in

பாகப்பிரிவினை (மரபுக்கவிதை) – பாவலர் கருமலைத்தமிழாழன்

தென்னைபனை  மரங்களுடன்

            தெளிவான  நிலப்பரப்பை

அண்ணனுக்குப்  பாகமென

            அனைவருமே  பிரித்தளித்தார் !

குலைதள்ளி  வாழைமரம்

            குனிந்திருக்கும்  நிலப்பரப்பைத்

தலைநிமிரும்  தம்பிக்குத்

            தனியாகப்  பிரித்தளித்தார் !

 

நெல்விளையும்  வயல்நிலத்தை

            நிறைமாத  அக்காவின்

நல்வாழ்விற்  கெனப்பிரித்து

            நகைமுகமாய்க்  கையளித்தார் !

காய்கறிகள்  கீரையோடு

            கனிமரங்கள்  நிறைந்தநிலம்

சேய்கடைசி  தங்கைக்குச்

            சேர்ந்தொன்றாய்ப்  பிரித்தளித்தார் !

 

வியர்வையிலே  உழைத்துழைத்து

            விளைநிலமாய்  ஆக்கியதை

முயற்சியின்றிக்  கைக்கொண்டு

            முகம்மலர்ந்த  மகன்மகள்கள்

தளிமையிலே  மனைவியின்றித்

            தவிக்கின்ற  அப்பாவை

இனியார்க்குச்  சொத்தென்றே

            இழுபறியில்  நிற்கின்றார் !

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    என்றும் என்றென்றும் (சிறுகதை) – சந்திரா சந்தீப் (தமிழில் பாண்டியன்)

    முகமூடி காதல் 💔 (கவிதை) – நேத்ரா தேவி