in ,

பார்வைக்குப் புரியாது (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

        “அந்தப் பால்காரன் உங்களை என்ன கேட்டுட்டான்?… “என்ன சார் சௌக்கியங்களா?”ன்னு தானே கேட்டான்?… அதுக்கு.. “வெடுக்’குன்னு மூஞ்சியைத் திருப்பிக்கிட்டு வந்துட்டீங்க!… என்ன நினைப்பான் அவன்?” பால் காய்ச்ச கேஸ் அடுப்பை பற்ற வைத்தபடியே சொன்னாள் கண்ணம்மா.

       “உனக்கு தெரியாதுடி அந்த மாதிரிக் கீழ்மட்டத்து ஆசாமி கூடவெல்லாம் பேச்சு வெச்சுக்கிட்டா தினமும் கொஞ்சம் கொஞ்சமாப் பேச்சை வளர்த்து நெருக்கமாகி.. கடைசில பெரிய கோரிக்கையோட நிப்பானுங்க!… வீண் தர்மசங்கடம் நமக்கு!” என்றார் பாலகிருஷ்ணன்.

      “அவனே ஒரு பால்காரன்… அவன் என்ன கோரிக்கை வைக்கப் போறான் உங்ககிட்டே?” பொங்கி வந்த பாலை கீழே இறக்கியபடி சொன்னாள் கண்ணம்மா.

      “நான் ஒரு பெரிய கம்பெனியில் வேலை பார்க்கிற விஷயத்தை தெரிஞ்சுக்கிட்டு… “என் பையனுக்கு ஒரு வேலை வாங்கி குடுங்க சார்”ம்பான்!… இல்லையா…  “சார்… பேங்க்ல லோன் கேட்டிருக்கிறேன்… ஜாமீன் கையெழுத்துப் போடுங்கோ சார்”ன்னு கேட்பான்!… எனக்குத் தெரியாதா அவனுங்க சமாச்சாரம்?”

      “இவன் அப்படிப்பட்ட ஆள் இல்லை!… நீங்களாவே அவன் ‘அதைக் கேட்டுடுவான்… இதைக் கேட்டுடுவான்’…னு நெனச்சுக்கிட்டு அவனைக் கீழ்த்தரமா நடத்தறது… அவ்வளவு நல்லதாய்ப் படலைங்க”

      “த பாரு இன்னிக்கு நான் இந்த ஹெட்கிளார்க் பொஸிசனுக்கு கஷ்டப்பட்டு… கரணம் போட்டுத்தான் வந்திருக்கேன்!… எனக்கு எவன் வந்து உதவினான்?.. எத்தனை மன வலிகளைக் கடந்து வந்திருக்கேன் தெரியுமா?”

      “அப்படின்னா.. நீங்க அனுபவிச்ச மன வலிகளை மத்தவங்களும் அனுபவிக்கக் கூடாது!ன்னு நெனச்சு மத்தவங்களுக்கு வலிய உதவணும்…” சொல்லி விட்டுக் கண்ணம்மா காப்பி போடுவதில் முனைப்பானாள்.

     பத்து நாட்களுக்குப் பிறகு,

    பாலகிருஷ்ணனால் வேலையில்  முழுமையாக ஈடுபட முடியவில்லை.  “ஹும்… ஆயிரமா… ரெண்டாயிரமா?… சுத்தமா எட்டு லட்சம் ரெடி பண்ணனும்… அதுவும் பத்து நாளைக்குள்ளார… முடியுமா?” தனக்குள் புலம்பிக் கொண்டிருந்தார்.

      பக்கத்து இருக்கை ராஜேந்திரன்,  “என்ன சார் ஆச்சு உங்களுக்கு?.. காலையிலிருந்தே ரொம்ப நெர்வஸா இருக்கீங்க?… வீட்ல ஏதாவது பிராப்ளமா?” கேட்டார்.

      “எல்லாம் பையனோட பி.இ. அட்மிஷன் சமாச்சாரம்தான்” என்றார் சலிப்புடன்.

      “அதான் கே.பி.எஸ். காலேஜ்ல மேனேஜ்மென்ட் கோட்டாவில் சீட் பிடிச்சிட்டீங்கல்ல?… அப்புறமென்ன?…”

      “சும்மா இடம் பிடிச்சிட்டா மட்டும் போதுமா?… மேனேஜ்மென்ட் கோட்டாவாச்சே?.. ஏரோநாடிகல் கோர்ஸுக்கு எட்டு லட்ச ரூபாய் கட்டணுமாம்!” சோகமாய்ச் சொன்னார் பாலகிருஷ்ணன்.

      “ஓ… என்ன தான் ஏற்பாடு பண்ணியிருக்கீங்க?”

