் அடம் பிடித்தான்.
“வசந்தி… குழந்தைக்கு கொஞ்சம் ஊட்டி விடேன்” என்றான் ராஜா
அப்போது கோபத்தில் வெடித்தாள் வசந்தி
“இத்தனை நாள் உங்கள் அம்மா கெடுத்துக் கொண்டிருந்தார்கள், இப்போது நீங்களா?” என்றாள் வெடுக்கென்று
“என்ன உளறுகிறாய் ?” என்றான் ராஜா கோபமாக
“நான் ஒன்றும் உளறவில்லை. முரளி ஒன்றும் சின்னக் குழந்தையில்லை, ஆறு வயது சிறுவன். அவன் வேலைகளை அவனே தான் செய்ய வேண்டும். எல்லாவற்றிற்கும் நாம் அவன் பின்னால் போக முடியாது. சாப்பிடுவது தூங்குவது போன்ற சின்ன விஷயங்கள் கூட அவனால் செய்து கொள்ள முடியாதா? அவனை இவ்வளவு சோம்பேறி ஆக்கியது யார்? உங்கள் அம்மா அப்பா தானே?” என்றாள் வசந்தி கோபமாக
ராஜா ஒன்றும் பேசாமல் அவளை முறைத்து விட்டு முரளியின் அருகில் அமர்ந்து அவனை சாப்பிட வைத்தான். முரளியின் எதிரில், பொது இடத்தில் தேவையில்லாமல் சண்டை போட விரும்பவில்லை.
அப்படி இப்படி அதைத் தொட்டு சண்டை பெரிதாகி, ராஜாவின் பெற்றோரை முதியோர் இல்லத்தில் கொண்டு விடும் நிலை உருவானது
அடுத்த சில மாதங்களில் முரளிக்கு காலாண்டு தேர்வு முடிந்து மதிப்பெண்கள் வந்தது. ஒன்றும் சொல்லிக் கொள்வது போல் இல்லை.
வசந்தி பற்களைக் கடித்தாள். “மாடு மேய்க்கத்தான் லாயக்கு” என்று திட்டினாள்.
“குழந்தையை வாய்க்கு வந்தபடி திட்டாதே. நம் கடமையை நாம் ஒழுங்காக செய்யவில்லை. நாம் ஒரு நாளாவது அவனுக்கு என்ன பரீட்சை என்று கேட்டிருப்போமா? இல்லை பரீட்சை தான் எப்படி செய்தான் என்று கேட்டிருப்போமா? அம்மா அப்பா இங்கேயிருக்கும் போது அவன் தான் வகுப்பில் முதல். அப்பா முரளிக்கு எல்லாம் சொல்லித் தருவார், படித்ததை எழுத வைப்பார். நாம் எல்லாவற்றையும் சமையல்காரியின் பொறுப்பில் அல்லவா விட்டுச் செல்கிறோம். வினை விதைத்தவன் வினை அறுக்கத் தான் வேணும்” என்றான்
அந்த வார விடுமுறையில் ராஜா தன் பெற்றோரைப் பார்க்க சீனியர் சிட்டிசன் ஹோமிற்குக் கிளம்பினான். வசந்தியும் வருவதாகக் கிளம்பினாள். ராஜா ஆச்சர்யமாகப் பார்த்தான், ஆனால் ஒன்றும் சொல்லவில்லை.
தாத்தா பாட்டியைப் பார்த்தவுடன் உணர்ச்சி வெள்ளத்தில் தடுமாறி முரளியின் கண்களில் நீர் வழிந்தது. தாத்தாவின் தோளில் ஏறிக் கொண்டு பாட்டியின் கன்னத்தில் முத்தமிட்டான். முரளியின் அன்பில் அவர்கள் கரைந்தனர்.
முதியோர் இல்லம் மிகவும் அழகாகவும் சுத்தமாகவும் இருந்தது. உள்ளே நுழைந்தவுடன் பெரிய பூந்தோட்டம், கட்டிடத்தின் இரண்டு பக்கமும் காய்கறித் தோட்டம்.
பின்னால் தென்னை வாழை மரங்கள். ஒரு மூலையில் பெரிய ஆலமரம், விழுதுகளுடன் சக்கரவர்த்தியைப் போல் நின்று கொண்டிருந்தது. அந்த மரத்தை மிக ஆச்சர்யமாகப் பார்த்தான் முரளி.
அன்று முழுவதும் தாத்தா பாட்டியிடம் விளையாடி விட்டு மாலையில் அரை மனதாகத் தன் பெற்றோருடன் வீடு திரும்பினான். வாய் ஓயாமல் எப்போதும் தொணதொணவென்று பேசும் முரளி, அன்று வாயை இறுக்க மூடிக்கொண்டு எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்தான்
‘ஏன்?’ என்பது போல் வசந்தி ராஜாவைப் பார்த்தாள்
‘தெரியவில்லை’ என்று உதட்டைச் சுழித்தான் ராஜா .
முரளி வழக்கம் போல் அவன் அறையில் படுக்காமல் அன்று இரவு அவன் அப்பாவின் பக்கத்தில் வந்து படுத்துக் கொண்டான்.
“ஏண்டா கண்ணா, இன்னும் தூங்கலயா?” என்றான் ராஜா மகனை அணைத்துக் கொண்டு
“டாடி, எனக்கு ஒரு சந்தேகம்?”
“கேளடா… என்ன உன் சந்தேகம்?”
“முரளி… உன் சந்தேகங்களை காலையில் கேட்டுக் கொள். இப்போது போய் தூங்கு” என்றாள் வசந்தி
“அம்மா… ஒரு பத்து நிமிடத்தில் என் சந்தேகங்களைத் தீர்த்துக் கொண்டு போய் விடுகிறேன் ப்ளீஸ்” என்று கூறினான்
“பகலில் கேளேன்… இப்படி தூங்கும்போது வந்து உயிரை வாங்குகிறாயே” என்று சிணுங்கினாள்
“நான் கேள்வி கேட்பதால் ஒன்றும் உயிர் போய் விடாது, நீங்கள் சண்டை போட்டால் தான் உயிர் போகும். இல்லையா டாடி?” என்றான்
ராஜா சிரித்துக் கொண்டே, ” நீ சொல்வது ரொம்ப சரி” என்றான் மகனிடம்
“அறிவு அதிகம் ஆக ஆக பாசம் குறையுமா டாடி?”
ராஜா மகனின் கேள்விக்கான காரணத்தைப் புரிந்து கொண்டான் .
“ஏன் அப்படிக் கேட்கிறாய்?” என்றான், அவன் வாயாலேயே பதில் வரவழைக்க
“ஓரறிவு கொண்ட ஆலமரத்தை அதன் விழுதுகள் முதுமையில் காக்கின்றன. ஆனால் ஆறறிவு கொண்ட மனிதர்கள் முதியவர்களை வெறுக்கிறார்களே, அது ஏன் டாடி?”
“எனக்குக் கூட உன் கேள்விக்கு பதில் தெரியவில்லை கண்ணா, நாளை யோசித்து சொல்கிறேன். நீ இப்போது போய் படு” என்றான்
அடுத்த நாள் முரளியை பள்ளிக்கு அனுப்பி விட்டு “புறப்படுங்கள்” என்றாள் வசந்தி ராஜாவிடம்
“எங்கே? நீ ஆபீஸிற்குப் போகவில்லையா?”
“இல்லை… அதை விட ஒரு முக்கியமான வேலை இருக்கிறது. உங்கள் அம்மா அப்பாவை…இல்லை நம் அம்மா அப்பாவை வீட்டிற்கு அழைத்து வந்து விடலாம். உடனே கிளம்புங்கள் ” என்றாள் வசந்தி
“என்ன?” என்றான் ஆச்சர்யத்துடன்
“நேற்று இரவு முரளி உங்களிடம் கேட்ட கேள்வி என்னை சாட்டையால் அடிப்பது போல் இருந்தது. அவன் கேள்வியும் எனக்குப் புரிந்தது. பதில் தெரியாத உங்கள் பதிலும் எனக்குப் புரிந்தது. என்னை மன்னிப்பீர்களா?” என்றாள் கண்கள் கலங்க
அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பனாய் ஆனான் அவர்களின் பிள்ளைக் கனியமுது முரளி
சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
Good content aunty