ஆகஸ்ட் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
குடும்ப நல நீதிமன்றத்தின் வெளியே ராகவும், ரஞ்சினியும் காத்திருந்தார்கள். விவாகரத்து வேண்டி மனு செய்து பல கட்ட விசாரணைகளுக்கு பின் இன்று குடும்பநல நீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பு வழங்க இருக்கிறார்கள். தீர்ப்பை எதிர்பார்த்து இருவரும் அவரவர் கார்களில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கார்கள், எதிர் எதிரே நின்ற போதும், ரஞ்சினியும், ராகவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதை தவிர்த்தனர்.
ரஞ்சினி விவாகரத்து பெறப்போவதை நினைத்து கண் கலங்கினாள். அவளது நினைவுகள் பின்னோக்கி சென்றது…..
ராகவ், ரஞ்சினியின் குடும்ப வாழ்க்கை நன்றாகத்தான் போய்கிட்டு இருந்தது.
ராகவ் ஒரு தனியார் கம்பெனியில் executiveஆக பணியாற்றினான். ரஞ்சினியோ ஒரு வெளிநாட்டு நிறுவனத்தின் இந்திய கிளையில் executiveஆக பணிபுரிந்தாள்.
ஆனால், அவர்கள் தாங்கள் இருவருமே பிஸியாக இருப்பதால், குழந்தைகளை சரிவர கவனிக்க முடியாது என்பதால், பத்து வயது மகன் ஹரிஷயும், எட்டு வயது மகள் ஹரிணியையும், நகரின் பிரபல பள்ளிக்கூடத்தில் சேர்த்து படிக்க வைத்ததுடன், அங்கேயே விடுதியிலும் சேர்த்து தங்க வைத்தனர்.
பள்ளி விடுமுறை நாட்களில் மட்டும் அப்பாவோ, அம்மாவோ காரில் வந்து அழைத்து செல்வார்கள்.
சுமுகமாக சென்று கொண்டிருந்த இத்தம்பதியரின் வாழ்க்கையில், ரஞ்சினிக்கு அவளது அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைத்தவுடன் விரிசல் விழ ஆரம்பித்தது.
ராகவிற்கு, ரஞ்சினிக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைத்ததிலிருந்து அவள் தன்னை மதிப்பதில்லயோ எனவும், மேலும் அவள் அடிக்கடி பிசினஸ் மீட், பிசினஸ் பார்ட்டி என வெளியே சென்று வருவதும் கோபத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியது.
ரஞ்சினிக்கோ, ராகவ் அலுவலகத்திலிருந்து தாமதமாக வருவது, அடிக்கடி யாரோ ஒரு பெண்ணுடன் போன்ல பேசுவது, அடிக்கடி வெளியூர் செல்வது போன்ற செயல்கள் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
அவர்களுக்கிடையே புரிதல் இல்லாமல் போனதால் உண்டான ஈகோ, சந்தேகம், அடிக்கடி அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம், ஆகியன குடும்பத்திற்குள் நிம்மதியின்மையை உண்டாக்கி, இருவரையும் விவாகரத்து செய்யும் அளவிற்கு கொண்டு விட்டது.
குழந்தைகள் இருவருக்கும் அப்பா அம்மா இருவரிடமும் பாசம் இருந்தாலும், ஹரிஷுக்கு அம்மாவிடமும், ஹரிணிக்கு அப்பாவிடமும் ஆசை அதிகம்.
ஆனால், கடந்த ஒரு வருடமாகவே, விடுமுறை நாள்களில் வீட்டுக்கு வரும் போது, அப்பாவும், அம்மாவும் ஓரே வீட்டில் இருந்தாலும் பேசிக் கொள்ளாமல் இருப்பதையும், தங்களிடம் கூட சரிவர பேசாமல் இருப்பதையும், குழந்தைகள் உணர்ந்தனர். அவர்களுக்கு தேவையானவற்றைக் கூட வீட்டில் உள்ள ஆயாவிடம் சொல்லி செய்ய சொன்னாள் அம்மா.
இந்நிலையில் இருவருமே விவாகரத்து பெற்றுக் கொள்ள முடிவு செய்து விண்ணப்பம் செய்தனர். ஆனாலும், குடும்பநல நீதிமன்றம் பலமுறை இருவருக்கும் சேர்ந்து வாழ அறிவுரை வழங்கியது.
இறுதியாக ராகவ், ரஞ்சினி இருவரும் சேர்ந்து வாழ ஆறு மாத காலம் அவகாசம் வழங்கியது. நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்த நிலையில், இன்று இறுதி விசாரணை செய்து தீர்ப்பு வழங்க உள்ளனர்.
ரஞ்சினியை பழைய நினைவுகளிலிருந்து விடுவிக்கும் விதமாக, ரஞ்சினியின் secretary, நீதிபதி அவளை உள்ளே அழைப்பதாக கூறினார். ரஞ்சனி காரிலிருந்து இறங்கி நீதிபதியின் அறைக்குள் சென்றாள்.
நீதிபதி, இருவரிடமும், “என்ன முடிவெடுத்தீர்கள்? சேர்ந்து வாழ போகிறீர்களா? பிரிந்து செல்ல போகிறீர்களா?” எனக் கேட்டார்.
ராகவ், ரஞ்சினி இருவருமே மவுனமாக தலை குனிந்தபடி நின்றனர்.
“நீங்க இரண்டு பேருமே பிடிவாதமா இருக்கிறதால விவாகரத்து வழங்கி தீர்ப்பு அளிக்கவிருக்கிறேன்” என்றார் நீதிபதி.
இதை கேட்ட ரஞ்சினி நீதிபதியிடம், “ஐயா, குழந்தைகளை என்கிட்டயே கொடுத்துடுங்க, நான் நல்லபடியாக வளர்த்து கொள்கிறேன்” என்றாள்.
ராகவ் உடனே நீதிபதியிடம், “ஹரிஷ் என்னிடமும், ஹரிணி அம்மாகிட்டயும் இருக்கட்டும்” என்றான்.
மீண்டும் குறுக்கிட்ட ரஞ்சினி, “குழந்தைகளை பிரிக்க கூடாது., இருவரையுமே என்னிடம் கொடுத்து விடுங்கள்” என கண்ணீருடன் கூறினாள்.
ஒரு நிமிடம் யோசித்த நீதிபதி, பள்ளிக்கூடத்திலிருந்து அழைத்து வரப்பட்டு பக்கத்து அறையில் அமர்ந்திருந்த குழந்தைகளை அழைத்து வர சொன்னார்.
குழந்தைகள் வந்தவுடன் நீதிபதி அவர்களிடம் அன்பாக, “ஹரிஷ் நீ அப்பா கூட இருக்கியா? ஹரிணி, நீ அம்மா கூடவே இருக்கியா?” என கேட்டார்.
இதை கேட்ட ஹரிஷ் அழுது கொண்டே, “வேண்டாம் அங்கிள், என் தங்கச்சிய என்கிட்ட இருந்து பிரிக்காதீங்க, நாங்க அப்பா, அம்மாகூட போக மாட்டோம், லீவுக்கு வீட்டுக்கு கூட்டிகிட்டு போனா கூட ஆயாதான் எங்களை பாத்துக்குவாங்க. அப்பாவும் அம்மாவும், அவங்க வேலையைத்தான் பாத்துகிட்டு இருப்பாங்க, எங்களை கவனிக்க மாட்டாங்க. அவங்களுக்கு எங்களை பிடிக்கல, எங்களை ஏதாவது அனாதை இல்லத்துல சேர்த்து விட்டுடுங்க” என கூறினான்.
அண்ணன் அழுவதை பார்த்த ஹரிணியும் அழுதாள்.
வயதுக்கு மீறி ஹரிஷ் இவ்வாறு பேசியதை கேட்டவுடன் அந்த அறையில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
ஹரிஷ் பேசியதை கேட்ட ராகவும், ரஞ்சினியும் ஒரு நிமிடம் ஆடிப் போய் விட்டனர். அவர்கள் இருவரும் ஓடிப் போய் குழந்தைகளை கட்டிப் பிடித்து அழுதனர்.
ராகவ், ரஞ்சினியிடம் இருந்த ஈகோ, கோபம், சந்தேகம் அனைத்தும் அந்த நொடியிலேயே சுக்கு நூறானது., அவர்கள் செய்த தவறை உணர்ந்தனர்.
ரஞ்சினி ஹரிஷிடம், “எங்களை மன்னிச்சுடுப்பா, நாங்க தான் தப்பு பண்ணிட்டோம். நீங்க எங்கயும் போக வேண்டாம், திரும்பி hostel போக வேண்டாம், எங்ககூடவே இருக்கலாம்” என கண்ணீருடன் கூறினாள்.
அத பார்த்த ராகவும் உணர்ச்சிவசப்பட்டு, “ஆமாம் ஹரிஷ், ஹரிணி, இனிமே எங்களுடனே இருக்கலாம்” என்றான்.
இந்த உணர்ச்சிமயமான காட்சிகளை பார்த்த நீதிபதி நெகிழிச்சி அடைத்தார்.
ராகவ், ரஞ்சினி இருவரும் நீதிபதியை பார்த்து கைகூப்பியபடி, ஐயா, “நாங்க திருத்திட்டோம், எங்க குழந்தைகளின் எதிர்காலம் நல்லா அமையனும், அதுக்காக நாங்க ரெண்டுபேரும் சேர்ந்து வாழ விரும்பறோம்” என்றார்கள்.
சட்டத்தால சேர்த்து வைக்க முடியாத தம்பதிகளை, அவர்களது குழந்தைகள் சேர்த்து வைத்தது குறித்து நீதிபதி மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அவர்களை வாழ்த்தி விடைகொடுத்தார்.
ராகவ், ரஞ்சினி தம்பதிகள் குழந்தைகளை அணைத்தபடி வெளியேறியதை பார்த்த அனைவரும் ஆனந்த புன்னகை சிந்தினர்.
(முற்றும்)
GIPHY App Key not set. Please check settings