2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
தன் சுருண்ட கிராப்பை மேலும் கலைத்துக் கொண்டு ஏதோ யோசனையாக கண்களை மூடி சோஃபாவில் உட்கார்ந்திருந்தான் அஷோக்.
அந்த வீட்டின் மூத்த பிள்ளையும் அவன் தான், ஒரே ஆண் பிள்ளையும் அவன் தான். அவன் முகத்தில் கவலை ரேகைகள் ஓடிக் கொண்டிருந்தன.
அவனுக்கு கீழே மூன்று சகோதரிகள். தாரா, வசுந்தரா, பவித்ரா மூவரும் அவனுடைய அருமை சகோதரிகள். அப்பா பிச்சாண்டி ஓய்வு பெற்ற நேர்மையான தாசில்தார்.
அவர் ஓய்வு பெறும் போது அரசாங்கம் கொடுத்த பி. எப். பணம், பென்ஷன் தவிர அவருடைய பெயரைப் போலவே வங்கிக் கணக்கில் ஒன்றும் பெரியதாக சேமிப்பு ஏதும் இல்லை. நல்ல வேளையாக ஒரே ஒரு வீடு இருக்கிறது. அது பரம்பரை சொத்து.
காலை மணி எட்டாகியிருந்தது. தோளில் ஒரு ஹேண்ட் பேகை மாட்டிக் கொண்டு வேலைக்குச் செல்ல தயாராக வந்தாள் தாரா . காலை டிபனையும் முடித்துவிட்டு மதியம் லஞ்ச் பாக்ஸும் எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.
கேம்பஸ் இன்டர்வியூ மூலமாக ஒரு மல்டி நேஷனல் கம்பெனியில் சேர்ந்தவுடனே வங்கிக் கடனில் அண்ணாவின் உதவியுடன் ஒரு டூ வீலரையும் தவணை முறையில் வாங்கிக் கொண்டாள் . தாரா பி.டெக். முடித்து அப்போது தான் ஒரு கம்பெனியில் சாப்ட்வேர் இஞ்ஜினீயராகப் பணியில் சேர்ந்திருந்தாள்.
அண்ணா உட்கார்ந்திருக்கும் ‘போசை’ப் பார்த்து அவளுக்கு சிரிப்புதான் வந்தது. எல்லோரையும் விட அந்த வீட்டில் அவன்தான் மிகவும் ஜாலியாக இருப்பவன். அதிலும் அவன் காதலித்த பெண்ணையே பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டவன்.
பக்கத்தில் உட்கார்ந்திருந்த அண்ணி ராகவியிடம் ‘அண்ணா ஏன் சோகமாக இருக்கிறான் ‘ என்று சைகையில் கேட்டாள்.
‘நீ தான் காரணம்’ என்று அவளும் அதேபோல் தெரிவித்தாள். ‘சரி’ என்று தலையசைத்து இரவு பேசிக் கொள்ளலாம் என்று அதே மௌன மொழியில் அறிவித்து விட்டு அலுவலகம் கிளம்பினாள் தாரா.
சாப்பிடும் போது பேசாமல் சாப்பிட வேண்டும் என்பது நம்மில் எழுதப் படாத ஒரு சட்டம். ஆனால் தாராவின் வீட்டில் இரவு சாப்பிடும் போது எல்லா விதமான விவாதமும் நடக்கும்.
சாப்பிடும் உணவு எல்லாவற்றையும் அந்த வீட்டு பெரிய டைனிங் டேபிளில் மிஸஸ் பிச்சாண்டியும், அவர்கள் வீட்டின் ஒரே மகாலட்சுமியான ராகவியும் கொண்டு வந்து வைத்து விடுவார்கள். சாப்பிடும் தட்டு, டம்ளர்களும் வைக்கப் படும். அந்த மகாநாட்டில் கலந்து கொள்ள வசதியாக அவர்களும் உட்கார்ந்து விடுவார்கள். எல்லாமே ‘செல்ப் ஸர்வீஸ் ‘ சிஸ்டம் தான்.
சாப்பிட உட்கார்ந்த உடனே , அவள் அம்மா, “இப்போதெல்லாம் நண்பர்கள் வட்டம், ஆட்டம் பாட்டமாகத் தான் இருக்கிறாயே தவிர ஒரு குடும்பப் பெண்ணாய லட்சணமாய் இல்லை. அண்ணா, காலையிலிருந்து கவலையாக இருக்கிறானே , ஏன் என்று கேட்க மாட்டாயா ?” என்றாள் கோபமாக.
“நானே கேட்கவேண்டும் என்று தான் இருந்தேன். அதற்குள் ஏம்மா முகம் காட்டுகின்றாய்? நண்பர்களோடு பேசிக்கொண்டு இருந்தாலும் ஒன்றும் வெட்டிக் கதை ஒன்றும் பேசுவதில்லை. நான் என் அண்ணாவிடம் கேட்டுக் கொள்கிறேன். மத்தியில் நீ நுழைந்தாலே பிரச்சினை தான்” என்ற தாரா, அவள் அண்ணா அஷோக்கிடமே நேரிடையாகப் பேசினாள்.
“அண்ணா, நமக்கிடையில் மூன்றாவது ஆள் வேண்டாம். என்ன பிரச்சனை என்று நீங்கள் சொல்லுங்கள் அண்ணா . ஆபீஸில் ஏதாவது தொல்லையா” என்றாள்.
“ஆபீஸ் தொல்லையெல்லாம் இல்லையம்மா. என் நண்பன் சேதுராமனை உனக்குத் தெரியும். நம் வீட்டிற்குக் கூட பல முறை வந்திருக்கிறான். நீ கூட அவனுடன் பேசி இருக்கிறாய்” என்றவன் மேலே சொல்லத் தயங்கினான்.
“மேலே தயங்காமல் சொல்லுங்கள் அண்ணா” என்றாள் தாரா.
“அவன் நேற்று மாலை திடீரென்று வீட்டிற்கு ‘ காபி சாப்பிட்டு போகலாம் வாங்க ” என்று அழைத்தான். வீட்டில் அவன் அம்மா மட்டும் தான் இருந்தார். ‘அவன் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும், உன் தங்கை தாராவை பெண் பார்க்க வரலாமா? உன் பெற்றோரிடம் கேட்டு சொல் ‘ என்றான்” என்று தாங்கியபடி சொன்னான்.
“நீ என்ன அண்ணா சொன்னாய்? ” என்று கேட்டாள் தாரா.
“அம்மா அப்பாவை கேட்டுவிட்டுப் பிறகு போன் செய்கிறேன் என்றேன்”
“அவர்களிடம் கேட்டாயா? அவர்கள் என்ன சொன்னார்கள்?” என்றாள் தங்கை.
“நீ என்னடி வக்கீல் மாதிரி கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்கிறாய்?“ என்று கடுகடுத்தாள் அம்மா.
“அண்ணாவுடன் தானே அக்கா பேசிக் கொண்டிருக்கிறாள். நீ ஏனம்மா இடையில் புகுந்து குட்டையை குழப்புகிறாய்?” என்றாள் வசுந்தரா அடுத்த தங்கை மெதுவடையைக் கடித்துக் கொண்டு . பி.எஸ்.ஸி . நர்சிங் இரண்டாம் ஆண்டு மாணவி.
“அப்பா தான் , தாராவின் சம்மதம் கேட்டு விட்டுப் பிறகு சொல்லலாம் என்றார். அதனால் தான் இப்போது உன்னிடம் கேட்கிறேன். நாளை அவர்கள் இங்கே பெண்பார்க்க வரலாமா? சேது உன்னைப் பலமுறைப் பார்த்திருக்கிறான். அவனுக்கு உன்னை மிகவும் பிடித்திருக்கிறது. ஆனால் அவன் பெற்றோர்கள் உன்னைப் பார்த்ததில்லை .அதனால் தான் இந்தப் பெண் பார்க்கும் படலம்” என்றான்.
“அண்ணா, எனக்கு இப்போது திருமணம் வேண்டாம் . எனக்கு வயது இருபத்தி மூன்று தான் ஆகிறது. இருபத்த ஐந்தாவது வயதில் தான் திருமணம் செய்து கொள்வேன். வேலையில் சேர்ந்தே ஆறு மாதம் தான் ஆகிறது. இன்னும் திருமணத்திற்கே நான் தயாராகவில்லை“ என்றாள் தாரா.
பவித்ரா சிரித்தாள் . “திருமணத்திற்குத் தயாராகவில்லையா ? அது என்ன பிரிலிமினரி எக்ஸாமா , மெயின் எக்ஸாமா? நீ படித்துவிட்டு தயார் செய்யப் போகிறாயா? அக்கா, சீக்கிரம் கல்யாணம் செய்து கொண்டு லைனைக் கிளியர் செய்” என்றாள்.
அவள் பேச்லர் பட்டப்படிப்பு மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டே ஐ.ஏ.எஸ். பிரிலிமினரி தேர்விற்கும் தயார் செய்து கொண்டிருக்கிறாள்.
அவர்கள் அம்மாவோ, “நீ நினைக்கும்போது, நீ எதிர்பாற்கின்ற தகுதிகளோடு மாப்பிள்ளை கிடைப்பானா? வரன் தானாக நம்மைத் தேடி வரும் போது அதை அலட்சியப்படுத்தினால் எப்படி? அது மட்டுமல்ல, உனக்குப் பின்னால் இன்னும் இரண்டு தங்கைகள் கல்யாணத்துக்கு காத்திருக்கிறார்கள். ஒவ்வொருத்தராய் நகர்ந்தால் தானே அடுத்தவருக்கு முடிக்க முடியும்” என்றாள்.
“அம்மா, நீ சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. இவ்வளவு விவரமாகக் பேசுகிறாயே அம்மா, நீ என் திருமணத்திற்கு எவ்வளவு பணம் சேர்த்து வைத்திருக்கிறாய்?”
“நான் எப்படி சேர்த்து வைக்க முடியும்? உன் அப்பா ஒருத்தர் சம்பளத்தில் தான் எல்லா செலவும் பார்த்துக் கொள்ள வேண்டும்? என்னிடமோ அல்லது உன் அப்பாவிடமோ சேவிங் கிடையாது”
“அண்ணா தான் எனக்கு எல்லாம் செய்ய வேண்டும் இல்லையா? அவனுக்கும் சின்ன வயது தானே! இப்போதிலிருந்தே அவன் கடன் வாங்கி நிம்மதியைத் தொலைக்க வேண்டுமா? அவனுக்குத் துணையாக அண்ணியும் அந்த பாரத்தை சுமக்க வேண்டும்! இதற்காகத்தான் படித்து வேலைக்கு போகும் அண்ணியை அண்ணாவிற்கு மண முடித்தீர்களா?” என்றாள் கோபமாக.
“ஆம், ஒரு குடும்பத்தில் லாப, நஷ்டங்களில் அவளுக்கும் பங்கு உண்டல்லவா?” அம்மா.
“அம்மா, இது அநியாயம். எங்கள் மூவருக்கும் படிப்பு, திருமணம் அதன் பிறகு வரும் சீர்வரிசைகள், தலை தீபாவளி மற்றும் பல செலவுகள் எல்லாம் இவர்கள் தான் பார்க்க வேண்டும் என்றால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் லாப, நஷ்ட கணக்கு போடத்தான் சரியாக இருக்கும். பெற்றவர்களான நீங்கள் செய்ய வேண்டும். இல்லை, இதையெல்லாம் அனுபவிக்கும் நாங்கள் பொறுப்பேற்க வேண்டும். ஆனால் உங்களால் இந்த வயதில் முடியாது.. அதனால் வேலைக்கு போகும் நானே என் திருமணத்திற்கு செலவு செய்ய முடிவு செய்திருக்கிறேன்” என்றாள் தீர்மானமாக.
“அது எப்படி முடியும்?” அப்போது தான் முதன் முதலாக வாயைத் திறந்தார் அப்பா.
“நிச்சயம் முடியும் அப்பா. நம் நாட்டில் தான் எல்லா பொறுப்புகளையும் ஒரு ஆண் முதுகில் சுமத்துகிறோம. அவன் என்ன குடும்பத்தின் சுமைதாங்கியா? ஒரு கொடியில் பந்தல் போடுகிறோமே, அதைத் தாங்கிப் பிடிக்க நான்கு கால்கள் இல்லையா? ஒரே ஒரு ஆணி வேரை நம்பியா இருக்கிறது? அது போலத்தான் நாங்களும். இன்னும் இரண்டு ஆண்டுகள் நான் வேலைக்கு சென்றால் அண்ணாவோ அல்லது அண்ணியை எங்கள் செலவை ஏற்க வேண்டியதில்லை. எங்கள் பாரத்தை நாங்களே சுமப்போம்” என்று நிதானமாக ஆனால் உறுதியாகச் சொன்னாள் தாரா.
“அதுவரையில் இந்த மாப்பிள்ளை காத்திருபானா?” ஏமாற்றத்துடன் கேட்டாள் அம்மா.
“அம்மா, அவனுக்கு நான் தான் வேண்டுமென்றால் காத்திருக்கட்டும். இல்லையென்றால் நீ சொல்வது போல் எனக்கென்று பிறந்தவன் தேடி வருவான். யூ டோன்ட் ஒர்ரி” என்றவள், “யாருக்கு மாப்பிள்ளை யாரோ?” என்று பாடிக்கொண்டே அம்மாவின் கழுத்தில் முகம் பதித்தாள்.
(முற்றும்)
GIPHY App Key not set. Please check settings