      “இருந்த டெபாசிட்டையெல்லாம் ப்ரி மெச்சூர் பண்ணி எடுத்தாச்சு!… நகைகள் எல்லாத்தையும் வித்தாச்சு… அப்பவும் பத்தலை!… ரெண்டரை லட்சம் பத்தலை!.. அதுல ஒரு ஐம்பதாயிரம் கூட ரெடியாயிடுச்சு!… மீதி ரெண்டு லட்சம்தான் ரொம்ப பிரச்சினையா இருக்கு!” என்றார் பாலகிருஷ்ணன்.

      “நம்ப ஜி.எம். கிட்ட கேட்டுப் பாருங்களேன் சார்!… உங்களுக்குன்னா கண்டிப்பா கொடுப்பார்!” என்றார் ராஜேந்திரன்.

      “ம்ஹும்… ஏற்கனவே அட்வான்ஸ் இருக்கிறவங்களுக்கு புது அட்வான்ஸ் தர மாட்டாங்களே?”

      “அப்ப… ஜி.எம். கிட்ட பர்சனலா… கைமாத்து கேட்டு பாருங்களேன்”

      அன்று மாலையே ஜி.எம். ரூமுக்குள் சென்று தன் நிலைமையை விவரித்தார் பாலகிருஷ்ணன்.

     பொறுமையாகக் கேட்டு முடித்த ஜி.எம்., “மிஸ்டர் பாலகிருஷ்ணன்… இப்பதான் என்னோட மகளோட மேரேஜை முடித்தேன்!… சுத்தமாக டிரை ஆயிட்டேன்!… ஐயாயிரமோ… பத்தாயிரமோதான் என்னால் புரட்ட முடியும்!” சிறிதும் கூச்சமின்றிப் பொய்யை வீசினார் ஜி.எம்.

     காரணம்?.. அவரது மகன் பிளஸ்டூ ஃபெயிலாகி வீட்டில் உட்கார்ந்திருக்கிறான்.

      “இட்ஸ் ஓ.கே. சார் நான் வேற எங்காவது ட்ரை பண்ணி பார்க்கிறேன்!”. சொல்லி விட்டுத் ஜி.எம். அறையை விட்டு வெளியே வந்தார் பாலகிருஷ்ணன்.

      தன்னுடன் வேலை பார்க்கும் அனைவரிடமும் சீனியர் ஜூனியர் என்கிற பாகுபாடு இல்லாமல் கடன் கேட்டுப் பார்த்தார்.  எல்லோருமே நம்பத்தகு காரணங்களை வருத்தத்தோடு கூறி உள்ளூர மகிழ்ந்து கொண்டனர்.

      தனது உறவு மற்றும் நட்பு வட்டாரங்களில் கடன் தூண்டில் போட்டார், பண மீன் சிக்கவில்லை. 

      காலை,

     படுக்கையை விட்டு எழுந்து ஜன்னல் திரையை விலக்கும் போது வெளியே பால்காரனுடன் கண்ணம்மா பேசிக் கொண்டிருந்தது அவர் காதுகளில் விழ அவர்களது உரையாடலில் கவனம் செலுத்தினார்.

      “நம்ம தம்பி பிளஸ்டூ பாஸ் பண்ணினதுக்கு ஸ்வீட்டு குடுத்தீங்க… அப்புறம்… ஏதோ இன்ஜினீர் படிப்புப் படிக்கப் போறார்ன்னு சொன்னீங்களே?… காலேஜில சேர்ந்தாச்சா?…” பால்காரன் அக்கறையாய் விசாரித்தான்.

      “காலேஜ்ல இடமெல்லாம் கிடைச்சாச்சு!… இன்னும் பணம்தான் கட்டலை!” என்றாள் கண்ணம்மா.

      “கட்டிட வேண்டியதுதானே?”

     “ அதுல கொஞ்சம் பிரச்சனைப்பா”

      பாலகிருஷ்ணனுக்கு ரத்தம் சூடாகியது.  “எதுக்கு இவன்கிட்டப் போய் இதையெல்லாம் சொல்லிட்டிருக்கா?” 

     “என்ன பிரச்சனை?” பால்காரன் கேட்டான்.

     “கொஞ்சம் பணம் பத்தலை… ” தணிந்த குரலில் சொன்னாள் கண்ணம்மா.

    “எவ்வளவு பத்தலை?…” கேட்டான்.

     பாலகிருஷ்ணுக்குள் உலை கொதித்தது.

    “ரெண்டு லட்சம்” சொல்லி விட்டு, வீட்டிற்குள் திரும்பினாள் கண்ணம்மா.

     ஜன்னலை ஓங்கிச் சாத்தி விட்டு  நகர்ந்தார்  பாலகிருஷ்ணன்.

     இரவு எட்டு மணி.

     பணம் ஏற்பாடு செய்வதற்காக வெளியே சென்றிருந்த பாலகிருஷ்ணன், போன வேகத்திலேயே திரும்பி வந்தார்.

    “அந்த ஏரோநாடிகல் வேண்டாம்… பேசாம… எது கிடைக்குதோ… அதுல சேரச் சொல்லிடு” என்றார் விரக்தியாய்.

     “ஏங்க இப்படிச் சொல்றீங்க?” கவலையோடு கேட்டாள் அவள்.

     என்னால ரெண்டு லட்சம் மட்டும் புரட்டவே முடியலை… இதுக்கே மேலே என்னால முடியாது”

     “நான் எப்படிப் போய் இதை அவன் கிட்டே சொல்லுவேன்?… சொன்னா மனசு விட்டுருவான்…”அழுவது போலானாள் கண்ணம்மா.

    “அம்மா… அம்மா” யாரோ அழைக்கும் குரல் கேட்டு வாசலுக்கு வந்த கண்ணம்மா பால்காரன் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து,

     “என்னப்பா… இந்த நேரத்துல?” கேட்டாள்.

     வந்திருப்பது பால்காரன்தான் என்பதை தெரிந்து கொண்ட பாலகிருஷ்ணன், “இவன் எதுக்கு இந்த நேரத்தில் வந்திருக்கான்?… ஏதாவது  கோரிக்கையைத் தூக்கிட்டு வந்துட்டானோ?” பற்களை “நற… நற”வென்று கடித்தவாறே வெளியே வந்தார்.

     “அம்மா ஒரு விஷயம்… கேட்டா…  தப்பா நினைக்கக் கூடாது!” சன்னக் குரலில் கேட்டான்.

     “பரவாயில்லை கேளுப்பா… ஓ… சார் நிக்கறார்ன்னு பார்க்கறியா?… சாரை வேணா உள்ளார போகச் சொல்லிடவா?” கண்ணம்மா  கேட்க,

     பாலகிருஷ்ணன் முகத்தை ஒரு தரம் பார்த்து விட்டு, “வந்து… இன்னைக்கு மத்தியானம் ஊரிலிருந்து பெரியப்பா வந்திருந்தாரு!… எங்க பூர்வீகத் தோட்டமொன்னு விற்பனை முடிஞ்சிடுச்சு… அதுல என் பங்குன்னு சொல்லி… ரெண்டு லட்ச ரூபாயைக்  கொடுத்துட்டுப் போனாரு!… அப்ப… இன்னைக்கு காலையில நீங்க சொன்னது  ஞாபகத்துல வந்திச்சு!… அதான்…. அதை இங்க கொண்டாந்துட்டேன்!…”

    பாலகிருஷ்ணனும், கண்ணம்மாவும் நெற்றியைச் சுருக்கிக் கொண்டு பார்க்க,

    “நீங்க எதுவும் யோசிக்காதீங்க!… இதைக் கடனாகவே நினைச்சுக்கோங்க!…. எப்ப முடியுதோ… அப்பத் திருப்பிக் கொடுங்க  போதும்!” என்றான் கையிலிருந்த மஞ்சள் துணிப்பையை கண்ணம்மாவிடம்  நீட்டியபடி.

    கண்ணம்மா கணவனை பார்க்க, பாலகிருஷ்ணன்   தலையாட்டி ஒப்புதல் தர,  வாங்கிக் கொண்டாள்.

    முகம் மலர்ந்த பால்காரன்,  “சரிம்மா நான் வரேன்மா…”  சொல்லி விட்டு அங்கிருந்து நகர, போகும் அவனையே பார்த்துக் கொண்டு நின்றார் பாலகிருஷ்ணன்.  

“இவனுடன் பேசினாலே ஏதாவது அப்ளிகேஷன் கேட்டுடுவான்”னு  நான் இவனை அவாய்ட் பண்ணினேன்!…  ஆனா இவனோ எந்தப் பேப்பரிலும் கையெழுத்து வாங்காமல்… ரெண்டு லட்சத்தை சாதாரணமாகத் தூக்கிக் கொடுத்திட்டு போறானே?… இவனா கீழ் மட்டத்து ஆள்?… ம்ஹும்.. கையில் பணம் இருந்தும் கூட கொடுக்க மறுத்த அந்த ஜி.எம். தான் கீழ் மட்டத்து ஆள்!”.

     “நம்ம பையனை ஏரோநாடிகல்ல சேர்த்து விட அந்த ஆண்டவந்தான் பால்காரன் கையில் பணம் கொடுத்து அனுப்பியிருக்கான்!…என்று கண்ணம்மா சொல்ல,

     “இல்ல கண்ணம்மா ஆண்டவன் அனுப்பலே… இந்தப் பால்காரன்தான் ஆண்டவனா மாறிட்டான்” என்றார் பாலகிருஷ்ணன்.

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்) 

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வெல்வதும் எளிது (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

    நேராய் ஒரு எதிர்மறை (சிறுகதை) – முகில் தினகரன், கோவை