2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
திவ்யாவுக்கு கோபம் கோபமாய் வந்தது.
ஒரு ரசிப்புத் தன்மை இல்லாமல் கூடவா ஒரு மனிதர் இருப்பார். நெற்றியில் வைக்கும் பொட்டாகட்டும், கட்டும் சேலையாகட்டும், வாசலில் போடும் கோலமாகட்டும், சமைக்கும் சமையலாகட்டும். சுவைக்கும் டீயாகட்டும. எதையாவது பார்த்து… ரசித்து… ருசித்து ஒரு வார்த்தை சொல்லி பாராட்டியிருக்கிறாரா. எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்துபோனதுதான் மிச்சம்.
ராஜகோபால் ஒரு பிரைவேட் கம்பெனியில் மேலாளர் உத்தியோகம் பார்க்கிறான். நாற்பதினாயிரம் சம்பளம் வாங்குகிறான். அம்மா மட்டும்தான். ராஜகோபாலின் ஜாதகம் வந்தபோது மிகவும் பிடித்துப் போய் இந்த வரனை விடக்கூடாது என்பதில் அவளது அப்பா குறியாக இருந்தார். அப்பாவின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு கட்டிக்கொண்டாள். மாமியார் வீட்டிற்கு வந்து மூன்று மாதங்கள் ஆகின்றன.
அவள் வந்தபிறகு வீட்டு வேலைகள் எல்லாவற்றிலும் தன்னை முழுதாய் ஈடுபடுத்திக் கொண்டாள். வீட்டை சுத்தம் செய்வது, கோலம் போடுவது, சமைப்பது, பாத்திரங்களை கழுவிப் போடுவது, துணிமணிகளை துவைப்பது, இஸ்த்ரி போடுவது என்று எல்லாவற்றையும் இழுத்து இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தாள். மாமியாருக்கு எந்த பாரமும் இல்லாமலும் பார்த்துக் கொண்டாள்.
ஆனாலும்…
அவளை, ‘ அது ’ மட்டும் உறுத்திக் கொண்டே இருந்தது.
ஒவ்வொரு வேலையையும் பார்த்துப் பார்த்து செய்கிறோம். மாமியாரோ புருஷனோ யாரும் இதுவரை பாராட்டியதேயில்லை. மாமியார் சரி… அவர்களிடம் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது. ஆனால், கட்டிய புருஷனாவது பாராட்டி ஒரு வார்த்தை பாராட்டி சொல்லலாமே. இதுவரை ஒருவார்த்தைக் கூட சொல்லவே இல்லையே.
யோசித்துப் பார்த்துவிட்டு, அன்று இரவு அவனிடம் தனது ஆதங்கத்தை மெல்ல வெளிப்படுத்தினாள் அவள்.
‘ஏங்க… வீட்டுல எல்லா வேலையும் நான்தான் செய்யறேன்… சாப்பாடாகட்டும், டீ காபியாகட்டும்…. சரி அதெல்லாம் சாப்பாட்டு ஐட்டங்கள். நான் கட்டற புடவை, வைக்கற போட்டு, ஸ்டைலா தலை வாரிக்கறது… அவ்ளோ ஏன்… வாசல்ல போடற கோலம்… நானேப் பின்னி நிலைப்படிகள்ல தொங்கவிடற வெல்கம் ஸ்க்ரீன் நெட்… இப்படி எத்தனை எத்தனையோ. இதுல எதுவுமேவா உங்களை அசத்தலை… ஒண்ணுக்குக் கூடவா என்னை பாராட்டணும்னு உங்களுக்குத் தோணலை… ‘
இப்படி திடீரென்று அவள் கேட்பாள் என்று அவன் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனாலும் சொன்னான், ‘ஸாரி டார்லிங்… நீ செய்யற எல்லாமே நல்லாத்தான் இருக்கு… குறைன்னு இருந்தாத்தானே குறை சொல்ல. குறை சொல்லாத வரை எல்லாமே நல்லா இருக்குன்னுதானே அர்த்தம்… ‘
அவள் பதிலற்று உட்கார்ந்திருந்தாள். இப்படி ஒரே வார்த்தையில் மடக்கிவிட்டானே என்று உறைந்து போயுமிதிருந்தாள்.
அவன் மேற்கொண்டு சொன்னான், ‘இப்போ உதாரணத்துக்கு உடம்பு சரியில்லைன்னா டாக்டர்கிட்டே போவோம். நல்ல இருந்தா போவோமா… அதற்காக டாக்டரைத் தேடிப்போய்… தினமும், நான் நல்ல இருக்கேன் டாக்டர்… நான் நல்ல இருக்கேன் டாக்டர்னு சொல்லுவோமா… இல்லையல்லவா…. அதுபோலத்தான் இதுவும். சரி விடு… போனது போகட்டும்… இப்போ சொல்லிட்டேயில்லையா… இனிமே பார், அசத்திடறேன்… ‘ என்றான். இப்போதுதான் அவளுக்கும் மனதுக்கு கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது.
xxxxxxxxxx
காலையில் ஆபிஸ் கிளம்பும் முன் சாப்பிட உட்கார்ந்தான். சாப்பாட்டு டேபிளில் இன்னும் தட்டு வைக்கவில்லை. ஹாட்பாக்ஸையும் காணவில்லை.
‘திவ்யா… ஆபீஸுக்கு டைம் ஆச்சு… இன்னும் ஏன் டிபன் டேபிளுக்கு வரலை… ‘ என்றான் கொஞ்சம் கோபமாய்.
‘தோ கொஞ்சம் இருங்க… இன்னிக்கு தோசைதான்… தோ… ஒன்னு வெந்திட்டே இருக்கு… ஒன்னு வந்துட்டே இருக்கு… ‘ என்றாள் அவள் உள்ளிருந்தபடியே.
அதே நேரம் அம்மா ஒரு தோசையை தட்டில் போட்டுக்கொண்டு வந்து அவன் முன் வைத்தபடி, ‘ ஏன்டா இப்படி பறக்கறே… ‘ என்றாள். தட்டை வாங்கிக்கொண்டவன் அவளைப் பார்த்து முறைத்தான். ‘ வெறும் தோசையவா சாப்பிடுவாங்க… ‘
மறுபடியும் உள்ளிருந்து திவ்யாவின் குரல்…. ‘தோ சட்னி தாளிச்சாச்சுங்க… தோ வந்துட்டேயிருக்கு… ‘ என்றாள். சொன்னபடியே சட்னி கிண்ணத்தை எடுத்துகொண்டு வந்த திவ்யா இரண்டு கரண்டி சட்னியை அள்ளி அவனது தட்டில் போட்டாள்.
‘ஒரு சட்னிதானா…. ‘ என்றான்.
உள்ளுக்குள்ளிருந்து அம்மாவின் குரல். ‘தோ சாம்பார் கொதிச்சுக்கிட்டே இருக்குடா… கொஞ்சம் பொறு வருது… ‘ என்றவள், மறுநிமிடம் ஒரு கையில் தோசைக் கரண்டியால் ஒரு தோசையைத் தூக்கிக்கொண்டு மறுகையில் சாம்பார் கிண்ணமுமாய் வந்து நின்றாள். தோசையை அவனது தட்டில் போட்டுவிட்டு, சாம்பாரையும் ஊற்றினாள்.
தோசையை பிய்த்து முருங்கைக்காய் சாம்பாரில் தொட்டு வாயில் வைத்தான். திடீரென்று ராத்திரி திவ்யா சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. பக்கத்தில் திவ்யாவைக் காணவில்லை. இங்கிருந்தே குரல் கொடுத்தான்.
‘திவ்யா… தோசை நல்லா மொறுமொறுன்னு சூப்பரா இருக்கு… ‘ என்றான்.
அடுத்த தோசையுடன் வெளியே வந்த அம்மா, ‘தோசை சுட்டது நான்… ‘ என்றாள். இவனுக்கு திக்கென்றது. உள்ளுக்குள்ளே திவ்யா சிரித்துக்கொண்டது வெளியே கேட்டது.
திகைத்துப் போய் சமாளித்தான். ‘சரி… தோசைன்னா தோசை மட்டும்தானா… சாம்பார் கூடத்தான் சூப்பரா இருக்கு… திவ்யா… நான் சொல்றது காதுல விழுதா…‘ என்றான் தலையை நீட்டி, அவளுக்குக் கேட்கவேண்டும் என்பதற்காக.
முறைத்தாள் அம்மா. ‘சட்னி மட்டும்தான்தான்டா அவள் அரைச்சது. சாம்பார் கூட நான்தான் வச்சேன்… ‘
மறுபடியும் சமாளித்தபடி, ‘சரி… தோசை, சாம்பார், மல்லிச்சட்னி எல்லாமே நல்லாத்தான் இருக்கு ‘ என்றான்.
அவனது அம்மா மறுபடியும் முறைத்தாள். ‘நானும் இத்தனை வருஷமா இட்லி தோசை சுட்டு போட்டுக்கிட்டிருக்கேன், சட்னி சாம்பார் குருமான்னு பண்ணிப் போட்டுக்கிட்டிக்கேன், ஒருநாளாவது என்னை பாராட்டியிருக்கியாடா… அதென்ன இன்னிக்கு மட்டும் புதுசா… ‘ என்றாள்.
மறுபடியும் சமாளித்தபடி சொன்னான், ‘ ஏதோ தோணிச்சு சொன்னேன்… அது குத்தமா… ‘ என்றான்.
சிரித்துக்கொண்டே சொன்னாள் அம்மா… ‘ சொன்னதெல்லாம் சரி… ஆனா அது மல்லிச் சட்னி கிடையாது. புதினா சட்னி… ‘ என்றுவிட்டு உள்பக்கம் திரும்பி, ‘ ஏன்மா திவ்யா… மல்லிச் சட்னியா அறைச்சே… ‘ என்றாள்.
அடுத்த தோசையுடன் வெளியே வந்த திவ்யா சிரித்தபடி, ‘ இல்லை அத்தை, புதினா சட்னிதான் அறைச்சேன்… ‘ என்றுவிட்டு தோசையை அவனது தட்டில் வைத்தாள்.
‘ சட்னி நாந்தாங்க அறைச்சேன். இந்த தோசையும் நான்தாங்க வார்த்தது… ரெண்டும் எப்படிங்க இருக்கு…. ‘ என்றாள்.
அவன் திருதிருவென முழித்தான்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings