இப்பூவுலகில் பிறந்து, வளர்ந்து, வாழும், எல்லா மனிதர்களுக்கும் வாய்ப்பு என்பது பொதுவாகவும், பரவலாகவும், அமைந்துள்ள ஒரு பொக்கிஷமாகும். அந்த வாய்ப்பு வரத்தை சரியான நேரத்தில், சரியான விதத்தில், பயன்படுத்திக் கொள்ளும் ஒருவன்தான் முதலிடத்திற்குப் போகிறான். முதன்மை பெறுகிறான். பல்லக்கில் ஏறுகிறான், பார் முழுதும் பவனி வருகிறான். அதே நேரம், அந்த வாய்ப்பு என்னும் வரத்தை வீணடித்து வாழ்பவன், கடைசிப் படிக்கட்டிலேயே கால் நீட்டி அமர்ந்து விடுகிறான்.
சிலர் தங்களைத் தாங்களே பலவீனராய் எண்ணிக் கொண்டோ, அல்லது சோம்பல் காரணமாகவோ, இருக்கும் நிலையிலேயே “போதும்…போதும்…நமக்கு இதுவே போதும்” என்கிற ஒரு மனப்பாங்கில் விடாப்பிடியாய் இருந்து கொள்வர். வாழ்க்கையில் அடுத்த உயர்விற்குப் போகும் எண்ணமே இல்லாமல், எந்தவிதமான சோதனை முயற்சிகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளாமல், நிதானமான சொகுசோடு, வாழ்க்கையை வாழ்ந்தே முடித்து விடுவர்.
இதன் பின்புலத்தில் மறைந்திருக்கும் மாபெரும் உண்மை என்னவென்றால், அவர்களது அடி மனத்தில், உச்சியை எட்ட, முதலாம் இடத்தைத் தொட, ஒருவித அச்சம், பதட்டம், நடுக்கம் இருக்கின்றதென்பதுதான்.
நண்பர் ஒருவர் உள்ளூரில், ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணி புரிந்து கொண்டிருந்தார். சூப்பர்வைஸர் என்கிற காரணத்தால் அவருக்கு பொறுப்பும், வேலைப் பளுவும், ஒரு வரையறைக்குள்தான் இருந்தது.
தொடர்ந்து பல வருடங்கள் அவர் உள்ளூரிலேயே, அந்த வரையறைக்குட்பட்ட பணியையே, செய்து பழகிவிட்டதால் அவரையுமறியாமல், ஒருவிதமான சொகுசுத் தன்மையை அவர் உடலும், மனமும் ஏற்றுக் கொண்டு விட்டன.
சில வருடங்களுக்குப் பிறகு, அவருக்கு உத்தியோக உயர்வுடன் கூடிய பணியிட மாற்றத்திற்கான ஆணை வந்து விட, மனிதர் கடும் சோகத்திற்கு ஆளானார். உண்மையில் புரமோஷன் (PROMOTION) என்பது அவருக்கு சந்தோஷத்தைத்தான் தந்திருக்க வேண்டும், மாறாக அது அவரைச் சோகப்படுத்தி விட்டதால், நாசூக்காய் அவரிடம் சென்று விசாரித்தேன். அப்போது அவர் கூறிய சில காரணங்கள் பெரும் அதிர்ச்சியையே தந்தன.
“புரமோஷன்ல “மேனேஜர்”ங்கற பதவியோட அங்க போறது மேலோட்டமா பாத்தா சந்தோஷமாய்த்தான் தெரியும்ங்க! ஆனா அங்க போய்ப் பார்த்த பிறகுதான் அதிலுள்ள பிரச்சினைகள் புரியும்!… மேனேஜர் என்பதினால எப்படியும் எல்லா டிபார்ட்மெண்டும் என்னோட கண்ட்ரோலுக்குக் கீழ்தான் வரும்! அப்படி வரும் போது ஆட்டோமேடிக்கா என்னோட பொறுப்புக்களும், வேலைப்பளுவும் இங்க இப்ப இருப்பதைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாகும்!… அதெல்லாம் நமக்குச் சரிப்பட்டு வராது!” என்றார். நானும் விடாமல், “அதற்குத் தகுந்தாற் போல் ஊதிய உயர்வு கிடைக்குமே?” என்று கேட்டேன்.
“வேண்டாம்… வேண்டாம்!… அந்த ஊதிய உயர்வுக்கு ஆசைப்பட்டா வேலைப்பளு ஓவராகி எல்லா சந்தோஷங்களும் போய் விடும்!… அதனால, நான் அந்த “புரமோஷன்-வித்-டிரான்ஸ்பர்” ஆர்டரை “விருப்பமில்லை” என்று எழுதி திருப்பியனுப்பி விட்டேன்” என்றார்.
தனக்குக் கிட்டிய அந்தப் பணியிட மாற்றத்தையும், உத்தியோக உயர்வையும் அவர் ஒரு வரமாக எண்ணி, எழுச்சியோடு அதை ஏற்றுக் கொண்டு, தான் செல்லும் ஊரில், தன்னுடைய பணியாற்றுதலை இன்னும் அதிகமாக சீர்படுத்திக் கொண்டு, சிறப்பாகப் புரிந்திருந்தால் அவர் மேன்மேலும் உயர்ந்து, பல்லக்கில் ஏறும் தகுதியை நிச்சயம் பெற்றிருப்பார்.
மாறாக, அந்த உத்தியோக உயர்வினையே அவர் ஒரு சாபமாக எண்ணி, தற்போதைய சொகுசான வாழ்க்கையை இழக்க மனமில்லாமல், கூடுதல் பொறுப்பு மற்றும் வேலைப்பளுவிற்கு பயந்து, அதை ஏற்காதது, அவருடைய “எஸ்கேப்பிஸம்” (ESCAPISAM) குணத்தையே காட்டுகின்றது.
“பதவி வரும் போது பணிவு வரவேண்டும், துணிவும் வரவேண்டும் தோழா!” என்ற ஒரு வரி ஒரு திரைப்படப் பாடலில் வரும். உண்மைதானே? பதவி வரும் போது, நமக்குக் கீழே பலர் பணிபுரிவர். அவ்வாறு பணியாளர் எண்ணிக்கை அதிகமாகக் கூடும் போது நாம் நமது பேச்சில் ஒரு பணிவினைக் காட்டினால்தான் ஜெயிக்க முடியும்.
அதே போல், பதவி வரும் போது பணிச் சுமையும் கூடும், பல்வேறு பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலைகளும் ஏற்படக் கூடும். அந்த நேரங்களில் நம் மனதில் துணிவு இருந்தால்தான் பணிச்சுமை எளிதாக்க முடியும், பிரச்சினைகளைத் தீர்க்கவும் முடியும், என்கிற கருத்தை உண்மையில் அந்தக் கவிஞர் எவரை நினைத்து அதை எழுதினாரோ தெரியாது. ஆனால், அது பயத்தின் காரணமாய் பதவி உயர்வை உதறித் தள்ளிய எனது நண்பருக்கு எவ்வளவு தூரம் பொருந்தி வருகின்றது பார்த்தீர்களா?
வாழ்க்கை என்பதே ஒரு ஓட்டப் பந்தயம்தான். ஓடிக் கொண்டிருக்கும் நம்மை முந்திச் செல்ல பலர் நமக்குப் பின்னால் வந்து கொண்டிருப்பர். நாம் நம் சோம்பல் குணத்தால், சொகுசுத்தனத்தால், வருகின்ற வாய்ப்புக்களை நழுவ விடுவோமேயானால், அந்த வாய்ப்பினை நமக்குப் பின்னால் வந்து கொண்டிருப்பவர் “கப்”பென்று பற்றிக் கொண்டு, “ஜிவ்”வென்று மேலே உயர்ந்து விடுவார்.
இவ்வாறு, நம்மைத் துரத்திக் கொண்டு வருபவர்களுக்கு நாமே சந்தர்ப்பத்தை உண்டு பண்ணிக் கொடுத்தால் உயரம் அவர்களுக்குச் சொந்தமாகிவிடும். துயரம் மட்டுமே நமக்குச் சொந்தமாகும்.
ஆங்கிலத்தில் ஒரு அழகான சொற்றொடர் உண்டு, “வெற்றியாளர்கள் விட்டு விடுவதில்லை. விட்டு விடுபவர்கள் வெற்றி பெறுவதில்லை”. நீங்க வெற்றியாளர் ஆக வேண்டுமென்றால் வரும் வாய்ப்புக்களை விட்டு விடாதீர்கள் மேலே உதாரணம் காட்டப்பட்ட நண்பர் வாய்ப்பை விட்டு விட்டார், அதனால் உயர்வுச் சிம்மாசனத்தை இழந்து விட்டார். அவருக்கு கடைசிப் படிக்கட்டுதான் என்றும் நிரந்தரம்.
இன்றைய சமுதாயத்தில் பல இளைஞர்கள், யாரோ ஒரு அரசியல் தலைவருக்குத் தொண்டனாகவோ, அல்லது யாரோ ஒரு திரைப்பட நடிகனுக்கு ரசிகனாகவோ, இருந்து கொண்டு தங்களுடைய நேரத்தையும், உழைப்பையும் அவர்களுடைய உயர்வுக்குத் தாரை வார்த்துக் கொண்டிருப்பது வேதனையான ஒரு விஷயம்.
இவர்களே தங்களுடைய சிந்தனையை வேறு கோணத்தில் திருப்பி, “ஏன் அந்தத் தலைவருடைய இடத்திற்கு நாம் போக முடியாதா?” “அந்த நடிகருடைய உயர்வை நாமும் எட்ட முடியாதா?” என்று எண்ணத் துவங்கினார்கள் என்றால், அதற்கான வாய்ப்புக்களை உருவாக்கிக் கொண்டார்கள் என்றால், நிச்சயம் முடியும்.
அந்த இடத்தை நோக்கி அவர்கள் நகரும் போது, ஒவ்வொரு படிக்கட்டிலும் வலிகளை உண்டாக்கக் கூடிய முட்கள் இருக்கத்தான் செய்யும், அவற்றைக் கண்டு பயந்து, புறப்பட்ட இடத்திற்கே திரும்பினால் காலம் முழுவதும் பல்லக்குத் தூக்கிகளாகவே இருந்திடும் நிலைதான் உண்டாகும்.
பயத்தையும், சோம்பல் குணத்தையும், துடைத்தெறிந்து விட்டு, துணிவையும், தெளிவையும் கையிலெடுத்துக் கொண்டால் பல்லக்கைத் தூக்குவதை விடுத்து பல்லக்கில் நீ ஏறலாம்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
பல்லக்கு கதை நல்ல ஒரு விழிப்புணர்வு படிக்க இருக்கும் ஜனங்களுக்கு. நன்றி