எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
ஒரு நிறுவனத்தில் ஜெனரல் மேனேஜராக போன மாதம் வரை பணியாற்றி விட்டு, ஒரு பிரிவுபசார விழாவில் மாலை, மரியாதை மற்றும் ஸ்வீட், காரம், காஃபியோடு, ஒரே செக்கில மொத்த செட்டில்மெண்ட் தொகையையும் பெற்றுக் கொண்டு, வீடு திரும்பியவருக்கு, ஒரு மாதத்திற்குப் பிறகுதான் உறைத்தது, ரிடையர்டு வாழ்க்கையென்பது நரகமென்று.
“ஹலோ மிஸ்டர்.ராஜசேகர்!…” என்றபடி வந்து, கட்டிப்பிடித்து விலகும் வாக்கிங் நண்பர் வெங்கடாசலம் இப்போதெல்லாம் நின்று கூடப் பேசுவதில்லை. அதுதான் ராஜசேகரைப் பாதித்த முதல் முரண்பாடு.
“இவன் சிபாரிசு பண்ணிய ஆட்கள் எத்தனை பேருக்கு நான் வேலை ஏற்பாடு பண்ணிக் குடுத்திருப்பேன்?… புரிஞ்சிடுச்சு… எல்லாம் புரிஞ்சிடுச்சு!…. “இவனே ரிடையர்டு ஆகிட்டான்… இனி இவனால் நமக்கு எந்தவொரு ஆதாயமுமில்லை… அப்புறம் எதுக்கு இவனோட நட்பைத் தொடரணும்?”ன்னு நெனச்சிட்டு என்னை உதறித் தள்ளிட்டு, பெரிய கார்ப்பரேட் கம்பெனில சீஃப் எக்ஸிக்யூட்டிவ்வா இருக்கற நரசிம்மன் கூட ஒட்டி உறவாடிட்டிருக்கான்!..” தனக்குள் சொல்லிக் கொண்டே நடந்தார் ராஜசேகர்.
கால் மணி நேர நிதான நடைக்குப் பின், செல்வராஜ் டீக்கடையில் நின்று, “ஒரு டீ” என்றார்.
அவன் கொடுத்த ஏலக்காய் டீயைப் பருகி முடித்தவர், டீ டம்ளரை அங்கிருந்த டிரேயில் வைத்து விட்டு, “வர்றேம்பா!” என்றபடி கிளம்பப் போக,
“சார்… டீக்குக் காசு?” அவன் கேட்டது, ராஜசேகருக்கு பெருத்த ஆச்சரியமாகவும், கொஞ்சம் அவமானமாகவும் இருந்தது.
“என்னப்பா?… நம்மளோடது மாசக் கணக்குதானே?”
“இல்ல சார்….மாசக் கணக்கெல்லாம் இனிமே சரிப்பட்டு வராது சார்!”
“என்னப்பா இது?… புதுப் பழக்கமாயிருக்கு?”
“நம்ம கடைல எப்பவுமே ரிடையர்டு ஆளுங்களுக்கு ரெடி கேஷ்தான்!…”
எரிச்சலாகிப் போன ராஜசேகர், “ஏப்பா… அதுக்குன்னு ஒரு தராதரம் இல்லையா?… எல்லோரையும் ஒரே மாதிரியா பார்ப்பாங்க?” என்று கடுப்பாய்க் கேட்டார்.
அவன் பதில் பேசாமல் டீயை ஆற்றிக் கொண்டிருக்க,
தொடர்ந்து அவனுடன் வாக்குவாதம் செய்தால் அது தனக்குத்தான் கேவலம், என்பதை புரிந்து கொண்ட ராஜசேகர், டீக்கான தொகையைக் கொடுத்து விட்டு நகர்ந்தார்.
மணி ஏழரை. “போற வழில மகள் வீட்டுக்குப் போய் அவளையும்… பேத்தியையும் பார்த்துட்டுப் போகலாம்!…கொஞ்சம் மனசுக்கு இதமாக இருக்கும்!”
மகள் சிநேகாவின் வீட்டை நோக்கி நடந்தார்.
“வாங்கப்பா..என்ன திடீர்னு இந்த நேரத்துல?” மகள் சிநேகா கேட்டாள்.
“வாக்கிங் வந்தேன்மா… அப்படியே உன்னையும்… இந்த முயல் குட்டியையும் பார்த்திட்டுப் போகலாம்னு வந்தேன்!…” சிரித்தபடியே பேத்தியின் கன்னங்களில் முத்தத்தை அழுத்தினார். “தாத்தா…தாடி குத்துது!” மழலையில் கொஞ்சியது.
“ஒரு முக்கியமான விஷயம்… மாப்பிள்ளை உங்க கிட்டக் கேட்கச் சொன்னார்!” சிநேகா பீடிகை போட்டாள்.
“என்ன விஷயம்?” கழுத்தைப் பிடித்துத் தொங்கும் பேத்தியை கீழே இறக்கி விட்டார்.
“வந்து..அவரோட டிராவல்ஸ் ஆபீஸ்ல ஆறுமுகம்னு ஒரு கிளார்க் இருந்தான்… அவன் சரியான ஃபிராடுப்பா… காசு விஷயத்துல சுத்தமில்லை!… ஆபீஸ் பணத்துல கை வெச்சுட்டான்!…. வேலையை விட்டுத் துரத்திட்டோம்!” சொல்லும் போது சிநேகாவின் முகத்தில் கவலை ரேகைகள்.
“வேற நல்ல… நம்பிக்கையான ஆளாப் போட்டுட்டாப் போச்சு…ஏன் கவலைப்படறே?”
“அதுக்காகத்தான் உங்க கிட்டப் பேசச் சொன்னார்!”
“ரெண்டு நாள் டைம் குடுங்க… நல்ல ஆளை அனுப்பி வைக்கறேன்!”
“நீங்களே சும்மாத்தானே இருக்கீங்க?… அதனால உங்களையே அந்த இடத்துல உட்கார வெச்சுடலாம்னு உங்க மாப்பிள்ளை அபிப்ராயப் படறார்!”
ரத்தம் சூடேறிக் கொதித்தது. “ஒரு பெரிய குரூப்ல ஜெனரல் மேனேஜரா கிட்டத்தட்ட முப்பத்திஒன்பது வருஷமா சர்வீஸ் பண்ணினவன் நான்… என்னையா எடுபிடி வேலை பார்க்கச் சொல்லுறீங்க?” கேட்கத் துடித்த நாக்கை அடக்கிக் கொண்டு, “நான் யோசிச்சு சொல்றேனே?” சொல்லி அவள் பதிலுக்குக் கூடக் காத்திராமல் வெளியேறினார் ராஜசேகர்.
கால்கள் நடந்து கொண்டிருந்தாலும், மனசு ஒரே சிந்தனையில் நின்று கொண்டிருந்தது. “ஏன்?… இப்படி எல்லோரும் மாறிப் போனார்கள்?… என்ன காரணம்?… நான் ரிடையர்டு ஆகிப் போனதுதான் காரணமா?… நானும் வேலைக்குப் போறேன்… நாளையிலிருந்தே வேலைக்குப் போறேன்!… அப்பத்தான் என்னைச் சுற்றி இருப்பவர்களிடம் என்னுடைய மதிப்பையும்… மரியாதையையும் காப்பாத்திக் கொள்ள முடியும்ன்னா வேலைக்குப் போறேன்!” பிரிவுபசார நிகழ்ச்சியில், கம்பெனி எம்.டி. பேசியது அவர் நினைவிற்கு வந்தது.
“மிஸ்டர்.ராஜசேகருக்காக என்னுடைய கம்பெனியின் கதவுகள் எல்லா நேரத்திலும் திறந்தே இருக்கும்!…அவர் தொடர்ந்து பணி புரிய விரும்பினால்…நிர்வாகம் ஏற்றுக் கொள்ளும்!”
“கரெக்ட்!…அவரை சந்தித்துச் சொல்லி விட வேண்டியதுதான்
காலை பதினோரு மணி வாக்கில் கம்பெனிக்குச் சென்ற ராஜசேகர், பழைய கொலீக்ஸையெல்லாம் பார்த்துப் பேசிவிட்டு, எம்.டி.யை சந்திக்கச் சென்றார். தான் வந்திருப்பதை ப்யூன் மூலம் எம்.டி.க்குத் தெரிவித்து விட்டு, அறைக்கு வெளியே சோபாவில் அமர்ந்து காத்திருந்தார்.
அரை மணி நேரத்திற்குப் பின், “சார்… எம்.டி. அவசரமாய்ப் போகணுமாம்… உங்களை சீஃப் எக்ஸிக்யூடிவ் ரத்னவேலுவைப் பார்க்கச் சொன்னார்…” ப்யூன் சொல்ல, இடிந்து போனார்
ராஜசேகர். “என்ன மரியாதை இது?…அட்லீஸ்ட் அறைக்குள்ளார வரச் சொல்லி நேரில் இதை சொல்லியிருக்கலாமே?… என்னை மீட் பண்ணக் கூட விரும்பவில்லையா அவர்?”
சீஃப் எக்ஸிக்யூடிவ் ரத்னவேலுவின் அறைக்குச் சென்றவர், அவரிடம் தன் கோரிக்கையை வைக்க,
“மிஸ்டர். ராஜசேகர்… போன வாரம்தான் எம்.டி.கிட்ட நான் உங்களையே மறுபடியும் சர்வீஸ் கன்ட்டினியூ பண்ண வைக்கலாம்னு கேட்டேன்!… அவர் ஒத்துக்கலை!… ஸோ… நான் என்ன நினைக்கறேன்னா…” என்று இழுத்தார்.
“விருட்”டென்று எழுந்து வேக, வேகமாக வெளியேறினார் ராஜசேகர்.
வாக்கிங் நண்பர் வெங்கடாசலம், டீக்கடைக்காரன், மாப்பிள்ளை, மகள் இவர்களெல்லாம் மாறிப் போனதைப் பற்றிக் கூட ராஜசேகர் கவலைப் படவில்லை. “கம்பெனியின் கதவுகள் எல்லா நேரத்திலும் திறந்தே இருக்கும்!”ன்னு பேசிட்டு, இன்று “நோ சான்ஸ்” என்று கையை விரிக்கும் எம்.டி.யின் மாற்றம்தான் அவரை வெகுவாகப் பாதித்தது.
ஆட்டோவில் வந்திறங்கிய கணவரைக் கண்டதும், பதட்டமாய் வந்து, “ஏங்க இவ்வளவு நேரம்?… நான் ரொம்ப பயந்து போயிட்டேங்க!..” என்று படபடப்பாய்ச் சொன்ன மனைவி பார்வதியை மேலிருந்து கீழ் வரை பார்த்தார் ராஜசேகர்.
“நான் கொஞ்சம் லேட்டா வந்தாலும் இவ!… “நான் ரொம்ப பயந்து போயிட்டேங்க”ன்னு சொல்றா!… என்ன பயம்?…எனக்கு ஏதாச்சும் ஆகியிருக்குமோ?ங்கற பயமா?”
வீட்டிற்குள் வந்தவரிடம், “வெயில்ல வந்துட்டு உடனே பச்சைத் தண்ணில குளிக்காதீங்க… உடம்புக்கு ஆகாது… கை,கால் மட்டும் அலம்பிட்டு வந்து சாப்புடுங்க!” என்றாள் பார்வதி.
டைனிங் டேபிளில் வந்தமர்ந்த ராஜசேகர் திகைத்தார். அன்றைய சமையல் முழுவதும் அவருக்குப் பிடித்த ஐட்டங்களே!
“நிதானமாச் சாப்பிடுங்க… அவசர அவசரமா… அரையுங் குறையுமாச் சாப்பிடாதீங்க!” என்று வழக்கமான பல்லவியை ஒப்பிக்கும் மனைவியை வியந்து நோக்கினார்.
“இவகிட்ட மட்டும் எந்த மாற்றமுமே இல்லையே… ஏன்?… நான் ரிட்டையர்டு ஆனது இவளை எந்த விதத்திலேயும் பாதிக்கலையா?”
சொன்னார். வெங்கடாசலத்தைப் பற்றி, டீக்கடைக்காரன் பற்றி, மகளைப் பற்றி, கம்பெனி எம்.டி.யைப் பற்றி, “போன மாசம் வரைக்கும் நல்லா இருந்த இவங்கெல்லாம்… இப்ப ஒரேயடியா மாறிட்டாங்க!.. ஆனா… நீ மட்டும் மாறாம முன்னை மாதிரியே அன்பு காட்டுறே, அக்கறை காட்டுறே, நான் லேட்டா வந்தா பதட்டபடறே, எனக்குப் பிடிச்ச மாதிரி சமைக்கறே, அன்போட பரிமாறுறே!… உன்னை என் ரிடையர்மெண்ட் பாதிக்கலையா?”
சில நிமிடங்கள் அமைதி காத்த பார்வதி, “அது வேற ஒண்ணுமில்லைங்க!… இத்தனை நாளு அவங்கெல்லோரும் உங்களை ஒரு கம்பெனியோட ஜெனரல் மேனேஜராகத்தான் பார்த்திருக்காங்க!… அதனாலதான்… அது இல்லேன்னதும் மாறிட்டாங்க!… ஆனா நான்..?… எப்பவும் உங்களை என்னோட வீட்டுக்காரரா… புருஷனா… மட்டும்தான் பார்க்கறேன்!…எனக்கு “என் புருஷன் நல்லாயிருக்கணும், என் புருஷன் குளிக்கணும், என் புருஷன் சாப்பிடணும்!”ன்னு மட்டும்தான் தோணும்!… எந்தச் சூழ்நிலையிலும் உங்களை நான் ஜெனரல் மேனேஜர் ராஜசேகரா பார்த்ததில்லை… பார்க்கவும் முடியாது!… அதனாலதான் எனக்கு எந்த மாற்றமும் தெரியலை!…” சொல்லியபடியே கணவ்ரின் பிளேட்டைப் பார்த்து விட்டு, “இன்னொரு இட்லி வைக்கவா?” கேட்டாள்.
ஒரு இமாலய விஷயத்தை இயல்பாய்ச் சொன்னவளை நெகிழ்வோடு பார்த்தார் ராஜசேகர்.
எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings