in ,

பெட்டி நிறைய பணம் (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

திர்ச்சி அடைந்தான்  சேகர்.

டீ குடித்து விட்டு வந்து ஆட்டோவை ஸ்டார்ட் பண்ணியவன் எதேச்சையாய் பின்பக்கம் திரும்பி பார்த்தபோதுதான் அந்த சூட் கேஸ் அவன் கண்ணில் பட்டது.  அதை எடுத்து திறந்து பார்த்தவனுக்குத்தான் அப்படி ஒரு  அதிர்ச்சி. 

பெட்டி நிறைய பணம்.

நெஞ்சு அடித்துக் கொண்டது. அதை அப்படியே மூடிவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தான். யாரும் கவனிக்கவில்லை. நெஞ்சு இன்னும் அதிகமாய் அடித்துக் கொண்டது.  ஆட்டோவை ஸ்டாண்டிற்கு விடலாமா இல்லை மேன்ஸனுக்கே  போய் விடலாமா. முடிவெடுக்க முடியாமல் மனது அலை பாய்ந்தது.  கடைசியில் மேன்ஷனுக்கே விட்டான்.

இரண்டாவது மாடியில் 23-ஆவது அறைதான் அவனுடையது.  அவனுடையதல்ல, அவர்களுடையது. ஆம்.. அவனுடன் சேர்ந்து இன்னும் இரண்டு பேர் இருக்கிறார்கள்.  கதவைத் திறந்து தனது தனது ட்ரங்க் பெட்டிக்குள் சூட்கேஷை வைத்து மூடினான்.

பெட்டி நிறைய பணம். அவனது அறைக்குள்.  முதல் தடவையாய் பார்க்கிறான். தன் இரண்டு கண்களால் !

பாயை விரித்து மல்லார்ந்து படுத்துக் கொண்டான். யார் அதை வண்டிக்குள் விட்டிருப்பார்கள்.? அன்று ஒட்டிய சவாரிகள் அனைத்தும் வரிசை பிசகாமல் அவன் மனத்திரையில் வந்து போயின.

முதல் சவாரி. அம்மன்கோவிலில் திருப்பத்தில் ஒரு முஸ்லீம் குடும்பம் ஏறியது. திவ்யா மாலில் இறங்கினார்கள். கையில் சூட் கேஸ் வைத்திருந்தார்களா என்று தெரியவில்லை.

அடுத்த சவாரி ஊர்வசி தியேட்டர் வாசலில்.  ஒரு சிறிய குடும்பம் ஏறிற்று.   அவர்களும் கையில் பெட்டி வைத்திருந்தார்களா தெரியவில்லை.

அடுத்த சவாரி இரண்டு பேர்,  நடுத்தர வயதுள்ளவர்கள்.  சர்ச் வாசலில் இறங்கிக் கொண்டார்கள்.  ஆனால் இறங்கி எதிர்புறம் நடந்தார்கள். ஒருவர் கையில் கைப்பை வைத்திருந்தார்.

கொஞ்ச நேரம் சவாரி இல்லை. ஐயப்பன் கோவிலருகில் டீ சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது சவாரி கேட்டு மூன்று பேர் ஏறினார்கள்.  எல்லோரும் ஆண்கள். கணேசபுரம் போனார்கள். எல்லா சவாரிகளிலுமே அதுதான் தூரமான சவாரி. ஏதோ ரகசியம் பேசுவது போல பேசிக்கொண்டே வந்தார்கள். கணேசபுரம் பஸ் ஸ்டாண்டில் இறங்குவதாக சொன்னவர்கள், அதற்கு முன்னேயே இறங்கிக் கொண்டார்கள்.

xxxxxxxxxx

தவை மறுபடியும் போய் இழுத்துப் பார்த்துக் கொண்டான். ஜெகனும் ராஜேந்திரனும் இப்போதைக்கு திரும்ப மாட்டார்கள். பணத்தை எப்படி பாதுகாப்பது. யோசித்தான்… யோசித்தான்..

டியுப் லைட்டை அனைத்து விட்டு ஜீரோ வாட் பல்பை எரிய விட்டான்.   சூட்கேஸை எடுத்துத் திறந்தான்.  அவ்வளவும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள்.  பத்து கத்தைகள் இருந்தன. புது நோட்டுக்கள். கணக்குப் போட்டுப் பார்த்தான், முதலில் இரண்டு லக்ஷம் வந்தது. அப்புறம் இருபது லக்ஷம் வந்தது. மீண்டும் கணக்குப் போட இருபது லக்ஷமே வந்தது.

கை நடுங்கிற்று. மூன்று கட்டுகளை தனியாக எடுத்து தரையில் வைத்து கண்குளிர பார்த்தான். திடீரென்று பயம் வந்தது.

தினமும் சவாரிக்குப் போனால் ஐநூறு ரூபாய்தான் நிற்கிறது. அப்படி பார்த்தால் இந்த காசை பார்க்க பத்து வருஷமாவது உழைக்க வேண்டியிருக்குமே. பணத்தை திருப்பி உள்ளே வைத்துவிட்டு மல்லார்ந்து படுத்தான்… யோசித்தான்.

பெட்டியை விட்டவர்கள் ஆடோ நம்பரை குறித்து வைத்திருந்து தேடி வருவார்களோ. நம்பரை வைத்து ஆளைப் பிடிக்க வேண்டுமானால் அவர்கள் ஆர்.டி.ஓ.வுக்கல்லவா போக வேண்டும்.   போவார்களோ ?

எல்லாம் புது நோட்டுக்களாயிற்றே. நம்பரை குறித்து வைத்துக் கொண்டு போலீஸ்க்கு போவார்களோ.  போலீஸ் எல்லா கடைகளுக்கும் இந்த நம்பர் நோட்டு வந்தால் பிடிச்சுக் கொடு என்று சொல்லி வைப்பார்களோ. 

சூட் கேஸை எத்தனை நாள் இங்கேயே பாதுகாக்க முடியும். பெட்டியை திறந்து மூடும்போது ஜெகனோ ராஜேந்திரனோ பார்த்து விட்டால் ?

பேசாமல் பெட்டியை எடுத்துக் கொண்டு ஊருக்கு கிளம்பி விடலாமா. அங்கே போனாலும் அம்மாவோ, அப்பவோ யாராவது ஏது இவ்வளவு பணம் என்று கேட்டால் என்ன பதில் சொல்வது. 

ஊருக்கு போகிறவழியிலேயே போலிஸ் கார்கள் பிடித்துக் கொண்டால்?   ஆட்டோவில் யாரோ விட்டிருந்தால் நீ நேராக போலிஸ் ஸ்டேஸனுக்கல்லவா வந்து ஒப்படைத்திருக்க வேண்டும் என்று கேட்டு முட்டிக்கு முட்டி தட்டுவார்களோ. 

பேசாமல் நமது கணக்கில் போட்டு விடலாமா. இவனுக்கு எங்கிருந்து இவ்வளவு பணம் வந்தது என்று பேங்க் கார்களுக்கு சந்தேகம் வருமோ.

புது நோட்டாக இருப்பதால், யாராவது போலீசில் புகார் கொடுத்திருந்து நம்பரையும் கொடுத்திருந்தால், பேங்க்கில் மிஷின் காட்டிக்கொடுத்துவிடுமோ.. கை விலங்கு அவனது மனக்கண் 3D-ல் தெரிந்தது

மண்டையை  வலித்தது.   பசி வேறு.. இவ்வளவு பணத்தை இங்கே வைத்து விட்டு எப்படி மெஸ்சுக்கு போய் வருவது. பேசாமல் ஆன்லயினில் ஆர்டர் போட்டுவிடலாமா. நாம் வெளியில் போயிருக்கும்போது ஜெகனோ ராஜேந்திரனோ வந்து கதவை திறந்து விட்டால். டிரங்க் பெட்டியை பூட்டவும் முடியாது.  அதற்கு கொண்டியே கிடையாதே.

தண்ணீரைக் குடித்து பசியை அடக்கிக் கொண்டான்.

வெளியில் யாரோ  நடந்து  வருவது கேட்டது.  பூட்ஸ் சத்தம் போல இருந்தது. போலிஸாக இருக்குமோ? நெஞ்சுக்குள் ரயில் ஓடியது அவனுக்கு. நெஞ்சை பிடித்துக் கொன்டு உட்கார்ந்திருந்தான். சில நொடிகளில் அந்த சப்தம் குறைந்து போனது. இப்போது நிம்மதி வந்தது அவனுக்கு.  மீண்டும் மல்லார்ந்து படுத்தவன் அப்படியே தூங்கிவிட்டான்.

திடுக்கிட்டு எழுந்தான். மணி இரவு எட்டு.

போர்வையை விலக்கிக்கொண்டு சூட்கேசை பார்த்தான். எத்தனை காலம்தான் ஆட்டோ ஓட்டுவது.  டாக்ஸி வாங்கி ஓட்டலாமா.   

பேசாமல் ஊரில் போய் இரண்டு ஏக்கர் விவசாய நிலம் வாங்கி விவசாயத்தில் இறங்கி விடலாமா.

யாருக்காவது சந்தேகம் வராமலேவா போகும். எப்படி திடீரென்று பணக்காரனான் என்று கேட்டால்.  இதற்கு வருமான வரி கட்டினியா என்று கேட்டால். பேசாமல் யாராவது ஆடிட்டரை பிடித்து வருமான வரியே கட்டிவிட்டால். அதற்கும் எங்கிருந்து பணம் வந்தது என்று அவர் கேட்டால்.  மண்டையை வலித்தது. 

வேறு வழியே இல்லையா.  பேசாமல் சூட் கேஸை சீட்டுக்கு பின்பக்கமே வைத்துக் கொண்டு சவாரிக்கு போய் விடலாமா.  பணத்தை விட்டவன் நம் ஆட்டோவை அடையாளம் கண்டு, வண்டியை நிறுத்தி சூட் கேஸை எடுத்துக் கொண்டு போகட்டுமே. எதற்கும் நாம் மெல்லவே ஓட்டுவோம்.

நாம் காலையிலிருந்து போன அதே ரூட்டில் போகவேண்டுமே…. எந்த சவாரியில் யார் விட்டார்களோ. ஒருவேளை யாராவது சவாரிக்கு வண்டியை நிறுத்தினால். ஏற்றினால், தங்களுடைய சாமான்களுடன் இதையும் சேர்த்து எடுத்துக் கொண்டு போய்விட்டால்.

மெல்ல சூட்கேஸை எடுத்துக்கொண்டு இறங்கினான்.

‘ஏனப்பா இன்னிக்கு சவாரி இல்லையா… சேட்டு கணக்கா சூட்கேஸ் தூக்கிட்டு நடக்கறே.. ‘ மேன்ஷன் மேனேஜர் விசாரித்தார். ‘ போட்டு ‘ வாங்கிவிடுவாரோ… பேசாமல் போனான். அதை ஆட்டோவில் வைத்தான்.  சவாரி போன அதே ரூட்டில் போனான்.

யோசித்து யோசித்து மண்டை வலித்துக்கொண்டே இருந்தது.  எங்காவது நிறுத்தி ஒரு டீ குடிக்க வேண்டும். மணி எட்டரை ஆகிவிட்டது. மத்தியானமும் சாப்பிடவில்லை. இப்போது பசி வயிற்றைக் கிள்ளியது.

இரட்டை வாய்க்கால் தாண்டி ஒரு திருப்பம். ஒரு லாரி திடீரென்று வந்துவிட்டது. பயங்கர வேகம். லாரியில் மோதாமல் இருக்க ஆட்டோவை இடது பக்கம் ஓடித்தான். கவனம் பிசகி ஒரு போஸ்டில் போய் முட்டியது ஆட்டோ.  அவ்வளவுதான். சூட்கேஸ் பறந்துபோய் ரோட்டோரம் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டியில் விழுந்தது.

இவன் அப்படியே மயங்கிப் போனான்,

லேசாய் மயக்கம் தெளிந்து லேசாய் கண்விழித்தபோது ஆஸ்பத்திரியில் படுத்திருப்பது தெரிந்தது. மருந்து நாற்றம் குடலைப் புரட்டியது. தலையில் கட்டு போட்டிருப்பது  புரிந்தது. மண்டையும் கிண்கிண்னென்று வலித்தது.

‘ நியூஸ் படிச்சியாப்பா… யாரோ ரெட்டை வாய்க்கால் பக்கத்துல ஒரு குப்பைத் தொட்டியில ஒரு சூட்கேஸ் நிறைய கள்ள நோட்டை வீசியிருக்காங்க… கிட்டத்தட்ட பதினஞ்சு லட்சமாம்… ‘

யாரோ இருவர் ரொம்ப தூரத்தில் பேசிக்கொண்டிருப்பது போல கேட்டது இவனுக்கு. 

மறுபடியும் மயக்கமானான் இவன்.

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கண்ணாடிக்கு ஒரு கண்டிஷன் (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

    ஹிந்தி ராணி (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு