in ,

பழகும் விதமே பண்பாடாகும் (சுயமுன்னேற்றக் கட்டுரை) – முகில் தினகரன்

ஒருவருடன் நன்றாகப் பழகுவது என்பது பொதுவாக இரு நபர்களிடையே நேர்மறையான மற்றும் இணக்கமான உறவு இருப்பதைக் குறிக்கிறது. இதில் பல காரணிகள் அடங்கும்.

பரஸ்பர மரியாதை 

     இரு நபர்களும் ஒருவருக்கொருவர் கருத்துகளையும் உணர்வுகளையும் மதிக்கிறார்கள்.

நல்ல தொடர்பு :

     அவர்கள் தங்களை வெளிப்படையாக வெளிப்படுத்திக் கொள்ளவும், ஒருவருக்கொருவர் கேட்கவும் முடியும்.

பொதுவான உணர்வுகள்: 

     அவர்கள் ஒன்றாக நேரத்தை செலவிடுவதை விரும்புகிறார்கள், மேலும் பொதுவான பொழுது போக்குகள் அல்லது மதிப்புகளைக் கொண்டுள்ளனர்.

ஆதரவு 

     தேவைப்படும் நேரங்களில் அவர்கள் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பார்கள்.

     எல்லோரிடமும் நன்கு பழகுவதென்பது ஒரு உயரிய கலை.  “இந்த உலகில் எந்த ஒரு திறமையையும் விட, மக்களைக் கையாளும் திறமைக்காக நான் நிறைய விலை கொடுப்பேன்” என்கிறார் ஜான் ராக்பெல்லர்.

     பள்ளியிலும், கல்லூரியிலும் உடன் படிக்கும் சக மாணவ்ர்களுடன் நன்றாகப் பழகி, நட்புடன் இருப்பதும், குடும்பத்தில் தாய், தந்தை, சகோதர, சகோதரிகள், மற்ற உறவுகள் எல்லோரிடத்திலும்,

     அதே போல் சமூகத்தில் சக மனிதர்களுடனும், அலுவலகத்தில் சக ஊழியர்களிடத்திலும், இணக்கமாகவும், இங்கிதமாகவும் பழகுவது உங்கள் வாழ்க்கையை உயர்வை நோக்கி வழி நடத்திச் செல்லும் காரணியாகும்.

     நல்ல பழகும் முறை என்பது, நாகரீகமான முறையில், பண்புடன், பணிவுடன் பேசுவதாகும். சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் அடிப்படையில் வழ…வழ…வென்று பேசுவதைத் தவிர்த்து, நறுக்குத் தெறித்தாற் போல் பேசுவது நட்பில் உறுதியை உண்டாக்கும்.  தேவையில்லாத சங்கடங்கள் தோன்றாமல் தடுக்கும்.

     ஒருவர் பேசும் போது குறுக்கே பேசுவது அழகல்ல. பிறருடைய பேச்சிலும் சரி, விவாதத்திலும் சரி, அபிப்பிராயத்திலும் சரி, நமக்கு உடன்பாடு இல்லை என்கிற போதும், நம்மால் அவர் கருத்தோடு ஒத்துக் போக முடியாத போதும், எடுத்த எடுப்பில் உரத்த குரலில் நம் கருத்தைச் சொல்லுவதை விட, நமது அபிப்பிராயத்தை மிக நாசூக்காகவும், தெளிவாகவும், பொறுமையுடன் எடுத்துச் சொல்லி, விளங்க வைக்க முயற்சி செய்வது நல்லது.  இவ்வாறு செய்யும் பட்சத்தில் பிறரிடமிருந்து நல்ல மரியாதை, கௌரவம் கிடைக்க வாய்ப்புள்ளது.

     நாம் அறிவை எப்படி சம்பாதிக்கிறோமோ?… பணத்தை எப்படி சம்பாதிக்கிறோமோ?… அதே போல் மனிதர்களைச் சம்பாதிக்கும் எண்ணமும் வேண்டும். அதற்காக பெரிய சிரமம் பேற் கொள்ள வேண்டிய அவசியமில்லை.  நம் பேச்சிலும், பழக்கத்திலும் பணிவு, துணிவு, இனிமை இம்மூன்றையும் சரி விகிதத்தில் கலந்திட தோழமையும், சிநேக மனப்பான்மையும் அதுவாகவே வந்து சேரும்.

     “பெஞ்சமின் ஃப்ராங்களின்” சொல்லுவார், “WHEN YOU ARE GOOD TO OTHERS, YOU ARE BEST TO YOURSELF”.  மற்றவர்களுடன் நாம் நன்கு பழக வேண்டும், நல்ல உறவுடன் இருக்க வேண்டும் என்று எண்ணினால் கீழ்க்கண்ட முக்கியமான ஆங்கில வார்த்தைகளை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.

     என்னுடைய தவறை நான் ஒப்புக் கொள்கிறேன்

     நீங்கள் வேலையை நன்றாகச் செய்துள்ளீர்கள்.

     உங்க அபிப்பிராயம் என்ன?

     நீ பொருட்படுத்துவாயா?

     நன்றி.

     செய்யும் தொழிலிலும் சரி, பார்க்கும் பணியிலும் சரி, நாம் முழுமையான வெற்றியைப் பெற வேண்டுமென்றால் மக்கள் தொடர்பு, மனித உறவுகள், நட்புகள், நம்முடைய பழக்க வழக்கங்கள், ஆகியவற்றில் எந்தவித பிரச்சினைகள் இல்லாமல் கவனித்துக் கொள்ள வேண்டும்.  அப்போதுதான், வாழ்க்கையில் பின்னடைவு என்பது பின்னோக்கிச் செல்லும்.

     “அரிஸ்டாடில்” சொல்லுவார். “மனிதனுடைய தவறுகளில் பெரும்பாலானவை நாவிலிருந்தே உண்டாகின்றன” என்று. ஆம், நமக்கு பிறரிடமிருந்து மரியாதை, மதிப்பு இவை கிடைக்க வேண்டுமென்றால் “நயம் பட உரை”த்தல் அவசியம்.

     ஒழுக்கம், பண்பாடான நடத்தை, சமூக சேவைக்கான மனப்பான்மை, நல்ல பழக்கங்கள், இவை யாவும் ஒரே நாளில் கற்றுக் கொள்ள முடியாதவை.  அதே நேரம் இவற்றைத் தொடர்ந்து பழக்கிக் கொண்டிருந்தால் இவைகளே நம் பழக்கமாகிவிடும்.

     எந்தச் சூழ்நிலையில் நம் வாழ்க்கை நிலை இருந்தாலும், மகிழ்ச்சியும், மன அமைதியும் நிறைந்த இனிய வாழ்வைப் பெற வேண்டுமானால் தனிமையை விட வேண்டும்.  உலகத்தோடு ஒட்டிப் பழக வேண்டும்.  அவ்வாறு உலகத்தாரோடு கலந்து பழகி, அவர்களுடன் நட்புறவு கொள்வதற்கு முக்கியத் தேவை நாம் நல்ல தோற்றமுடையவர்களாக இருக்க வேண்டும்.

     இங்கு நல்ல தோற்றமென்பது ஆர்ப்பாட்டமான உடை அலங்காரத்திலோ, அதீதமான அழகு சாதனங்களினாலோ, வருவதல்ல. சாதாரணமான உடை ஆனாலும் அதை சுத்தமாகப் பராமரித்து அணிதல் நல்ல தோற்றம் தரும். அதே போல், உடல் பரிசுத்தம். மனிதன் சாதாரணமாகக் கைக்கொள்ள வேண்டிய நித்திய கடன்களை ஒழுங்காகக் கடைப்பிடித்தாலே போதும் உடல் சுத்தமும் வந்து விடும்.

     இவ்வாறு உடை மற்றும் உடல் சுத்தம் நம்மிடம் இருக்கும் போது மற்றவ்ர்கள் நம்மோடு சுலபமாக, நெருங்கிப் பழகுவார்கள்.  ஒரு புதியவர் விலாசம் கேட்டு வருகிறார். அங்கே அழுக்கு பனியன் மற்றும் லுங்கி சகிதம் நாலைந்து இளைஞர்கள் நிற்கின்றார்கள். அருகே, சுத்தமான வேஷ்டி, சட்டையோடு ஒருவர் நிற்கிறார்.. அந்தப் புதிய மனிதர் யாரிடம் சென்று விலாசம் கேட்பார்?

     மேலும், நம் உடை அழுக்காகவோ, கிழிந்தோ, நைந்தோ, இருக்கும் பட்சத்தில், எவ்வளவு அதிகமாய் நம்மிடம் கல்வியும், திறமையும், நம்பிக்கையும் இருந்த போதிலும், நாமே நம் தோற்றத்தின் காரணமாய் மனம் குன்றி ஒதுங்கி விடுவோம்.  இந்நிலை தொடர்ந்தால், பொது இடங்களில் நடமாடவே மனம் கூசி, தனிமை வாழ்வில் மனிதன் அடைக்கலம் புகுந்திடுடுவான்.

     எல்லோரிடமும் நட்பாயிருங்கள்.  எப்போதும் புன்னகை செய்யும் நிலையில் உங்கள் முகத்தை வைத்துக் கொள்ளுங்கள்.  உறுதியான கை குலுக்கல், முக மலர்ச்சியோடு கூடிய வரவேற்பு, வாழ்த்துக்களோடு கூடிய வழியனுப்புதல், போன்றவற்றைச் செய்வதனால் நம் பழகு குணம் பளிங்கு குணமாகும்.

     எப்போதும் நீங்கள் சொல்வதே சரியென்று பிடிவாதம் செய்யவோ, வாதிடவோ செய்யாதீர்கள். அற்ப விஷயங்களை விட்டுக் கொடுத்து, பெரிய விஷயங்களில் சமரசமாகப் போக முயலுங்கள்.

     “பழகும் வகையில் பழகிப் பார்த்தால் பகைவன் கூட நண்பனே” என்று ஒரு திரைப்பாடலில் வரிகள் வரும்.  உண்மைதான், பகைவனை பகைவனாய் மட்டுமே பார்க்காமல் ஒரு மனிதனாகப் பார்க்கும் போது அங்கு பகை மாறி சிநேகம் தோன்றும்.

(முற்றும்) 

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அனுபவம் ஓர் அருந்தவம் (சுயமுன்னேற்றக் கட்டுரை) – முகில் தினகரன்

    முடியாதது என்று எதுவுமில்லை (சுயமுன்னேற்றக் கட்டுரை) – முகில் தினகரன்