சமீபத்தில் ஒரு தொலைக் காட்சியில் வினாடி-வினா நிகழ்ச்சி ஒன்றினைக் காட்டினார்கள். அந்த நிகழ்ச்சி துவங்கும் முன் அதில் கலந்து கொண்டவர்களிடம் “நீங்களே உங்களை சுய அறிமுகம் செய்து கொள்ளுங்கள்” என்று அந்த நிகழ்ச்சி நெறியாளர் சொல்ல, பங்கேற்பாளர்கள் தங்கள் பெயர், படிப்பு மற்றும் இதர விபரங்களைத் தெரிவித்தனர். நெறியாளர் குறுக்கிட்டு, “கூடவே உங்களது தனிப்பட்ட குணாதிசயங்களைப் பற்றியும் சொல்லுங்களேன்… கேட்போம்!” என்று கேட்க, ஒரு இளம் பெண் தன்னைப் பற்றிய விபரங்களைச் சொல்லி விட்டு, தன் தனிப்பட்ட குணாதிசயமாய், “நான் ரொம்ப பிடிவாதக்காரியாக்கும்!” என்று சொல்லி விட்டு ஏதோ பெரிய ஹாஸ்யத்தைச் சொல்லி விட்டது போல் வாய் விட்டுச் சிரித்தாள்.
அதைக் கேட்ட அந்த நெறியாளரும், “ஓ… அப்படியா?… பயங்கரமா பிடிவாதம் பிடிப்பீங்களோ?… வெரி குட்!… வெரி குட்!” என்று சொல்ல, பார்த்துக் கொண்டிருந்த எனக்கு அது பெரும் “ஷாக்”கைத் தந்தது.
பிடிவாத குணம் என்பதென்ன… அடுத்தவரிடம் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்ளக் கூடிய ஒரு குணமா? உண்மையில் சொல்லப் போனால் அது ஒரு சாபம். அந்தக் குணம் இருப்பவர்கள் பெரும்பாலும் அதன் மூலம் பல பாதிப்புக்களை மட்டுமே அனுபவித்திருப்பார்கள், நிச்சயம் அதன் மூலம் கிட்டிய நல்ல விஷயம் என்று எதையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாதவர்களாகத்தான் இருப்பார்கள்
பிடிவாதக்காரர்களின் எதிர்பார்ப்பு என்ன?
பொதுவாகவே பிடிவாத குணம் கொண்டவர்கள் என்ன எதிர்பார்ப்பார்கள் என்றால், தாங்கள் சொல்வதை பிறர் மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும், ஒரு வேளை மாற்றுக் கருத்து இருந்தாலும் அதை விட்டு விட்டு இவர்களுடைய கருத்தையே ஒப்புக் கொள்ள வேண்டும், என எதிர்பார்ப்பார்கள். இது நடைமுறையில் எந்த அளவிற்கு சாத்தியப்படும். ஒவ்வொரு தனி மனிதனுக்கும் தனக்கென ஒரு சொந்தக் கருத்து இருக்குமல்லவா?. அடுத்தவர் கருத்தை அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனோபாவம் இன்று எத்தனை பேருக்கு இருக்கின்றது?
பிடிவாதக்காரர்கள் தங்கள் கருத்து விஷயத்தில் எப்படி உறுதியாக நிற்கின்றனரோ, அதேபோலதான் தாங்கள் விரும்பும் பொருளை அடைவதிலும் அதே உறுதியைக் காட்டுவர். அப்பொருளைத் தாங்கள் அடைவதில் எத்துனை இடர் வந்தாலும் சளைக்காமல் போரிடுவர், இடையில் எத்தனை பேர் வந்தாலும் எல்லோரையும் துச்சமெனெ மதித்துத் தூக்கியடிப்பர்.
குடும்ப வாழ்க்கையில் கணவன், மனைவி இருவருமே பிடிவாத குணம் அற்றவர்களாக இருப்பின் அக்குடும்பம் தெளிந்த நீரோடை போல் அமைதியாய் ஓடும். ஒரு வேளை இருவரில் ஒருவர் பிடிவாதக் குணம் கொண்டவராக இருந்து விட்டால் அங்கு குடும்ப வண்டியின் நகர்வு என்பது மற்றவரின் புரிதலையும், விட்டுக் கொடுக்கும் தன்மையையும் கொண்டே இருக்கும். இறைவனின் திருவிளையாடலால் இரண்டு பேருமே பிடிவாதக் குணம் பொருந்தியவராக இருந்து விடின், வக்கீலுக்குத்தான் வருமானம், விவாகரத்து வழக்கு நடத்துவதில்.
பிடிவாதக் குணம் என்பது பரம்பரை ஜீனா?
“அய்யோ என் மகன் பிடிவாதத்துல அவங்க அப்பா மாதிரியே!” என்று சில தாய்மார்களும், “உங்க தாத்தா ரத்தத்துல இருந்த அந்தப் பிடிவாதம் உன் ரத்தத்துல இல்லாமலா போயிடும்! என்று சில பாட்டிமார்களும் சொல்வது நடைமுறை வாழ்க்கையில் சகஜமாகக் காணப்படும் ஒன்றாக இருந்த போதிலும், பிடிவாதக் குணம் என்பதை பரம்பரை ஜீன் என்று ஆணித்தரமாகச் சொல்லி விட முடியாது. ஏனென்றால், எத்தனையோ கோபக்கார அப்பாக்களுக்கு சாந்தமான மகன்கள் இருந்ததுண்டு. அதே போல் எத்தனையோ பெட்டிப் பாம்பு அப்பாக்களுக்கு வெட்டித் தகராறு மகன்கள் இருந்ததுண்டு.
“சரி…அப்ப பிடிவாத குணம் எப்படித்தான் உண்டாகுது?”ன்னு யாரோ கேட்கிற குரல் என் காதில் கேட்குது. அதாவது, ஒரு குழந்தை ஒரு விளையாட்டு பொம்மையோ, அல்லது வேறு ஏதாவது பொருளோ, தன்னிடமிருந்து வாங்கி வைக்கப்படுகின்ற போது, அதைத் திரும்பவும் பெற்று விட வேண்டி, தன் முதல் பிடிவாத அஸ்திரமாக தொடர் அழுகையைக் காட்டுகின்றது.!… கர்ண கடூரமான அழுகையைக் கடை விரிக்கின்றது!… விளைவாய்… அதைச் சகிக்க மாட்டாத பெற்றோர் அப்போதைக்கு அதன் வாயை அடைக்கும் முகமாய் குழந்தையிடமிருந்து பெற்ற பொருளைத் திரும்பக் கொடுத்து விடுகின்றனர். அங்குதான் குழநதை கற்றுக் கொள்கிறது பிடிவாதம் பிடித்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை.
பள்ளியிலோ, கல்லூரியிலோ சுற்றுலா செல்லும் போது அனுமதி மறுக்கின்ற சில பெற்றோர்களை மாணவச் சமுதாயம், உண்ணா நோண்பு இருந்து சாதிக்கின்றது. இதுதான் பிடிவாதத்தின் அடுத்த கட்ட வளர்ச்சி. சில மாணவர்கள் இரு சக்கர வாகனம் வாங்குவதற்க்காக பிடிவாதத்தை கையிலெடுத்து வெல்கின்றனர். இந்தப் பிடிவாத குணத்தை நன்கு பழகிவிட்ட இளைய சமுதாயத்தினர் தங்கள் காதலின் வெற்றிக்குக் கூட அதைக் கையாளுகின்றனர்.
ஆக, ஒருவனுக்கு குழந்தைப் பருவத்திலிருந்தே பிடிவாத குணம் வளர்ந்து வருவதற்கு அவனுடைய பெற்றோர்களும் பெருங் காரணமாய் இருந்து விடுகின்றனர்.
பெரியோர்களின் பிடிவாதம்:-
இது ஒரு புறமிருக்க, இன்னொரு புறம் பிடிவாதமான பெற்றோர்கள் தங்கள் வாரிசுகளைச் சீரழிக்கின்ற விபரீதங்களும் நடந்து கொண்டுதானிருக்கின்றன. தாங்கள் மற்றவர்களிடம் பெருமை பேச வேண்டும் என்பதற்காக, சுமாராகப் படிக்கும் தன் மகனை கடினமான ஆங்கில மீடியம் பள்ளியில் சேர்த்து அவனது அரைகுறைப் படிப்பிற்கும் மூடு விழா நடத்தி விடும் அம்மாக்களும் உண்டு. எஞ்சினீரிங் கல்வியில் ஆர்வமில்லாத மகனை பெருமைக்காக வலுக்கட்டாயமாக அதில் திணித்து அவன் வாழ்க்கையையே இருளாக்கிய பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். பிளஸ்டூ முடித்தவனிடம் “அடுத்து நீ என்னப்பா படிக்க ஆசைப்படுகிறாய்?” என்று கேட்டு அவன் விருப்பப்படி சேர்த்திருக்கலாமே?… ஏன் சேர்க்கவில்லை? காரணம்… பிடிவாத குணம்.
இன்னும் சில குடும்பங்களில் தங்கள் வாரிசுகளின் திருமண விஷயங்களிலும் கூட, அவர்களின் விருப்பத்தைப் பற்றிக் கவலைப்படாமல், தங்களுடைய பிடிவாதத்தை நுழைத்து அதைச் செயல்படுத்துகின்ற பெற்றோர்களும் இருக்கிறார்கள். காரணம்…. பிடிவாத குணம்.
பிடிவாதம் தரும் நஷ்டங்கள்:-
பிடிவாத குணத்தை ஒரு நோய்க்கிருமி என வர்ணிக்கும் போது, அதனால் உண்டாகும் நோய்கள் என்னென்ன? என்பதையும் குறிப்பிட வேண்டுமல்லவா?
முதல் நோய், பிறரின் அதிருப்தியைச் சம்பாதித்துக் கொள்வது. அடுத்து, சில நேரங்களில் பகைமையை ஏற்படுத்திக் கொள்வது. மேலும், வீண் வாக்குவாதங்கள், அனாவசிய மனச் சங்கடங்கள், பொறாமை, தன்னம்பிக்கை இழப்பு, ஆரோக்கியச் சீரழிவு, இப்படியாக அடுக்கிக் கொண்டே போகலாம்.
பிடிவாத குணம் நம்மையேயறியாமல் நம்மிடம் ஒட்டிக் கொண்டாலும், சீரிய சிந்தனையை மேற் கொள்வதன் மூலம் நம்மை நாமே கட்டுப்படுத்திக் கொள்ளலாம். நம் மனத்துடன் நாம் உரையாடுவோம், “கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போ!…பிடிவாதம் பிடிக்காதே!” என்று நம் மனதிற்கு நாமே கட்டளையிடுவோம். உண்மையான விழிப்புணர்வு நமக்குள் இருக்கும் பட்சத்தில் நிச்சயம் நம் மனது நம் சொல்லுக்குக் கட்டுப்படும். பிடிவாத குணத்தை மாற்றியமைக்கும்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings