in ,

வேண்டாமே தலைக்கனம் (சுயமுன்னேற்றக் கட்டுரை) – முகில் தினகரன்

“வாழ்க்கை என்றாலே மனிதர்கள்தான்” என்கிறார் காப்மேயர்.  உண்மைதான், சக மனிதர்களை நேசித்து, ஆதரித்து, அரவணைத்துச் செல்லும் போதுதான் வாழ்க்கை என்பதே இனிதாகின்றது.  அந்த இனிய சூழல் தொடரும் போதுதான் வெற்றிகளும், உயர்வுகளும், தாமாகவே நம்மிடம் வந்து குவிய ஆரம்பிக்கும்.  அவ்வாறு கிடைக்கப் பெற்ற உயர்வினை நாம் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமெனில், நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அதாவது, முன்பு நாம் கடைப்பிடித்து வந்த சக மனிதர்களை நேசித்து, அரவணைத்துச் செல்லும்  அந்த முறையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் இருப்பதுதான்.

“ஏறும் வரை ஏணி, ஏறியபின் அதைப் போநீ” என்று உதைத்துத் தள்ளும் மனிதர்கள் வாழும் இச்சமுதாயத்தில், உயர்வு நிலையைத் தொட்ட பின்னும் பழைமையை மறவாது ஒழுகும் மனிதர்களைக் காண்பது மிகவும் அரிதாகவே உள்ளது.  சில மாதங்களுக்கு முன்பு,  அறிவியல் விஞ்ஞானி திரு.மயில்சாமி அண்ணாதுரை அவர்களை எங்கள் பகுதி நூலகத்தின் வாசகர் வட்ட சார்பில் நூலக வார விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தோம். “சந்திராயன் மற்றும் மங்கள்யான்” போன்ற விண்கலங்களை விண்ணுக்குச் செலுத்தி, நம் பாரத நாட்டின் பெருமையை உலக அரங்கில் சிறக்கச் செய்வதில் பெரும் பங்கு வகித்த அவர், எங்கள் அழைப்பினையும் மதித்து, விழாவில் வந்து கலந்து கொண்டு சிறப்பித்தார்.

விழா முடிவடைந்ததும், அவரிடம், “நீங்கள் இன்றே சென்னை புறப்படுகிறீர்களா?” என்று கேட்ட போது, அதற்கு அவர் சொன்ன பதில் அங்கிருந்த எங்கள் அனைவரையும் நெகிழச் செய்து விட்டது.  கோவைக்கு அருகில் உள்ள சிறிய கிராமத்தின் பெயரைக் குறிப்பிட்டு, “அதுதான் நான் பிறந்து வளர்ந்த ஊர்!… இப்போது நான் அங்குதான் செல்கின்றேன்!… அங்கே போய் என்னுடைய உறவினர்களை, என்னுடன் பள்ளியில் படித்த தோழர்களை, எனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களை, இன்னும் என்னுடன் பழகியவர்களைப் பார்த்து பேசி விட்டு, அவர்களுடன் ஒரு நாள் இருந்து விட்டு, நாளைதான் சென்னை போகின்றேன்!” என்றார்.

சிகரத்தைத் தொட்டு விட்ட அந்த மனிதர், தனது சிறிய கிராமத்தின் மீதும், அந்த ஊர் மனிதர்களின் மீதும், இன்னும் அன்பு மாறாமல் இருப்பதால்தான் அவர் தொடர்ந்து உயர்வுகளைத் தொட்டுக் கொண்டேயிருக்கின்றார்.

இது ஒரு புறம் இருக்க, இதற்கு முற்றிலும் எதிர்மறையான கருத்துள்ள ஒரு நபரையும் சந்திக்க வேண்டிய சூழ்நிலையொன்று எனக்கு ஏற்பட்டது.   கோவையைச் சேர்ந்த அவர் திரைத்துறைக்குள் நுழைந்து, ஒன்றிரண்டு படங்களில் சிறு சிறு வேடங்களில் நடிக்க ஆரம்பித்து, அதன் பிறகு ஓரளவிற்கு கனமான பாத்திரங்களில் நடித்து, தற்போது வெகுவான மக்களால் அடையாளம் புரிந்து கொள்ளும்படியாகவும் வளர்ந்து விட்டவர்.திருப்பூரில் நான் சென்றிருந்த ஒரு திருமண விழாவிற்கு அவரும் வந்திருந்தார். அப்போது அவரைப் பற்றிய விபரங்களை என்னுடன் இருந்தவர்கள் சொல்ல, நான் உண்மையிலேயே அந்த நபரையும் அவரது முயற்சியையும் பாராட்டி விட்டு, விரைவில் அவர் ஒரு உச்சநிலையை அடைவார் என்று, வாழ்த்தும் சொன்னேன்.  ஆனால், என்னுடன் இருந்தவர், “அடப் போங்க!… இவனெல்லாம்…அந்த உயரத்திற்குப் போக மாட்டான்… போகவும் முடியாது!” என்றார்.

“அப்படிச் சொல்லாதீங்க!… கடுமையாக உழைத்துத்தான் அவர் இந்த நிலையை எட்டியிருக்கிறார்!… இன்னும் அதே போல் உழைத்தால் நிச்சயம் உயருவார்!” என்றேன் நான்.

“இல்லைங்க இப்ப அவன் மாறிட்டான்!… ஆரம்பத்துல எல்லோரோடவும் நல்லா அன்னியோன்யமா பழகினான்… பேசினான்!… இப்ப நாலு படம் நடிச்சதுமே… என்னமோ சூப்பர் ஸ்டாரே ஆயிட்ட மாதிரி… யாரோடவும் முன்ன மாதிரி பேசறதில்லை!… பழகறதில்லை!”

“பிஸியாய் இருக்கிறாரோ என்னவோ?” என்றேன் நான்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லைங்க!… கொஞ்சம் கொஞ்சமாய் மேலே போகப் போக, அந்த தரத்துக்குத் தகுந்தவங்களோடதான் பழகணுமாம்!… சகஜமா எல்லோரோடவும் பழகினா… மதிப்பிருக்காதாம்!…. அப்படின்னு வெளிப்படையாவே சொல்றான்!”

என்னால் அப்போதைக்கு அந்த நபர் சொன்னதை முழுமையாக நம்ப முடியவில்லை. ஆனால், அதற்குப் பிறகு வந்த பத்திரிக்கைச் செய்திகள் அந்த புது நடிகருடைய தலைக்கனத்தைப் பற்றி கிசுகிசுக்க ஆரம்பித்த பின்னும், விளைவாய், அவருக்கு அடுத்தடுத்த சந்தர்ப்பங்கள் கிடைக்காமல் போய், அவர் திரும்பவும் சொந்த ஊருக்கே வந்து, வேறொரு தொழிலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட பின்னும், நான் முழுமையாகப் புரிந்து கொண்டேன், தலைக்கனம் என்பது தவிர்க்க வேண்டிய துர்க்குணம் என்று.

வாழப் போவது ஒரு முறைதான், அந்த வாழ்க்கையில் எல்லோருடனும் இணக்கமாய்ப் பழகி, இனிமையாய்ப் பேசி, சந்தோஷமாய் இருந்து விட்டு போவதில் என்ன தவறு?   தலைக்கனத்தில் வீழும் போது, அதனால் ஏற்படும் துன்பத்தை விட, நாம் யார் யாரையெல்லாம் உதாசீனப் படுத்தினோமோ?… அவர்களெல்லாம் நம்மை பரிதாபமாய்ப் பார்க்கும் போது ஏற்படும் மனவேதனை இருக்கின்றதே?… அது சொல்லி மாளாத துயரம்.

மனிதனுக்கும், மனிதன் அல்லாதவற்றுக்கும் உள்ள ஒரே அடிப்படை வேறுபாடு சிந்தனைதான்.  சிந்திப்பவர்கள் சந்திப்பது வெற்றியை.  சிந்திக்காதவர்கள் சந்திப்பது பிறரின் நிந்தனைகளை.  தலைக்கனம் கொண்டவன், சிந்தனை வறட்சிக்காரன்.  அவன் எண்ணத்தில் கவசமாக இருக்கும் அந்த தலைக்கனம், அவனை வசமாக இடறி விடும் போது, சிந்திக்க ஆரம்பிப்பான்.  அது அஸ்தமனச் சூரியனை நோக்கி பூபாளம் இசைப்பது போல.

அடுத்து, தலைக்கனம் ஒருவனுக்குள் தோன்றிவிட்டால், அது சும்மாயிருக்காது கூடவே சில உறவினர்களையும் அழைத்து வந்து அவன் மீது ஏற்றி உட்கார வைத்துவிடும்.  அந்த உறவினர்கள் சாதாரணமானவர்கள் அல்ல, தலைக்கனத்தை விடவே கொடியவர்கள். முதல் உறவினர் கோபம், அடுத்து அதைரியம், அப்புறம் சந்தேகம், அகந்தைப்பேச்சு, ஆணவ நடத்தை, இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

தலைக்கனம் கொண்டவனிடம் எளிய நிலையில் உள்ளோர், அல்லது அவனால் அவனுடைய தரத்திற்கு சமமானவர்கள் அல்ல! என்று நினைக்கக் கூடியவர்கள் யாராவது வலியப் பேசும் போது, தவிர்ப்பான்.  தொடர்ந்து பேசினால் கோபம் கொள்வான். ஆத்திரமடைவான்.  அந்தக் கோபத்தில் அவனது அகந்தை தெறிக்கும்.  ஆணவம் தாண்டவமாடும். எல்லாம் முடிந்ததும் அவனே தனியே சென்று தான் பேசியவற்றை எண்ணி அஞ்சுவான். அதனால தன்னுடைய உயர்நிலைக்கு ஏதாவது பங்கம் வந்து விடுமோ? என்று அதைரியத்துடன் உலாவுவான். யாரோ… எங்கோ… எதையோ… பேசினால் அது தன்னைப் பற்றித்தானோ? என்று சந்தேகப்படுவான்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பல்லக்கைத் தூக்காதே!…பல்லக்கில் நீ ஏறு (சுயமுன்னேற்றக் கட்டுரை) – முகில் தினகரன்

    உனக்கு நீயே நீதிபதி (சுயமுன்னேற்றக் கட்டுரை) – முகில் தினகரன்