எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
‘ ஐயா, என் குழந்தையைப் பார்த்தீங்களா… இங்கே வந்தாளா… ‘
பதறிக்கொண்டு ஓடிவந்த அவளுக்கு முப்பது வயது இருக்கலாம். புடவையில் இருந்தாள். முகத்தில் கலவரம், நடையில் பதற்றம், வார்த்தைகளில் அவசரம்…
அந்த டீ கடையில் இருந்தவர்களும் அவளது பதற்றத்தைக் கண்டு கொஞ்சம் பயந்து தான் போனார்கள். ஒரு குழந்தை காணாமல் போவது எவ்வளவு பெரிய ஆபத்தான விஷயம். அதிலும் இப்போதுதான் குழந்தைகளை கடத்துவது சர்வசாதாரணாமாக நடக்கிறதே…!
ஒருவர் எழுந்தார், ‘ ஏன்மா… குழந்தைங்கிறீயே… பையனா… பொண்ணா… என்ன வயசு இருக்கும்… ‘
‘ பொண்ணுங்க… ஏழெட்டு வயசு இருக்கும்…‘
‘ சின்னப்பொண்ணா… என்னம்மா இப்படி சொல்றே… எப்போ காணாம போச்சு… இப்போ வந்து தேடறே… ‘
அவள் இவர்களை கண்டுகொள்ளாமல், ‘ தங்கம்… என் தங்கம்…என்னை விட்டு எங்கேடி போனே… தங்கம்… தங்கம்…. ‘ என்று கூப்பிட்டபடியே மேற்கொண்டு வேகமாய் நடந்தாள்.
கடையில் இருந்தவர்கள் அதிசயமாய் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
‘ வந்தா… கேட்டா… அவ பாட்டுக்கு போறா… ‘ ஒருவர் சிரித்தபடி கமெண்ட் அடித்தார்.
‘ யோவ்… சிரிப்பா உனக்கு… கேலியா பேசறே… உனக்கும் ஒரு பொண்ணு இருந்து இதுமாதிரி காணாமப் போனா… இப்படியா ஜாலியா கமெண்ட் அடிச்சிக்கிட்டு உட்கார்ந்திருப்பே… அடிச்சிப்பிடிச்சிக்கிட்டு ஓடியோடி தேடமாட்டே… ‘
‘ போன வாரம் நான் கூட பேப்பர்ல படிச்சேன்… ஒரு பொண்ணு காணாம் போயிடுச்சாம்… எல்லாப்பக்கமும் தேடியிருக்காங்க… போலீஸ்ல எல்லாம் கூட புகார் கொடுத்துட்டாங்களாம்… அப்புறம்தான் தெரிஞ்சுருக்கு, அது தன்னோட பிரெண்டோட சேர்ந்து சினிமாவுக்கு போயிருந்திருக்கு… ‘
சிரித்துக் கொண்டார்கள் சிலர்.
அப்போது அங்கே ஒருவர் பதற்றத்துடன் ஓடிவந்தார்… அவரது பார்வை நாலாபுறமும் அலையாய் அலைந்தது.
‘ செல்வி… செல்வி… எங்கேடி போய்த் தொலைஞ்சே… ‘
‘இதென்னடா கூத்தா இருக்கு… இப்போத்தான் ஒரு அம்மா தங்கம் தங்கம்னு கூப்பிட்டிக்கிட்டே ஓடிவந்திச்சு… விவரம் கேட்கறதுக்குள்ளே ஓடியே போயிடுச்சு… பின்னாடியே இந்தாளு செல்வி செல்வின்னு கூப்பிட்டிக்கிட்டு ஓடிவர்றார்… ஒரே நாள்ல ரெண்டு பொண்ணுங்க காணாமப் போச்சா… அதுவும் ஒரே ஏரியால…கடவுளே… கடவுளே… ‘
‘யோவ்… நீ வேற… இவரு அந்தம்மாவோட புருஷனா இருக்கும்னு நினைக்கறேன்… அந்தம்மா தன் பொண்ணை செல்லமா தங்கம் தங்கம்னு கூப்பிட்டுக்கிட்டு தேடி ஓடியிருக்கு போல… இவரு பொண்ணோட நிஜ பேரை சொல்லி தேடறார் போல… யோவ் கருங்காலி ஓடிப்போய் என்னன்னு விசாரிய்யா… ‘
குறிப்பிட்ட அவர் சட்டென எழுந்தோடி அவரை வழிமறித்தார்.
‘ ஏன்பா… யாரைத் தேடறே… பேரென்ன சொன்னே… ஆங்…செல்வி… யார் அந்த செல்வி… ‘
‘ ஏங்க… அது என் சம்சாரம்ங்க… அவளைத்தான் தேடிகிட்டு அலையறேன்… ‘
‘ எங்கேயிருந்து வர்றே… ‘
‘ தோ… இந்த காம்ப்லெக்ஸ்க்கு பின்னால ஒரு லைன் வீடு இருக்குல்லே அதுல புதுசா குடி வந்திருக்கோம்… போன வாரம்தான் வந்தோம்… ‘
‘ இப்போத்தான் ஒரு அம்மா தன் பொண்ணைக் காணோம்னு தேடிக்கிட்டே வந்திச்சு… நாங்க விவரம் கேட்டுக்கிட்டு இருக்கும்போதே தங்கம் தங்கம்னு கூப்பிட்டுக்கிட்டே மேலே போயிடுச்சு… அது போன வேகத்துக்கு இந்நேரம் அரை பர்லாங் தூரமாவது போயிருக்கும்…‘
‘ அய்யய்யோ… செல்வி… இப்படியா திடீர் திடீர்னு ஓடிவருவே… நான் எங்கேனு தேடுவேன்… ‘
‘ இதென்னடா புதுசா சொல்றான்… அது தேடித்தானே வந்துச்சு… ஓடி வந்திட்டதா சொல்றான்… ‘ குழம்பினார் ஒருவர்.
‘ அய்யா… அது என் சம்சாரங்க… அவளுக்கு சித்த பிரமை… திடீர் திடீர்னு பொண்ணை தேடறேன்னு கிளம்பிடுவா… ‘
எல்லோரும் திடுக்கிட்டார்கள்.
‘ என்னப்பா சொல்றே… சித்த பிரமையா… அப்போ காணாம போனது உங்க பொண்ணா… எப்போலேர்ந்து காணலை… ‘
‘ ஐயோ… பொண்ணும் இல்லை… மண்ணும் இல்லைங்க… ‘
‘ என்ன சொல்றே… ‘
‘ ஏழெட்டு வருஷமா எங்களுக்கு குழந்தையே இல்லைங்க… அதனாலேயே ஒரு மாதிரியா ஆகிட்டாங்க… நாளாக நாளாக பைத்தியமாவே ஆகிட்டா… தனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கற மாதிரி பினாத்திக்கிட்டு அலைவாங்க… திடீர் திடீர்னு தன்னோட கற்பனை பொண்ணைத் தேடிகிட்டு இப்படி வெளியேயும் ஓடிவந்துடுவாங்க… செல்வி… செல்வி… எங்கேடி போய்த் தொலைஞ்சே… எந்த ஊருக்குப் போனாலும் இப்படியே பண்றியேடிறே… உன்னோட ரோதனையாப் போச்சு… ‘
அவன் சத்தம் போட்டுக்கொண்டே வேகமாய் ஓட, இவர்கள் எல்லோரும் வாயடைத்துப் போய் உட்கார்ந்திருந்தனர்.
எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings