2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
அந்த நாவல் புத்தகத்தை முழுவதுமாய்ப் படித்து முடித்ததும், வளரும் இளம் எழுத்தாளனான ரங்கநாதனுக்கு கோபஅலை உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை பரவியது.
புத்தகத்தை ஓங்கிச் சுவற்றிலடித்து, “த்தூ….இவனெல்லாம் ஒரு எழுத்தாளனா? இலக்கியச்சித்தர்ன்னு பட்டம் வேற இவனுக்கு…. ராஸ்கல்… கள்ளக்காதல்’ங்கறது ஒரு கலாச்சார சீரழிவு. சமூகத்துல பலகுற்றங்கள் உருவாக காரணமாயிருக்கற அடிப்படைக் கேடு அது.
அதை நியாயப்படுத்தற மாதிரி இப்படியொரு குப்பைக் கதையை எழுதி அதைப் புத்தகமா வேற போட்டு… வியாபாரம் பண்ணிக் காசு பார்க்கிற இந்த மாதிரி சண்டாளனை… சமூகக் குற்றவாளின்னு முத்திரை குத்தி… முச்சந்தில நிக்க வெச்சு சவுக்கடி குடுக்க வேண்டாமா?”
பற்களை நறநறவென்று கடித்தவர் வேகமாய் எழுந்து தரையில் கிடந்த அந்தப் புத்தகத்தை எடுத்து பக்கத்திலிருந்த குப்பைக் கூடையில் எறிந்தார்.
“என்னங்க இது… புத்தகத்தைக் குப்பைக்கூடைல போடறீங்க?” காபியை ஆற்றியபடியே உள்ளே வந்த பூங்கொடி கேட்க
“அது இருக்க வேணடிய இடமே அதுதான்… கதையாடி எழுதியிருக்கான் கதை? கதைன்னா நாலு நல்ல கருத்துக்களை சமூகத்துக்குச் சொல்ற மாதிரி இருக்கணும்டி…காசுக்காக எதை வேணுமானாலும் எழுதக் கூடாது. ‘நம்மோட இன்றைய படைப்புக்கள் தான் எதிர்கால இலக்கியங்கள்’ அப்படிங்கற எண்ணம் பேனாவைத் தொடும் போதே ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் வரணும்டி” காபியை வாங்கிக் கொண்டே சொன்னார்.
மெல்லச் சென்று குனிந்து, குப்பைக் கூடையிலிருந்த அந்த புத்தகத்தை எடுத்து எழுத்தாளன் பெயரை வாசித்தாள் பூங்கொடி. “அனலரசு, அட… இவரு பெரிய எழுத்தாளராச்சே, ஏகப்பட்ட நாவல்கள் எழுதி வெளியிட்டிருக்காரே”
“அடி அரை வேக்காடு… எத்தனை நாவல்கள் எழுதியிருக்காருங்கறது முக்கியமில்லைடி…எப்படிப்பட்ட நாவல்கள் என்பதுதான் முக்கியம்”
“க்கும்…. இந்த வாய்ச் சவடாலுக்கொண்ணும் கொறைச்சலில்லை… நீங்களும்தான் எழுதி எழுதிக் குவிச்சு வெச்சிருக்கீங்க… ஒரு புத்தகம் போட வக்கில்லை இன்னிக்கு வரைக்கும். அவரு எப்படியோ…. அதையும் இதையும் பண்ணி… ஆளுகளைப் புடிச்சு… நைஸாப் பேசி தன்னோட எழுத்துக்களை புத்தகமாக்கி வியாபாரமும் பண்ணிடறார். உங்களால அது முடியலைங்கறதுக்காக அவரோட படைப்புக்களைக் குப்பைன்னு சொல்லாதீங்க…”
“ஏய்… ஏய்… நிறுத்திக்கடி!… என்னோட கதைகளெல்லாம் அவனது மாதிரியில்லை… ஒவ்வொண்ணும் கருத்துப் பெட்டகங்கள். ஒரு நல்ல வாழக்கைக்குத் தேவையான அத்தனை வழிகாட்டுதல்களையும் உள்ளடக்கிய கதைகளாக்கும் என்னோட கதைகள்” ஆக்ரோஷமானார் ரங்கநாதன்.
“அதனால்தான் எல்லாம் வீட்டுல வெறும் காகிதங்களாகவே கெடக்குதுக” முணுமுணுத்தபடியே சென்ற மனைவியை உஷ்ணமாய்ப பார்த்தார்.
ஏற்கனவே நாவலைப் படித்ததால் ஏற்பட்ட கோபமும், இப்போது மனைவியின் பேச்சால் ஏற்பட்ட வலியும் அவரை உசுப்ப, சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்பினார் ரங்கநாதன் அந்த அனலரசு வீட்டை நோக்கி.
“விடக்கூடாது இவனையெல்லாம்… நேரே அவன் வீட்டுக்கே போய் அவன் பொண்டாட்டி புள்ளைக எதிரிலேயே… நாக்கைப் புடுங்கிக்கற மாதிரி நாலு கேள்வி கேட்டுட்டு வரணும்…. “ கறுவியபடி பஸ் ஏறினார்.
“இலக்கியச் சித்தர். அனலரசு” காம்பௌணடில் பதிக்கப்பட்டிருந்த அந்த எழுத்துக்களைப் படித்து விட்டு, “த்து” என்று காறித் துப்பியவாறே கேட்டைத் திறந்து உள்ளே சென்று காலிங் பெல்லை அழுத்தினார் ரங்கநாதன். கதவைத் திறந்த பெண் நெற்றியைச் சுருக்கிக் கொண்டு பார்க்க, “அனலரசு அய்யா….?”
“ம்…இருக்காரு…உள்ளார வாங்க்”
முன் ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்தார் ரங்கநாதன். இரண்டே நிமிடங்களில் நெற்றி, நெஞ்சு, வயிறு, கைகால்கள் என எல்லா இடங்களிலும் திருநீர்ப்பட்டை மிளிர வந்து எதிரில் அமர்ந்தார் அனலரசு.
“ஹும்… எழுதறதெல்லாம் ஒண்ணாம் நெம்பர் வக்கிரம்… வேஷத்தைப் பார் பக்திப் பழமாட்டம்.. கபடவேடதாரி…”
கண்களை இடுக்கிக் கொண்டு ரங்கநாதனைப் பார்த்த அனலரசு, “சார்… யாருன்னு தெரியலையே…” என்று சொல்ல
“அய்யா…என் பேரு ரங்கநாதன். ஒரு பெரிய எழுத்தாளனா வரணும்கற குறிக்கோளோட எழுதிக் குவிச்சிட்டிருக்கற சிறிய எழுத்தாளன். இப்பத்தான் பல்வேறு சிற்றிதழ்கள்லேயும்… ஒண்ணு ரெண்டு வெகுஜனப் பத்திரிக்கைகள்லேயும் என்னோட கதைகள் வர ஆரம்பிச்சிருக்கு”
“ஓ… படிச்சிருக்கேன் படிச்சிருக்கேன். ராயபுரம் ரங்கநாதன்தானே? போன் மாத பூங்குயில் சிற்றிதழில் கூட ஒரு சிறுகதை வந்திருந்தது”
அவர் தன்னுடைய பெயரைத் தெரிந்து வைத்திருந்தது ரங்கநாதனுக்கு மிகவும் பெருமையாக இருந்தது.
“எவ்வளவு பெரிய எழுத்தாளர் நீங்க… நீங்க என்னோட கதையைப் படிச்சேன்னு சொல்றது எனக்கு ரொம்ப பெருமையாயிருக்குது”
“எனக்கு எப்பவுமே சிற்றிதழ்கள் மீது அபரிமிதமான காதல் உண்டு…ஏறக்குறைய எல்லா சிற்றிதழ்களையும் வாசித்து விடுவேன்…”
ரங்கநாதனுக்கு வரும் போதிருந்த கோபம் சற்று வீரியம் குறைந்து வருவது போலிருக்க, சட்டென்று அதைப் பேச ஆரம்பித்தார். “நேத்திக்கு நீங்க எழுதின ஒட்டுறவு நாவல் படிச்சேன்…”
அப்போது அனலரசுவின் கைப்பேசி ஒலிக்க, பேசினார்.
“யாரு…ஓ..சம்யுக்தா பதிப்பகம் சண்முகமா? என்னய்யா சௌக்கியமா?…என்னது என்னோட நாவல் ஒண்ணு பிரசுரிக்கறதுக்கு வேணுமா?…ம்ம்ம்….” யோசித்தவர் ரங்கநாதனைப் பார்த்து தலையை மேலும் கீழும் ஆட்டி விட்டு, “வந்து…சண்முகம்…என்னோட நாவலே வேணுமா?…எதுக்குக் கேட்கறேன்னா…இப்ப ஒரு இளம் எழுத்தாளரோடதான் பேசிட்டிருக்கேன். அருமையான படைப்பாளி… சிற்றிதழ்களலே பவனி வந்திட்டிருக்காரு…நீங்க ஏன் அவரோட கதையைப் புத்தகமாக்கக் கூடாது. ஓ.கே…ரொம்ப நன்றி…. நாளைக்கே அவரை உங்களை வந்து பார்க்கச் சொல்றேன்”
போனை அணைத்தவர், ரங்கநாதனைப் பார்த்து, “ஓய்… சரியான அதிர்ஷ்டக்கட்டைய்ய்யா நீர். பாருங்களேன்… சொல்லி வெச்ச மாதிரி பதிப்பகத்தார் கூப்பிட்டு நாவல் கேட்கறாங்க்…நீர் எதிர்ல இருக்கீர்…சொல்லிட்டேன் உங்க கதையைப் புத்தகமாப் போடச் சொல்லி. ‘நீங்களே சிபாரிசு பண்ணறீங்கன்னா நிச்சயம் ஒரு மாபெரும் படைப்பாளியாத்தான் இருக்கணும் வரச் சொல்லுங்க போட்டுடறோம்’னுட்டாங்க. அதனால் நீங்க என்ன பண்ணறீங்க.. நாளைக்கே சம்யுக்தா பதிப்பகம் போய் அதன் ஓனர் சண்முக்த்தைப் பாக்கறீங்க…என்ன?” என்று சொல்ல
“அய்யா…ரொம்ப நன்றிங்கய்யா. வழக்கமா எழுத்தாளர்கள் தங்களுக்குப் போட்டியா இன்னொரு எழுத்தாளர் உருவாகறதையோ வளர்ச்சியடையறதையோ விரும்ப மாட்டாங்க. ஆனா நீங்க… ஒரு இளம் எழுத்தாளனுக்கு சிபாரிசு பண்ணி….” என்றார் ரங்கநாதன் குரல் தழுதழுக்க.
“அடடே…நீங்க வேற…இதெல்லாம் சக எழுத்தாளனுக்கு செய்யுற சாதாரண உத்வி…இதைப் போய் பெரிசா சொல்லிட்டு. சரி..சரி..அதை விடுங்க…என்னோட ஒட்டுறவு நாவலை நேத்திக்குப் படிச்ச்தா சொன்னீங்க…எப்ப்டியிருக்கு?”
ஒரு நிமிடம் பதிலேதும் பேசாது அமைதியாய் அமர்ந்திருந்த ரங்கநாதன், திடீரென்று, “அய்யா…நான் சமீபத்துல படிச்ச கதைகளிலேயே என்னை ரொம்ப பாதிச்ச….ரொம்ப நெகிழ வெச்ச கதைங்கய்யா அது. ஆஹா… என்னவொரு அற்புதமான் கதையோட்டம், வசனநடை. உடனே பாராட்டியே தீரணும்னு தோணிச்சு அதான் வீட்டைத் தேடி நேரிலேயே வந்திட்டேன். அய்யா இலக்கியச் சித்தர் அப்படிங்கற அடைமொழி உங்களைத் தவிர வேற யாருக்குமே பொருந்தாதுங்கய்யா”
சிறிது நேரத்தில் அங்கிருந்து கிளம்பி, வீட்டிற்கு வந்த ரங்கநாதன் முதல் வேலையாய் குப்பைக்கூடையில் கிடந்த அந்த ஒட்டுறவு நாவலை எடுத்து தூசி தட்டி புத்தக அலமாரியில் வைத்தார்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings