in ,

பெரியாத்தா (சிறுகதை) – தி.வள்ளி, திருநெல்வேலி 

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

விடியற் காலையில் 5 மணிக்கு வீட்டு லேண்ட் லைன் போன் அடிக்க, மனதுக்குள் நெருடியது …வழக்கமாக அதிகாலை வரும் தொலைபேசி அழைப்புகள் நல்ல செய்தியைத் தாங்கி வராது… ஒரு படபடப்போடு தொலைபேசியை எடுத்தேன். லயனில் முறப்பநாடு பெரியப்பா…

“என்ன பெரியப்பா..” என்றேன் அதே படபடப்போடு…

“நம்ம பெரியாத்தா… ராத்திரி பத்து மணிக்கு போய் சேர்ந்துட்டா. இன்னைக்கு சாயங்காலம் எடுக்கிறோம்” என்றார்.

பெரியாத்தா, அப்பத்தாவின் அக்கா. ஆசாபாசமான மனுஷி…அவளை சந்தித்து பல வருடங்கள் ஆகிவிட்டது. நினைவுகள் பின்னோக்கி ஓடின… 1970 களின் பிற்பகுதி…பல வருடங்களுக்கு முன் கிராமத்தில் அவள் வீட்டில் நடந்த என் அக்காவின் திருமணம் நிகழ்வுகள் ஞாபகத்துக்கு வந்தது…

என் ஒன்னுவிட்ட அக்காவுக்கு கல்யாணம். திருநெல்வேலி பக்கத்துல இருக்கிற முறப்பநாடு கிராமத்துல. இந்த ரோஜா படத்தில் வருமே அழகிய சுந்தரபாண்டிபுரம், அது மாதிரி இதுவும் ஒரு அழகான பசுமையான கிராமம்

கல்யாணத்துக்கு சொந்த பந்தமெல்லாம் திருநெல்வேலியில் இருந்து ஒரு மெட்டாடர் வேன் வெச்சு போயி கிராமத்துல இறங்கினோம். மொத்தம் எட்டு வீடுகள் கொண்ட வளவு…எதிர் எதிராக நாலு நாலு வீடுகள்.. நடுவே பெரிய கூடம் அந்தக் கூட்டத்தில்தான் கல்யாண ஏற்பாடுகள் எல்லாம் நடந்துகிட்டிருந்துச்சு.

பேப்பர் மணவட போட நாகர்கோயிலில் இருந்து பீ.டி.(P.D) பிள்ளை குழுவினர் வந்து தங்கி இருந்தாங்க.. பேப்பரை விரல் போன்ற கட்டையை வைத்து குழாய்களா செய்து அதை அடுக்கி பலவித வண்ண ஜரிகை மற்றும் காகிதங்களால் மணமேடை அலங்காரம் செஞ்சுகிட்டிருந்தாங்க.. அந்தக் காலத்தில மிகவும் பிரபலமான ஒன்னு..ரொம்ப கொஞ்ச  இடங்களில பாக்கக்கூடியது, அதில கைதேர்ந்தவங்க அவங்க.

எதிர்வீட்டு திண்ணைல மூடைமூடையா பூவைக் கொட்டி, நிலையாரம், கல்யாண பொண்ணுக்கு தாழம்பூ ஜடையாரம், கழுத்தாரம் விளக்காரம், சுவாமி மற்றும் மூதாதையர் படத்துக்கு ஆரம், தலைக்கு கெட்டியாக கட்டிய சரம் என, பூ மணம் கமழ்ந்து கொண்டிருந்தது…

நாலு வீடு தள்ளி கல்யாணத்துக்கு தேவையான இனிப்பு, கார பலகாரங்கள் தயாராகிக்கிட்டிருந்தது. எண்ணெயும் சுத்தமான நெய்யும் சேர்ந்த கலவை நாசிய துளைச்சுது. இந்த சூழலே மனசுக்கு குதூகலத்தை கொடுத்தது.

என் அம்மாவிடம் மெதுவாக, “பாத்ரூம் எங்கம்மா?” ன்னு கேட்டேன் (என் கவல எனக்கு).

அது பெரியாத்தாவின் காதில் விழ, குடும்பத்துக்கே பெரியவங்கனால அவங்க சொல்லுக்கு மறுபேச்சு கிடையாது.. “வேலம்மா மவளா? ஏட்டி வா காண்பிக்கறன்” என்று சொல்லி வீடுகளின் பின்னாலுள்ள வெற்றிடத்திற்கு அழைத்து சென்றார். இங்கே ஓலையால் நாலைந்து தடுப்புகள்.

“இது எதுக்கு பெரியாத்தா?” என்று நான் கேட்க

“இது என்னட்டி கேள்வி? காலையில எந்திரிச்சு குளிக்க வேணாமாட்டி… இந்த பாரு..” என்று காண்பித்தார்.

நாலைந்து செங்கலை வைத்து அடுக்கிய அடுப்பில் பெரிய பெரிய பித்தளை அண்டாக்களில் தண்ணீர் நிரப்பப்பட்டு இருந்தது. “ராத்திரியே தீமூட்டி தண்ணீரை கொதிக்க வைச்சு பக்கத்துல இருக்கிற தகர டிரம்ல ஊத்திடுவாக..  பொம்பளைங்க எல்லாம் இந்தப் பக்கம்.. ஆம்பளைங்க எல்லாம் இந்த தடுப்புக்கு அந்தப் பக்கமும் நின்னு குளிக்க வேண்டியது தான்” என்றாள் பெரியாத்தா கூலாக..

“அய்யோ..” என்று அலறினேன்.  அம்மா என் கையை அழுத்தினாள்.

“என்னால எல்லாம் இப்படி திறந்தவெளியில குளிக்க முடியாது”என்றேன்.

“பேசாம இரு” என்று அதட்டினாள் அம்மா.

“கழிப்பறை வசதி” என்று நான் இழுக்க

பெரியாத்தா கொஞ்சமும் சளைக்காம “கக்கூஸ் தானே, இங்க வாட்ட்டி காண்பிக்கேன்” என்று கொல்லையின் வேறு இடத்திற்கு அழைத்து சென்றாள். அங்கே  சின்ன சின்னக் குழிகள் தோண்டப்பட்டு அதன் பக்கத்தில் செங்கல்கள் அடிக்கபட்டு உயரமாக இருந்தது.

“இங்க போக வேண்டியதுதான். ஆம்பளைங்க எல்லாம் வயக்காட்டுக்கு போயிடுவாங்க. பொம்பளைகளுக்கும் உங்கள மாதிரி குமரிகளுக்கும் தான்” என்றாள் பெருந்தன்மையோடு.

“அம்மா நான் இதுல எல்லாம் போக மாட்டேன். இப்பவே திருநெல்வேலி போயிடுவோம். போயிட்டு காலைல வருவோம்.” என்றேன் அழாத குறையாக.

“ஏட்டி வேலம்மா.. உம்மவ என்ன வெட்கப்படுதாளா? மெத்த வீட்ல  புதுசா பட்டணத்துல பாத்துட்டு ஒரு பாத்ரூம் கட்டி இருக்காக… அங்க போய் கிட சொல்லு” என்றாள். நன்றியோடு பெரியாத்தாவ பாத்து கைகூப்பினேன்.

பெரிய பிரச்சனை எல்லாம் ஓய்ந்து விட, அப்புறம் நிம்மதியாக சந்தோஷமாக கிராமத்தை சுற்றி வந்தேன் என் வயது பெண்களுடன். அரட்டைக் கச்சேரி, சீட்டு விளையாட்டு என பொழுது சந்தோஷமாக கழிந்தது. இரவு சுடச்சுட உப்புமாவும், இட்லியும், கத்திரிக்காய் கொத்சும், கல்யாண வீட்டு பலகாரங்களையும் சேர்த்து ஒரு பிடி பிடித்தோம்.

அத்தை நிறைய மருதாணி இலைகளை பறித்து வைத்திருந்ததை அரைக்கச் சொன்னாள். இரவு மருதாணியை எல்லோரும் வைத்துக் கொண்டோம்.

அப்போது தான் பிரச்சனையே ஆரம்பித்தது. இரவு வந்து சேரவேண்டிய சமையல் ஆட்கள் வரவில்லை. நேரம் ஆக ஆக டென்ஷன் கூடியது. வீடு பரபரப்பானது.

பெரியப்பா, அண்ணனை கூப்பிட்டு “ஏல கணேசா! போஸ்ட் ஆபீஸ் போ.. டெலிபோன் இருக்கும். போஸ்ட் மாஸ்டர்கிட்ட கேட்டுட்டு நான் தர்ற நம்பர்ல போன் போட்டு (சமையல் ஆட்கள்) தவசுபிள்ளையும் அவர் ஆட்களும் கிளம்பிட்டாங்களான்னு கேளு.. ஏன் இன்னும் வந்து சேரலன்னு விவரமா கேட்டுட்டு வா” என்றார்.

போன கொஞ்ச நேரத்திலேயே அண்ணன் திரும்பி வர “அப்பா! போஸ்ட் ஆபீஸ் மூடிட்டாங்க. போஸ்ட் மாஸ்டர் வீட்டுக்கு போயி சாவி கேட்டேன். அவரு மூணு நாளா டெலிபோன் வேலை பாக்கலைன்னு சொல்லிட்டாரு. இப்ப என்ன செய்றது? நான் தின்னவேலி போயி அருணாச்சலம் பிள்ளை ஐயாகிட்ட யாராவது தவசுபிள்ளை இருக்காங்களான்னு கேட்டுட்டு வரவா?”

“எதையாவது செஞ்சு தொல்லை! விடிஞ்சா மூகூர்த்தம். காலைல 8 மணிக்கு இலை போடணும்…பதினோரு மணிக்கு மதிய சாப்பாடு போடணும். அப்பத்தான் பட்டணத்துக்கு போறவங்க சாயங்கால ரயிலைப் பிடிக்க முடியும்” எரிச்சல் பட்டார் பெரியப்பா.

தொலைபேசி  வசதி என்பது அந்த கிராமத்தில் தபால் ஆபீஸில் மட்டுமே உண்டு. வேறு யார் வீட்லயும் தொலைபேசி வசதி கிடையாது.

“நான் மதுரையில இருந்து தவசுபிள்ள வேணாம். தின்னவேலில அருணாசலம் பிள்ளைய சொல்லிவிடுவோம்ன்னு சொன்னா, இந்த கிட்டு கேட்க மாட்டேன்னுட்டான். இப்ப பாரு மதுரகாரன் வரலைன்னா ஒன்னும் பண்ண முடியல” புலம்பிக் கொண்டிருந்தார் பெரியப்பா.

“அண்ணாச்சி எல்லாம் சமாளிச்சிடலாம்…” என்றார் அப்பா.

அதற்குள் பெரியாத்தா தலைமையில் பெண்கள் எல்லோரும் கூட, என்ன செய்வது என்று யோசித்தார்கள். மூடை மூடையாக காய்கறி ஒரு பக்கம் இருந்தது

அண்ணன், “நான் தின்னவேலிக்கு போயி அங்கே ஏதாவது தொலைபேசில மதுரக்காரங்க கிளம்பிட்டாங்களான்னு கேட்டுட்டு வரேன்” என்று சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.

அதற்குள் சித்தப்பா, “சைக்கிள்ல போயிட்டு எந்த நேரத்துக்கு வருவே?  வேனு சும்மாதான் நிக்குது. டிரைவரை கூட்டிட்டு போ, போயிட்டு என்னன்னு கேட்டுட்டு சீக்கிரம் வந்து சேரு”

அண்ணன் கிளம்பியதும், பெரியாத்தா, காய்கறி மூட்டையெல்லாம் ஆளை கூப்பிட்டு பிரித்து காய்கறிகளை தனித்தனியாக பிரித்து வைக்கச் சொன்னாள். பெரியாத்தா பேச்சுக்கு மறுபேச்சு கிடையாது.

ஒரு ரெண்டு மணி நேரம் கழித்து அண்ணன் வந்து சேர, “அப்பா! போன் போட்டு கேட்டுட்டேன், அவங்க கிளம்பிட்டாங்க, நடுவழியில் ஏதோ கிராமத்துல டயர் பஞ்சராகி வண்டி எடுக்க முடியாம நிக்கிறாங்க போல… வண்டியை சரி பண்ணிட்டு வந்து சேர எப்படியும் விடிஞ்சிடும்ன்னு சொன்னாங்க”

“அடப்பாவி இப்படி கவுத்துட்டான். இம்புட்டு பேருக்கும் சமையல் பண்ணனும். எப்படி காலைல அவுக வந்து செய்ய முடியும்”

“ஏலே ராசா.. மலையாத எல்லாம் செஞ்சு போடலாம். அதான் இத்தினிபேரு இருக்கோம்ல” பெரியாத்தா தைரியபடுத்த வேலை ஆரம்பித்தது…

பெரியாத்தா, அத்தை, அப்பத்தா, அம்மாச்சி,சித்தி எல்லாரும் சேர்ந்து முடிவு பண்ணி வேலைய ஆரம்பிச்சாங்க.

“இளவட்டப் பசங்க எல்லாம் வந்து கொஞ்சம் உதவி செய்யுங்க”

“ஆத்தா என்ன செய்யனும் சொல்லுங்க…”

“ஏல ராசா! முதல்ல எல்லா வீட்டிலும் போயி, அரிவாமனையும், திருவிளகுத்தியும் வாங்கிட்டு வா .ஏலே கணேசா! அப்படியே 25 தேங்காய் உடைச்சு வையி”

“நீ ஒன்னும் மலையாத அப்பு… நாங்க பாத்துக்குறோம். காய்கறிய வெட்டி வச்சு, எல்லாத்தையும் தயார் பண்ணி வெச்சுட்டா, அவுக காலையில வந்தா கூட சமையல் செஞ்சிடுவாங்க. காலைல பலகாரம் நாங்க பாத்துக்குறோம்.”

காய்கறிகள மடமடவென பிரிக்க.. அருவாமணையும், திருவிளகுத்தியும் வந்து சேர, ஒரு பாயை விரித்து… அந்த வளைவு பெண்கள் எல்லோரும் காய்கறி நறுக்க உட்கார… சித்தி, பெரியம்மா, எல்லோரும் காய்கறிகள பிரிச்சு எடுத்துக் கொடுக்க மளமளவென காய் வெட்டும் வேலை ஆரம்பித்தது.

“ஏல சமஞ்ச கொமரிகளா.. கல்யாண பொண்ணு தவிர, மத்தவங்க மருதாணியை கழுவிட்டு வந்து சேருங்க”

“அய்யோ அம்மா! எனக்கு ஒன்னும் தெரியாது” என்றேன் நான்.

“எட்டி வேலம்மா மவளே! நீ கருவேப்பிலைய உருகு, இதுக்கெல்லாம் தெரியனும்னு அவசியமில்லை”

காலைல பேசுன பெரியாத்தாளுக்கும் இப்ப உள்ள பெரியாத்தாளுக்கும் நிறைய வித்தியாசம். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு காய்கறியை எடுத்து நறுக்க ஆரம்பிக்க, இளவட்டங்கள் எல்லோரும் தேங்காயை உடைத்து திருக ஆரம்பித்தனர்.

“காலையில தவுசுபிள்ளைய எதிர்பார்த்து நிக்க வேணாம். ஒரு சாம்பார் வைச்சு பொங்கலை போட்டு.. கேசரியை கிண்டிப்புடனும். டவ்வியையும், பெரிய இட்லி பானையயும் பரணில இருந்து இறக்க சொல்லி யிருக்கேன். ஒரு தட்டுக்கு ஐம்பது  இட்லி வரும்.. ஒரு நாலு தட்டு வச்ச போதும். மூணு ஈடு அவிச்சா போதும்”

“செட்டியார் கடையில சொல்லி நூறு உளுந்தவடை போட்டு கொண்டு வர சொல்லு… மாப்பிள்ள வீட்டுக்காரர்களுக்கு வச்சிடலாம்”

இரவு விடிய விடிய யாரையும் தூங்கவிடல பெரியாத்தா.. ஒருபுறம் காலை பலகாரத்திற்கு சாம்பார் வைக்க தேவையானத ரெடி பண்ணிட்டு தவசுப்பிள்ளை வந்தால் சமைக்க ஏற்பாடு பண்ணிய இடத்தில் எல்லாவற்றையும் கொண்டு போய் வைக்கச் சொன்னாள்.

“அம்மா நான் தூங்க போறேன் இதுக்கு மேல என்னால முடியாது” எழுந்து மெதுவாக நழுவி, மச்சு வீட்டுக்கு போய் செட்டிலானேன்.

காலைல ஆறு மணிக்கு அம்மா எழுப்பினாள்.

“எல்லாரும் எந்திரிச்சு, குளிச்சு ரெடியாயாச்சு. நீ மட்டும் தான் இன்னும் தூங்கிட்டு இருக்கே. சீக்கிரம் குளிச்சிட்டு, சேலைய கட்டிட்டு வா” என்று பட்டுபுடவையும் நகையும் கொடுத்து விட்டு கிளம்பினாள்.

கீழே இறங்கி வந்த நான், வியப்பின் உச்சிக்கே போனேன். ராத்திரி எங்கே உட்கார்ந்து காய்கறி நறுக்கிக் கொண்டு இருந்தார்களோ அந்த இடம் சுத்தமாக்கப்பட்டு ஜமக்காளம் எல்லாம் அழகாக, ஒழுங்காக, விரிக்கப்பட்டு, மணமேடை அலங்காரம் முடிஞ்சு, நிலையாரம், மாவிலைத் தோரணம் ,வாழைமரம் என எல்லாம் அந்த நாலு மணி நேரத்தில் மாயாஜாலம் போல நடந்து முடிந்திருந்தது. மணமக்கள் ஒருபக்கம் ரெடியாகிக் கொண்டிருந்திருந்தனர்.

மணக்க, மணக்க சாம்பாரும், இட்லியும், பொங்கலும், கேசரியும் தயாராகிக் கொண்டிருந்தது.

காலையில் 7 மணிவாக்கில் தவசுபிள்ளை தன் ஆட்களுடன்  வந்து சேர, எல்லோருக்கும் பெரிய நிம்மதி. பிறகென்ன கல்யாணம் ஜாம் ஜாம் என்று  நடந்து முடிந்தது.

கல்யாணம் நல்லபடியா முடிஞ்சதுக்கு முக்கிய காரணகர்த்தா பெரியாத்தா என்ற எண்ணம்  மனதை வாட்ட… அவளுக்கு இறுதி மரியாதை செலுத்த ஊருக்கு கிளம்பினேன்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

சரஸ்வதியும் சாஹித்ய அகாடமியும் (சிறுகதை) – பானுமதி பார்த்தசாரதி

பெரிய மனசு (சிறுகதை) – M.மனோஜ் குமார்