in ,

பேத்தி (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

சாயங்காலம் ராமநாதன் கடையிலிருந்து திரும்பியபோது, கமலமும் ராஜாத்தியும் ஹாலில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். ராஜாத்தி நான்கு தெருக்கள் தள்ளி குடியிருப்பவள்.  கமலத்தின் கையில் ஒரு குழந்தை.

கேள்விக்குறியுடன் அவர் உள்ளே நுழைய சுதாரித்துக்கொண்ட கமலம், ‘ஏங்க… இது சுந்தரியோட பொண்ணுங்க… என்ன முழிக்கறீங்க… அதான் ராஜாத்தி மகள்… சென்னைல இருக்காளே… இந்தப் பக்கமா பேத்தியோட நடந்து போயிட்டிருக்கும்போது நான் பாத்து கூப்பிட்டு உட்கார்ந்து கொஞ்சிக்கிட்டிருக்கேன்… பாருங்க… குழந்தை அப்படியே அதோட அம்மா மாதிரியே இல்லை…? ‘

கொஞ்சம் சுதாரித்துக்கொண்டவர், ‘ ஓ… ‘ என்றபடி உள்ளே நடந்தார்.

‘ஏங்க… பாருங்க… குழந்தை உங்க பக்கமே பார்க்குது… யாரோ ஒரு தாத்தா போறாங்கன்னு பார்க்குது போல இருக்கு… நீங்க பாட்டுக்கு பேசாம போறீங்க… வந்து தூக்குங்களேன்…‘

ராஜாத்தியை பார்த்து புன்னகைத்துவிட்டு, கமலத்தைப் பார்த்து லேசாய் முறைத்தபடி, ‘ஏய்… நான் வெளில போயிட்டு வர்றேன்… கைகால் அலம்ப வேண்டாமா… ‘ என்றார்.

‘அதுவும் சரிதான்… ‘ என்றவள் சமாளித்தபடி, ‘ பாருடி குட்டி… தாத்தாவுக்கு உன்மேல எவ்ளோ அக்கறைன்னு… குட்டி இளவரசியை அழுக்கோட தூக்க முடியுமா… ‘ என்றாள். ராஜாத்தி சிரித்துக் கொண்டாள்.

அவர் வந்ததும், ‘ தோ தாத்தா வந்துட்டார்… ‘ என்றபடி அவரிடம் குழந்தையை நீட்டிவிட்டு சட்டென பின்வாங்கிக்கொண்டு, ‘இந்தாங்க… முதல் முதலா குழந்தையை தூக்கறீங்க… ஒரு நூறுரூபா குழந்தை கையில வச்சி ஆசீர்வாதம் பண்ணிட்டு தூக்குங்க… ‘ என்றாள்.  

யோசித்தபடி திரும்பிப் போய் ரூபாய் நோட்டுடன் வந்து குழந்தையின் கையில் திணித்துவிட்டு தூக்கிக்கொண்டார். 

‘ உனக்கென்ன… ராணி மாதிரி வருவே… நல்லா இரு… பேர் என்ன… ‘

‘ கமலி… ‘

அந்த நேரம் பார்த்து, குழந்தை சிறுநீர் கழித்து அவரது பனியன் லேசாய் ஈரமாகியது. 

‘ அடடா… தீத்தம் அடிச்சிட்டாளா… சரி கொடுத்துட்டு நீங்க போயி துடைச்சிக்கிட்டு வாங்க… ‘ என்றபடி குழந்தையை வாங்கிக்கொண்ட கமலம், ‘ தாத்தாவுக்கு தீர்த்தம் குடுத்தியா… ‘ என்று கொஞ்சினாள்.

கொஞ்ச நிறத்தில் குழந்தையைத் தூக்கிக்கொண்டு கிளம்பிவிட்டாள் ராஜாத்தி.

xxxxxx

தியம் அந்த ஃபோன் வந்ததிலிருந்து கமலத்தின் மனது அடியாய் அடித்துக் கொண்டது.

‘அம்மா… எப்படிமா இருக்கே… என்னைய விடு… உன் பேத்தி முகத்தையாவது பார்க்கனும்னு உனக்கெல்லாம் தோணலை இல்லை…? உன் மனசு கல்லாகிடுச்சாம்மா…  ‘

அழுதே விட்டாள் கமலம்.  வேறென்ன செய்ய முடியும், ராமனாதன்தான் கடிவாளம் போட்டு விட்டாரே.

‘தோ பார்… என்னைப் பொறுத்தவரை அவள் செத்துட்டாள். என் டைரியில குறிச்சும் வச்சுட்டேன்.  நான் செத்தாக்கூட அவன் என்னை வந்து பார்க்க வரக்கூடாது.  என் சொத்துல பங்கும் கிடையாது.  நீயும் அந்தப் பக்கம் கால்கூட வைக்கக் கூடாது. அப்படி போனே… நீ உன் தாலியை அறுத்துட்டுப் போ… ‘

ஆடித்தான் போனாள் கமலம்.

செந்செந்தமிழும் இப்படி செய்வாள் என்று கமலம் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அரசல் புரசலாக  அக்கம்பக்கத்து வீட்டுக்காரிகள் சிலர் சொல்லக் கேள்விபட்டிருந்தாள்.

‘அக்கா… வேலை முடிச்சு வர்ற செந்தமிழை அடிக்கடி ஒரு பையன் வந்து டூ வீலர்ல இறக்கிவிட்டுடுப் போறான்…  என்னன்னு பார்த்துக்கோக்கா… ‘

நெஞ்சு அடித்துக் கொண்டது. ஆனாலும் இந்த விஷயம் ராமநாதனுக்கு தெரிந்தால் வெட்டியே போட்டுவிடுவாள்.

அவளை கண்டிக்கும் போதுதான், அவன் தன்னுடன் கூட வேலை செய்யும் பையன் என்றும் பயப்படும்படி ஒன்றுமில்லை என்றும் சாதித்தாள் செந்செந்தமிழ்.  ஆனாலும் கடுமையாய் திட்டிவிட்டு பயமுறுத்தவும் செய்தாள் கமலம்.

‘அடியேய்… அது யாரோ எவரோ… எனக்குத் தெரியாது. ஆனா நீ ஏதும் தப்புப் பண்ணினேன்னு தெரிஞ்சுது என்னை நீ உயிரோட பார்க்கவே முடியாது… தெரிஞ்சுக்கோ… ‘

ஆனால் விதி யாரை விட்டது. ஒருநாள் செந்செந்தமிழ் அந்தப் பையனுடன் ஓடியே விட்டாள்.

அதற்கு கொஞ்ச நாட்கள் முன்னால்தான் அரசல்புரசலாக அவள் சொல்லியிருந்தாள்.

‘அவங்க நம்ம ஜாதி இல்லைம்மா… ஆனால் படிச்ச பையன், என்னை விட அதிகமாவே சம்பாதிக்கறான்… சென்னைல ஒரு கம்பெனில வேலைக்கு கூப்பிட்டிருக்காங்க. மாசம் ஒரு லட்சம் சம்பளம். அங்க ஆர்டர் கிடைச்சிடுச்சுனா இந்த வேலையை விட்டு சென்னைக்கு போயிடுவார்.  நானும்… ‘ என்று இழுத்தாள்.  கமலம் திட்டிவிட்டாள்.   

அப்படியும் ஓடியே விட்டாள் செந்தமிழ். நிச்சயம் ராமநாதன் இப்படி வேறு ஜாதி பையனுக்கு கண்டிப்பாய் மகளை கட்டிக்கொடுக்க மாட்டார் என்று எல்லோருக்கும் தெரியும்… அவள் எழுதி வைத்துவிட்டு போயிருந்த லெட்டர் சொன்னது.

‘அம்மா… அப்பா என்னை மன்னிச்சிடுங்க… நான் எங்க ஆபீஸ்ல வேலை செய்யற ஒருத்தரை விரும்பறேன்… ஆனா அவர் நம்ம ஜாதி இல்லை. நீங்க ஒத்துக்க மாட்டீங்கன்னு எனக்குத் தெரியும். ஆனாலும் நான் அவரோடத்தான் வாழ ஆசைப் படறேன்.  அவர் இல்லாம நான் இல்லை. அவருக்கு சென்னைல வேலை கிடைச்சு கிளம்பறார், நானும் அவரோடே கிளம்பறேன். அங்கே போயி நானும் ஏதாவது ஒரு வேலை தேடிக்குவேன்.   உங்களோட ஆசீர்வாதம் மட்டும் போதும்.  மறுபடியும் என்னை மன்னிச்சிடுங்க… ‘

படித்துப் பார்த்தவர் அதை கசக்கிப் போட்டுவிட்டு, கையில் கிடைத்ததை எல்லாம் தூக்கி தூக்கி போட்டார். காலுக்குப் பட்டதையெல்லாம் எட்டி எட்டி உதைத்தார். ஓடிப்போய் ஒரு பக்கெட் தண்ணீரை எடுத்து தலையோடு ஊற்றிக்கொண்டார். திரும்பி ஓடிவந்து அவர் கசக்கிப் போட்ட லட்டரை தீயிட்டு கொழுத்தினார்.  அப்புறம் கர்ஜித்தார்.  

‘தோ பார்… என்னைப் பொறுத்தவரை அவள் செத்துட்டாள். என் டைரியில குறிச்சும் வச்சுட்டேன்.  நான் செத்தாக்கூட அவன் என்னைப் பார்க்க வரக்கூடாது.  என் சொத்துல பங்கும் கிடையாது.  நீயும் அந்தப் பக்கம் கால்கூட வைக்கக் கூடாது. அப்படி போனே… நீ உன் தாலியை அறுத்துட்டுப் போ… ‘

பூகம்பமே வந்தது போல ஆடிப் போனாள் கமலம்.

மெல்ல மெல்ல நாட்கள் நகர்ந்தன. எப்போதாவது ஒரு தடவை நினைத்துக் கொண்டு அழுவாள். அத்துடன் சரி.

மூன்று மாதங்கள் ஓடியிருக்கும். ஒருநாள் ராஜாத்தி கமலத்திடம் வந்து கிசுகிசுத்தாள்.

‘எக்கோவ்… செந்தமிழ் உண்டாகி இருக்காலாம்.  சுந்தரி வடபழனி போயிட்டிருக்கும்போது செந்தமிழைப் பார்த்திருக்கா… அப்போ சொல்லியிருக்கா… ‘

இப்படி ஒரு நல்ல நிகழ்வு நடந்திருக்கும்போது மகளின் அருகில் நாமில்லாமல் போய் விட்டோமே என்று அழுதாள், கவலைப் பட்டாள். ஆனாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை.

நான்கைந்து மாதங்கள் கழித்து,  ஆஸ்பத்திரியில் வைத்து செந்செந்தமிழைப் பார்த்ததாக ராஜாத்தியிடம் சொல்லியிருக்கிறாள் சுந்தரி. பிறக்கப்போவது பையனாகத் தான் இருக்கும் என்று சொல்லியிருக்கிறாள்.  இதையெல்லாம் கேட்டு மனம் உருகினாள் கமலம்.

இன்னும் சில மாதங்கள் கழித்து ராஜாத்திக்கு போன் பண்ணி, தனக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாகவும், எப்படியாவது அம்மாவின் காதுகளில் இந்த செய்தியை போட்டு விடுங்கள் என்றும் சொல்லி அழுதிருக்கிறாள்.

‘கடவுளே, என் பொண்ணும் பேத்தியும் நல்லபடியா வீடு திரும்பனும்… நல்லபடியா வாழனும்… ‘ என்று கடவுளிடம் வேண்டத்தான் முடிந்தது.

திடீரென்று மத்தியானம் பார்த்து அந்த போன் வந்தது.

‘அம்மா… எப்படிமா இருக்கே… என்னய விடு… உன் பேத்தி முகத்தையாவது பார்க்கனும்னு உனக்கெல்லாம் தோணலை இல்லை… உன் மனசு கல்லாகிடுச்சாம்மா… ‘ என்றவள், ‘நாங்க சேலம் போய்க்கிட்டிருக்கோம்.. திடீர்னு உன்னை பார்க்கனும்னு தோணிச்சு. அப்படியே இந்தப் பக்கம் வண்டியை திருப்பிட்டோம்… இப்போ நாங்க ராஜாத்தி அத்தை வீட்டுக்கு வந்திருக்கேன்… கிளம்பி வந்து ஒரு தடவை உன் பேத்தி முகத்தைப் பார்த்துட்டு போயேன்… வரும்போது அப்பாவோட போட்டோ இருந்தா ஒன்னு எடுத்துக்கிட்டு வா… ‘ என்று அழுதாள்.

என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த கமலம், கொஞ்ச நேரத்தில் அதே நம்பருக்கு போன் போட்டாள். ‘ராஜாத்தியை கூப்பிடு‘ என்றுவிட்டு அவளிடம் பேசினாள்.

‘ராஜாத்தி… நான் கண்டிப்பா உன் வீட்டுக்கு வரமுடியாது… அவருக்கு தெரிஞ்சா கொன்னே போட்டுடுவாரு…  நீ ஒன்னு பண்ணு… என் பேத்தியை தூக்கிட்டு இங்கே வா. அவர் வர்ற நேரம்தான்.  நான் உன்னோட பேத்தின்னு சொல்லி சமாளிச்சுக்கறேன்…  ‘

‘எப்படியோ பேத்தியை தாத்தா கையில கொடுத்து ஆசீர்வாதமும் செய்ய வச்சாச்சு…‘ நினைத்துக் கொண்டாள் கமலம்.

ஆனாலும் உள்ளுக்குள் அடித்துக் கொள்ளத்தான் செய்தது கமலத்துக்கு, எப்போவாவது உண்மை தெரியாமலா போகும் அவருக்கு. மெல்ல மெல்ல மனதை திடப்படுத்திக் கொண்டு விட்டாள் கமலம்.

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    சிறை (சிறுகதை) – கோவை தீரா

    டைகர் (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு