எழுத்தாளர் சின்னுசாமி சந்திரசேகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
‘அப்ப நீ கல்யாணத்திற்கு வரல… அப்படித்தானே?’ என்றான் மணியன் தன் மனைவி வசந்தாவிடம் ஐந்தாவது முறையாக.
‘நீங்க இன்னும் எத்தனை தடவை கேட்டாலும் ஒரே பதில்தான்… உங்க அக்கா வரும் அந்தக் கல்யாணத்திற்கு நான் வர மாட்டேன்..’ என்றாள் வசந்தா பிடிவாதக் குரலில்.
‘உனக்கு இருக்கும் சங்கடம்தானே எனக்கும்… நான் போகும்போது நீ வந்தால் என்ன? எனக்கு ஆதரவா இருக்கும் இல்ல?’ என்றான் மணியன் விடாப்பிடியாக.
‘உங்களுக்கென்ன… ஆம்பிள்ளைகளுக்கு நடுவில் போய் உட்கார்ந்து எழுந்து வந்திருவீங்க… நாங்க பெண்பிள்ளைகள் அப்படி இருக்க முடியுமா? அதுவும் உங்க அக்கா மூஞ்சியைத் தூக்கி வச்சிக்கிட்டு இருப்பாங்க. எனக்கு அந்த அவமானம் தேவையா? நீங்க போகணும்னா போங்க… இல்லைன்னா போக வேண்டாம். என்னை தொந்தரவு செய்ய வேண்டாம்… சரியா?..’ என்று இறுதித் தீர்ப்பை வழங்கிவிட்டுச் சென்று விட்டாள் வசந்தா.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், கணவன் மனைவிக்குள் தர்க்கத்தை ஏற்படுத்திய அந்தத் திருமணம் மணியனின் அக்கா கல்யாணியின் கணவரின் தம்பி மகளின் கல்யாணம். கல்யாண வீட்டார் முறையாக வந்து அழைத்து, பத்திரிகை வைத்திருந்தார்கள். ஆனால் சங்கடம் என்னவென்றால், மணியன் குடும்பத்திற்கும் அவன் அக்கா கல்யாணி குடும்பத்திற்கும் இருபது வருடங்களாகப் பேச்சுவார்த்தை இல்லை. ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பையும் இதுவரை தவிர்த்து வந்தார்கள். ஆனால் இந்தக் கல்யாணத்தில் அது தவிர்க்க முடியாது… அதுதான் இத்தனை வாக்குவாதத்திற்கும் காரணம்.
சிறுவயதில் கல்யாணி தன் தம்பி மீது உயிரையே வைத்திருந்தவள்தான். ஊரார் பொறாமைப்படும்படி இருந்தது அப்போதிருந்த அக்கா, தம்பி உறவு. பிரச்சினை ஆரம்பித்ததே, கல்யாணியின் கல்யாணத்திற்குப் பிறகுதான்.
ஏனோ சொல்லத் தெரியாத காரணத்தால், கல்யாணியின் கணவனைப் பிடிக்காமல் போய் விட்டது மணியனின் அப்பாவிற்கு. மருமகனுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுப்பாரே தவிர, மருமகனிடத்தில் பாசமோ, நெருக்கமோ இருக்கவில்லை அவருக்கு.
அப்பாவையும், கணவனையும் நெருங்க வைக்க கல்யாணி எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. மாமனார், மருமகன் பனிப்போர் வளர்ந்து, வளர்ந்து கடைசியில் வக்கீல் நோட்டீசில் வந்து முடிந்தது ஒரு நாள்.
‘இந்தா.. உன் பிரிய மகள் கல்யாணி சொத்தில் பங்கு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளாள். இது உன் அருமை மருமகனின் வேலை. முப்பது பவுன் நகையும், முப்பதாயிரம் பணமும் செலவு செய்து வைத்த கல்யாணத்தில் கிடைத்த வருமானம் போதவில்லையாம் அவனுக்கு. நம்மிடம் உள்ள இந்த இரண்டு ஏக்கரிலும் பங்கு வேண்டுமாம். அவனுக்குத்தான் அவன் சொத்தாக மூன்று ஏக்கர் நிலம் இருக்கிறதே… என் மகனுக்கு என்று இருக்கும் இந்த இரண்டு ஏக்கரிலும் பங்கு கேட்கிறானே… இவன் நல்லா இருப்பானா?’ என்று மணியனின் அப்பா கொதித்துக் கொண்டிருந்தார்.
அதன் பிறகு மணியனின் அப்பா, ஊராரை வைத்து நடத்திய பேச்சுவார்த்தையிலும் எந்த முடிவும் எட்டவில்லை. மாறாக, இருபக்கமும் வார்த்தைகள் தடித்து, மகளின் உறவைத் துண்டித்துக் கொண்டு வந்ததுதான் அவருக்குக் கிடைத்த பலனாக முடிந்தது. இருபக்க மனிதர்களின் பிடிவாதத்தால், கோர்ட்டில் கேஸ் நீண்ட நாட்கள் நடந்ததும், இடையில் மணியனின் அப்பா இறந்ததும், அதற்குக் கூட, கல்யாணியின் வீட்டார் யாரும் வராததும் நடந்தேறின.
கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் கிடைத்த ஒரு ஏக்கர் நிலத்தை விற்று, காசாக்கி எடுத்துச் சென்றான் கல்யாணியின் கணவன். காலம், இதுபோல் வெறுப்பை வளர்த்துக் கொண்டே போக, அக்கா தம்பி உறவு ஒன்று இருந்ததே மறந்து போயிற்று மணியனுக்கு. அக்கா இளமையில் தன் மீது வைத்திருந்தது போலியான பாசமோ, என்ற சந்தேகம் கூட தோன்றியது மணியனுக்கு.
கல்யாண வீட்டில், ஓரிரண்டு சமவயது நண்பர்கள் கிடைத்ததால் பொழுது போயிற்று மணியனுக்கு. அவனின் அக்கா, மாமா மற்றும் அவர்களின் இரண்டு பையன்களும் கல்யாண வீட்டில் இருந்த போதிலும், அவர்களின் பார்வையில் படுவதையும், அவர்களை நேரில் பார்ப்பதையும் சாமர்த்தியமாகத் தவிர்த்து விட்டான் அவன்.
பந்தி விடும் பகுதியில் பெரிய திரைச்சீலை தொங்க விடப்பட்டு திரைச்சீலையின் மறுபுறம் உணவுப்பண்டங்கள் வைத்துப் பரிமாறப்பட்டன. பந்தியில் யதேச்சையாக, திரைச்சீலையை ஒட்டி உட்கார இடம் கிடைத்தது மணியனுக்கு. அவன் உட்கார்ந்திருந்த இடத்தில், திரைச்சீலையின் மறுபுறம் ஒரு பெண்ணின் குரல் கேட்டது மணியனுக்கு.
‘உன் மாமன் பந்தியில் உட்கார்ந்திருக்கிறான். அவனுக்கு காரமில்லாத மஞ்சள் பருப்பும், நெய்யும் கலந்து சாப்பிட ரொம்பப் பிடிக்கும். நீ மஞ்சள் பருப்பு உள்ள தூக்கு வாளியை எடுத்துக்கொள். இரண்டு தடவை போடு. தவறாமல் நெய் ஊற்று… சீக்கிரம் போ…’. இது அவனுக்குள் ஊறிக்கிடந்த அக்கா கல்யாணியின் குரல் என்பது அவனுக்கு நன்கு தெரியும். தன் மகனுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறாள் என்றும் ஊகித்தான் மணியன்.
‘இத்தனை பாசம் உள்ளவ உன் தம்பிகிட்ட போய் பேச வேண்டியதுதானே அம்மா? மாமா பார்க்க நல்ல மனுசன் போலத்தான் தெரியரார். உன் வீட்டுக்காரர்தான் என்னமோ அவங்கள விசம்போல் வெறுக்கிறார்..’ என்று கிண்டலடித்தவன் கல்யாணியின் பையனாக இருக்க வேண்டும்.
‘அப்ப, உங்க அப்பன் எனக்குப் போட்ட கண்டிசன் என்ன தெரியுமா? கேஸ் போட்டு சொத்தை வாங்கி வர வேண்டும். இல்லேன்னா நான் வாழாவெட்டியா எங்கப்பா வீட்டுக்குப் போய் இருக்க வேண்டும். என் தம்பிக்கு வாழ்க்கை முழுதும் நான் பாரமாக இருக்க விரும்பாததால்தான் இப்ப இந்த நிலைமை. பேசிக்கிட்டே இருக்காதே… ஓடு… பந்தி உட்டுருவாங்க… உன் மாமனை அடையாளம் தெரியுமில்லை?’ என்றாள்.
‘நீதான் மாமா வந்ததில் இருந்து, பத்துத் தடவையாவது கிசுகிசுப்பா ‘இதுதான் உன் மாமன்…’ அப்படீன்னு பீத்திக்கிட்டயே..’ என்று கிண்டலடித்தான் மகன்.
பந்தியில் மஞ்சள் பருப்பை இரண்டு முறை அவனுக்கு விளம்பியவனின் முகத்தை உற்றுப் பார்த்தான் மணியன். அக்காவின் பெரிய பையனாக இருக்க வேண்டும். அந்தப் பையனின் மேடிட்ட நெற்றி, அவனின் அக்காவின் நெற்றியைப் போலவே இருந்தது.
விசிலடித்துக் கொண்டே வீட்டுக்குள் வந்தவனை ஆச்சரியத்துடன் பார்த்துக் கேட்டாள் வசந்தா, ‘என்ன ஒரே குஷி ? அக்கா வீட்டாரிடம் அடி வாங்காமல் தப்பித்து வந்ததாலா?’.
‘கண்ணதாசன் பாட்டில் ஒரு வரி வரும்.. ‘சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை’ அப்படீன்ணு… அதன் அர்த்தம் எனக்கு இன்னைக்குத்தான் புரிந்தது… என் அக்கா இத்தனை காலம் என்னோட பேசவில்லைன்னா நினைச்சே? மானசீகமா பேசிக்கிட்டுத் தான் இருந்திருக்கிறா… அண்ணன், தங்கை பாசம்தான் பெருசா? அக்கா, தம்பி பாசம் பெரிசில்லையா?’ என்று சிறுபையனைப் போல வசனம் பேசியவாறே, குளியலறைக்குள் பாடிக்கொண்டு நுழையும் கணவனை வியப்புடன் பார்த்தாள் வசந்தா.
எழுத்தாளர் சின்னுசாமி சந்திரசேகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings