ஜூலை 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
மலர்கள் தின்னும்
மனிதக் காட்டிலிருந்து
விடைபெறுகிறது
நித்தம் ஒரு பூ!
சூடப்படவேண்டிய பிஞ்சுப்பூக்கள்
சூறையாடப் படுகின்றன
மனிதத்தோல் போர்த்திய
மிருகங்களால்!
கல்விகற்க வந்த இடத்தில்
களவாடப்படுகிறது கற்பு!
பள்ளிக்கூடங்களையே
பள்ளியறைகளாக மாற்றுகின்றன
பயிற்றுவிக்கும் மிருகம் சில!
கல்வியென்னும் நீர்சுமக்கும்
கங்கையில் கலந்திருக்கின்றன
கழிவுநீர் அசிங்கங்கள்
அங்கங்கே!
பூக்கின்ற பொலிவைக் கண்ணால்
பார்க்கின்ற மனம் விடுத்து
இதழ் இதழாய்ப் பிய்த்தெறிய
இதயம் எப்படிச் சம்மதிக்கும்!
கனவுகளோடு வந்த மேகங்களைக்
கலைத்தழித்த கடுங்காற்றாய்
கற்பிக்கும் ஆசிரியர் சிலர்!
நாவில் தேன்வைத்து நெஞ்சில்
நஞ்சு தேக்கிய உறவுகள் சில!
ஆளில்லா நேரம் களவாடப்பார்க்கும்
அக்கம்பக்க பொய்முகங்கள் சில!
வந்துபிறந்த குழந்தை முதல்
வாழ்ந்துமுடித்த கிழவி வரை
கருவறையும் கல்லறையும்தவிர
காத்துக்கொள்ள இடம் இல்லை!
பெண்ணென்பவள் துய்க்கவந்த
வெறும் பொருளல்ல! -அவள்
அன்பினில் மானுடம் உய்க்கவந்த
பெரும்பொருள்!
கண்களுக்குக் கற்றுக்கொடுப்போம்
பெண்களைப் பார்க்கும் பார்வையை!
காத்துநிற்போம் மனித இனத்தை
காட்டுமிராண்டிகளாய் மாறிவிடாமல்!
திரு. பாண்டியன் அவர்களின் கவிதை மிகவும் அருமை.
பெண்ணைத் தெய்வமாக்கிப்
போற்றும் நம் நாட்டில்
அரங்கேறும் அலங்கோலங்களை
ஆதங்கத்தோடு உரைத்துள்ளார்.
இல்லத்திலிருந்து ஓர் இயக்கம்
இல்லத்துப் பெண்டிரை
இல்லத்துள்ளோர் மதிக்க வேண்டும்
எனும் ஆக்கம்.
மகளையும் மருமகளையும்
மற்றடுத்துள்ளோர் மகளையும்
தன் மகளாய்த் தாங்கும் நிலை
என்று வருமோ அன்று தான்
மண்ணிலே காணலாம் விண்ணை !