in

பெருமிதம் (சிறுகதை) – ✍ பு. பிரேமலதா, சென்னை.

ஜூன் 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

சிரியர் பயிற்சியில் ஒரு நாள், விளக்கப்படமானது (Chart) வேகமாக வீசப்பட்டதில், கரும்பலகையில் எழுத உபயோகப்படுத்தும் சுண்ணாம்பு துண்டு அடங்கிய பெட்டியை அது தட்டி, வகுப்பறைக்கு வெளியே போய் இரண்டு துண்டுகளாக விழுந்து கிடந்தது.

கால இயந்திரத்தில் பழுது ஏற்பட்டு, ஒரு நிமிடம் இடைநிறுத்தம் செய்வது போல் அவ்விடத்தில் இருந்த அனைவரும் அந்த சத்தத்தை கேட்டு பதறித்தான் போனார்கள்.

ஆசிரியர் ரகு, இன்னும் கோபம் தணியாமல் எதிரே நின்று கொண்டிருந்த கதிரை திட்டிவிட்டு வெளியே சென்று விட்டார். ஆண்கள் என்றால், எச்சூழ்நிலையிலும் அழக்கூடாது என்று சொல்லி வளர்த்திருப்பார்கள் போல, கண்களில் பெருகிய விழிநீர் கன்னங்களில் வழிந்து விடுவதற்கு முன், மிகக் கவனமாய், முக்கியமாக மாணவர்கள் பார்த்து விடாமல் கைக்குட்டையால் கண்களை ஒற்றிக் கொண்டு,   தான் கொண்டு வந்த பொருட்களை எல்லாம் எடுத்து வைக்கலானான் கதிர்.

மணிச்சத்தம், சந்தோஷ அலைஓசையாய் அவன் காதில் கேட்டதும், இந்த ஒரு விஷயத்திலாவது நமக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதே என மனதில் நினைத்துக் கொண்டு, வேகமாக வகுப்பை விட்டு வெளியேறினான் ஆசிரியர் பயிற்சி மாணவன் கதிர்.

வகுப்பறையின் வெளியே நின்று இந்நிகழ்வை பார்த்துக் கொண்டிருந்தவர்கள், பார்க்காதவர்கள், சத்தம் மட்டும் கேட்டவர்கள் என்று ஒவ்வொருவர் மூலமாகவும், வித, விதமாக, வித்தியாசமாக, வெவ்வேறு தோரணையில் பள்ளிக்கூடம் முழுவதும் அங்கு நடந்த நிகழ்வு ஆசிரியர் ரகு மற்றும் கதிர் பற்றி, வெவ்வேறு பரிணாமங்கள் பெற்று, பல்வேறு கதைகளாக உலா வரத்தொடங்கின.

பாரதிபுரம் என்ற ஊரில், ஊரின் நடுவில் கட்டிடம் பழமையாக இருந்தாலும், இருமருங்கிலும் மரம் மற்றும் செடிகளால் அழகுற்று பசுமையாய், இருபது வருடங்களாக இயங்கிக் கொண்டிருந்தது அந்த அரசு பள்ளிக்கூடம்.

பாரதிபுரம் ஒரு சிறிய ஊர் தான் என்றாலும், அங்கிருந்து இரண்டு மூன்று கிலோ மீட்டர் தள்ளி பெரிய ஊர்கள் உள்ளன. அங்கே கல்லூரிகள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள் அனைத்தும் உள்ளன. பெரிய ஊரான சோழபுரத்தில் மாணவ, மாணவிகள் நிறைய பேர் வெவ்வேறு இடங்களில் இருந்து வந்து கல்வி கற்று செல்வார்கள்.

அங்கு உள்ள கல்வியியல் கல்லூரியில் பி.எட். படிக்கும் மாணவர்கள், ஆசிரியர் பயிற்சிக்காக 2 மாதங்கள் வெவ்வேறு பள்ளிக் கூடங்களுக்கு சென்று 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு எடுக்கச் சொல்வார்கள்.

பெண்கள் கல்வியியல் கல்லூரியில் இருந்து நாங்கள் நான்கு பேர் பயிற்சிக்காக பாரதிபுரம் அரசு பள்ளிக்கூடம் செல்ல அறிவுறுத்தப் பட்டிருந்தோம். நாங்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு பாடப்பிரிவினை சேர்ந்தவர்கள் வசந்தி இயற்பியல், தேவி தமிழ், பமிலா ஆங்கிலம், பிரியாவாகிய நான் கணிதம்.

நாங்கள் அனைவரும் விடுதியில் இருப்பதால் எங்களுக்குள் சிறு பழக்கம், நெருக்கம் கிடையாது. பொதுவாக, ஒரே பாடப்பிரிவினை சேர்ந்தவர்களுக்குள் நட்பு அதிகமாக இருக்கும். ஏனெனில் எல்லா வகுப்புகளிலும் சேர்ந்து இருப்பார்கள். மற்றபடி  ஆங்கில வகுப்புகள் மட்டும் எல்லா மாணவர்களுக்கும் பொதுவாக நடக்கும்.

கலை மற்றும் அறிவியல் கல்லூரி போலல்லாமல், கல்வியியல் கல்லூரிகளில் அதிகமான படிப்பு மற்றும் பதிவுப் புத்தகங்கள் (Records), விளக்கப்படங்கள் (Charts), மின்னட்டைகள் (Flash cards), கைவினைப் பொருள்கள் (Art & craft),  பாடத்திட்டம் (Lesson plan) என்று நிறைய எழுத்து வேலைகளும், கை வேலைப்பாடுகளும் இருக்கும்.

சில நேரங்களில் சாப்பிடக்கூட நேரம் இல்லாதது போல் தோன்றும். பி.எட். ஒரு வருட படிப்பாக இருந்ததால், வேலைப்பளு அதிகமாக இருக்கும்.

பெண்கள் கல்வியியல் கல்லூரியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தள்ளி ஆண்களுக்கான கல்வியியல் கல்லூரி உள்ளது. நாங்கள் பயிற்சிக்காக பாரதிபுரம் பள்ளிக்கு சென்றது போல், ஆண்கள் கல்லூரியில் இருந்தும், நான்கைந்து பேர் வந்திருந்தார்கள், வெவ்வேறு பாடப்பிரிவில் இருந்து. அதில் ஒருவன்தான் கதிர்.

ஒரு வார காலம் பயிற்சி வகுப்புகள் நல்ல விதமாக முடிந்து விட்டன. வகுப்பு எடுப்பதென்றால் சாதாரணமாக தயாரித்து எடுத்தால் மட்டும் போதாது. இன்று மாணவர்களுக்கு எடுக்கப் போகும் பாடத்திற்கான பாடத்திட்டம் எழுதி இருக்க வேண்டும். பாடத்திட்டம் எழுதுவதற்கு என்று விதிமுறைகள் இருக்கும். அதைப் பின் பற்றி எழுத வேண்டும். பாடத்திட்டத்தில் கற்பித்தல் கருவிகள் என்ன பயன்படுத்தப் போகிறோம் என்பதை குறிப்பிட வேண்டும்.

ஒரே பாடத்திட்டத்தை, ஒவ்வொரு நாளும் இரண்டு முறை அழகாக எழுதி தொகுத்து வைக்க வேண்டும். ஒன்றை கல்லூரியிள் சமர்ப்பிக்க வேண்டும். மற்றொன்றை வகுப்பிற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

நாம் வகுப்பு எடுப்பதை கண்காணிக்க கல்லூரியில் இருந்து ஆசிரியர் வந்தால் அவர்கள் கையில் கொடுக்க வேண்டும். பாடத் திட்டத்திற்கு தகுந்தாற் போல் கற்பித்தல் மாதிரிகள், உபகரணங்கள் தயாரிக்க வேண்டும்.

ஒரு நாள் வகுப்பிற்கு குறைந்தது மூன்று கற்பித்தல் கருவிகள் (teaching aids) உருவாக்க வேண்டும். விளக்கப்படம் (Chart). மின்னட்டை (Flash card), திருப்பு விளக்கப்படம் (Flip chart), மதிப்பீட்டு விளக்கப்படம் (Evaluation chart) மாதிரிகள் என்று பல்வேறு விதங்களில் செய்யலாம். நம்முடைய கற்பனைக்கு தகுந்தவாறும், பாடங்களை மாண்வர்களுக்கு விளக்கிக் கூறுவதற்கு ஏதுவாகவும் கற்பித்தல் கருவிகள் இருக்க வேண்டும்.

கல்லூரியில் இருந்து ஆசிரியர்கள் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் நாங்கள் எடுக்கும் வகுப்பை கண்காணிக்க வரலாம். வழக்கமாக, வாரம் ஒரு முறை வருவார்கள்.  நாங்கள் எங்களுடைய கால அட்டவணையை ஆசிரியரிடம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆசிரியர்கள் வந்து, நாங்கள் எடுக்கும் வகுப்பை கண்காணித்து அதற்கு மதிப்பெண் குறித்து வைப்பார்கள்.

ஆண்கள் கல்வியியல் கல்லூரில் இருந்து ஆசிரியர் ரகு, கண்காணிப்புக்காக வந்தபோது தான் இந்த நிகழ்வு நடந்தேறி விட்டது.

நான், தேவி, பமிலா மூவரும் இடைவேளையில் பயிற்சி ஆசிரியர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறையில் இருந்தோம். அறையில் மூன்று «மைசகள், 9 நாற்காலிகள், ஒரு மின் விசிறி, அலமாரி, மற்றும் குடிதண்ணீர் நிரம்பிய குடம், தண்ணீர் அருந்த 2 டம்ளர்கள் இருந்தன.

அந்நேரத்தில் எங்கள் கல்லூரி ஆசிரியைகள் இருவர் வகுப்பு கண்காணிக்க வந்தார்கள். அவர்களுக்கு வணக்கம் தெரிவித்து உட்கார வைத்துவிட்டு, நாங்கள் வகுப்புகள் எடுக்கப் போகும் நேரத்தை ஆசிரியருக்கு சொல்லிக் கொண்டிருந்தோம். பமிலா, ஆசிரியர்களுக்காக தேநீர் எடுத்து வர வேகமாக வெளியேறினாள்.

அந்நேரத்தில், வசந்தி பரபரப்பாக வேகமாக வந்தாள். காலணிகளை வேகமாக வீசி விட்டு, எங்களிடம் ஆசிரியர் ரகு, விளக்கப்படத்தை கிழித்து கதிரின் முகத்தில் வீசி விட்டாராம். என்ன இருந்தாலும் இந்த ஆசிரியருக்கு ஏன் இவ்வளவு கோபம்? ஏன் இவ்வளவு அரக்க குணத்தோடு நடந்து கொண்டார்.

அதுவும் 8ம் வகுப்பு மாணவர்கள் முன்னால் கதிரை அவமானப்படுத்தி இருக்கிறார். இனி மறுமுறை எப்படி அவனால் அங்கு சென்று பாடம் நடத்த முடியும், இப்படி ஒரு ஆசிரியரை நான் கேள்விப்பட்டதே இல்லை, என்று பொறிபறக்க பேசிக் கொண்டிருந்தாள்.

“என்ன ஆயிற்று உனக்கு? ஏன் நிதானத்தை இழந்து பேசிக் கொண்டிருக்கிறாய்?” என்றாள் தேவி.

“வசந்தி, நீ அங்கு நடந்ததை நேரில் பார்த்தாயா” என்று கேட்டேன் நான்.

“எல்லோரும் தான் பேசிக் கொள்கிறார்கள்” என்றாள்.

பமிலா தேநீரோடு உள்நுழைந்து, “எதைப்பற்றி இவ்வளவு கார சாரமாக பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டாள்.

“ஆசிரியர் ரகு மற்றும் கதிரைப் பற்றித் தான்” என்றேன்.

“நானும் கேள்விப்பட்டேன். கதிருக்கு நெற்றியில் அடிபட்டு இரத்தம் வந்து விட்டதாமே, உண்மையா வசந்தி?” என்றாள் பமிலா அவள் பங்குக்கு.

ஏற்கனவே கோபத்தில் இருந்த வசந்தி, “உண்மையாகத்தான் இருக்கும்” என்று கூறிக்கொண்டே மறுபடியும் திட்டத் தொடங்கினாள். வசந்தி பேச ஆரம்பித்ததில் எங்கள் ஆசிரியைகள் வந்ததையே நாங்கள் மறந்துவிட்டோம். 

திடீரென்று எங்கள் ஆசிரியை லலிதா, “நானும் எவ்வளவோ சொல்லி பார்த்து விட்டேன் கோபத்தை குறைப்பதற்கு, அவர்தான் கேட்ட பாடில்லை?” என்றார்.

எங்கள் அனைவருக்கும் அவர் கூறியது அதிர்ச்சியாக இருந்தது. முதலில் என்னவென்று புரியவில்லை. பிறகு நிதானித்து யோசித்த பிறகு தான் புரிந்தது, எங்கள் ஆசிரியை லலிதாவின் கணவர்தான் ஆசிரியர் ரகு என்று.

வசந்தியின் முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே, பேந்த பேந்த சிறுகுழந்தை போல் விழித்துக் கொண்டிருந்தாள்.

வசந்தி, ஆசிரியர் ரகுவை தரக்குறைவாக பேசியதை நினைத்து மனம் வருந்தியது அவள் முகத்தில் தெரிந்தது. எங்கள் ஆசிரியையிடம் மன்னிப்பு கேட்டாள். அவர்களும் பெருந்தன்மையாக நடந்து கொண்டார்கள். எங்களுடைய வகுப்பை கண்காணித்து விட்டு விடைபெற்றுச் சென்றார்கள்.

உண்மையாக என்னதான் நடந்தது என்று கதிரிடமே கேட்டுவிடலாம் என்று முடிவெடுத்து, பள்ளி நேரம் முடிந்ததும் கதிரை சந்தித்தேன்.

கதிர் மிக வருத்தத்துடன், “தவறு எல்லாம் என்னுடையது தான். பாடத்தை தயார் செய்யாமல் தவறாக விளக்கம் அளித்தேன். விளக்கப்படமும் தவறானது. முந்தைய நாளே, அவர் பாடத்திட்டமும்,  கற்பித்தல் கருவிகளையும் சமர்ப்பிக்க சொல்லியிருந்தார். நான்தான் எதுவும் சரியாக செய்யவில்லை. பாவம், என்னால் ஆசிரியருக்குத்தான் கெட்டப் பெயர். அவரைப் பற்றி பள்ளி முழுவதும் தவறாக பரப்பி விட்டார்கள். நானும், என்னை இப்படி அவமானப்படுத்தி விட்டாரோ என்று முதலில் கோபமாகத் தான் இருந்தேன்.

ஆசிரியர் ரகு, என்னை தனிமையில் அழைத்துப் பேசியபோது தான், நான் எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டேன் என்று புரிந்தது. ஒவ்வொரு முறை பாடம் நடத்தும் போதும் மாணவர்கள் அனைவரின் வாழ்க்கையும் நம் கையில் உள்ளது என்ற எண்ணத்தோடு நம்மை தயார் செய்ய வேண்டும். கோபமாக இருந்ததால் உன்னை திட்டி விட்டேன். இனி இவ்வாறு நடக்காமல் பார்த்துக் கொள் என்று என் தோள் தட்டி, ஒரு தோழனாக பேசினார்.

பிரியா, நீ ஒரு விஷயம் கவனத்திருக்கிறாயா? குழந்தைகளுக்கு அவர்கள் அம்மா வீட்டுப் பாடங்கள் சொல்லிக் கொடுத்தால், குழந்தைகள் என்ன சொல்வார்கள் தெரியுமா. அம்மா, நீ சொல்லிக் கொடுப்பது தவறு. எங்கள் டீச்சர் இப்படிதான் சொல்லிக் கொடுத்தார்கள். உனக்கு ஒண்ணுமே தெரியலை அம்மா என்று மழலை மொழியில் சிரிக்கும்.

குழந்தைகள், தமது ஆசிரியர் சொல்லி கொடுத்தது தான் சரி என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கும். அவர்களுக்கு உலகமோ தாய், தந்தை தான். அப்படியிருந்தும் ஆசிரியர் கூறுவது தான் சரி என்று கூறுவதில் இருந்து ஆசிரியர்களுக்கு இச்சமுதாயம் கொடுத்திருக்கும் உயர்ந்த இடத்தை புரிந்து கொள்ளலாம். ஆசிரியர்களாகிய நாம் எவ்வளவு பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று புரிந்து கொண்டேன்” என்று கூறி விட்டு கிளம்பினான்.

கதிரிடம் பேசியதில் இருந்து என் மனம் தௌ¤வானது. கல்வி என்னும் பெருங்கடலில் இருந்து கரை சேர்த்திடும், கலங்கரை விளக்கமாக உயர்ந்து நின்றார் ஆசிரியர் ரகு.

கற்பிப்பதை விரும்பும் ஆசிரியர்கள், தங்கள் மாணவர்களுக்கு கற்றலை நேசிக்க கற்றுக் கொடுக்கிறார்கள் என்பது எவ்வளவு உண்மை. சுயநலமில்லா சேவை புரியும் ஆசிரியர்கள் மீது, தனி மரியாதையும், நன் மதிப்பும் ஏற்பட்டது.

கதிர் சமூகம் போற்றும் சிறந்த ஆசிரியராக வருவான் என்பதில் எனக்கு ஐயமில்லை. முதன்முறையாக, நானும் ஒரு ஆசிரியர் ஆகப் போவதை நினைத்து பெருமிதம் கொண்டேன்.

(முற்றும்) 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

4 Comments

  1. அருமையான கதை. ஆசிரிரியர்களின் உன்னதமான பணியை ஆசிரியர் தினம் அன்று உணர்த்த சிறப்பான கடை.
    கதை ஒவ்வொரு வரிகளிலும் மிகவும் தெளிவாகவும், விவரமான தகவல்களுடன் எழுதப்பட்டுள்ளது.
    கதை ஆசிரியர் லதாவுக்கு வாழ்துக்கள்.

தவறுகள் (சிறுகதை) – ✍ க.வெள்ளிங்கிரி, கோயம்புத்தூர்

டாக்டர் ஊசீஸ்வரனின் கணக்கு வாத்தியார் (சிறுகதை) – ✍ மரு. உடலியங்கியல் பாலா