“பதறிய காரியம் சிதறும்!… சிதறிய காரியம் சின்னாபின்னமாய்ப் போகும்” என்பது ஆன்றோர் மொழி. இதை யாராவது மறுக்க முடியுமா?.
எடுத்த காரியம் சிறியதோ… பெரியதோ, அதை நிதானமாக, குழப்பமின்றி, ஒருமுகச் சிந்தனையோடு, நகர்த்திச் செல்லும் பட்சத்தில் அதன் முடிவு நிச்சயம் இனிப்புக் கனியாகத்தான் இருக்கும். அதை விடுத்து எடுத்த எடுப்பிலேயே உச்சத்தைத் தொட்டு விட வேண்டும், என்கிற ஆவேசத்தில் சிந்தனையைப் “பர…பர” வென்று பல்வேறு திசைகளில் தெறிக்க விட்டு, செய்யத் துணிந்தால் விளைவு கசப்புக் காயாகத்தான் இருக்குமே தவிர, வேறெப்படி இருக்கும்?.
இருதய அறுவை சிகிச்சை செய்யும் ஒரு சீஃப் சர்ஜன் தன்னுடைய அந்தப் பணியை கூர்முகச் சிந்தனை இல்லாமல் ஆரம்பித்து, எண்ணங்களை எங்கெங்கோ பறக்க விட்டுக் கொண்டு, பதற்றத்துடன் செய்வாரேயானால் அந்த நோயாளியின் உயிருக்கு உத்திரவாதம் தர முடியுமா?.
நூற்றுக்கணக்கான பயணிகளை ஏற்றிக் கொண்டு, ஆயிரக்கணக்கான அடி உயரத்தில் விமானத்தை ஓட்டிச் செல்லும் விமானி, உடலை மட்டும் இங்கே வைத்துக் கொண்டு, உள்ளத்துச் சிந்தனைகளை நாலாத் திசைகளிலும் அலைபாய விட்டுக் கொண்டு, விமானத்தைச் செலுத்தினால் அந்த விமானம் சேர வேண்டிய இடத்திற்கு பத்திரமாகச் சென்றடையுமா?.
ஒரு திருமண விருந்தில் சமையல் செய்யும் தலைமை சமையல்காரர் அங்குமிங்கும் நடந்து கொண்டு, கவனக் குவிப்பின்றி சிதறிய சிந்தனையுடன், தன் சமையல் பணியைச் செய்தார் என்றால், பந்தியில் அவருக்குப் பாராட்டா கிடைக்கும்?. அவரைச் சமையல்காரராக நியமித்த கல்யாண வீட்டுக்காரர்களுக்கு பதக்கமா கிடைக்கும்?.
ஆக, இன்ன பணி என்றில்லாமல் எல்லா நிலைகளிலும் நாம் தெறித்தோடும் சிந்தனைகளோடு சிரத்தையின்றி காரியமாற்றினால், வெற்றியும் உயர்வும் நம்மை விட்டுத் தெறித்தோடி விடும்.
ஒரு முகச் சிந்தனை கடினமான ஒன்றா?
சமீபத்தில் ஒரு கல்லூரிக்கு “கெஸ்ட் லெக்சரர்” ஆக சென்றிருந்தேன். அங்கு இந்த ஒரு முகச் சிந்தனை பற்றிப் பேசிய போது, ஒரு மாணவன் எழுந்து ஒரு விஷயத்தைச் சொன்னான்.
“மேடம்! நான், வகுப்பில் பாடம் நடத்தப்படும் போது “கூர்ந்து கவனிக்க வேண்டும், கவனித்ததை மனதில் பதிவு செய்து கொள்ள வேண்டும்!” என்றுதான் நினைப்பேன், என் உடலும்… கண்ணும்… காதும் இங்குதான் இருக்கும்! ஆனால் என்னையும் மீறி என் உள்ளமும்… சிந்தனையும் எங்கோ சென்று, எதன் மீதோ பதிந்திருக்கும். சில் நேரங்களில் அந்த சிந்தனை ஒரு நிலைப்பாட்டோடு நின்று விடாமல் பல்வேறு நிலைகளில் திரியும். இந்தச் சூழ்நிலையில் எப்படி மேடம் நான் ஒரு முகச் சிந்தனையைக் கொண்டு வருவது?”
அந்த மாணவருக்கு மட்டுமல்லாது எல்லோருக்கும் நான் கூறும் ஒரே பதில் என்னவென்றால், “நம் எல்லோருக்கும் இருப்பது ஒரு மனம்தான்!… ஆனால் அந்த ஒரு மனம் குறிப்பிட்ட செயல் திறன் கொண்ட இரு பகுதிகளைப் பெற்றுள்ளது. ஒன்று புற நோக்கு மனம், இன்னொன்று அக நோக்கு மனம். நாம் இவை இரண்டிற்கும் இடையேயுள்ள உறவைப் புரிந்து கொண்டால் மட்டுமே ஒரு முகச் சிந்தனை என்பது சாத்தியப்படும்” என்பதுதான்.
“அதென்ன புற நோக்கு மனம், அக நோக்கு மனம்?” என்று நீங்கள் கேட்பது புரிகின்றது. உங்கள் வெளி மனம்தான் புற நோக்கு மனம் என்றும், ஆழ் மனம்தான் அக நோக்கு மனம், என்றும் குறிப்பிடப்படுகின்றன. இந்த வெளி மனம் ஐம்புலன்களைக் கொண்டு அறிவைப் பெறுகின்றது. சுற்றுச் சூழல்களுடன் தொடர்பு கொண்டுள்ளது. அதன் இயக்குனராக நீங்கள்தான் இருக்கின்றீர்கள். ஆனால், உங்கள் அக மனம் ஐம்புலன்களின் மூலம் அல்லாமல் உள்ளுணர்வுகளின் மூலம் அறிவைப் பெறுகின்றது. அதுவே உங்கள் உணர்ச்சிகளின் வசிப்பிடமாகவும் உள்ளது. எப்போதெல்லாம் உங்கள் ஐம்புலன்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகின்றனவோ, அல்லது உறக்க நிலைக்குப் போகின்றனவோ, அப்போதெல்லாம் கூரிய அறிவு படைத்த உங்கள் அக மனம் தன்னை வெளிப்படுத்திக் கொள்கின்றது. அந்த அகமனம் உங்கள் உடலை விட்டுச் சென்று, வெகு தொலைவிலுள்ள இடங்களுக்கெல்லாம் பயணம் செய்து விட்டு வரும் சக்தியைக் கொண்டது.
மேலே சொன்ன மாணவன் தன் அக மனத்தில், பாடம் அல்லாத பலவித எண்ணங்களை வண்டி வண்டியாய்க் கொட்டி வைத்துள்ள காரணத்தால், வகுப்பறையில் பாடம் எடுக்கப்படும் போது, அவனது ஐம்புலன்கள் ஓய்வெடுத்து விடுகின்றன. அதன் காரணமாய் வெளி மனம் உறங்கி விடுகின்றது, உள் மனம் வெளியே வந்து விடுகின்றது. ஏற்கனவே அவன் உள் மனத்தில் நிறைத்து வைத்துள்ள விஷயங்களைச் சுற்றியே அவன் சிந்தனையோட்டமும் நிகழ்கின்றது. நிலைமை இவ்வாறு இருக்கையில் அம்மாணவனால் எப்படி பாடத்தில் கவனத்தைக் கொண்டு போக முடியும்?. இந்நிலைக்கு முக்கிய காரணமாக ஊடகங்களைச் சொல்லலாம். ஆம், ஒரு இடத்தில் ப்த்து பேர் குழுமியிருந்தால் அதில் எட்டு பேர் மொபைலில் மூழ்கியிருப்பர். மீதி இருவருக்கு மொபைலில் சார்ஜ் இல்லாமல் போயிருக்கும். இருந்திருந்தால் அவர்களும் மொபைலுக்குள் மூழ்கியிருப்பர்.
பொதுவாகவே, ஊடகங்களும் சரி, கைப்பேசிகளும் சரி அளவுக்கதிகமான விஷயங்களை, ஒளி… ஒலிப்பதிவுகளை, அவை உண்மையோ… பொய்யோ என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் கொட்டித் தருகின்றன. நாம் தவிர்க்க நினைத்தாலும் தவிர்க்க முடியாத அளவிற்கு அவை நம்மை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன என்பதே நிதர்சனம்.
ஆக, நாம் நம் ஆழ் மனப்பதிவுகளை அளவோடும், செறிவோடும், நம் காரியங்களுக்கு உகந்ததாகவும் மட்டுமே, ஏற்படுத்திக் கொள்வோமேயானால், புற மனத்தின் சிந்தனை ஓட்டங்களும், அக மனத்தின் சிந்தனை ஓட்டங்களும், ஒரே திக்கில்… ஒரே இலக்கை நோக்கிச் செல்லும் சாத்தியம் எளிதாகவே நிகழ்ந்து விடும். அவ்வாறு இரு மனங்களும் ஒரே நோக்கில் செல்லும் போதுதான் ஒருமுகச் சிந்தனை என்பது உருவாகின்றது.
தெறிக்கும் சிந்தனையை, ஜெயிக்கும் சிந்தனையாக மாற்ற வேண்டுமெனில், நம் மனதின் சக்தியை நாம் புரிந்து கொண்டு, அந்தச் செயல்பாட்டின் மீது நம்பிக்கை கொள்ளத் துவங்க வேண்டும். எண்ணங்களைச் செதுக்குங்கள். ஒவ்வொரு எண்ணமும் ஒரு காரணம். ஒவ்வொரு சூழ்நிலையும் ஒரு விளைவு.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings