in ,

பஞ்சாபகேசனும் பொன்னியின் செல்வனும் (சிறுகதை) – சுஸ்ரீ

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

அன்பு வாசகர்களே… தினம் தினம் மணிரத்தினத்தின் P.S. படம் பற்றி விவாத /  விமர்சனங்களை பாத்து பயந்து போயிருக்கும் உங்களுக்கு இந்த பதிவு அந்தப் படம் பற்றியது அல்ல என எங்க மொட்டை மாடியில் கத்தும் காக்கா மேல ஆணையாக உறுதியளிக்கிறேன்.

இது முற்றிலும் கற்பனையான பொய்க் கதை

புரட்டாசி சனிக்கிழமை வெங்கடேச சுப்ரபாதம் பக்தியுடன் இதமாக வந்து கொண்டிருந்தது, அந்த முதல் மாடி ஃபிளாட்ல இருந்தது. பார்வதி அம்மா குளிச்சு தலைல சிவப்பு காசித் துண்டை சுத்திண்டு வாசல்ல புள்ளிக்கோலம் போட்டிண்டிருந்தா. கை கோலம் போட்டாலும் மனசு தன் கணவரை பற்றி தான் கவலை.

மணி 6.30 ஆச்சு இன்னும் இவர் எந்திரிக்கலையே. எப்பவும் காலங்காத்தால எழுந்து டி.வீல நியூஸ் பாத்துண்டே “பாரு காப்பி ஆச்சா, சூடா கொடுடுடீம்மா”னு தினம் தவறாம கேப்பாரே, என்னாச்சு இன்னிக்கு, குறட்டை சத்தத்தைக கூட காணமே.

உண்மைல பஞ்சாபகேசன் தூங்காம முளிச்சிண்டுதான் படுத்திருந்தார், ஏதேதோ பழைய யோசனைகள், திருவல்லிக்கேணி ஒண்டுக் குடித்தனம், பின் கட்டுல குடியிருந்த அந்த கல்பனா, ரகசியமா கீழ் கண்ணால பாத்து பஞ்சுவை கவர்ந்தது. மொட்டை மாடில வடாம் காயப் போட வந்த கல்புவோட முதமுத பேசினது. ரகசியமா விரல்களை தொட்டு ஷாக் அடிச்சது.

கிட்டத்தட்ட ஒரு ஆறு மாசம் படிக்க விடாம மனம் தடுமாற வச்ச கல்பு, அத்தை பையனை சமத்தா கல்யாணம் பண்ணின்டு போனது. அப்பறம் ஒரு வழியா படிப்பை முடிச்சு ரிஜிஸ்டர் ஆபீஸ்ல வேலைக்கு சேந்து கோவில்பட்டில பாச்சுவோட கல்யாணத்தப்ப, துடிப்பான பார்வதியைப் பாத்து மனசை பறி கொடுத்து படாத பாடுபட்டு கல்யாணம் பண்ணிண்டு இப்ப வரை எல்லாம் சினிமா போல ஓடியது.

“ஏன்னா காபி கலக்கட்டுமா, நேரம் ஆச்சே எந்திருக்கலையா? பெருமாள் கோவில் போணும்னேளே?”

“புரட்டாசி சனிக்கிழமை பல் தேச்சு குளிச்சிட்டே காபி குடிக்கறேன், இப்பவே கலக்கின ஆறிப் போயிடும்.”

“பல்லெல்லாம் காத்தாலயே தேச்சு பாத்ரூம்ல கிளாஸ்ல போட்டு வச்சிட்டேன் குளிச்சிட்டு மாட்டிக்கோங்கோ.”

“ஏண்டி சத்தம் போட்டு மானத்தை வாங்கறே என் பல்லு நான் தேச்சிக்கறேன், அவசரக் குடுக்கையா தேச்சு வச்சிட்டு சத்தமா வேற ஊருக்கெல்லாம் சொல்றே. உனக்கு இன்னும் பல் இருக்கற பெருமையா”

குளிச்சு காபி குடிச்சிட்டு உற்சாகமா பக்கத்துல இருந்த பெருமாள் கோவிலுக்கு கிளம்பினார் பஞ்சு தாத்தா. இன்னிக்கு கொஞ்சம் கூட்டம் ஜாஸ்திதான். ஆனாலும் நல்ல தரிசனம் பெருமாள் மந்தகாசமாய் சிரித்துக்கொண்டு அருள் பாலித்துக் கொண்டிருந்தார்.

துளசி பிரசாதம், தீர்த்தம் வாங்கிண்டு கற்பூர ஆரத்தியை தொட்டு கண்ல ஒத்திண்ட பஞ்சு வெகு கால பழக்கமான வெங்கிட்டு குருக்களிடம், “என்ன பெருமாளுக்கு இன்னிக்கு நிறைய நெய் விட்டு முந்திரி மிதக்க சக்கரைப் பொங்கல் நைவேத்தியமா?

“ஆமாம் எப்பவும் பண்ற நைவேத்யம்தானே ஏன் கேக்கறீர்”

“இல்லை ஓய் பெருமாள் இன்னிக்கு படு சந்தோஷமாய் கொஞ்சம் நக்கலா கூட என்னைப் பாத்து சிரிக்கற மாதிரி இருக்கு அதான்.”

“காலங்காத்தால கூட்டம் ஜாஸ்தி நீர் வம்பை வளக்காம போய் சேரும்.”

பிரகாரம் சுத்தி ஆண்டாளையும் தரிசனம் பண்ணிட்டு அக்கடானு அந்த அகண்ட பிரகாரத்தில் ஒரு புறமாய் உக்காந்துண்டார் பஞ்சு. போற வரவாளை வேடிக்கை பார்ப்பதும் ஒரு ரசனையான பொழுதுபோக்குதான்.

அப்ப அந்த சடகோபனை பாத்தார், ஒரு பொண்ணு பின்னாலயே சுத்திண்டு வந்தவனை. சடகோபன் இவரோட ஃபிளாட்டுக்கு கீழ் போர்ஷன்ல இருக்கறவன். பையன்னு சொல்ல முடியாட்டாலும் ஒரு மிடில் ஏஜ்.ஏன் கல்யாணம் ஆகலை என்கற விவரம்லாம் ஏரியால இருக்கற பொம்மனாட்டிகளுக்குதான் தெரியும்.

“டே சடை” கொஞ்சம் பலமாவே கூப்டார் பஞ்சு தாத்தா.

திடுக்னு வந்த சத்தத்துல கொஞ்சம் பதறினாப்பல பக்கத்துல வந்தான் அந்த சடகோபன். முன்னால போன அந்த பொண்ணு திரும்பிப் பாத்து சிரிச்சிட்டு போனது.

“ஏன் தாத்தா ஒரு நிமிஷம் தூக்கிவாரிப் போட்டது மெதுவா கூப்பிடலாம், முழு பேர் சொல்லி கூப்பிடலாம்”

“என்னடா பூக்காரி பின்னால எல்லாம் சுத்திண்டிருக்கே வேலைக்கு போகலையா?”

“ஐய்யோ தாத்தா ஏன் பேரைக் கெடுக்கறேள் யார் பின்னாலயும் நான் சுத்தலை, பிரகாரம் சுத்தறதை இப்படி சொல்றேளே”

“அப்படியா அப்ப சரி வேலைக்கு ஏன் போகலை?”

“கல்கியோட பொன்னியின் செல்வன் சினிமாவா வந்துருக்கு தெரியுமா அதுக்கு பகல் ஆட்டம் 10 மணிக்கு போப்போறேன்”

ஒரு மாதிரி கக்னு சிரித்தார் பஞ்சு தாத்தா., “அந்த கதை கிச்சாவோடதே இல்லை அது தெரியுமோ நோக்கு”

“தெரியுமே, அது கல்கி சார் எழுதின பிரம்மாண்டமான நாவல்”

“அட மக்குப் பிளாஸ்திரி, கிச்சாதாண்டா கல்கினு பேரு வச்சிண்டு எழுதினான்.”

“என்ன பஞ்சுதாத்தா, என்ன ஆச்சு உங்களுக்கு, ராத்திரி சரியா தூங்கலையா? இல்லை பையன் ஏதாவது ஃபாரின் சரக்கு அனுப்பினானா?”

“சீ அபிஷ்டு, உக்காரு சொல்றேன் விவரமா” இதுக்குள்ளே இன்னும் சிலர் ஜமா சேந்தாச்சு பஞ்சு தாத்தா வாயை பிடுங்க.

“கேளுங்கோ, எல்லாத்துக்கும் சொல்றேன் கிருஷ்ணமூர்த்தினு பேரு அவனுக்கு, கிச்சானு கூப்புடுவோம். பாவம் வேலையில்லாம சுத்திண்டிருந்தான் ரொம்ப காலமா.நன்னா தமிழ் பேசுவான், எழுதுவான். எனக்கு இங்லீஷ் துரைகள் கிட்ட வேலை பாத்ததால இங்லீஷ்தான் நன்னா வரும்.”

சடகோபன்,”உங்களுக்கு கல்கி சாரை தெரியுமா?”

“சார் என்னடா மோர், கிருஷ்ணமூர்த்தி கிச்சாவாகி, கல்கியாகி இவ்வளவு பேர் வாங்கினதுக்கு காரணம் யாருன்றே”

இப்ப மெதுவா அவரை சுத்தி கூட்டம் அதிகமானது. ஒத்தன், ”யாரு தாத்தா, ஆனந்தவிகடன் எஸ்.எஸ் வாசன் சார்தானே”

“அவர் ஆதரவு கொடுத்தது உண்மைதான், ஆனா நான் பேச வந்தது இந்த பொன்னியின் செல்வன் கதை பத்தி”

“ஆமாம் அதுக்கென்ன 5 பாகம் சூப்பரா எழுதியிருந்தார் உலகத் தமிழர்கள் போற்றும் சரித்திர நாவல்”

“அதுலதான் இருக்கு விஷயம்” எல்லோரையும் ஒரு சுற்று பாத்தார் பஞ்சாபகேசன்”

கோரசா, “ சொல்லுங்க சார் என்ன விஷயம்?”

“அந்த கதை என்னோடது”, சொல்லிட்டு சுத்து முத்தும் எல்லார் முகத்தையும் பாத்தார். யாரும் நம்பலைனு தெரிஞ்சது.

“நான் திருவல்லிக்கேணில இருக்கச்சே இந்த கிச்சா பய சும்மாதான் சுத்திண்டிருந்தான், நான்தான் கூப்டு பிழைப்புக்கு என்னடா பண்ணப் போறேனு கேட்டேன், நான் பத்திரிகை ஆபீஸ்ல வேலை தேடறேன், நன்னா எழுதுவேன்னான்.”

“ஏதாவது நல்ல கதை சொல்லு நான் ஆனந்த விகடன்ல போட ஏற்பாடு பண்றேன்னேன். ஏதோ திராவையா கதை சொன்னான். போடா போ இதெல்லாம் போடுவாளா புஸ்தகத்துல. இனிமே நான் சொல்றேன் நீ அதை நல்ல தமிழ்ல எழுதுன்னேன். அன்னில இருந்து சாயந்தரம் ஒரு ரெண்டு குயர் நோட்டோட திண்ணைல வந்து உக்காருவான் நான் சொல்ல சொல்ல எழுதிப்பான். இப்படியே கிட்டத்தட்ட 6 மாசம் சொன்ன பல்லவ சாம்ராஜ்ய கதைதான் பொன்னியின் செல்வன்”

கோரசா எல்லோரும், “இல்லையே சோழ சாம்ராஜ்ய கதைன்னா சிவகாமியின் செல்வன்”

“அப்படியா… கெட்டிக்காரன் கிச்சா. கொஞ்சம் மாத்தி எழுதிட்டான் போல இருக்கு” குமுதத்தில எஸ்ஏ.பி’கிட்ட சொல்லி நான்தான் தொடரா போடச் சொன்னேன். எஸ்.ஏ.பி நம்ம பயலாச்சா சரினு ஒத்துண்டு போட்டான்.”

“போங்கோ தாத்தா, அவர் அவரோட கல்கி பத்திரிகைல தொடரா கிட்டத்தட்ட அஞ்சு வருஷம் எழுதினார் சும்மா உடான்ஸ் விடாதீங்கோ”

“அப்ப குமுத்த்தில என்கிட்ட கதை கேட்டு எழுதினது யாரு, பாஷ்யம்னு ஒரு வாண்டுப் பய கட்டுக் குடுமியோட வருவானே அவனா?”

“தாத்தா எழுத்தாளர் சாண்டில்யனை பத்தி கதை விடுவார் போல இருக்கு வாங்கடா போவோம். கிழத்துக்கு வேற வேலையில்லை புளுகு மூட்டை”

“டேய் இருங்கடா மீதியை கேட்டுட்டு போங்கோ” யாரும் நிக்காமல் ஓடி மறைந்தனர்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஜாதகத்தில் அரசு வேலை இல்லை (சிறுகதை) – ரேவதி பாலாஜி

    தீபாவளி வந்தாச்சு (சிறுகதை) – தி.வள்ளி, திருநெல்வேலி.