2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பஸ் திருச்சி நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. என் மனைவி சொல்லியனுப்பியிருந்ததும் நினைவில் வந்து வந்து போய்க் கொண்டிருந்தது. ஜன்னல் வழியே வெளியே எட்டிப்பார்த்தேன். ஒரு கடையின் போர்டு அது பொங்கலூர் என்றது. அப்படியென்றால் இன்னும் கிட்டத்தட்ட அரை மணி நேரத்தில் பஸ் காங்கேயம் போய்ச் சேர்ந்துவிடும்.
பஸ் நின்றவுடன், இறங்கி அந்தக் கடையைத் தேடி ஓடவேண்டும். கடைக்காரரிடம், ‘ இந்தாம்பா உனக்கு சேரவேண்டிய நூறு ரூபா ‘ என்று விளக்கமாய் சொல்லிக் கொடுத்து விட்டு, உடனே கமலத்திற்கு போன் பண்ணி சொல்லியும் விட வேண்டும். அப்போதுதான் நான் பட்ட கடன் தீரும்.
xxxxxxxxxx
மூன்று மாதங்களுக்கு முன்பு கோவைக்கு போய்க் கொண்டிருந்தோம். பஸ் காங்கேயத்தில் நின்றதும் மனைவி குழந்தைகளுக்கு சாப்பிட ஏதாவது வாங்கி வரலாமே என்று இறங்கிப் போனேன்.
வடையும் மிளகாய் பஜ்ஜியும் வாங்கிக் கொண்டேன். டீயும் வேண்டுமே. அதனால் கடைக்காரரிடம், ‘ நாலு டீ போட்டு வையுங்க, இதை கொடுத்துட்டு வந்து வாங்கிட்டுப் போறேன் ‘ என்றுவிட்டு நகர்ந்தேன். அப்போதுதான் இன்னும் காசு கொடுக்கவில்லை என்று உணர்ந்து, ‘ அண்ணே… டீ வாங்கும்போது காசு கொடுத்துடலாமா ‘ என்றேன்.
‘ பரவால்ல ண்ணே,. எந்த பஸ்சு ‘ என்றார்.
‘ கோயம்பத்தூர் பஸ், திருச்சிலேர்ந்து போய்க்கிட்டிருக்கோம் ‘ என்றேன். போ என்பது போல கையசைத்தார். அதற்குள் பஸ் அதற்குள் வெளிகேட்டருகில் போய் நின்று கொண்டிருந்தது. ஓடிப்போய் ஜன்னல் வழியே கமலத்திடம் பொட்டலத்தை கொடுத்துவிட்டு ‘ போய் டீ வாங்கிட்டு வந்திடறேன் ‘ என்றுவிட்டுத் திரும்பினேன். ‘ சீக்கிரம்ங்க… எடுத்துடப் போறான் ’ என்றாள்.
ஓடிப் போய் ‘ நாலு டீ சொல்லியிருந்தேனே ‘ என்று கேட்க அவர் கிளாசை எடுக்க, ‘ அண்ணே பேப்பர் கப்புல கொடுங்க ‘ என்றேன். எதேச்சையாய் திரும்பிப் பார்த்தேன். என் மனைவி, ‘ சீக்கிரம் வாங்க ‘ என்று சைகை காட்டினாள்.
‘ கடவுளே.. நான்கு கப்புகளை ஒருசேர எப்படி எடுத்துக் கொண்டு ஓடுவது ‘ என்று யோசித்து, ‘ அண்ணே ரெண்டு அப்புறம் வந்து எடுத்துக்கறேன்… ‘ என்றுவிட்டு சுடும் கப்புகளை எடுத்துக் கொண்டு ஓடினேன். அதற்குள் பஸ் நகர ஆரம்பித்திருந்தது. ஓடிப் போய் ஏறினால் அதற்குள் இரண்டு கப்பிலும் பாதி டீ சிந்திவிட்டிருந்தது.
‘ எவ்வளவு ஆச்சு. மீதி சில்லறை வாங்கினீங்களா…’ என்று அவள் கேட்கும்போதுதான் காசே கொடுக்காமல் வந்து விட்டோமே என்று உரைத்தது.
வடை பஜ்ஜிக்கு அறுபது ரூபாய், நான்கு டீக்கு நாற்பது ரூபாய் என்று அங்கிருந்த விலைப்பட்டியலைப் பார்த்து முதலிலேயே கணக்கு போட்டு வைத்திருந்தேன். இப்போது ‘ ஐயோ… நான் பணமே கொடுக்கலை கமலம். நீ வேற கையை ஆட்டவும் பதட்டத்துல ஓடி வந்துட்டேன் ‘ என்றேன். ஒரு கணம் பஸ்சை நிறுத்தச் சொல்லி ஓடிப்போய் பணத்தை கொடுத்துவிட்டு வந்துவிடலாமா என்று கூட தோன்றியது. அதற்குள் பஸ் வெளியே வந்து திருச்சி-கோவை மெயின் ரோடையேத் தொட்டுவிட்டது.
இனிமேல் எங்கே நிறுத்தப் போகிறார்கள் என்ற கவலையில் ‘ என்ன கமலா பண்ண…’ என்றேன். ‘ நீங்க முதல்லேயே காசை கொடுத்திருக்கனுமில்லையா, கொஞ்சமாவவது யோசனை வேண்டாமா. கடைக்காரன் ஓசில குடுப்பான்ன்னா நினைச்சீங்க… ‘ என்று முறைத்தாள்.
‘ நான் பஜ்ஜி வடை கொண்டுவந்து கொடுத்துட்டு திரும்ப போய் டீ வாங்கும்போது காசை கொடுத்துடலாம்னு நினைச்சிருந்தேன். கடைக்காரரும் சரின்னுதான் சொன்னார். ஆனால் டீ வாங்கறதுக்குள்ளே பஸ் கிளம்பிடுச்சா… நீங்களும் கையை கையை ஆட்டினீங்களா, பஸ் போயிடுமேன்னு அவசரமா ஓடி வந்துட்டேன்… ‘ என்று நான் புலம்ப….
’ சரியான ஏமாத்துப் பேர்வழினு உங்களைப் பத்தி தப்பா நினைக்க மாட்டானா அந்தக் கடைக்காரன் ‘ என்று முறைத்தாள் அவள்.
‘ ஏய் வேணும்னா செஞ்சேன்…. ஏதோ அவசரத்துல கொடுக்கத் தவறிப் போச்சு… சரி விடு, மறுபடியும் இந்த ரூட்டுல வராமலா போய்டுவோம். அதான் ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவையாவது வந்துடுறேமே. அப்ப பார்த்து எண்பது ரூபாயை கொடுத்துட்டா போச்சு…’ என்றேன்.
‘ நூறு ரூபா ‘ என்று அவள் திருத்தினாள். ‘ நீங்க ரெண்டு டீயை விட்டுட்டு வந்திட்டா அதுக்கு அவன் என்ன பண்ணுவான்… அதுக்கும் சேர்த்தே காசை கொடுத்துடுங்க ’ என்றாள்.
கோவை வரும்வரை பத்து தடவையாவது அதையே சொல்லி சொல்லித் திட்டியிருப்பாள் அவள். என்னால் ஒவ்வொரு தடவையும் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியவில்லை. வைகுந்தபுரம் பட ஸ்டைலில் சொல்லப் போனால், சில ஜாதகங்கள் அப்படித்தான்.
சரியாக இரண்டு மாதங்கள் கழித்து இன்றுதான் திருச்சிக்கு போகிற வேலை வந்தது. உடனே ஞாபகமாய் நினைவூட்டினாள், ‘ அந்த நூருரூபாயை மறக்காம கொடுத்துட்டு, கடைக்காரன்கிட்ட விளக்கமா சொல்லிட்டு வாங்க… நம்பளை அவன் தப்பா நினைச்சுக்கப் போறான்…’ என்றாள்.
இந்த இரண்டு மாத இடைவெளியிலும் பத்து இருபது தடவையாவது சொல்லியிருப்பாள். ‘ ஏங்க, மறக்காம பணத்தை கொடுத்துடனும்ங்க… ஊரான் காசு நமக்கு வேணாம். அவன் மறந்திருப்பான்னு நினைச்சுக்கிட்டு நீங்கபாட்டுக்கு கொடுக்காம வந்துடாதீங்க…’ என்று குத்தி குத்திக் காட்டினாள்.
xxxxxxxxxx
அந்த நினைவுகள் ஓடி மறையவும் பஸ் காங்கேயம் பஸ் ஸ்டாண்டிற்குள் நுழையவும் சரியாக இருந்தது. பஸ்சை நிறுத்தியதும், மறக்காமல் கண்டக்டரிடம் சொல்லியும் விட்டேன், ‘ ஐயா, நான் டீ கடை வரை போயிட்டு வந்துடறேன், அதுக்குள்ளே வண்டிய எடுத்துடாதீங்க ’ என்று.
ஓட்டமாய் ஓடினேன். இடையில் ஒரு அம்மாள் குறுக்கே வந்து, ‘ அண்ணே சாப்பிட்டு ரெண்டு நாளாச்சு… காசு போடுங்க ‘ என்றாள். கூடவே ஒட்டிய வயிற்றுடன் கையில் ஒரு குழந்தை. அவளை பொருட்படுத்தாமல் ஓடினேன். தேடிப்பிடித்து அந்த கடைக்கு வந்துவிட்டேன்.
ஆனால் அங்கே டீ கடை இல்லை. அது இப்போது ஸ்வீட் ஸ்டாலாக மாறி இருந்தது. அங்கே இருந்த பெண்மணியிடம், ‘ போன தடவை இந்த இடத்துல ஒரு டீ கடை இருந்துச்சுங்களே ‘ என்றேன்.
‘ ஆமாங்க… ஒரு டீ கடை இருந்துச்சு… நாங்க கடையை வாங்கி ஸ்வீட் கடை போட்டு ஒரு மாசம்தான் ஆவுது… ஆமா, ஏன் கேட்கறீங்க… ‘ என்றார்.
அவரிடம் விவரத்தை சொல்ல மனதில்லை. அவரே, ‘ அவங்களுக்கு கடையை வித்துட்டு கிராமத்துக்கே போய்ட்டாங்கன்னு கேள்விபட்டேன். ‘ என்றவர் மறுபடியும், ‘ ஆமா, என்ன விஷயம் ‘ என்றார் மறுபடியும். மறுபேச்சு பேசாமல் பஸ்ஸை தேடிக்கொண்டே திரும்பிவிட்டேன்.
எனது அவசரம் புரியாமல் அதே அம்மாள் மறுபடி என்னை குறுக்கிட்டது. ‘ அண்ணே சாப்பிட்டு ரெண்டு நாளாச்சு… காசு போடுங்க ‘ என்றாள். சட்டென கடைக்காரருக்கு கொடுக்க வைத்திருந்த நூறு ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினேன். அவளது முகத்தில் சட்டென பரவசம்.
பஸ் நகர்ந்து கொண்டிருந்தது. ஓடிப்போய் ஏறிக்கொண்டேன்.
சட்டென போன் அடித்தது. எடுத்தால் கமலம்.
எடுத்தவுடனேயே, ‘ பணம் கொடுத்தாச்சா ‘ என்றுதான் கேட்பாள். நடந்ததைச் சொன்னால் திட்டுவாள். ‘ அப்பவே கொடுத்திட்டு வந்திருந்தா இப்போ இப்படி நடந்திருக்குமா.. ‘ என்பாள், ஏதோ நான்தான் கடைக்காரனை ஏமாற்ற நினைத்தது போல.
‘ ஹலோ. போன் அடிச்சா எடுத்து பேசமாட்டீங்களா..‘ என்று கத்தினாள்.
‘ இல்லம்மா போன் பேண்ட் பாக்கேட்டுலேர்ந்து இருந்திச்சு. பேண்ட் வேற டைட்டா. எடுக்க சிரமமா இருந்துச்சு. எடுத்து பேசறதுக்குள்ளே… ’ என்றேன்.
‘ கடையை கரெக்டா கண்டுபிடிச்சு கடைக்காரன்கிட்டா பணம் கொடுத்தாச்சுதானே. கடைக்காரன் ஒன்னும் முகத்தை சுழிக்களைதானே.. நீங்க விவரமா சொல்லி தப்பா எடுத்துக்காதீங்கனு சொல்லிட்டீங்கதானே…. ஒன்னும் பிரச்சினை இல்லைதானே ’ என்று மடமடவென கேட்டாள்.
மறுயோசனை செய்யாமல், ‘ கொடுத்தாச்சும்மா… எனக்குத் தெரியாதா கொடுக்கணும்னு…. சரி போனை வை.. ‘ என்றேன்.
அதே நேரம், நூறுரூபாயை வாங்கிக்கொண்டதும் பரவசமடைந்த அந்த அம்மாளின் முகம் என் கண் முன்னே வந்து நின்றது.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings