இந்தக் குறுநாவலின் மற்ற அத்தியாயங்களை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
தொகுதி 1 தேர்வை குறிக்கோளாகக் கொண்டு மூவரும் பயணித்தனர். ஆனாலும் துர்காவோ அந்த பணி கிடைத்தால் மட்டுமே தன் குடும்பத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல முடியும் என்பதை உணர்ந்தாள்.
மிகுந்த ஈடுபாட்டுடன் தொகுதி 1 தேர்வுக்குத் தயாராயினர். அலுவலகத்தில் துர்காவுக்கு மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியது. அடுத்தடுத்து அவள் எடுக்கும் விடுப்பு மூத்த அதிகாரிகளுக்கு எரிச்சலைக் கிளப்பியது. நேரடியாகவும் மறைமுகமாகவும் அவளை பழிவாங்கத் தொடங்கினர்.
அவ்வளவு எளிதாக எதையும் பெற்று விட முடியாது என்பது துர்காவும் உணர்ந்தாள். சென்னையில் மூவரும் எழுத மூவருக்கும் தேர்வு முடிவு ஓராண்டுக்கு பின்னரே வந்தது. அந்தத் தேர்வில் மூவரும் வெற்றி பெறத் தவறினர்.
மனிதர்களின் மனதினை விரைவாக எடை போடும் துர்காவிடம் மருது தனக்கு விருப்பமான பெண்ணின் கதையை கூறினான். அவளோ அண்ணன் என்ற பாசத்தில் ஒழுங்காக இலட்சியத்திற்காக படிக்கும்படி அறிவுரை கூறினாள்.
மருதுவின் குணநலத்திற்கு காதல் என்பது ஒருக்காலும் கை கூடாது என்பதை மனதில் நினைத்துக் கொண்டாள். இதனிடையே மருதுவுக்கு திருமணப்பேச்சு நடந்தது. அடுத்த தொகுதி 1 தேர்விற்கான அறிவிப்பும் வந்தது.
துர்கா தொகுதி 1 தேர்விற்காக சில நாட்கள் விடுப்பு கேட்க அவளின் உயரதிகாரிகளளோ ‘ ஏழைக்கு எதற்கு எட்டாத ஆசை? வேலையை சரியாக பார்க்காவிட்டால் பின்விளைவுகள் மோசமாக இருக்கும்’ என மிரட்டினர்.
தன் சம்பளம் மட்டுமே குடும்பத்தின் ஆதாரமாக இருந்த நிலையில் துணிச்சலான முடிவை எடுத்தாள் துர்கா. இரண்டு மாதங்கள் ஊதியம் இல்லா விடுப்பினைக் கோரினாள். அதை உயரதிகாரிகளளால் மறுக்க முடியவில்லை.
ஊதியம் இல்லா விடுப்பில் துர்கா படிக்கிறாள் என்பதை அறிந்த துர்காவின் அத்தை சக்தி கனியிடம் ‘மீண்டும் வேதாளம் முருங்க மரம் ஏறிட்டு, யாராவது இப்படி செய்வார்களா? வீட்டின் நிலையை உணர்ந்து செயல்பட வேண்டும் முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா? ஏற்கனவே ஒரு முறை தோல்வி அடைந்தாயிற்று. இந்தத் தேர்வில் முடிவும் ஒரு வருடம் கழித்து தான் வருமாம். தற்போது வேலையில் இதனால் பல பின்விளைவுகள் வருவதை துர்கா அறிவாளா?’ என்று தன் ஆதங்கத்தை கொட்டினாள்.
சென்னையில் ஒரு சிறந்த போட்டி மையத்தில் ஆனந்த் பயிற்சி பெற துர்காவும் மருதுவும் நெல்லையின் பெரிய பயிற்சி மையத்தில் மாதிரி தேர்வுகளை எழுதி பயிற்சி எடுத்தனர். இத்தனை பெரிய மையத்தில் மாணவர்களை நிர்வாகம் செய்ய கேட்கும் கட்டணம் சரியானதுதான் என்ற முடிவுக்கு வந்தாள்.
ஏற்கனவே முந்தைய வருடமும் இதே மையத்தில் படித்ததால் துர்காவுக்கும் மருதுக்கும் அம்மையம் கட்டண விலக்கு அளித்தது.
துர்கா அளவுக்கு மருதுவுக்கு விடுப்பு ஏதும் கிடைக்கவில்லை. ஏற்கனவே சென்ற தொகுதி 1 தேர்விற்கு ஒரு மாதம் ஊதியமில்லா விடுப்பினை துய்த்ததால் மீண்டும் அதே மாதிரி விடுப்பினை எடுத்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவனுக்கு ஆணை வழங்கினர்.
துர்காவைப் போலவே ஆனந்துக்கும் தன் வீட்டின் மீதான பெரும் பொறுப்பு இருந்தது. படிக்கும் தம்பி கல்யாண வயதில் இரு சகோதரிகள் விவசாயத்தை பார்க்கும் தந்தை என அவன் குடும்பம் அவனுடைய சம்பளத்தை எதிர்பார்த்தது.
மருதுவுக்கு அவன் அலுவலகத்தில் இதற்கு முன்பு இவ்வாறு தொகுதி 1 தேர்விற்கு முயற்சி செய்து தங்கள் வாழ்க்கையை கெடுத்துக் கொண்டதாக பலரின் எடுத்துக்காட்டுகளை வரிசையாக் கூறி அவன் ஆர்வத்தை மட்டுப்படுத்தினர்.
இரு திங்கள்கள் தன் நண்பர்களிடம் கடனை வாங்கியே தன் குடும்பத்தின் அத்தியாவசிய செலவுகளை எதிர் கொண்டாள் துர்கா. பல போராட்டங்களுக்கு இடையில் முதன்மை தேர்வு எழுத சென்னை புறப்பட்டாள்.
அங்கு பயணித்த போதே நேர்முகத் தேர்வுடன் கூடிய தொகுதி 2 தேர்வில் வெற்றி பெற்ற செய்தி பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அவளுக்கு அளித்தது. அதில் கிடைக்கும் பதவி அதிகாரிகளுக்கு இணையானது என்பதால் தன் குடும்பத்தின் பணப்பிரச்சனை தீரும் என்ற நம்பிக்கை கொண்டாள்.
அடுத்தடுத்து மூன்று நாட்கள் முதன்மை தேர்வினை ஒரே தேர்வு மையத்தில் மருதுவும் துர்காவும் எழுதினர். பல பயிற்சி மையங்களின் மாதிரி வினாத்தாள்களை துர்காவுடன் பகிர்ந்து கொண்டும் விவாதித்துக் கொண்டும் இருந்தான் மருது.
தொகுதி 1 தேர்வு வரலாற்றிலேயே அந்தத் தேர்வு தான் 200 அளவில் காலியிடங்களுக்கான தேர்வாக இருந்தது. அதனால் மிகுந்த நம்பிக்கை உடன் மூவரும் அதனை எதிர்கொண்டனர்.
தேர்வு முடிந்து ஓரிரு மாதங்கள் கழித்து மருதுவுக்குத் திருமணம் கோலாகலமாக நடந்தது. அதில் மருதுவுடன் வேலை பார்க்கும் 200 பணியாளர்கள் கலந்து கொண்டது அவன் கிராம மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியது. தன்னுடன் போட்டித் தேர்வில் பயணித்த பல நண்பர்கள் அவன் திருமணத்தில் கலந்து கொண்டனர்.
அதில் சென்னையிலிருந்து வந்த ஆனந்தைக் கண்டவுடன் பேரானந்தம் அடைந்தான் மருது. தங்கச்சி துர்காவும் அவனுடனும் அண்ணியிடனும் தனியாக புகைப்படம் எடுத்துக்கொண்டாள். துர்கா தன்மீது கொண்ட பாசத்தைக் கண்டு நெகிழ்ந்து போனான்.
ஒரு நாள் ஆனந்தை அழைத்து தயங்கியபடியே தன் தங்கை துர்காவை பற்றிய எண்ணத்தை மென்மையான குரலில் கேட்டான். ஆனந்தும் தன் குடும்பத்திற்கு விளக்காக மிளிரும் துர்காவின் பேராற்றல் தன்னை கவர்வதாக இலை மறைக்காயாக தன் எண்ணத்தைக் கூறினான்.
அடுத்த நொடியே துர்காவை அழைத்து அவளிடம் நடந்ததைச் சொல்ல அவளோ திடுக்கிட்டு சற்று அமைதியானாள். ஆனந்தை முன்னோடியாகவும் ஆசானாகவும் தன் மனதில் மிகப்பெரிய இடத்தில் வைத்துள்ளதாகவும் அவனைத் திருமணம் செய்யும் எண்ணம் தன்னிடம் துளி அளவும் இல்லை என்றாள். ‘அவசரப்பட்டு விட்டோமோ?’ என்று தன் மனதில் நினைத்துக் கொண்டான் மருது.
பல மாதங்கள் கழித்து நேர்முகத் தேர்வுக்கான தொகுதி 1 முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்ற தேர்வர்களின் விவரம் வெளியிடப்பட்டது. துர்காவை விட ஐந்து மதிப்பெண்கள் அதிகம் பெற்ற ஆனந்திற்கு இடம் கிடைக்கவில்லை. அவனிடம் தமிழில் பட்டம் இல்லை. அவர்கள் இருவரின் மதிப்பெண்களை விட 20 மதிப்பெண்கள் குறைவாகப் பெற்ற மருதுக்கும் இடம் கிடைக்கவில்லை.
எந்தத் தமிழ் தன்னை தேர்ந்தெடுத்ததாக எண்ணினாளோ அந்தத் தாய்த்தமிழே அவளுக்கு வெற்றியை பரிசளித்தாள். நேர்முகத் தேர்வுக்கு செல்ல தோழி ஒருத்தியிடம் கடன் வாங்கிக் கொண்டு சென்று அதில் சிறந்த மதிப்பெண்ணும் பெற்றாள்.
மொத்தமாக தொகுதி 1 தேர்வில் வெற்றி பெற்றவர்களின் விவரம் அறிவிக்க அதில் துர்காவுக்கு காவல்துறையில் மாவட்ட துணை கண்காணிப்பாளர் பதவி கிடைத்தது.
இதை அறிந்த அவளுடன் சண்டை போட்ட பக்கத்து வீட்டு சொந்தக்காரன் இனிப்பு பெட்டியுடன் அவள் வீட்டுக்கு வந்து வாழ்த்துக்களைச் சொல்லி முன்னாள் நடந்த விடயங்களை பெரிதாக எண்ண வேண்டாம் தன்னை மன்னிக்குமாறு கேட்டுக் கொண்டான்.
மாலையோடு வந்த காவல் நிலைய பொறுப்பதிகாரி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டு சென்றான். காவல் நிலையத்தில் தானும் தன் குடும்பமும் கண்ணீரோடு ஒரு கொடுமையான நரகமான இரவைக் கழித்த ஞாபகம் அவள் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.
முந்தைய பணியிடத்தில் பிரிவு உபச்சார விழா சிறப்புடன் நடைபெற்றது. துர்காவை வாட்டி வதைத்த அந்தப் பெண் அதிகாரி ஒரு சேலையை தன் அன்பின் பரிசாக அளித்ததுடன் ‘துர்கா ஒரு விடாமுயற்சியின் அடையாளம்’ என வாழ்த்துப் பாடினாள்.
திருக்குறள் கூறுவது போல பொருள் அல்லவரை பொருளாகச் செய்யும் பொருள் தன்னிடம் இல்லையே என பல நாள் துர்கா ஏங்கியதுண்டு. ஆனாலும் என்றும் அழியாத பேராயுதமாகிய கல்வி தன் எதிரிகளையும் எதிர் நிலையில் உள்ளவர்களையும் இணக்கமாக்கியதை எண்ணி ஆச்சரியமடைந்தாள்.
காக்கி உடையில் மிடுக்காக வந்த துர்காவைக் கண்ட சக்திகனி ஆனந்தக் கண்ணீருடன் கட்டி அணைத்தாள். துர்காவின் அத்தையோ தன் மருமகள் கெட்டிக்காரி என்று கிராமம் முழுவதும் தம்பட்டம் அடித்தாள்.
பொருள் இல்லாததால் ஊரெல்லாம் ஒதுக்கித் தள்ளிய துர்காவின் குடும்பம் இப்போது கிராமத்தின் நட்சத்திரக் குடும்பமாக மாறியது. ஊரில் கோயில் திருவிழாவில் துர்காவை அழைத்து சால்வை அணிவித்து வாழ்த்தி முதல் மரியாதை சிறப்பு செய்தனர். கல்வியை விட இவ்வுலகில் பேராயுதம் உண்டோ?
இந்தக் குறுநாவலின் மற்ற அத்தியாயங்களை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings